அப்பாவின் ஆசையை நிறைவேற்றிய மகன்

திரைப்படத் துறையில் ஹிட் பாடல்களை வெளியிட்டு, கர்நாடக சங்கீத உலகிலும் ஒரு வாக்கேயகாரராக வலம் வந்தவர் காலி பெஞ்சல நரசிம்ம ராவ்.
அப்பாவின் ஆசையை நிறைவேற்றிய மகன்

திரைப்படத் துறையில் ஹிட் பாடல்களை வெளியிட்டு, கர்நாடக சங்கீத உலகிலும் ஒரு வாக்கேயகாரராக வலம் வந்தவர் காலி பெஞ்சல நரசிம்ம ராவ். ஆயிரம் கிருதிகள் எழுதி, அவற்றில் 300-க்கு நொட்டேஷன்களும் எழுதியவர். 300 வர்ணங்கள் இயற்றியிருக்கிறார். இவற்றை எல்லாம் திருப்பதி வேங்கடேசப் பெருமாளுக்குக் காணிக்கை ஆக்கியிருக்கிறார். இவற்றிலிருந்து சில வர்ணங்களைத் தொகுத்து ஒரு நூலாகவும், கீர்த்தனைகளைத் தொகுத்து ஒரு நூலாகவும் "சங்கீத கலாநிதி 1 மற்றும் 2' என்று சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் வெளியிட்டார், அவர் மகன் ஷோபநாத். தெலுங்கில் எழுதப்பட்ட பாடல்களோடு, அவற்றை ஆங்கில எழுத்தில் மாற்றி இரு மொழிகளிலும் அச்சிட உதவிய சகோதரிகள் வைஜயந்தி-வனிதாவுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

"அப்பாவுக்கு எப்படியாவது தன் காலத்தில் இந்த நூல்கள் வெளிவர வேண்டும் என்று ஆசை. ஆனால் அது நிறைவேறவில்லை. அப்போது அவர் அணுகிய சங்கீத வித்வான்களிடம் கேட்டுக்கொண்டபோது, தங்கள் பெயரில், தங்கள் சாகித்தியங்களாக வேண்டுமானால் வெளியிட சம்மதிக்கிறோம் என்றார்கள். அப்பாவுக்கு அதில் விருப்பம் இல்லை. என்னிடம் கேட்டார். அன்றைக்கு நான் வங்கியில் பணியில் இருந்ததால் அதற்காக என்னால் நேரம் செலவிட இயலவில்லை. இப்போது ஓய்வு பெற்றுவிட்டதால், அப்பாவின் ஆசையை நிறைவேற்ற முன்வந்தேன்!' என்றார் ஷோபநாத்.
1903-இல் ஆந்திராவில் தோப்புகுண்ட அக்ரஹாரத்தில் பிறந்த நரசிம்மராவ், தமது 64-ஆவது வயதில் சென்னையில் காலமானார். விஜயவாடாவில் கோட்டிலிங்கம் மற்றும் ஹனுமத் தாஸ் என்பவர்களிடம் இசையோடு, ஹார்மோனியமும் வாசிக்கக் கற்றுக்கொண்டார். "ஷோரப்-ருஸ்தம்', "நாரத விவாஹம்', "காலேஜ் கேர்ள்', "பந்துலம்மா' போன்ற நாடகங்களுக்கு முதலில் இசை அமைத்தவர், சென்னைக்கு 1934-இல் வந்த பிறகு, திரைப்படங்களுக்கு இசை அமைக்கத் தொடங்கினார். வேல் பிக்சர்ஸின் "சீதா கல்யாணம்' படம்தான் இவர் இசையமைத்த முதல் திரைப்படம். எல்லாமே ஹிட்.
"சசிரேகா பரிணய'த்தில் அத்தனை பாடல்களையும் தாமே பாடினார். அதில் பாடிய "விவாஹ போஜனமு' பின்னர் "கல்யாண சமையல் சாதமாக' மாயா பஜாரில் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது.
"1934 முதல் 1961 வரை அப்பா பதினைந்து படங்களுக்கு இசையமைத்தார். என்.டி. ராமாராவ் நடித்த "சீதாராம கல்யாணம்' உட்பட, எல்லாமே சூப்பர் ஹிட். அப்பா நிறைய ராகங்களையும், வகை வகையான தாளங்களையும் கண்டுபிடித்திருக்கிறார். அத்தனையும் திருப்பதி பெருமாளுக்கு அர்ப்பணம். ஓர் அட தாள வர்ணத்துக்கு 27 ராகங்களைப் பயன்படுத்தியிருக்கிறார். "கான கலா', "கான வாரிதி' என்று இரண்டு புத்தகங்களை அப்போது வெளியிட்டிருக்கிறார். கர்நாடக இசை மூவர், அன்னமாசார்யா, புரந்தரதாசர், úக்ஷத்ரய்யா யாரும் பயன்படுத்தாத அபூர்வ ராகங்களைப் பயன்படுத்தியிருக்கிறார்" என்கிறார் ஷோபநாத். 35 தாளங்களில் சிவன் மீது கீர்த்தனை இயற்றியிருக்கிறார். ஆதிசங்கரரின் பஜகோவிந்தம் சுலோகத்தை 32 ராகங்களில் மெட்டமைத்திருக்கிறார். ராமாயணம், பாகவதத்துக்கும்கூட பாடல்கள் இயற்றி மெட்டமைத்திருக்கிறார். இவற்றை எல்லாம் இசை மேதை துவாரம் வேங்கடசாமி நாயுடு 1940-இல் ஒரு பத்திரிகையில் புகழ்ந்து பாராட்டியிருக்கிறார்.
சினிமா துறைக்கு வந்தது வாழ்வாதாரத்துக்கு மட்டுமே என்றாலும், மூச்சு உள்ள வரை கர்நாடக சங்கீதத்துக்குச் செலவிட்டவர் நரசிம்ம ராவ். காந்தி மீது மிகுந்த பற்றுக்கொண்டவர்; நிறைய தேசியப் பாடல்களையும் இயற்றியிருக்கிறார் நரசிம்ம ராவ்.
நிகழ்ச்சியில் புத்தகங்களை வெளியிட்ட வித்வான் மதுரை ஜி.எஸ். மணியும், வீணை விதுஷி டாக்டர் ஆர்.எஸ். ஜெயலட்சுமியும் இந்தக் கீர்த்தனைகளின் மேன்மையை எடுத்துக் காட்டினர். "எல்லாம் எளிமையான வரிகள். ஆனால் அர்த்தம் பொதிந்தவை" என்று இருவரும் பாராட்டினர். ஜி.எஸ். மணி பல தமிழ்த் திரையுலக இசையமைப்பாளர்களிடம் உதவி இசையமைப்பாளராக இருந்தவர். குறிப்பாக, எம்.எஸ். விசுவநாதனுடன் பல ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். "ஹார்மோனியம் வாசிக்கத் தெரிந்த இசையமைப்பாளர்கள் என்று இன்றைக்கு இசையமைப்பாளர்களாக உள்ள பலரைக் குறிப்பிட்டு, ஹார்மோனியம் வாசிப்பது அப்படி ஒன்றும் எளிதல்ல!' என்றார்.
நூல்களைப் பெற்றுக்கொண்ட "சுருதி' ஆங்கில மாத இதழின் முதன்மை ஆசிரியர் ராம் நாராயண், இசை அறிந்தவர் என்பதோடு கிரிக்கெட் ஆட்டக்காரரும் கூட. கிரிக்கெட் ஆட்டக்காரர்களில் யாரெல்லாம், எப்படி எல்லாம் பாடுவார்கள் என்று பாடிக் காட்டி, கைதட்டல்களை அள்ளிக்கொண்டார். பட்டோடி அடிக்கடி பாடும் கஜல் ஒன்றை அவர் மாதிரியே பாடிவிட்டு, அதன் சரியான வார்த்தைகளைப் பாடி கலகலப்பூட்டினார். நரஹரி என்ற முத்திரையுடன் அமைந்த நரசிம்ம ராவின் சாகித்தியம் இயற்றும் திறமையைப் பாராட்டிப் பேசினார்.
- சாருகேசி




 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com