செம்பரம்பாக்கம் ஏரி: தெரிந்த பெயர், தெரியாத விவரம்

ஏரியின் மொத்த கொள்ளளவு 13 ஆயிரம் ஏக்கர். 85 அடி நீர்மட்டமும், 75 அடி அடிமட்டமும் கொண்டது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 அடி ஆகும்.
செம்பரம்பாக்கம் ஏரி: தெரிந்த பெயர், தெரியாத விவரம்

* சென்னை, பூந்தமல்லிக்கு அருகே நான்கு கி.மீ. தொலைவில் உள்ளது செம்பரம்பாக்கம் ஏரி. நகரின் இருபது சதவீத மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது.

* ஏரியின் மொத்த கொள்ளளவு 13 ஆயிரம் ஏக்கர். 85 அடி நீர்மட்டமும், 75 அடி அடிமட்டமும் கொண்டது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 அடி ஆகும்.

* செம்பரம்பாக்கம் என்று இந்த ஏரிக்கு பெயர் வைக்கப்பட்டிருந்தாலும், அருகிலுள்ள செம்பரம்பாக்கம் கிராமத்தின் எல்லைக்குள் இந்த ஏரி வரவில்லை. சில நேரங்களில் இந்த கிராமமே தண்ணீர் பிரச்னையால் தவிப்பதும் உண்டு.

* ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து வரும் கிருஷ்ணா நதி நீர், பூண்டியைத் தாண்டி செம்பரம்பாக்கம் ஏரிக்கும் வந்ததடைகிறது.

* இந்த ஏரியின் வரலாறு ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. சோழர் காலத்தில் இந்த ஏரி பிரசித்தி பெற்றிருந்ததாகக் வரலாற்றுக் குறிப்புகள் உண்டு.

* சோழர் காலத்தில் செம்பரம்பாக்கம் புலியூர் கோட்டம் என்று அழைக்கப்பட்டது. காஞ்சிபுரத்தை தலைமையிடமாகக் கொண்ட தொண்டை மண்டலத்தில் இருந்த 24 கோட்டங்களில் இந்தப் பகுதியும் அடங்கும்.

* ஏரியின் கரைகள் பழமையான சிவன் ஆலயங்களை வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளன. பழஞ்சூர், சிறுகளத்தூர், செம்பரம்பாக்கம், சோமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள சிவன் கோயில்கள் எல்லைகளாக அமைந்துள்ளன. மழைக்காலத்தில் நீர் திறந்துவிடும்போது இந்தக் கோயில்களில் பூஜைகள் நடைபெறும்.

* ஏரியின் நடுவில் அம்மன் கோயில் இருப்பதாக சொல்பவர்கள் உண்டு. உண்மையில் இது சிவலிங்கம் தான். ஏரியில் தண்ணீர் பெருக்கெடுக்கும்போது சிவலிங்கம் மறைந்துவிடும்; தண்ணீர் வற்றும்போது சிவலிங்கம் காணப்படும்.

* பூந்தமல்லி-ஸ்ரீபெரும்புதூர் சாலையின் இடது பக்கமாகவும், குன்றத்தூர்-ஸ்ரீபெரும்புதூர் சாலையின் வலது பக்கமாகவும் இந்த ஏரி அமைந்துள்ளது. பூந்தமல்லியில் இருந்து குன்றத்தூருக்கு செல்ல ஏரிக்கரை வழியாகவும் வாகனங்களில் மக்கள் செல்கின்றனர்.

* செம்பரம்பாக்கம், நசரத்பேட்டை, மேப்பூர், சிறுகளத்தூர், புத்தேரி, பழஞ்சூர் ஆகிய கிராமங்களை இந்த ஏரி இணைக்கிறது.

* இந்த ஏரி நீர், ஐந்து சுத்திகரிப்பு மையங்களில் சுத்திகரிக்கப்பட்டு, பல்வேறு பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. தினசரி 80 மில்லியன் லிட்டர் தண்ணீர் இங்கிருந்து செல்கிறது.

* இங்குள்ள நீர்க்குழாய்களின் ஒருமுனை ஆலந்தூர் நீர் வழங்கு நிலையத்துக்குச் சென்று அங்கிருந்து அனகாபுத்தூர், பம்மல், பல்லாவரம் ஆகிய பகுதிகளைக் கடந்து தாம்பரம் வரை செல்கிறது. பூந்தமல்லி, போரூர், குன்றத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் நீர் விநியோகிப்பது செம்பரம்பாக்கம் மூலம்தான்.

* மீதமாகும் உபரிநீர் சிறுகளத்தூர். பழஞ்சூர், சோமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குப் பாய்கிறது.

* ஏரிக்கரையில் உள்ள பழமை வாய்ந்த கோபுரம், ஏரியில் உள்ள நீரை அளவிடுவதற்காக ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டதாகும்.

* சிறுகளத்தூருக்கு அருகில் தென்படும் அணையில் இருந்து திறக்கப்படும் நீர், அருகில் உள்ள கிராமங்களின் விவசாய நிலங்களுக்குப் பயன்படுகிறது. இங்கு நீர் திறக்கப்படும்போது வெள்ளத்தைக் காண மக்கள் திரண்டு வருவார்கள்.

* முன்னாள் முதல்வர் காமராஜரின் ஆட்சிக் காலத்தில் இந்த ஏரி தூர்வாரப்பட்டு கரைகள் கட்டப்பட்டன. நீர் கோபுரத்துக்கு அருகில் பூங்காவும் அமைக்கப்பட்டது.

* இந்த ஏரியிலிருந்து தான் அடையாறு நதி தொடங்குகிறது.

* ஏரி நீரைப் பயன்படுத்த இரண்டு நீர்க்குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றுக்கு பாதி அளவு நீரை மட்டுமே உருஞ்சும் திறன் இருப்பதால், மூன்றாவது நீர்க்குழாய் அமைக்கும் பணிகள் 2012 முதல் நடைபெற்று வருகின்றன.
- சந்திர.பிரவீண்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com