தந்தைக்கு மகள் எடுக்கும் விழா

சில தமிழ் சினிமாப் பாடகர்களை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அதிலும் தனியான குரலும், அழுத்தமான உச்சரிப்பும் பளிச்சென்று வெளிப்படும்
தந்தைக்கு மகள் எடுக்கும் விழா

இசைச் சித்தர் சி.எஸ். ஜெயராமன்-100
சில தமிழ் சினிமாப் பாடகர்களை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அதிலும் தனியான குரலும், அழுத்தமான உச்சரிப்பும் பளிச்சென்று வெளிப்படும் வகையில், கவிஞர்கள் எழுதித் தந்த பாடல்களுக்கு உயிர் கொடுத்த அந்த நாள் பின்னணிப் பாடகர்களில் சிதம்பரம் ஜெயராமன் குறிப்பிடத்தக்கவர். 
"நெஞ்சு பொறுக்குதில்லையே'வும், "கா கா கா'வும் "பராசக்தி' பாடல்களை நினைவுக்குக் கொண்டு வரும் என்றால், "இன்று போய் நாளை வாராய்' பாடல் "சம்பூர்ண ராமாயண'த்தை நினைவுபடுத்தும். "ஆயிரம் கண் போதாது', "வண்ணத் தமிழ்ப் பெண்ணொருத்தி' ஆகியவை "பாவை விளக்கை' ஞாபகப்படுத்தும். 
"அப்பா ஒரு கணமும் சும்மா இருக்க மாட்டார். நிகழ்ச்சி இல்லாத சமயம், காரின் பாகங்களை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்துப் போட்டு அப்படியே மறுபடியும் சேர்ப்பார். வேகமாக கார் ஓட்டுவார். குதிரை பூட்டிய கோச் வண்டி வைத்திருந்தார். அவருக்கு மயில் மிகவும் பிடிக்கும்.
மிருதங்கம் வாசிப்பார். கேரம் விளையாட்டில் சமர்த்தர். பேட்மின்டன் விளையாட்டில் கெட்டிக்காரர். குதிரை சவாரி செய்வார். வேட்டைக்குப் போவார். தமிழில் அசாத்திய ஈடுபாடு. வீட்டுக்குச் செந்தமிழில் "கலையூர்', "பூஞ்சோலை' என்றெல்லாம்தான் பெயர் வைப்பார். கச்சேரியை நிறைவு செய்யும் போது, "வாழ்க தமிழ்மொழி, வாழ்க தமிழ் மொழி, வாழிய வாழியவே' பாடலோடுதான் முடிப்பார். ஆரம்பத்தில் "நீதி' என்று ஒரு நாடகத்துக்குக் கதை வசனம் எழுதி, நடித்திருக்கிறார். இசை அமைத்திருக்கிறார்!'' என்று அருமைத் தந்தையை நினைவுகூர்கிறார் மூத்த மகள் சிவகாமசுந்தரி. இவர் கலைஞர் கருணாநிதியின் மகன் மு.க. முத்துவின் மனைவி. 
"அவரின் உள்ளே கர்நாடக சங்கீதம் பிறவியிலேயே இருந்து வளர்ந்து வந்தது என்பதும், இசை அவருக்கு இறைவனால் அளிக்கப்பட்டிருந்த வரப்பிரசாதம் என்பதும் உண்மை' என்கிறார் இசை அறிஞர் பி.எம். சுந்தரம். தாம் வேலை தேடி சென்னை வந்த புதிதில் ஒரு பிற்பகல் சி.எஸ்.ஜெ. தன் அறைக்கு வந்து படுத்து ஓய்வெடுத்துக்கொண்டதை நெகிழ்ச்சியுடன் நினைவுகூருகிறார் என்.கே.டி. பாலன். 
சென்னை மயிலை ஆர்.ஆர். சபாவில் பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கும் தந்தையின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளை விமரிசையாக ஏற்பாடு செய்திருக்கிறார், சிவகாமசுந்தரி. 
"கணேஷ் கிருபா இசைக்குழுவின் ஹரிஹரன் அனந்துவும், முகேஷும் சி.எஸ். ஜெயராமன் பாடிய பாடல்களை இசைக்கப் போகிறார்கள். இன்றைக்குப் பெரிதும் மதிக்கப்படும் திரையிசைப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராக இருக்க, இயக்குநரும், தயாரிப்பாளரும், எழுத்தாளருமான முக்தா சீனிவாசன் முன்னிலை வகிக்கிறார்''. 
நிகழ்ச்சியின் முக்கிய அம்சம் நூற்றாண்டு மலர் வெளியிடுவது. மலரில் இசை விற்பன்னர் பி.எம். சுந்தரம், தொழிலதிபர்கள் வி.கே.டி. பாலன், வி.ஜி. சந்தோசம், டாக்டர் அவ்வை நடராசன், பாடகர் சீர்காழி சிவசிதம்பரம், சாருஹாசன், கே. பாக்யராஜ், கவிக்கோ அப்துல் ரகுமான், கவிஞர் மு. மேத்தா, நடிகர் ராதா ரவி, கவிஞர் பிறைசூடன் என்று பலரும் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். கலைஞர் வழங்கிய அபூர்வமான வாழ்த்துச் செய்தி மலரை அலங்கரிக்கிறது. பாடகர் மதுரை சோமுவின் வாழ்த்துக் கடிதம் இடம் பெற்றிருக்கிறது. சி.எஸ்.ஜெ.வின் வாழ்க்கை ஒரு கட்டுரையாக முகப்பிலேயே முக்கியமாக இடம் பெற்றிருக்கிறது. அவர் பாடிய முக்கியமான பாடல்களின் பட்டியல் தரப்பட்டிருக்கிறது. அப்துல் ஹமீது இலங்கை வானொலியில் பாடகரைக் கண்ட பேட்டியும் சுவாரசியமான அம்சம். 
- சாருகேசி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com