கவி பாடலாம் வாங்க - 7: வாய்பாடுகள்

யாப்பிலக்கணத்தில் ஒரு பாட்டின் உறுப்பாகிய அசைகள் இரண்டு என்பதையும், அவை நேரசை, நிரையசை என்று பெயர் பெறும் என்பதையும் பார்த்தோம்.
கவி பாடலாம் வாங்க - 7: வாய்பாடுகள்

யாப்பிலக்கணத்தில் ஒரு பாட்டின் உறுப்பாகிய அசைகள் இரண்டு என்பதையும், அவை நேரசை, நிரையசை என்று பெயர் பெறும் என்பதையும் பார்த்தோம். எழுத்துக்கள் சேர்ந்து சொல் ஆவது போல, அசைகள் சேர்ந்து சீர்கள் ஆகும். இது இன்ன பாடல் என்று தீர்மானம் செய்வதற்குச் சீர்களே துணையாக நிற்கின்றன. அசைகள் இரண்டானாலும் அவற்றின் பலவகைச் சேர்க்கையினால் சீர்கள் நான்கு வகைகளாக அமையும். அவற்றை இனிப் பார்ப்போம்.
ஓர் எழுத்துத் தனியே நின்று பொருளைத் தெரிவித்தால் அதுவே சொல் ஆகும். அதை ஓரெழுத்தொரு மொழி என்று சொல்வார்கள். அதுபோல ஓர் அசையே சீராக வருவதுண்டு. அதை ஓரசைச்சீர் என்று சொல்வார்கள். நேர் அசை தனியே நின்று சீராவதும், நிரை அசை தனியே நின்று சீராவதும் உண்டு. அப்படி வருபவை இரண்டு சீர்கள்.
இந்த ஓரசைச் சீர்கள் மிகுதியாக வருவதில்லை. வெண்பாக்களில் ஈற்றடியின் ஈற்றில் வரும். வேறு சில இடங்களிலும் வருவதுண்டு. வெண்பாக்களில் வரும் என்பதை மட்டும் இப்போது நினைவில் வைத்துக் கொண்டால் போதும்.
இரண்டு அசைகள் சேர்ந்து வரும் சீர்கள் நான்கு; நேர்நேர், நிரைநேர், நேர்நிரை, நிரைநிரை என்பவை அவை. ""இதந்தரு மனியி னீங்கி'' என்ற பாடலில் ஈரசைச் சீர்கள் வந்திருக்கின்றன.
மூன்று அசைகள் சேர்ந்த மூவகைச் சீர்கள் எட்டு.
நேர்நேர்நேர் நேர்நேர்நிரை
நிரைநேர்நேர் நிரைநேர்நிரை
நேர்நிரைநேர் நேர்நிரைநிரை
நிரைநிரைநேர் நிரைநிரைநிரை
இப்படியே நான்கு அசைகள் சேர்ந்த நாலசைச் சீர்கள் பதினாறு உண்டு. மேலே சொன்ன எட்டு மூவகைச் சீர்களோடு நேர் அசையையும் நிரை அசையையும் சேர்த்தால் பதினாறு சீர்கள் வருவதைக் காணலாம்.

இந்த நாலு வகையான சீர்களிலும் ஈரசைச் சீர்களும், மூவசைச் சீர்களும் மிகுதியாகச் செய்யுட்களில் வரும். இந்தச் சீர்கள் நேர் இறுதியாக உடைய சீர்கள், நிரையை இறுதியாக உடைய சீர்கள் என்று வேறாகப் பிரிக்க வேண்டிய அவசியம் யாப்பிலக்கணத்தில் வருகிறது. பின்னாலே அது புலனாகும். அப்படிச் சீரை அடையாளம் காட்டும்போது நிரையை ஈற்றிலே உடைய ஈரசைச் சீர், நேரை ஈற்றிலே உடைய மூவசைச் சீர் என்று சொன்னால் அவை நீளமாக இருக்கும். அவற்றை எளிதிலே அடையாளம் காட்டச் சீர்களுக்கு வாய்பாடுகள் வைத்திருக்கிறார்கள்.
ஓரசைச் சீருக்கு நாள், மலர் என்பவை வாய்பாடுகள்; நேர்-நாள், நிரை-மலர். ஈரசைச் சீர்களுக்கு உரிய வாய்பாடுகள் வருமாறு:
நேர்நேர் - தேமா
நிரைநேர்- புளிமா
நேர்நிரை - கூவிளம்
நிரைநிரை -கருவிளம்
எல்லோருக்கும் தெரிந்த மரங்களின் பெயர்களையும் அவற்றின் உள்ள பூ, காய், கனிகள் ஆகிய பெயர்களையும் சீர்களுக்கு வாய்பாடு வகுக்கும்போது பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். மாங்காயில் பழமாங்காய், ஊறுகாய் மாங்காய் என்று இரண்டு வகை உண்டு. அவற்றையே தேமா, புளிமா என்று சொல்வார்கள். அப்படியே விளம் என்ற பெயருடைய மரங்கள் இரண்டு உண்டு. ஒன்று கூவிளம்; அதுதான் வில்வமரம். மற்றொன்று கருவிளம்; அது விளாமரம்.
ஈரசைச் சீர்களில் நேராக முடியும் சீர்கள் இரண்டையும் மாச்சீர் என்று குறிப்பார்கள். நேர் ஈற்று ஈரசைச் சீர் என்று நீளமாகச் சொல்வதற்குப் பதிலாக மாச்சீர் என்று சொன்னால் போதும். அப்படியே நிரை நேர் ஈரசைச் சீர் என்று சொல்வதையே விளச்சீர் என்று சொன்னால் போதும். மூவசைச் சீர்களுக்குரிய வாய்பாடுகள் வருமாறு:
நேர் நேர் நேர் - தேமாங்காய்
நிரை நேர் நேர் - புளிமாங்காய்
நேர் நிரை நேர் - கூவிளங்காய்
நிரை நிரை நேர் - கருவிளங்காய்
நேர் நேர் நிரை - தேமாங்கனி
நிரை நேர் நிரை - புளிமாங்கனி
நேர் நிரை நிரை - கூவிளங்கனி
நிரை நிரை நிரை - கருவிளங்கனி
இந்தச் சீர்களில் நேர் ஈற்றுச் சீர்களைக் காய்ச்சீர் என்று சொல்வார்கள். காய்ச்சீர் என்று சொன்னாலே அது மூவகைச் சீர் என்பதும், நேரை ஈற்றிலே உடையது என்பதும் புலனாகும். நிரை ஈற்றுச் சீர்களைக் கனிச்சீர் என்று சொல்வார்கள். நாலசைச் சீர்களின் வாய்பாடு வருமாறு:
நேர் நேர் நேர் நேர் - தேமாந்தண்பூ
நிரை நேர் நேர் நேர் - புளிமாந்தண்பூ
நேர் நிரை நேர் நேர்- கூவிளந்தண்பூ
நிரை நிரை நேர் நேர் -கருவிளந்தண்பூ
நேர் நேர் நிரை நேர் - தேமாநறும்பூ
நிரை நேர் நிரை நேர் - புளிமாநறும்பூ
நேர் நிரை நிரை நேர் - கூவிளநறும்பூ
நிரை நிரை நிரை நேர் - கருவிள நறும்பூ
இவை எட்டும் பூச்சீர்கள்.

நேர் நேர் நேர் நிரை - தேமாந்தண்ணிழல்
நிரை நேர் நேர் நிரை - புளிமாந்தண்ணிழல்
நேர் நிரை நேர் நிரை - கூவிளந்தண்ணிழல்
நிரை நிரை நேர் நிரை - கருவிளந்தண்ணிழல்
நேர் நேர் நிரை நிரை - தேமாநறுநிழல்
நிரை நேர் நிரை நிரை - புளிமாநறுநிழல்
நேர் நிரை நிரை நிரை - கூவிளநறுநிழல்
நிரை நிரை நிரை நிரை - கருவிளநறுநிழல்
இவை எட்டும் நிழற்சீர்கள். பூச்சீர் என்றால் அது நாலசைச் சீர் என்றும், நேர் என்ற இறுதியை உடையது என்றும் தெளிவாகும். நிழற்சீர் என்றால் நாலசைச் சீர் என்றும், நிரை என்ற உறுதியை உடையது என்றும் புலனாகும். நாலசைச் சீருக்கு மேல் சீர்கள் இல்லை. அதாவது எந்தப் பாட்டானாலும் ஒரு சீரில் நான்கு அசைகளுக்கு மேல் வருவதில்லை.
""இதந்தரு மனையி னீங்கி'' என்ற பாட்டுக்கு இப்போது சொன்ன வாய்பாடுகளை அமைத்துக் பார்க்கலாம்.
இதந்தரு மனையி னீங்கி
கருவிளம் புளிமா தேமா
இடர்மிகு சிறைப்பட் டாலும்
கருவிளம் புளிமா தேமா
பதந்தரு விரண்டு மாறிப்
கருவிளம் புளிமா தேமா
பழிமிகுந் திழிவுற் றாலும்
கருவிளம் புளிமா தேமா
விதந்தரு கோடி யின்னல்
கருவிளம் தேமா தேமா
விளைந்தெனை அழித்திட் டாலும்
கருவிளம் புளிமா தேமா
சுதந்தர தேவி நின்னைத்
கருவிளம் தேமா தேமா
தொழுதிடல் மறக்கி லேனே
கருவிளம் புளிமா தேமா
இந்த வாய்பாடுகளைக் கூர்ந்து பாருங்கள். ஒவ்வொரு அரை அடியிலும் உள்ள முதல் சீர், அதாவது அடியின் முதல் சீரும் நான்காம் சீரும் விளச்சீராகவே இருத்தலைக் காணலாம். விளச்சீர் என்பது நிரை அசையை இறுதியில் உடைய ஈரசைச்சீர். அரை அடியில் இரண்டாம் சீரும் மூன்றாம் சீரும் மாச்சீர்களாகவே இருக்கின்றன. ஆனால், இரண்டாம் சீரில் தேமாவும், புளிமாவும் வருகின்றன. மூன்றாம் சீரோ தேமாச் சீராகவே வருகிறது. இதை நன்றாகக் கவனிக்க வேண்டும். பாட்டின் ஓசையைக் கவனித்துக் கவி எழுதுங்கள். பிறகு வாய்பாட்டைப் புகுத்திப் பார்த்தால் இந்த முறையில் இருப்பதை அறியலாம்.
ஆகவே, இந்த அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தில் அரையடியில் முதல் சீர் விளச்சீராகவும், இரண்டாம் சீர் மாச்சீராகவும், மூன்றாம் சீர் தேமாச்சீராகவும் இருக்கின்றன என்று முடிவு கட்டிவிடலாம். இந்தப் பாட்டில் முதல் சீரும் நான்காம் சீரும் கருவிளமாகவே இருக்கின்றன. எதுகை வர வேண்டும் என்பதால் முதல் சீர் நான்கு அடியிலும் ஒத்தே வர வேண்டும். அங்கே யாவும் கருவிளமாக வந்தன. ஆனால், நான்காம் சீரில் அந்த நிர்பந்தம் இல்லை. கருவிளம், கூவிளம் என்ற இரண்டிலும் எது வேண்டுமானாலும் வரலாம்.
(தொடர்ந்து பாடுவோம்...)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com