ஒரே வானம் ஒரு தல... பேச்சும் மூச்சும் தளபதி...

"வெண்நிலா வீடு' படம் இயக்கும் போது என்னைப் பற்றி ரசிகர்களுக்கு தெரியாது. அதனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் படம் இயக்கினேன்.
ஒரே வானம் ஒரு தல... பேச்சும் மூச்சும் தளபதி...

"வெண்நிலா வீடு' படம் இயக்கும் போது என்னைப் பற்றி ரசிகர்களுக்கு தெரியாது. அதனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் படம் இயக்கினேன். அதைப் பார்த்து பாராட்டாதவர்களே இல்லை. நான் மதிக்கக்கூடிய பல இயக்குநர்கள் மனம் திறந்து பாராட்டினார்கள். இப்போது என் மேல் ஒரு வித எதிர்பார்ப்பு இருப்பதை உணர்கிறேன். அதனால், அந்த சாயல் இல்லாமல் ஒரு படம் இயக்க நினைத்தேன். அப்படிக் கிடைத்த கதைதான் "விசிறி'! "பாசிட்டிவ் வார்த்தைகளில் பளிச்சென்று பேசுகிறார் வெற்றி மகாலிங்கம். பாரதிராஜாவிடம் சினிமா கற்றவர். விஜய் ரசிகர்களுக்கும் அஜித் ரசிகர்களுக்குமான போட்டா போட்டிதான் கதை.
 கவிதையாகப் படம் எடுத்து விட்டு திடீரென்று இப்படியொரு கதையைக் கையில் எடுக்க என்ன காரணம்...?
 இந்தக் கதையைத் தொட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அதுதான் காரணம். எல்லோருக்கும் பிடிக்கிற மாதிரி ஒரு கதை இயக்க வேண்டும் என்பது பெரும் ஆசை. அதற்கு தகுந்தாற்போல் வந்து அமைந்த படம் இது. விஜய் ரசிகர்களுக்கும், அஜித் ரசிகர்களுக்கும் அவரவர்களின் படம் வெளியானால் தீபாவளி. திரையரங்கத்துக்கு உள்ளே மட்டுமில்லாமல், வெளியேயும் எப்போதும் இரு தரப்புக்கும் மோதல்தான். அதுவும் சமூக வலைதளம் உருவாக்கி இருக்கும் கட்டற்ற சுதந்திரம் இவர்களுக்கு அத்தனை அற்புதம். இன்றைக்கு 500 லைக்ஸ் வாங்கியே தீர வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு எதிருக்கு எதிராக ஸ்டேட்டஸ்களை வீசுகிறார்கள். கெட்ட வார்த்தைகளால் சண்டையிடுகிறார்கள். வார்த்தைகளுக்கு நடுவே புகுந்து நுணுக்கமான அரசியலை கண்டுபிடித்து உலுக்கி எடுக்கிறார்கள். இதெல்லாம் ஆழ்ந்து கவனித்தால், அவ்வளவு சுவாரஸ்யங்கள் நிரம்பி கிடந்தன. ஒரு தரமான திரைக்கதைக்கான அம்சங்கள் உள்ளுக்குள் இருந்தது. அதை அப்படியே நூல் பிடித்த மாதிரி எழுதி இயக்கியிருக்கிறேன். "போட்டியாளர்கள் இனி போராளிகளே....' என படத்தில் ஒரு எண்ட் கார்டு வரும், அதுதான் இப்படத்தின் பேசு பொருள்.
 இப்படியொரு படம் எடுத்து அஜித் - விஜய் ரசிகர்களை இன்னும் மோத தூண்டுகிறீர்கள்...
 சினிமாதான் இங்கே சகலமும். ஒரு படம் வெளியானால்... முடி வெட்டுகிற கடையில் ஆரம்பித்து, டீ ஸ்டால், வளையல் கடை, புடவை கடை என்று எல்லாமே சினிமாவாகி விடும். நதியா வளையல், குஷ்பு கோயில், ரஜினி ஸ்டைல், கமல் டான்ஸ், குஷ்பு இட்லி, சிம்ரன் தோசை என்று சராசரி மனிதனின் மொத்த வாழ்க்கையையும் சினிமாவே ஆக்கிரமிக்கும். அரசியல்வாதிகள் சினிமாவுக்கு வருவார்கள். சினிமாக்காரர்கள் அரசியலுக்கு போவார்கள்.
 தி.நகரிலிருந்து 20 கி.மீ. தூரத்தில் இருக்கிற வியாசர்பாடிக்கு ஒரு நடிகர் போனால், "வட சென்னைக்கு வருகை தரும் தமிழகத்தின் வருங்காலமே' என்று பெரிய பெரிய போஸ்டர் வரவேற்கிறது. ஃபைவ் ஸ்டார் ஓட்டல், கார், பங்களா, பெயர், புகழ் என சினிமா தருகிற வெளிச்சத்துக்கு அந்தப் பக்கம், கடன், வட்டி என கஷ்டப்பட்டு வீட்டு வாடகை, கல்வி கட்டணம் என வாழ்க்கையின் அடிப்படைத் தேவையைக் கூட பூர்த்தி செய்துக் கொள்ள முடியாத இருட்டு இருக்கிறது. சுனாமி வந்து, பிணங்களைப் புதைக்கவும், எரிக்கவும் இடம் இல்லாமல் வாழ்க்கை ஸ்தம்பித்து நின்ற போதும், அரங்கு நிறைந்த காட்சிகளோடு தியேட்டர்களில் ரசிகர்கள் இருந்திருக்கிறார்கள். இதுதான் இந்த சினிமாவின் பலம். கதைக்காக படம் எடுக்காமல், சில வாழ்க்கைப் பதிவும் இதில் இருக்கிறது. இது யாரையும் உறுத்தாது.
 அஜித் - விஜய் தரப்பில் பேசினீர்களா...
 பேசாமல் இருக்க முடியாது. அஜித் தரப்புக்கு தகவல் அனுப்பி விட்டேன். ஒளிப்பதிவாளர் வெற்றி எனக்கு நண்பர். அவர் மூலமாக அஜித்துக்கு தகவல் சொல்லியாகி விட்டது. அழைப்பு எதுவும் வரவில்லை. விரைவில் அழைத்து பேசுவார் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். விஜய் தரப்பில் எஸ்.ஏ.சி. சாரிடம் போய் பேசினேன். "நல்லா எடுப்பா...'' என்று ஆசீர்வதித்தார். ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு வந்து அவர் பேசியது கூட பெரும் பரபரப்பாகி விட்டது. எதிர் தரப்பில் வழக்கு போடுகிற அளவுக்கு வந்து விட்டதில், எனக்கு அவ்வளவு வருத்தம். ஆனால், அதை பற்றி எந்த வார்த்தையும் எஸ்.ஏ.சி. சார் சொல்லவில்லை. "நான் பேசிய அந்த விடியோ பதிவை அனுப்பி வைப்பா...'' என்றார். அந்தளவுக்கு இந்தப் படத்துக்கு அவர் துணையாக நிற்கிறார். விரைவில் எல்லோருக்கும் படத்தை போட்டுக் காண்பிப்பேன்.
 பெரிய ஹீரோக்களை அணுகி இருக்கலாமே...
 எனக்கும் ஆசைதான். ஆனால், பட்ஜெட் பொருந்தி வரவில்லை. அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஒரு கதை எல்லாருக்கும் பொருந்தி வர வேண்டிய அவசியம் இல்லை. ராம் சரவணா, ராஜ் சூர்யா, இத்தாலி தமிழ்வழிப் பெண் ரெமோனா இப்படி எல்லா இடங்களிலும் புதுமுகங்கள்தான். ரொம்பவே நிறைவாக நடித்துக் கொடுத்தார்கள். நம்பிக்கையான திரைக்கதை இருந்தது. அதனால் யார் இருந்தாலும் இயக்குவேன் என்ற பெரும் நம்பிக்கை வந்து, இறங்கி விட்டேன். படத்தில் அஜித் - விஜய் இருவரையும் சமபலமாக வைக்கும் விதமாக ஒரு பாட்டு. "ஒரே வானம் ஒரு தல... பேச்சும் மூச்சும் தளபதி...' இப்படி அதிரடியான வரிகளை தந்து உற்சாகம் தந்தார் மதன் கார்க்கி.
 இப்போது காமெடிப் படங்கள் மட்டும்தான் ஜெயிக்குதே... அதற்காகத்தான் இது மாதிரியா...?
 அப்படி இல்லை. காமெடிப் படங்களாக வருகிறதே என்று சீரியஸ் படம் எடுக்க டைரக்டர்கள் நினைப்பார்கள். ஆனால், அது எடுத்து முடிக்க ஆறு மாதம், ஒரு வருஷம், இரண்டு வருஷம் ஆகிவிடும். பல இயக்குநர்கள் இப்படி ஒரே சமயத்தில் பயணிக்கும் போது, அப்போது ஒரே மாதிரி சீரியஸôன படங்களாக வர ஆரம்பிக்கும். காமெடிப் படங்கள் ஓடுவது நல்ல விஷயம்தான். ஆனால், வரிசையாக காமெடிப் படங்களாக வந்தால் ரசிகர்கள் சோர்ந்து விடுவார்கள்.
 காமெடிப் படங்கள் ஒருநாள் ரசிகர்களுக்கு போர் அடிக்கும். அப்போது மொத்த சினிமாவோட டிரெண்டும் மாறி விடும். இது முழுக்க முழுக்க காமெடி படம் இல்லை. அன்பு, அழுகை, கோபம், காதல், கொண்டாட்டம், தத்துவம் எல்லாமும் இருக்கிறது. வாய்ப்பை தந்த ஜெ சா புரொடக்ஷன்ஸ் ஜமால் சாகிப் - ஜாபர் சாதிக் இருவருக்கும் பெரும் நன்றிகள்.
 - ஜி.அசோக்
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com