நிஜ கழுகுகளை மிரள வைத்த காத்தாடி கழுகு! - சாந்தகுமாரி சிவகடாட்சம் 

ஆமதாபாத்தின் படாங் பஜாரில் (Patang Bazar) மக்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. கூட்டத்துக்குள் நுழைந்து முன்னேறிக் கொண்டிருந்தேன். 
நிஜ கழுகுகளை மிரள வைத்த காத்தாடி கழுகு! - சாந்தகுமாரி சிவகடாட்சம் 

சிந்தை கவர்ந்த திருவிழாக்கள்- 3
ஆமதாபாத்தின் படாங் பஜாரில் (Patang Bazar) மக்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. கூட்டத்துக்குள் நுழைந்து முன்னேறிக் கொண்டிருந்தேன்.
"சாந்தி, பார்த்து நட'' என்று என் கணவர் எச்சரிக்க, "நீங்கள்தான் என் பாடிகார்ட் போல வருகிறீர்களே'' என்று சொல்லிச் சிரித்தேன். சங்கராந்திக்கு முன்னால் இரண்டு நாட்களுக்கு இருபத்து நாலு மணி நேரமும் இயங்கி, காத்தாடி விடுவதற்குத் தேவையான பொருட்களை விற்கும் கடைகளை இந்த படாங் பஜார் தன்னகத்தே கொண்டுள்ளது.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட காத்தாடிகள், வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்டவை, ஆமதாபாத்தின் சுற்று வட்டார கிராமங்களிலும், குஜராத்தின் பிற நகரங்களிலும் இருந்து வந்தவை என்று... எத்தனை விதமான காத்தாடிகள். காகிதம், துணி, பைபர் கிளாஸ் போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்டவை. பூக்கள், மிருகங்களின் உருவங்கள், பறவைகளைப் போன்றவை என்று எத்தனை விதமான காத்தாடிகள்; பெயிண்டிங் செய்யப்பட்ட காத்தாடிகளுக்கு அதிகமான தேவை இருந்தது.
பாம்பைப் போன்ற உருவம் உள்ள காத்தாடியையும், கழுகின் தோற்றம் கொண்ட காத்தாடி ஒன்றையும் நான் வாங்கினேன். பல கடைகளின் வெளிப்புறத்தில் மாஞ்சா கலவையைத் தயாரித்துக் கொண்டிருந்தனர். ஆயிரம் கஜம் கொண்ட மாஞ்சா நூல் கண்டு 150 ரூபாயிலிருந்து 200 ரூபாய் வரை விற்கப்பட்டது. சிறுமியாக இருந்தபோது என் அண்ணன் உபயோகப்படுத்திய பிங்க், பச்சை வண்ணத்தைத் தன்னகத்தே கொண்ட மாஞ்சா நூல் கண்டுகளை வாங்கினேன். 
"சாந்தி, ஏன் இவற்றையெல்லாம் வாங்குகிறாய்'' என்ற என் கணவரின் கேள்விக்கு, "சங்கராந்தி அன்றைக்கு காத்தாடி விடப் போகிறேன்'' என்றேன்!
"மேடம், நீங்கள் கட்டாயமாக சங்கராந்திக்கு என்று விற்கப்படும் (Undhiyu) உண்டியுவை சாப்பிட வேண்டும்'' என்றார் எங்களுடன் வந்த அகில் என்ற எங்கள் கார் ஓட்டுநர்.
அந்த சமயத்தில் நாங்கள் மாஞ்சா கயிற்றைக் கையாளும்போது விரல்களை அது வெட்டி விடாமல் பாதுகாக்கும், பிங்கர் பேண்ட்டுகளை விற்கும் கடைகளைப் பார்வை இட்டுக் கொண்டிருந்தோம்.
"அது என்ன உண்டியு?'' என்றேன். "கருணைக்கிழங்கு, பீன்ஸ், மற்றும் எள் கொண்டு தயாரிக்கப்பட்டது. "சங்கராந்தி' அன்று, இந்த டிஷ், கட்டாயமாக எல்லா வீடுகளிலும் செய்யப்படும். மற்றொரு முக்கியமான உணவு ஜிலேபி. 
"போன வருடம் 1000 கிலோ உண்டியு மற்றும் ஜிலேபியை செய்தேன். அது போதவில்லை. இந்த வருடம் 1200 கிலோ செய்ய முடிவு செய்திருக்கிறேன்'' என்று பெருமையுடன் கூறிய கடைக்காரர் கொடுத்த உண்டியு, விநோதமான சுவையுடன் சுவைத்தது.
ஜனவரி 11-ஆம் தேதி காலை குளித்து, உடை உடுத்தி, காலை உணவை முடித்துக்கொண்டு சபர்மதி ஆற்றங்கரைக்கு சற்று தள்ளியிருக்கின்ற மைதானத்தை நோக்கி பயணித்தோம். ஆயிரக்கணக்கான மக்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போதைய குஜராத்தின் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி, சர்வதேச காத்தாடி திரு
விழாவைத் தொடங்கி வைத்தார். பல நாடுகளைச் சேர்ந்த காத்தாடி விடுபவர்கள் தங்கள் நாட்டின் கொடிகளை ஏந்தி வந்தார்கள். பிறகு பல வண்ண பலூன்களைக் காற்றில் பறக்க விட்டனர். பள்ளி மாணவர்களின் நடனங்களும், அணிவகுப்புகளும் அரங்கேறின. முதலமைச்சர் நரேந்திர மோடியின் உரைக்குப் பின்பு சர்வதேச காத்தாடி திருவிழா தொடங்கியது. 
ஆகா! என் கண்கள் கண்ட காட்சிகளை, வர்ணிக்க வார்த்தைகள் போதுமா? முயற்சிக்கின்றேன். இவ்வளவு பெரிய ராட்சத காற்றாடிகளை வாழ்க்கையில் நான் பார்த்ததே இல்லை. ஒவ்வொன்றையும் விரித்துப் பறக்கவிட நான்கு அல்லது ஐந்து நபர்கள் தேவைப்பட்டனர். ஜப்பான், இந்தோனேசியா, அமெரிக்கா, இத்தாலி, மலேசியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட காத்தாடிகள் என்னை "வாவ்' என்று கூவ வைத்தன. தங்க மீன், கடிகாரம், புலி, கரடி, கழுகு, பாம்பு, டால்பின், விநாயகர் முகமூடிகள், விமானம் என்று காத்தாடி செய்யும் கலைஞனின் கற்பனைக்கு ஏற்றவாறு அவனுடைய கைகள் உருவாக்கிய அற்புதப் படைப்புகள், வானில் பறந்து கொண்டிருந்தன.
வானத்தை அண்ணாந்து பார்த்து மக்கள் கூட்டம் கைதட்டி ஆரவாரம் செய்த வண்ணம் இருந்தது. காமிராக்கள் கிளிக், கிளிக் என்று ஒலி எழுப்பிக் கொண்டே இருந்தன. ஒரு வேடிக்கையான சம்பவம் அனைவரையும் கவர்ந்தது. வானத்தில் பறந்து கொண்டிருந்த ராட்சத கழுகு காத்தாடி அவ்வளவு தத்ரூபமாக பறந்துகொண்டிருந்தது. வானத்தில் சில நிஜ கழுகுகள் நான்கு இந்த காத்தாடி கழுகை உண்மையானது என்று கருதி, தங்கள் எல்லைக்குள் வந்துவிட்ட அந்த புது விருந்தாளியை தாக்கத் தொடங்கின. பெரியவர்கள் தொடங்கி குழந்தைகள் வரை இந்தக் காட்சியை வெகுவாக ரசித்தனர்.
"அதோ பாருங்கள்'' என்று உற்சாகமாக கைகளைத் தட்ட ஆரம்பித்தேன். ஒரு பெரிய சதுர காத்தாடியின் பின்னால் வரிசையாக நூற்றுக்கும் மேற்பட்ட அதே உருவம் கொண்ட காத்தாடிகள். ஆனால் ஒன்றைவிட மற்றொன்று அளவில் சிறியதாக வானில் இரயில் பெட்டியைப்போல பறப்பதைப் பார்த்து வாழ்நாளில் மறக்கமுடியாத அனுபவமாக இருந்தது. அகமதாபாத்தைச் சேர்ந்த ரசுல் பாய் ரஹிம் பாய் (Rasul bhai Rahim bhai) என்ற காத்தாடி கலைஞர் இதை உருவாக்கி உள்ளார். மாலை நான்கு மணி ஆனபொழுது, ஆக்டோபஸ் மற்றும் நண்டு உருவம் கொண்ட காத்தாடிகள் பறந்துகொண்டிருந்தன. வானத்தை அண்ணாந்து பார்த்த வண்ணம் இருந்த கண்கள் சோரவில்லை, கழுத்து வலிக்கவில்லை, கால்கள் தளரவில்லை. ஏனெனில் கண்ட காட்சிகளால் மனம் மகிழ்ச்சியில் துடித்துக் கொண்டிருந்தது.
காத்தாடி செய்யும் முறையை சொல்லிக் கொடுக்கும் ஸ்டால்கள், பலவிதமான காத்தாடிகளை வெளிப்படுத்திய கண்காட்சி, ஒலி, ஒளி காட்சி, உணவு ஸ்டால்கள், குளிர்பான விற்பனை நிலையங்கள் என்று சர்வதேச காத்தாடி கண்காட்சிக்கு இவை சிறப்பு சேர்க்கின்றன.
சங்கராந்தி தினம் அன்று ஹோட்டலில் மொட்டை மாடியில், பணியாளர்களின் உதவியோடு நான் என்னுடைய பாம்பு காத்தாடியை பறக்கவிட்டுக் கொண்டிருந்தேன். என் கைகள் மாஞ்சா கயிற்றைப் பிடித்துக் கொண்டிருந்தது. சர்வதேச காத்தாடி விழாவில் விநாயகர் காத்தாடிகளின் கயிற்றைப் பிடித்துக்கொள்ள அனுமதித்த அதிகாரியை என் நெஞ்சம் வாழ்த்தியது. என்னைச் சுற்றி இருந்த வீடுகளில், பல பிளாட்டுகளை தன்னகத்தே கொண்ட மொட்டை மாடிகளில், தங்கள் உற்றார் உறவினருடனும், நண்பர்களுடனும் மக்கள் பலவிதமான வண்ண காத்தாடிகளை பறக்கவிட்டுக் கொண்டிருந்தனர். பகல் உணவு நேரத்தில்கூட, வானில் பல்லாயிரக்கணக்கான காத்தாடிகள் வட்டமிட்டுக் கொண்டிருந்தன. எரிகற்களாக பல காத்தாடிகள் வெட்டுப்பட்டு, வீழ்ந்துபோக மக்களின் ஆரவாரம் கடல் அலைகளின் ஒலியாக எழுந்து, எழுந்து அடங்கிக் கொண்டிருந்தது. 
மாலை ஐந்து மணிக்கு ஹோட்டலை விட்டு வெளியே வந்தபொழுது, மரங்களின் கிளைகள் எல்லாம் காத்தாடி ஆடைகளை அணிந்திருந்தன. மின் கம்பங்கள், விளம்பர பலகைகள், வீதிகள் என்று எங்கும் காத்தாடிகள். இரவு சூழ்ந்தபொழுது சீனத்து விளக்குகளைக் கொண்ட காத்தாடிகள் வானத்தை நிறைந்தன. வானம் முழுவதும் நட்சத்திரங்களாய் மேலே, மேலே எழும்பிய அந்த விளக்கு காத்தாடிகள், வெளிச்சமான எதிர்காலத்தை சுட்டிக்காட்டின. கண்கவர் வானவேடிக்கைகளோடு அகமதாபாத்தில் காத்தாடி திருவிழா முடிவுக்கு வந்தது.
- தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com