இங்கே லேபிள்தான் முக்கியம்! 

"நான் படித்து வளர்ந்தது சேலம் பக்கத்தில் உள்ள மெனசி கிராமம். சின்ன வயதிலேயே சினிமா, நாடகம் என பெரிய ஆர்வம்.
இங்கே லேபிள்தான் முக்கியம்! 

"நான் படித்து வளர்ந்தது சேலம் பக்கத்தில் உள்ள மெனசி கிராமம். சின்ன வயதிலேயே சினிமா, நாடகம் என பெரிய ஆர்வம். கதை, பாட்டு என எப்போதும் உள்ளுக்குள் ஓர் ஓட்டம் இருந்துக் கொண்டே இருக்கும். "நீ சினிமா டைரக்டர் ஆகலாமே...' என்று நண்பர்கள் கொளுத்தி போடவும், நேராக கிளம்பி சென்னைக்கு வந்து விட்டேன். என்ன வேலை, என்ன செய்வது என ஒன்றும் புரியவில்லை. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை கேண்டீனில் வேலை. பெரிய, பெரிய மருத்துவர்களை சந்திக்கு வாய்ப்பு கிடைக்கும். அப்போது என்னை பிடித்து போய், என் கதை, பாட்டுக்கு காது கொடுப்பார் மருத்துவர் ஆஷா மூர்த்தி. "உனக்கு சினிமா ஆசை இருக்கா...' என மறுபடியும் உள்ளுக்குள் இருந்ததை கிளறி விட்டார். அவர்தான், "நடிகர் விஜயகுமார் சாரைப் போய் பாரு...' என்று சொல்லி விட்டார். விஜயகுமார் சார் வீட்டு முகவரியை கேட்டேன். ரெண்டு ரூபா இருந்தா பஸ்ல போயிடலாம். இருபது ரூபா கொடுத்தா ஆட்டோவுல போயிடலாம் என்று சொன்னார். நல்ல வேளையாக என்னிடம் அப்போது இருபது ரூபாய் இருந்தது''. சீரியஸôக சொல்லி விட்டு அதிர அதிரச் சிரிக்கிறார் ராமகிருஷ்ணன். "குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்' அடையாளத்துக்குப் பின் மளமளவெனப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். "டீக்கடை பெஞ்சு', "லக்னோ' என அடுத்தடுத்த படங்களில் படு பிஸி. 
"விஜயகுமார் சார் ஒரு தாய் போல் அரவணைத்தார். அவர் காட்டிய அன்பு அதுவரையில் நான் பார்க்காத ஒன்று. ஏன், என்னவென்றே தெரியாமல் சிலரை பிடிக்குமே. அதுபோன்று எனக்கு விஜயகுமார் சார். "கே.எஸ்.ரவிக்குமார், சேரன் இருவரில் யாரிடம் சேருகிறாய்...?' என்று கேட்டதும், தாமதிக்காமல் "சேரன்' என்றேன். உடனடியாக சேரன் சாரிடம் என்னை உதவியாளராக சேர்த்து விட்டார். "பொற்காலம்' தொடங்கி "தவமாய் தவமிருந்து' வரைக்கும் அவருடன் பயணம். அதற்கு முன், பாலசந்தர் சாரிடம் "ஜன்னல்' தொடங்கி பல சீரியல்களில் உதவியாளராக இருந்தேன். அவர் சினிமாவை விட்டு விலகி விட்டதால் மணிரத்னம், ஷங்கர், சேரன் இந்த மூவரில் யாரிடமாவது சேர வேண்டும் என்பது ஆசை. அப்போதுதான் சேரன் சாரிடம் வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது இருப்பது போன்று அப்போது சினிமா கிடையாது. யாரும் இயக்கலாம். யாரும் நடிக்கலாம் என சினிமா மாறியிருக்கும் காலம் இல்லை அது. 
"ஒரு கதை இருக்கு. ஆனால் வழக்கமான கதை கிடையாது. சில விஷயங்களை சரியாக செய்தால் இது வேறு லெவலில் இருக்கும்' என வந்தார் இயக்குநர் ராஜமோகன். அதுதான் "குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்'. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு. அடுத்து வந்த படங்கள் சரியாக அமையாமல் போனதால், கொஞ்சம் சறுக்கல். மற்றபடி அதே உற்சாகம், உத்வேகம் உள்ளுக்குள் உண்டு. இதில் எந்த மிகையும் இல்லை. நீங்களெல்லாம் நின்று பேசுகிற அளவுக்கு வந்ததே பெரிய விஷயம். எளிமையும், உழைப்புதான் எல்லாவற்றையும் விட அழகு என்று இப்போது உணர்ந்திருக்கிறேன்''. 
பிரபலத்தின் வாரிசாகவோ, பெரிய சினிமா பின்னணியே இல்லாமல் இருப்பதுதான் இப்போது ஹீரோவாக ஜெயிப்பதற்கான ஃபார்முலாவா...?
நான் பிரபலத்தின் வாரிசாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் சேரன் மாதிரியானவர்கள் என்னைக் கொண்டாடவும், திட்டி கொட்டவும் இருந்தார்கள். அப்படி விஷயம் தெரிந்தவர்கள் கூடவே இருந்தால், இங்கே யார் வேண்டுமானாலும் ஜெயிக்கலாம். சினிமாவில் வேலைக்கு காசு இல்லை. பேருக்குத்தான் காசு. லேபிள்தான் இங்கே முக்கியம் என்று நினைக்கிறேன். நிறைய படங்களில் நடிப்பதை விட, நாலே நாலு நல்ல படங்களில் நடித்தால் போதும். அந்த எண்ண ஓட்டத்தில்தான் ஓடிக் கொண்டே இருக்கிறேன். "ஆரண்ய காண்டம்', "சூது கவ்வும்' மாதிரியான படங்களில் நடிக்க ஆசை. ஆனால், "நான் டூயட் ஆட மாட்டேன்....", "பஞ்ச் வசனம் பேச மாட்டேன்' என்று இங்கே எதையும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் அடுத்த படத்திலேயே அதில் நடிக்க வைத்து விடுவார்கள். அதனால் வார்த்தைகளை விட்டு விடக் கூடாது. அதுவே நாளைக்கு ஆயுதமாகி நம்மைத் தாக்கும் என்கிற ஆபத்தையும் நான் உணர்ந்திருக்கிறேன். 
அடுத்தடுத்த சினிமாக்களை எப்படி தீர்மானிக்கப் போகிறீர்கள்...?
நல்ல சினிமா பற்றி நிறைய கனவுகள் உண்டு. கலைஞனின் கனவில் அவனுடைய பங்களிப்பு பாதிதான். ரசிகர்களின் ஒத்துழைப்பில்தான் நல்ல கனவுகள் நிறைவடையும். இப்போது அந்த நிலைக்குதான் சினிமா வந்திருக்கிறது. ஹீரோ, ஹீரோயின் என்பதைத் தாண்டி, கதை இருந்தால்தான் அந்த படத்துக்கு வெற்றி கை கூடும். இந்த மாற்றம்தான் சினிமாவுக்கு முக்கியமானது. ஹாலிவுட்டில் இது எப்போதோ வந்து விட்டது. இங்கே இப்போதுதான் நடந்துக் கொண்டு வருகிறது. பெரிய ஸ்டார், சின்ன ஸ்டார் என எந்த வித்தியாசத்தையும் ரசிகர்கள் பார்ப்பதில்லை. கதை இருந்தால் போதும்... இந்த நிலை இன்னும் சில ஆண்டுகள் தொடர்ந்தால், எல்லாமே மாறி விடும். கதைதான் முக்கியம். இதுதான் கதை என தீர்மானமாக பிடித்து விட்டால், அந்தக் கதையில் எந்தக் கதாபாத்திரத்தையும் ஏற்று விடுவேன். ஓடுகிற படத்தில் இருப்பதை விட, கதை உள்ள படத்தில் இருக்கவே ஆசைப்படுகிறேன். இந்த நிலைப்பாடு கடைசி வரை இருந்தால் அழகான வெற்றிகளின் பட்டியல் தொடரும். ராம்ஷேவா இயக்கத்தில் "டீக்கடை பெஞ்சு', அனில்குமார் இயக்கத்தில் "லக்னோ' என இரு படங்களும் அதற்கான அடித்தளமாக இருக்கும். 
உங்களுக்கு பிடித்த ஹீரோ யார்...?
ரஜினி சாருக்கு எல்லோரும் ரசிகர்கள்தான். கமல் சாரின் தனித்துவத்தை உணராதவர்கள் யார்?. அஜித்தின் உயரம். விஜய்யின் உழைப்பு என எல்லோருமே எனக்கு பிடித்தவர்கள்தான். எனக்கு பெரிய ரோல் மாடல் என்றால், அது நான்தான். என்னை நான் நேசிக்கும் போதுதான், என்னுடைய தனித்துவம் தெரிய வருகிறது. சரியான திட்டமிடல் ஒன்றுதான், இங்கே நம்மை முன்னெடுக்கும்.
அதுதான் எனக்கும் தாரக மந்திரம். திட்டங்கள் இல்லாமல், என்னதான் உழைத்தாலும் வீண். நம்புபவர்களுக்கு மட்டும் உண்மையாக இருந்து விட்டால் போதும். சில நேரங்களில் நமக்கு பக்கத்தில் இருப்பவர்களும் ரோல் மாடல்களாக இருப்பார்கள். இப்படி ஒவ்வொருவரையும் கவனித்து நடக்க நினைக்கிறேன். சினிமா கற்றுக் கொடுத்த பாடம் இது.
- ஜி.அசோக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com