சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 32: வாசனை திரவியங்களின் மழை!

"நீ வெற்றியாளனாக இருந்தால் அதை அனுபவிக்க வேண்டும். துணிகளையும், பிராண்டட் துணிகளையும் வாங்க விரும்புவேன். துபாயிலும், இங்கிலாந்திலும் ஷாப்பிங் செய்ய பிடிக்கும். என்னால் முடிந்தபொழுது எல்லாம் பயணிப்பேன்.
சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 32: வாசனை திரவியங்களின் மழை!

"நீ வெற்றியாளனாக இருந்தால் அதை அனுபவிக்க வேண்டும். துணிகளையும், பிராண்டட் துணிகளையும் வாங்க விரும்புவேன். துபாயிலும், இங்கிலாந்திலும் ஷாப்பிங் செய்ய பிடிக்கும். என்னால் முடிந்தபொழுது எல்லாம் பயணிப்பேன்.
- சுரேஷ் ரெய்னா.

எல்லோருக்கும் பிராண்டட் துணிகளை வாங்க பிடிக்கும்தான், ஆனால் விலை அட்டையைப் பார்த்தால் வயிறு சிறிது கலக்கத்தானே செய்கிறது. சரி, பிராண்டட் துணிகள் மீது காதலா, கவலையை விடுங்கள். துபாய் ஷாப்பிங் திருவிழாவில், ஆசைதீர வாங்கிக் குவிக்கலாம். எப்படி என்று மலைக்காதீர்கள். அங்கே பல பிராண்டட் கடைகளில் 75% தள்ளுபடி விலைகளில் அவைகளை வாங்கலாம். சில சமயங்களில் அதிர்ஷ்ட தேவதையின் பார்வை நம்மீது பட்டால் 90% தள்ளுபடியும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

"விசா இம்பாசிபிள் டீல்ஸ்' என்று ஒரு அமைப்பு இருக்கிறது. அதில் பதிவு செய்து கொண்டால், நாள்தோறும் கிடைத்தற்கரிய பொருட்களின் தகவல்களைப் பற்றி இமெயிலிலும், டெக்ஸ்டிலும் அறிவிப்பார்கள். முதல் முதலில் அதைப் பதிவு செய்யும் ஆறு நபர்களுக்கு நினைத்தே பார்க்கமுடியாத விலையில் அந்தப் பொருள் கிடைக்கும். உதாரணத்திற்கு ஒரு பிராண்டட் கைக்கடிகாரத்தின் விலை 12,650 அரப் எமிரேட்ஸ் திரமாக (அஉஈ) இருந்தால் அது 2000 எஇடி-க்கு கிடைக்கும் என்றால், "சும்மா அதிருது இல்ல' என்று அதிர வைக்கத்தானே செய்யும்.

என் கணவருக்கும் வாசனை திரவியங்களின் மீது அதிக விருப்பம் உண்டு. உள்ளூர் ஜவ்வாது தொடங்கி எகிப்து, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் பெர்ஃபியூம்களை வாங்கி உபயோகப்படுத்துவார். நாள் தவறினாலும் பெர்ஃபியூம் அடித்துக் கொள்வது தவறாது. ஆனால் அவரே ஐயகோ! போதும், போதும் என்று பெர்ஃபியூம் மழையில் நனைந்த நிகழ்ச்சியும் துபாய் ஷாப்பிங் திருவிழாவில் அரங்கேறியது.

"பெர்ஃபியூம் வில்லேஜ்' என்ற இடத்தில் முதல் நாள் அன்று வாசனை திரவியங்களை சாம்பிள் செய்யும் நிகழ்ச்சி நடக்கும் என்றதும் நாங்கள் ஆவலோடு அங்கே சென்றோம். வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த இருநூறுக்கும் மேலான ஆட்கள் கைகளில் பிடித்திருந்த பலவகையான பிராண்டட் பெர்ஃபியூம் குடுவைகளை ஒரே சமயத்தில் அழுத்தி, வந்திருந்த பார்வையாளர்கள் மீது மழைபோல விழச்செய்ய, திக்குமுக்காடிப் போனோம். பலவிதமான வாசனை கலவை படிந்த உடலோடு என் கணவர் வாயிலை நோக்கி ஓடிய காட்சியை இன்று நினைத்தாலும் என் வயிறு குலுங்குகின்றது.

இங்கே இருந்த பெர்ஃபியூம் அருங்காட்சியகத்தில் பலவிதமான மிக உயர்தர வாசனை திரவியங்களை காட்சிக்கு வைத்திருந்தனர். அவற்றை தள்ளுபடி விலையிலும் விற்கின்றனர்.

பெண்ணாக பிறந்துவிட்டு பொன் நகைக்கு ஆசைப்படாமல் இருக்கமுடியுமா? தங்க அங்காடியை நோக்கி சென்றோம். "கோல்ட் சூக்' என்று அழைக்கப்படுகின்ற அங்காடிக்குள் காலடி எடுத்து வைத்ததுமே தலைசுற்றிப் போனேன். எண்ணிக்கையில் அடங்கா கடைகள், அதீதிய விளக்கொளியில் ஜொலித்த நகைகள், அவைகளின் பல டிசைன்கள் அப்பப்பா!  எதை வாங்குவது எதை விலக்குவது, விக்கித்து நின்றேன். மலைபோல குவிந்திருந்த நகைகளில் நான் தேர்ந்தெடுத்த ஒருஜோடி வளையல் என்னை ஏளனப் பார்வை பார்த்தது. ஆனால் நான் மனம் கலங்கவில்லை 500 அரப் எமிரேட்ஸ் திரத்திற்கு தங்கத்தை வாங்கினாலே, அது வைரமாகக்கூட இருக்கலாம், நம் கைகளில் சில அதிர்ஷ்ட கூப்பன்களை திணிக்கிறார்கள். அதிர்ஷ்ட லஷ்மியின் பார்வை நம் மீது பட்டுவிட்டால் வீட்டிற்கு ஒரு கிலோ தங்க நகைகளோடு திரும்பலாம் முதல் பரிசுக்கு இது. இரண்டாம் பரிசுக்கு அரைகிலோ, மூன்றாவதுக்கு கால்கிலோ தங்கம் என்றால் கசக்குமா என்ன?

துபாய் மால் தொடங்கி, சீனப் பெருஞ்சுவராக நீளும் பல மால்களில் தள்ளுபடி விலையில் கிடைக்கும் பொருட்களைப் போய் கண்களால் பார்த்தால்தான் நம்ப முடியும். மால்களில், கடைகள் திறக்கும் நேரமான காலை பத்து மணிக்கு சென்றால், கூட்டத்தின் நெரிசலில் இருந்து தப்பித்து ஷாப்பிங் செய்யலாம் என்றார் எங்களுடைய கைட். நாங்களும் சென்றோம் பயன் அடைந்தோம்.

மால்களில் சுற்றி, தங்க அங்காடியில் இடிபட்டு, "போதுமடா சாமி' என்று நினைத்து, ஆனாலும் ஷாப்பிங் ஆசை விடவில்லை என்றால் நேராக செல்லுங்கள் "மார்க்கெட் அவுட் சைட் தி பாக்ஸ்' என்ற இடத்திற்கு திறந்த வெளியில், வெளிநாடுகளில் "பிளி மார்க்கெட்' (flea market) என்று அழைப்பார்களே அப்படிப்பட்ட கூடாரங்களுக்குள் அமைக்கப்பட்ட கடைகள் இங்கே வரிசைகட்டி நிற்கின்றன. திறந்தவெளி என்பதால் இயற்கை காற்று சூழ, பலவிதமான உள்நாட்டு கைவினைப் பொருட்கள், துபாயைச் சார்ந்த டிசைனர்கள் உருவாக்கிய உடுப்புகள், நகைகள் இங்கே கிடைக்கின்றன. பலவிதமான உணவுகளை விற்கும் ஸ்டால்களில் இதுவரை சுவைக்காத உணவுகளை சுவைத்தோம். திறந்தவெளி அரங்கில் நாள்தோறும் பலவிதமான கலைநிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்தோம்.

லாட்டரி சீட்டுகளில் மோகம் கொண்டிருந்தால் பெட்ரோல் பங்குகளில் விற்கப்படும் 200 எஇடி மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளை வாங்கினால் போதும். வாரத்தின் முடிவில் குலுக்கலில் இரண்டு மில்லியன் எஇடிகளை மூட்டை கட்டி எடுத்துச் செல்லலாம். ஹி.. ஹி.. அதற்கு அதிர்ஷ்டம் இருக்கனுமுங்கோ!

நிசான் கிராண்ட் லாட்டரி சீட்டில் அடிடா சக்கை என்று வென்று புத்தம் புதிய நிசானை ஓட்டி செல்லலாம். அதிர்ஷ்ட சீட்டில் நம்பிக்கை இல்லா என் கணவர், இந்த சீட்டுகளை வாங்க பர்ûஸத் திறக்கவே இல்லை. என் நிசான் கனவு பகல் கனவானது.

கடைசியாக ஒரு பகல் நேரத்தில் குளோபல் வில்லேஜுக்கு ஒரு விசிட் அடித்தோம். அங்கேயும், மிராக்கிள் கார்டனிலும் என் கண்களுக்கு விருந்தானவைகளை விவரிக்கவும், குளோபல் வில்லேஜில் உண்ட உணவுகள், பெற்ற அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் எனக்கு ஒரு முழு கட்டுரை தேவைப்படுகிறது.

பாலைவன நாட்டில், தண்ணீர் மிகக் குறைவாக கிடைக்கும் இடத்தில், எப்படி இப்படிப்பட்ட பூந்தோட்டத்தை உருவாக்கினார்கள் என்பதை நினைத்து, நினைத்து ஆச்சரியம் அடைந்தேன்.

எத்தனை விதமான பூச்செடிகள், எப்படி அவை இப்படி பூத்துக் குலுங்குகின்றன,  என்பதைக் கேட்டு அறிந்தேன். மே, ஜூன், ஜூலை மாதங்களில் இந்த மிராக்கிள் தோட்டத்தைப் பார்க்க முடியாது. ஏனெனில் மிகவும் சூடான காற்று அந்த மாதங்களில் வீசும். நவம்பர் தொடங்கி, மார்ச் மாதம் வரை அங்கே இந்த மிராக்கிள் கார்டனை திறந்து வைத்திருக்கிறார்கள்.

குளோபல் வில்லேஜ் மற்றும் மிராக்கிள் கார்டனை அடுத்த வாரம் சுற்றி வருவோம்.

தொடரும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com