இந்த வார கலாரசிகன்

மார்கழி மாத இசைவிழா நிகழ்ச்சிகள் அநேகமாக முடிவுக்கு வந்துவிட்ட நேரம். இந்த ஆண்டு கலாரசிகனின் "இசை உலா' வரவில்லை என்பதில் எனக்கும் சற்று வருத்தம்தான்.

மார்கழி மாத இசைவிழா நிகழ்ச்சிகள் அநேகமாக முடிவுக்கு வந்துவிட்ட நேரம். இந்த ஆண்டு கலாரசிகனின் "இசை உலா' வரவில்லை என்பதில் எனக்கும் சற்று வருத்தம்தான். அதற்குப் பல காரணங்கள். மிக முக்கியமான காரணம் என் தாயாரின் உடல்நிலை. அதனால், நான் கோவையில் தங்க நேர்ந்துவிட்டால் தொடர்ந்து இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவோ, விமர்சனம் எழுதவோ முடியாமல் போய்விட்டது.
இசை விழாவின்போது விளாத்திகுளம் சுவாமிகளின் நினைவு வருகிறது. எழுத்தாளர் கி.ராஜ்நாராயணன், விளாத்தி
குளம் சுவாமிகளிடம் நெருங்கிப் பழகியவர். பல தடவை அவர் குறித்து எழுதியிருக்கிறார். "ரசிகமணி' டி.கே.சி., எழுத்தாளர் கு.அழகிரிசாமி, வல்லிக்கண்ணன் முதலிய பலரையும் கட்டிப்போட்ட இசை, விளாத்திகுளம் சுவாமிகளுடையது.
நல்லப்பசாமி பாண்டியன் என்கிற இயற்பெயரை உடைய விளாத்திகுளம் சுவாமிகள், வீரபாண்டிய கட்டபொம்மனின் உறவுக்காரரான காடல்குடி பாளையக்காரர் சோமசுந்தர ஜெகவீரகஞ்செயபாண்டியனின் மகனாகப் பிறந்தவர். சுவாமிகளின் முன்னோர் கும்பனியாரை எதிர்த்துப் போரிட்டதால் காடல்குடியில் இருந்த அவர்களது அரண்மனை தகர்த்து எறியப்பட்டதால், விளாத்திகுளத்தில் குடியேறியவர்கள்.
விளாத்திகுளம் சுவாமிகள் ஒரு பிறவிக் கலைஞர். ஏதாவது வித்துவான் பாடினால் அந்தப் பாட்டையும் ராகங்களையும் ஒலி நாடாவில் பதிவு செய்வதுபோல் மீண்டும் பாடிக்காட்டும் திறமை அவருக்கு இயல்பாகவே அமைந்திருந்தது. 1965ஆம் ஆண்டு வரை 76 ஆண்டுகாலம் வாழ்ந்து மறைந்த விளாத்திகுளம் சுவாமிகளைப் பற்றி அந்த நாளில் தெரியாதவர்களே கிடையாது. 
அவர் சங்கீத வித்வான்களுக்கெல்லாம் வித்வானாக இருந்த மகா வித்துவான். எந்தக் குருவிடமிருந்தும் சங்கீதம் கற்றதில்லை என்பதால், அவருக்கு ஸ்வரம் பாடவே தெரியாது. ஆனால், அத்தனை ராகங்களும் அத்துப்படி. அவரது கச்சேரிகளில் ராக ஆலாபனைகள்தான் அதிகமாக இருக்கும். சுமார் மூன்று மணி நேரக் கச்சேரி என்றால், அதில் ராக ஆலாபனை சுமார் இரண்டு இல்லது இரண்டரை மணி நேரம் இருக்கும். பெயருக்கு ஏதாவது ஒரு பதிகமோ, பாசுரமோ, பாடலோ இருக்குமே தவிர, முழுக்க முழுக்க ராகங்களின் ஆலாபனைகளாகத்தான் அவரது கச்சேரிகள் இருக்கும்.
ஏழிசை வேந்தர் எம்.கே.தியாகராஜ பாகவதர், நாகஸ்வர சக்ரவர்த்தி ராஜரத்தினம்பிள்ளை, காருக்குறிச்சி அருணாசலம் ஆகியோர் விளாத்திகுளம் சுவாமிகளின் பரம ரசிகர்கள், சீடர்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக மகாகவி சுப்பிரமணிய பாரதிக்கும், விளாத்திகுளம் சுவாமிகளுக்கும் நெருங்கிய நட்பு இருந்திருக்கிறது என்று தெரிகிறது. தனது பாட்டை விளாத்திகுளம் சுவாமிகள் பாடுவதைக் கேட்டு ரசிப்பாராம் பாரதி. "பாடு, பாண்டியா பாடு' என்பாராம். ஆனால், இதுகுறித்து மேற்கொண்டு தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.
தமிழகத்தில் வாழ்ந்து மறைந்த, கரிசல் சீமையில் விளைந்த விளாத்திகுளம் சுவாமிகள் என்கிற இசை முத்து குறித்து சரிவர பதிவு செய்யப்படாமலே போய்விட்டது மிகப்பெரிய குறை. அந்தக் குறையை "இசை மகா சமுத்திரம் விளாத்திகுளம் சுவாமிகள்' என்கிற புத்தகத்தைத் தொகுத்து, என்.ஏ.எஸ்.சிவகுமார் ஓரளவுக்கு ஆறுதல் அளிக்கிறார்.


லா.ச.ராமாமிர்தத்தைப் படிக்காத, அந்த எழுத்து ஆளுமையின் பரிமாணங்களைப் புரிந்து கொள்ளாத தமிழ் எழுத்தாளர் இருக்க முடியாது. கலைமாமணி விக்கிரமனின் "இலக்கியப் பீடம்' இதழில் லா.ச.ரா.வின் மனைவி ஹைமாவதி ராமாமிர்தம் தனது நாட்குறிப்பில் எழுதி வைத்திருந்த குறிப்புகளை சுவாரஸ்யமாகத் தொகுத்துத் தொடராக எழுதியபோது, அதுவரை லா.ச.ரா. குறித்துத் தெரியாத பல செய்திகள் தெரியவந்தன. 
அந்தக் கட்டுரைத் தொடர் இப்போது தொகுக்கப்பட்டு, "திருமதி லா.ச.ரா.வின் நினைவுக் குறிப்புகள்' என்கிற பெயரில் வெளிவந்திருக்கிறது. படித்ததை மீண்டும் படிப்பது என்பது மாடு அசை போடுவது போன்றது. அரக்கப்பறக்கச் சாப்பிட்டுவிட்டு, ஆரஅமர அசைபோடுவது போல, அவசர அவசரமாகப் படித்ததை நிதானமாகப் புத்தக வடிவில் படித்தபோது சுவாரஸ்யம் மேலும் அதிகரித்தது.
முதல் மூன்று கட்டுரைகள் 2016-இல், லா.ச.ரா.நூற்றாண்டின் போது அவர் புதல்வர் சப்தரிஷி எழுதியவை. அதில் "அப்பாவின் ரசிகன்' என்கிற தலைப்பில் சப்தரிஷி செய்திருக்கும் பதிவு, எல்லாக் குழந்தைகளுக்குமே நாம் சொல்லித்தர வேண்டிய பாடம். "படி. நிறைய படி. எதுவேணா படி, ஆனா படிச்சுண்டே இரு. தன்னாலேயே தேவையில்லாததெல்லாம் உதிர்ந்து போய், என்ன வேணுமோ அதை மட்டும் படிப்பாய்' என்பது சப்தரிஷியின்10ஆவது வயதில் அப்பா லா.ச.ரா. சொன்ன உபதேசம். ஏறத்தாழ இதையேதான் வேறு வார்த்தைகளில் என் தகப்பனாரும் எனக்குப் பள்ளிப் பருவத்தில் சொல்லித் தந்தது நினைவுக்கு வந்தது.
லா.ச.ரா.வுக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்த நிகழ்வை அவர் துணைவியார் தனது நாட்குறிப்பில் பதிவு செய்திருப்பதைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். "சிந்தா நதி' நாவலுக்காக 1989ஆம் ஆண்டில்தான் சாகித்ய அகாதெமி விருது அவருக்குக் கிடைத்தது. ஜெயகாந்தனுக்குக் கிடைத்ததிலிருந்தே இந்த ஆண்டு, அடுத்த ஆண்டு என்கிற எதிர்பார்ப்பில் லா.ச.ரா.வின் ரசிகர்கள் இருபது ஆண்டுகள் காத்திருந்தனர்.
மகன் கண்ணன், "அப்பா, நீங்கள் சாகித்ய அகாதெமி வாங்கிறதுக்குள்ள நான் வாங்கிடுவேன் போலிருக்கே?' என்று கேலி செய்தபோது, கொஞ்சம்கூட அலட்டிக் கொள்ளாமல் லா.ச.ரா.சொன்ன பதில்- "ஜனாதிபதியோட பத்தாங் கிளாஸ் வாத்தியார், தான் ஜனாதிபதி ஆகலையேன்னு வருத்தப்படுவாரா? இல்லை, தனது மாணவன் ஜனாதிபதியாயிட்டான்னு தானேடா சந்தோஷப்படுவார்'. அதுதான் லா.ச.ரா.
வெளியிலிருந்து நண்பர்களும் வாசகர்களும் லா.ச.ரா.வை பார்த்த கண்ணோட்டம் வேறு. மனைவியாக இருந்து ஹைமாவதி அம்மையார் அவரைப் பார்ப்பது என்பதே வேறு. அந்த அலாதியான அனுபவத்தை நீங்கள் படித்துத்தான் தெரிந்துகொள்ள வேண்டுமே தவிர என்னால், விளக்கிச் சொல்ல முடியாது. 


தெற்கு ரயில்வேயின் திருச்சி அலுவலகக்தில் அதிகாரியாகப் பணிபுரிந்தவர் பா.சேதுமாதவன். பேனா முனையின் உரசல், புலன் விழிப்பு என்று இவரது இரண்டு கவிதைத் தொகுப்புகளை நான் படித்திருக்கிறேன். 
"ஹைக்கூ என்பது என் சட்டைப் பைக்குள் ஒரு கவிதை' என்பார் எழுத்தாளர் சுஜாதா. சுஜாதாவுக்கு மிகவும் பிடித்த பா.சேதுமாதவனின் கவிதையையே இந்த வாரத்துக்கான எனது தேர்வாகப் பதிவு செய்கிறேன்.
திண்ணையில் வசித்த அப்பாவீட்டுக்குள் வந்தார் புகைப்படமாய்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com