உயிர் உருக்கும் இசை முதல் உடல் இளைத்தது வரை! இசையமைப்பாளர் டி.இமானின் நேர்காணல்

’நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, மேற்கத்திய இசை, ஸ்வரம், தாளம், ராகம், ஸ்ருதி... இப்படி எதுவும் கல்லூரி முடிக்கும் வரை எனக்குத் தெரியாது.
உயிர் உருக்கும் இசை முதல் உடல் இளைத்தது வரை! இசையமைப்பாளர் டி.இமானின் நேர்காணல்

‘நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, மேற்கத்திய இசை, ஸ்வரம், தாளம், ராகம், ஸ்ருதி... இப்படி எதுவும் கல்லூரி முடிக்கும் வரை எனக்குத் தெரியாது. எந்தவித இசையறிவும் இல்லாமல் ஏதோ ஓர் உள்ளுணர்வின் உந்துதலில் இசையை வாழ்க்கையாகத் தேர்ந்தெடுத்தவன் நான்!’ - பணிவு கலந்த குரலில் பேசுகிறார் டி.இமான். நவீன தமிழ்த் திரை இசையின் துள்ளிசையும், மெல்லிசையும் கலந்த பாடல்கள் இவருடையவை. இளையராஜாவுக்கு அடுத்தபடியாக மண்ணின் இசையை திரையில் ஒலிக்க வைக்கும் கலைஞர்.
 
ஜெயித்தவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு என்றில்லாமல், நிறைய புதுமுகங்களுக்கு வாய்ப்பு தருகிறீர்கள்... புதுமுகங்களை கணிப்பது சிரமமாச்சே...?

அந்த கணிப்புக்குத்தான் இங்கே வேலை. சில பேரின் குரலை கேட்கும் போதே, இவர்கள் எந்த மாதிரியான பாடல்களுக்கு சரியாக வருவார்கள் என்று என்னால் கணிக்க முடியும்.

நிறைய பேர் மெயிலில் அவரவர்களின் குரல் பதிவை அனுப்பி வைப்பார்கள். தொலைக்காட்சிகளில் இசை நிகழ்ச்சிகளை பார்க்கும் போது அதிலிருந்து விலக்கப்படுகிறவர்களின் திறமையை கொஞ்சம் ஆழ்ந்து பார்ப்பேன். 'ஊதா கலரு ரிப்பன்...' பாட்டு பாடிய ஹரிஹர சுதன், 'உம்மேல ஒரு கண்ணு...' பாட்டு பாடின ஜித்தின் ராஜ் எல்லாரும் ஆரம்பத்திலேயே நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தவர்கள். எந்த ஒரு டியூன் போட்டாலும், அதை ஓர் அறிமுக பாடகரை பாட வைத்து பதிவு செய்ய வேண்டும் என்று நினைப்பேன். நிறைய அனுபவம் இல்லாத பாடகரிடம் போக வேண்டும் என நினைப்பது இல்லை. எந்த பாடல்பதிவின் போதும் அப்படி அனுபவம் மிக்க குரல் வேண்டும் என்றால் அது ஸ்ரேயா கோஷல்தான்.

சில பாடல்களின் உணர்ச்சிகளுக்கு மட்டுமே அனுபவிக்க பாடகர்கள் தேவைப்படுகிறார்கள். மற்றபடி எனக்கு புதுமுகங்களே போதும். ஒரு வகையில் பார்த்தால் இதுதான் என் வொர்க்கிங் ஸ்டைல்.

நீங்கள் யாரிடமும் வாய்ப்பு கேட்டதில்லை என்று சொல்லப்படுவதுண்டு... அப்படியாக இப்படி ஒரு உயரம் அடைவது பெரிய விஷயம்...?

எங்கே போனாலும் தன்மானம் முக்கியம் என்று நினைப்பேன். பக்கபலமாக கூட யாரும் இருக்கக் கூடாது என்பது என் தனித்துவம். தன்மானத்தை இழந்து எங்கேயும் வேலை பார்க்கக் கூடாது என்று நினைப்பேன். ஒரு கட்டத்துக்கு மேல் யாரையும் நம்பி பயணிக்கக் கூடாது என்பது நினைப்பாக இருக்கும்.

சினிமா ஒரு பெரிய மாயாஜாலம் நடக்கும் இடம். இங்கே யார் எதிரி... யார் நண்பர்... என்பதெல்லாம் கிடையாது. அதனால் நான் என் நண்பர்களிடம் கூட வேலை பார்த்தது இல்லை. இப்போது கூட வருகிற வாய்ப்புகளுக்கு மட்டுமே இசையமைக்கிறேன். எங்கோ ஓர் இடத்தில் வாழ்க்கை மாறியது. என்னை நம்பினார்கள். 'கும்கி' மாதிரியான சினிமாக்கள் என் நம்பிக்கையை அதிகரித்தது. அவ்வளவுதான்.

சினிமா இசை என்பது முழுக்க முழுக்க தொழில்நுட்பத்தின் அடிப்படையைச் சார்ந்து விட்டது... தொழில்நுட்பம் இருந்தால்தான் இங்கே எதுவும் முடியும் என்றாகி விட்டதே...?

அந்தந்தக் காலக்கட்டத்துக்கு ஏற்ற வளர்ச்சி இது. இதை நான், நீங்கள், யாரும் எதுவும் செய்து விட முடியாது. முதன் முதலில் கரோக்கி கான்செப்ட்டை ’விசில்' படத்தின் மூலமாக நான்தான் ஆரம்பித்தேன். அப்போது வந்த விமரிசனங்களில் இந்த கரோகிக்கும் சேர்த்து எழுதப்பட்டது. சிலர், 'இது என்ன இசை மட்டுமே கேட்கிறது. வரிகளே இல்லை’ என்று எழுதினார்கள். கரோக்கி பற்றி கூட தெரியாத இசை விமரிசகர்கள் எல்லாம் அப்போது இருந்தார்கள். ஆனால் இப்போது நிறைய பேர் அப்ளிகேஷன்ஸ் மூலமாக பாடல்கள் பாடி வெளியிடுகிறார்கள். என் கரோக்கியை யாரோ ஒருவர் வேறு விதமாக பயன்படுத்துகிறார்.

ஒரிஜினல் இசையோடு அவர்கள் பாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. சில நேரங்களில் அதை தவறாகவும் பயன்படுத்தியிருக்கிறார்கள். இங்குள்ள கரோக்கியை எடுத்து பிற மொழிகளில் பாடல்களாக மாற்றி இருக்கிறார்கள். இது இசை சார்ந்த வளர்ச்சி. இதை யாரும் தடுக்க முடியாது. அது போல்தான் நீங்கள் சொல்லும் தொழில்நுட்பம்.

இமான் என்றாலே கனத்த உடம்புதான் அடையாளம்... ஆனால் இப்போது மெலிந்து இருக்கிறீர்களே...?

ஆமாம், ஆறு மாதங்களில் 117 கிலோவில் இருந்து 79 கிலோவாக குறைந்திருக்கிறேன். இப்போது 75 கிலோவுக்கு முயற்சி செய்கிறேன். அறுவை சிகிச்சை, நவீன சிகிச்சைகள், மருத்துவர் ஆலோசனை என்று எதுவுமில்லாமல் உடற்பயிற்சி மற்றும் உணவுப் பழக்கம் மூலமாக, ஆரோக்கியமான முறையில் உடல் மெலிய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அப்படி படிப்படியாக ஆறு மாதம் தொடர்ந்து முயற்சி செய்து எடையைக் குறைத்திருக்கிறேன். 'சினிமாவில் நடிக்கப் போறீங்களா...?' என்று நிறைய பேர் கேட்கிறார்கள். அது என்னுடைய விருப்பம் இல்லை.

100 படங்கள்... 15 வருட சினிமா அனுபவம்.... இந்தப் பயணம் எப்படி இருக்கிறது....?

ரொம்பவே அற்புதம். இந்தப் பயணம் யாருக்கும் கிடைக்காது என்றே தோன்றும். வலிகள் உண்டு. சந்தோஷம், புது வானம், புதுப் பாதைகள், புது ருசி, புது நதிகள், புது மனிதர்கள், புது அனுபவங்கள் என இப்படி நிறைய இருக்கிறது.

என் சிந்தனையை மாற்றிய சில விஷயங்கள் நிறைய இருக்கிறது. நம்மை அறியாமல் என் திசையை வேறு இடத்துக்குத் தள்ளின விஷயங்கள் உண்டு. ஒருவேளை என்னைக் கீழே தள்ளினால் மறுபடியும் எழுந்திருக்கும் சக்தியை நானே உணர்ந்த விநாடிகள் இருந்ததுதான் அதில் அற்புதம்.

15 வருடங்களுக்கு மேலான பயணம். இப்போது நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது. ஆயிரம் படங்கள் முடிக்கும்போது இன்னும் பேசலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com