கோழியா? முட்டையா? ரஷ்ய நாட்டு நாடோடிக் கதை!

ஒருநாள் ஒரு பள்ளமான வயலில் சில சிறுவர்கள் கோழி முட்டை அளவு பெரிய தானியம் ஒன்றைக் கண்டெடுத்தனர். அந்த வழியே போய்க் கொண்டிருந்த ஒருவர், ஒரு காசு கொடுத்து
கோழியா? முட்டையா? ரஷ்ய நாட்டு நாடோடிக் கதை!

ஒருநாள் ஒரு பள்ளமான வயலில் சில சிறுவர்கள் கோழி முட்டை அளவு பெரிய தானியம் ஒன்றைக் கண்டெடுத்தனர். அந்த வழியே போய்க் கொண்டிருந்த ஒருவர், ஒரு காசு கொடுத்து அந்தப் பெரிய தானியத்தை வாங்கிக்கொண்டுபோய், அந்த ஊர் ராஜாவுக்கு அதை ஓர் அதிசயப் பொருளாக விற்றுவிட்டுப் போனார்.

அத்தனை பெரிய தானியத்தைக் கண்டிராத ராஜா, உடனே தனது மந்திரிகள், இதர அறிஞர்களையெல்லாம் வர சொல்லி, அந்தப் பொருள் பற்றி விளக்கம் கேட்டார். அவர்கள் எல்லோருமே எத்தனையோ யோசித்தும், அந்தப் பெரிய தானியம் பற்றி ஒன்றும் தெரியாமல் திணறினர். அது பற்றி எதுவும் கூறுவதற்கில்லை என்றும் கூறிவிட்டனர்.

ராஜா அந்த முட்டை அளவு தானியத்தை தனது அறையின் ஜன்னல் ஓரத்தில் வைத்திருந்தார். பிறகு ஒருநாள் கோழி ஒன்று ஜன்னல் வழியே உள்ளே வந்து அந்த முட்டையைக் கொத்தி, துளைபோட்டுச் சென்றது. அது ஒரு பெரிய கோதுமை தானியம் என்பது அப்போதுதான் எல்லாருக்கும் தெரிந்தது.

ராஜாவுக்கு ஒரே ஆச்சரியம்! அத்தனை பெரிய தானியம் எங்கே விளைகிறது என்பதைக் கண்டறிய ஆசைப்பட்டார். மீண்டும் மந்திரிகளையும், அறிவாளிகளையும் கூட்டி, அது பற்றி கண்டறியும்படி உத்தரவிட்டார்.

அவர்களும் திரும்பி வந்து, 'எங்களுக்கு எந்தத் தகவலும் இதுபற்றி கிடைக்கவில்லை. நாங்கள் கற்ற நூல்களிலும் எந்த விவரமும் இல்லை. ஒருவேளை சிறு விவசாய மக்களுக்குத் தெரிந்திருக்கலாம். கேட்டுப் பாருங்கள்' என்று சொல்லிவிட்டார்கள்.

ராஜாவும் உடனே வயது முதிர்ந்த விவசாயி ஒருவரை அழைத்து வரச் செய்தார். அவரிடம் அந்த தானியத்தைக் காண்பித்தார். பார்வை மங்கிவிட்ட அந்தக் கிழவர், தானியத்தைக் கையால் தடவிப் பார்த்து பதில் சொன்னார். 'ஐயா! நான் இத்தனை பெரிய தானிய விளைச்சலை என் வயலில் விளைத்ததில்லை. வேறு எங்கும் விளைந்ததாகக் கேள்விப்பட்டதும் இல்லை. ஒருவேளை என் தந்தைக்குத் தெரிந்திருக்கலாம். அவரைக் கேட்டுப் பாருங்கள்' என்றார்.

ராஜா, அந்தக் கிழவரின் தந்தையை அழைத்துவரச் செய்தார். அந்த முதியவர் ஒரு கவைக் கொம்பை மட்டுமே ஊன்றியவாறு நடந்துவந்தார். அவர் பார்வை நன்றாகவே இருந்தது. ராஜா காட்டிய பெரிய தானியத்தைக் கவனித்துப் பார்த்த அவர், ராஜாவைப் பார்த்துச் சொன்னார்: "இல்லை. இத்தனை பெரிய தானியத்தை நான் ஒருபோதும் பார்த்ததில்லை. என் கழனியிலும், ஏன் மற்றவர்களின் கழனியிலும் கண்டதில்லை. எங்கள் தானிய பரிவர்த்தனையில் நாங்கள் கண்டது ஒரே மாதிரியான தானியங்களைத் தான். ஆனால் என் தந்தை அவர் காலத்தில் விளைந்த தானியம் பெரிய அளவில் தானியம் கிடைக்க வசதியாக வளர்த்திருந்ததாக அடிக்கடி சொல்லுவார். அவரை வேண்டுமானால் கேட்டுப் பாருங்கள்'' என்றார்.

ஆச்சரியம் அடைந்த ராஜா, அவரது தந்தையான முதியவரை அழைத்தார். ஆனால், அவரோ எந்த கைத்தடியின் உதவியுமில்லாமல், மிடுக்காகவே வந்தார்.
 அவரது கண்பார்வை நன்றாகவே இருந்தது. காது நன்றாகவே கேட்டது. பேச்சும் தெளிவாகவே இருந்தது. ராஜா காண்பித்த தானியத்தைத் தன் கையில் வாங்கிப் பார்த்த அவர், அதை உருட்டிப் பார்த்துவிட்டு, 'இம்மாதிரி தானியத்தைப் பார்த்து வெகு காலமாயிற்று. இப்போதுதான் மீண்டும் பார்க்கிறேன்' என்றவர், அதைக் கொஞ்சம் கடித்து ருசி பார்த்தார். பிறகு தொடர்ந்தார்: 'ஆம். இது அந்த நாளில் நான் பார்த்திருந்த அதே தானியம்தான்' என்றார்.

அதைக் கேட்டு வியந்துபோன ராஜா, 'ஐயோ தாத்தா, விவரமாகச் சொல்லுங்கள். எங்கே எப்போது இத்தனை பெரிய தானியம் விளைந்தது? நீங்கள் வாங்கி வந்து உங்கள் கழனியில் விளைத்திருக்கிறீர்களா? உங்கள் கழனியில் இத்தனை பெரிய தானியம் விளைந்ததா?' என்று பரபரத்த குரலில் கேட்டார்.

முதியவர் நிதானமாகப் புன்னகையோடு பதிலளித்தார்: 'நான் உழுது பயிரிட்ட நிலம் கடவுளின் பூமி. நான்எங்கு உழுதேனோ அந்த இடம் எனக்குச் சொந்தம். மற்றபடி நிலம் எல்லோருக்கும் இலவசமாக, சொந்தமாக இருந்த காலம். ஒருவரும் தன்னுடையது என்று எந்த இடத்தையும் சொந்தம் கொண்டாட முடியாத காலம். ஒருவனின் உழைப்பு ஒன்றே அவனுக்குச் சொந்தமான சொத்து'.

அசந்து போன ராஜா, மேலும் இரண்டு கேள்விகளை அவரிடம் கேட்டார். "ஐயா! சரிதான். அப்போதெல்லாம் பெரிய அளவில் விளைந்த தானியம் தற்போது ஏன் விளைவதில்லை? மற்றொன்று, உங்கள் பேரன் நடப்பதற்கு இரண்டு கவைக் கொம்புகள் தேவைப்படுகின்றன. உங்கள் மகனுக்கோ ஒரு கொம்பே போதுமானதாக இருக்கிறது. உங்களுக்கோ அது கூட தேவைப்படுவதில்லை. உங்கள் கண் பார்வை தெளிவாகவே இருக்கிறது. பற்கள் கூட உறுதியாக இருக்கின்றன. உங்கள் பேச்சோ தெளிவாகவும், கனிவாகவும் இருக்கிறது. உங்கள் காதுகளும் நன்றாகவே கேட்கின்றன. எப்படி இவையெல்லாம் உங்களுக்கு மட்டும் சாத்தியமாகியிருக்கின்றன?'

முதியவர் மீண்டும் நிதானமாக பதிலளித்தார். 'காரணம் இதுதான். இப்போதெல்லாம் மனிதர்கள் உழைப்பதில்லை. பிறர் உழைப்பைச் சார்ந்திருக்கிறார்கள். அந்த நாட்களில் கடவுள் விதித்த தர்மத்தின்படி மக்கள் வாழ்ந்தார்கள். அவர்கள் விளைத்ததற்கே அவர்கள் சொந்தம் கொண்டாடினார்கள். மற்றவர்களின் விளைச்சலுக்கு ஆசைப்பட்டதில்லை''.
 ராஜாவின் சிந்தனை தெளிவடைய அவர் மெளனமானார்.
(லியோ டால்ஸ்டாயின் மூலத்தின் தமிழ் வடிவம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com