துபாய் ஷாப்பிங் திருவிழா! - சாந்தகுமாரி சிவகடாட்சம்

உலகில் உள்ள எல்லா மக்களும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் இடமாக துபாய் இருக்க வேண்டும். சண்டையோ, வெறுப்புணர்ச்சியோ இல்லாமல், அன்பை வெளிப்படுத்த வேண்டும்.
துபாய் ஷாப்பிங் திருவிழா! - சாந்தகுமாரி சிவகடாட்சம்

சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 31
உலகில் உள்ள எல்லா மக்களும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் இடமாக துபாய் இருக்க வேண்டும். சண்டையோ, வெறுப்புணர்ச்சியோ இல்லாமல், அன்பை வெளிப்படுத்த வேண்டும். மேலும் துபாயில் உள்ள விளையாட்டுகளில் ஈடுபட்டு மகிழவேண்டும். அவ்வளவுதான்'.
- எச்.எச். ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்டும் 
(HH. Sheikh Mohamed bin Rashid Al Maktoum)
ஐக்கிய அரபு நாடுகளின் பிரதம மந்திரியும், எமிரேட்ஸ் ஆஃப் துபாயின் அரசருமான மக்டும், இப்படி துபாயைப் பற்றி சிலாகித்து கூறியிருக்கிறார். உலக நாடுகளிலிருந்து உல்லாசப் பயணிகள் துபாயை நோக்கி படையெடுத்த வண்ணம் இருக்கிறார்கள். எதற்காக? எண்ணிக்கையில் அடங்கா ஷாப்பிங் மால்கள், தங்க நகைகள் கொட்டிக் கிடக்கும் பஜார்கள், புர்ஜ் கலிபா, புர்ஜ் அல் அரப் போன்ற வானுயர்ந்த கட்டிடங்கள், பாலைவன சஃபாரி, மிராக்கில் தோட்டம், துபாய் மாலில் இருக்கும் மீன் காட்சியகம், பாலைவனத்தின் நடுவில் பனி கொட்டிக் கிடக்கும் ஸ்கி துபாய் என்று அப்பப்பா, இது போதுமா, இன்னும் கொஞ்சம் வேண்டுமா என்று துபாய் நம்மை மலைக்க வைக்கிறது.
இவைகளுக்கு எல்லாம் கிரீடம் வைத்தாற் போன்று 1996-ஆம் வருடம் தோன்றி, வருடம்தோறும் துபாயில் கொண்டாடப்படும் துபாய் ஷாப்பிங் திருவிழா உலக மக்களைக் காந்தமாக தன் பக்கம் இழுத்துக் கொள்கிறது. ஜனவரி மாதத்தின் நடுவில் தொடங்கி பிப்ரவரி வரை நீடிக்கும் அந்த முப்பது நாட்களும் ஒரே கோலாகலம்தான்.
ஒரு புள்ளிவிவரம் என்னை "வாவ்' என்று கூவ வைத்து, எனக்கும் அப்படி ஒரு பரிசு கிடைக்குமா என்கின்ற கேள்விக்குறியை எழுப்பி, துபாய் ஷாப்பிங் திருவிழாவுக்குச் செல்லத் தேவையான ஊக்கத்தை அளித்தது.
(DSF) டி.எஸ்.எஃப் என்று அழைக்கப்படுகின்ற துபாய் ஷாப்பிங் திருவிழா தொடங்கிய 1996-ஆம் ஆண்டு 1.6 மில்லியன் மக்கள் கூடினார்கள், 215 மில்லியன் அரப் எமிரேட்ஸ் திரம் செலவானது. நாலே வருடங்களில் அதாவது 1999 - ஆம் ஆண்டில் 3.35 மில்லியன் பார்வையாளர்களையும், 9.8 மில்லியன் அரப் எமிரேட்ஸ் திரம் செலவானது என்றால், இந்த திருவிழா அடைந்த வெற்றியை அறிந்துகொள்ள முடிகிறது.
டி.எஸ்.எஃப், இதனுடைய வெற்றியின் ரகசியம் அரப் எமிரேட்ஸ் திரம் 60 மில்லியன்களை பரிசுப் பொருட்களை அள்ளி வழங்கியிருப்பதாக சொல்லப்படுவதுதான். 2010-ஆம் ஆண்டு வரை 643 கிலோ தங்கம், 33 ரோல்ஸ்ராய் கார்கள், இதைத் தவிர 1740 நிசான் மற்றும் லெக்ஸஸ் கார்களை துபாய் ஷாப்பிங் திருவிழாவிற்கு வந்தவர்கள் வென்று சென்றிருக்கிறார்கள் என்றால் எல்லோருக்கும் அந்த அதிர்ஷ்டசாலிகளில் நாமும் ஒருவராக இருக்க மாட்டோமா என்கின்ற எண்ணம் எழத்தானே செய்யும்.
அரசர் ஷேக் மொகமது பின் பெருமையாக சொல்லுகிறார், "துபாயில் நாங்கள் எந்தவிதமான நிகழ்வுகளுக்காகவும் காத்திருப்பதில்லை, ஏனெனில் அவற்றை நாங்கள் செய்து காட்டிவிடுவோம்.'
ஆமாம், துபாய் ஷாப்பிங் திருவிழாவை, உலக மேடையில் வெற்றி திருவிழாவாக நடத்தி காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
டி.எஸ்.எஃப், துபாய் ஷாப்பிங் திருவிழாவின் சுருக்கம்தான் இது. இதனுடைய "சுலோகன்' என்ன தெரியுமா?
"ஒரு உலகம், ஒரு குடும்பம், ஒரு திருவிழா'. இந்த திருவிழாவின் மகத்துவத்தை, இந்த "சுலோகன்' எடுத்துக்காட்டுகிறது.
துபாய் ஷாப்பிங் திருவிழாவின்பொழுது அரங்கேறும் பலவிதமான கேளிக்கைகளுக்கு நடுவே இந்த திருவிழாவுக்கு மேலும் மெருகூட்டுகிறது குளோபல் வில்லேஜ் (Global Village). 27 கூடாரங்களுக்குள் உலகின் பல நாடுகள் தங்கள் பொருட்களை கடைவிரித்து, தங்கள் கலாசாரத்தையும் உணவு வகைகளையும் உல்லாசப் பயணிகளுக்கும், துபாய் மக்களுக்கும் வெளிப்படுத்தி மகிழ்கிறார்கள்.
ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பதுபோல, துபாய் ஷாப்பிங் திருவிழாவில் தள்ளுபடி செய்யப்பட்ட விலையில், வேண்டிய பொருட்களை வாங்கிக் குவிப்பதோடு, இந்த குளோபல் வில்லேஜ் பொருட்காட்சியிலும் பன்னாட்டுப் பொருட்களை வாங்கலாம், அவர்களுடைய பாரம்பரிய நடனங்களைக் கண்டு ரசிக்கலாம், உணவுகளையும் உண்டு மகிழலாம் என்று எண்ணி மக்கள் வெள்ளம் துபாயை நோக்கி வருகிறது.
துபாய் ஷாப்பிங் திருவிழாவுக்குப் போனால், எத்தகைய அனுபவங்களையும் பெறலாம் என்பதை அங்கே போய் வந்தவர்கள் விவரித்தும், பத்திரிகைகளில் படித்தும் அறிந்திருந்ததால் நானும், என் கணவரும் ஒருமுறையேனும் அந்தத் திருவிழாவைக் கண்டு களிக்க வேண்டும் என்று துபாயை நோக்கி பயணப்பட்டோம்.
ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த ஏழு நகராட்சிகளில் ஒன்றாக துபாய் திகழ்கிறது. இது அரேபியன் தீபகற்பத்திற்கு கிழக்கிலும், அரேபியன் வளைகுடாவிற்கு தென்மேற்கு பகுதியிலும் அமைந்திருக்கிறது. இதனால் வருடம் முழுவதும் சூரிய ஒளியைப் பெற்றிருக்கிறது. பரந்து விரிந்த பாலைவனங்கள், கண்களைக் கவரும் கடலோரப் பகுதிகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது.
துபாய்க்கு பலமுறை சென்று வந்திருக்கிறோம். ஆனால் துபாய் ஷாப்பிங் திருவிழா நடக்கும்பொழுது சென்றதில்லை. துபாயில் என்னை மிகவும் கவர்ந்த விஷயம் நடு இரவிலும் பயம் இன்றி தெருக்களில் வலம் வரலாம். வழிப்பறி கொள்ளைகளைப் பற்றி சிறிதும் கவலைப்படத் தேவையில்லை. சாதாரண சிறு கடைகளில்கூட தங்கம் வாங்கலாம். புகழ்பெற்ற கடையாக இருக்க வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை.
கம்ப்யூட்டர்கள், கைக்கடிகாரங்கள், தொலைக்காட்சி பெட்டிகள், சோபா செட்டுகள் என்று எதை வாங்கினாலும் மற்ற இடங்களைவிட விலை மலிவாக இருக்கும். பிராண்டட் அயிட்டங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம், கடல்போல குவிந்து கிடக்கும். அதுவும் துபாய் ஷாப்பிங் திருவிழாவின்போது மிக மலிவாக தள்ளுபடி விலையில் கிடைக்கும் என்று என் மகன் என் கையில் பெரிய லிஸ்ட் ஒன்றைத் திணித்து அனுப்பி இருந்தான். துபாயை நெருங்கி விட்டோம் என்று விமான பணிப்பெண் அறிவிக்க, பல புதிய அனுபவங்களைப் பெற என் உள்ளம் தயாரானது.
தொடரும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com