பிடித்த பத்து: என்னைக் காக்கும் வீணை !

என் வாழ்க்கையில் என்றுமே மறக்கமுடியாதவர். இவர் சொன்னால் கண்டிப்பாக செய்து முடிப்பார்கள். என்னைப் பொருத்தவரை
பிடித்த பத்து: என்னைக் காக்கும் வீணை !

தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர், பிரபல வீணைக் கலைஞர் வீணை காயத்ரி தனக்குப் பிடித்த பத்தை இங்கே விவரிக்கிறார்: 
அம்மா ஜெயலலிதா: என் வாழ்க்கையில் என்றுமே மறக்கமுடியாதவர். இவர் சொன்னால் கண்டிப்பாக செய்து முடிப்பார்கள். என்னைப் பொருத்தவரை இவரது சொல் எனக்கு வேத வாக்கு. அதே மாதிரி இவர் ஒரு வார்த்தை சொல்லி விட்டால் அதை நாம் கண்ணை மூடிக் கொண்டு நம்பலாம். நான் முழுமையாக நம்பி இருக்கிறேன், நடந்திருக்கிறது. அதே போன்று துணிச்சல் மிக்கவர். அவரது ஒரு சில குணங்களில் துணிச்சல் போன்ற குணம் எனக்கும் இருக்கிறது. நேர்மைக்கு முதல் பெண்மணி அவர்தான் என்று நான் தைரியமாக சொல்வேன். அவரது ஒருங்கிணைந்த சொல்லும் செயலும் பாராட்டப்பட வேண்டியவை. 
செளந்தர்ய லஹரி: ஆதிசங்கரர் அருளியவை. இந்த ஸ்லோகங்களை இதுவரை நான் பல லட்சம் தடவை கேட்டிருப்பேன். ஒவ்வொரு முறை கேட்கும்போது புதுப்புது அர்த்தங்களை இந்த ஸ்லோகம் எனக்கு சொல்லாமல் சொல்லித் தருகிறது. அந்த அர்த்தங்களை நாம் ஆராய்ந்து பார்த்தால் என் வாழ்க்கையில் அது நடந்திருக்கிறது என்று எனக்கு தெளிவாக தெரிகிறது. எப்படி, ஏன் நடக்கிறது என்ற கேள்விகளுக்கு இதுவரை என்னால் பதில் பெற முடியவில்லை. எனது வாழ்க்கையில் இந்த ஸ்லோகங்கள் எனக்கு பிராணவாயு (Oxygen) போன்றது என்றால் அது மிகை இல்லை.
ஹரித்துவார்: இந்த நகரமே நம் மனதிற்கு மேன்மை தருபவை. புண்ணிய நதியான கங்கை இந்தியாவிற்கு நுழையும் முதல் இடம் ஹரித்துவார். இங்கிருந்துதான் நாம் வீட்டில் வைத்திருக்கும் கங்கை புனித நீர் எடுத்து வரப்படுகிறது. இங்கு உட்கார்ந்து பஜன் பாடவோ, கேட்கவோ செய்தால் அதுதான் வாழ்க்கையின் சொர்க்கம் என்றும் கூறலாம். இந்த கங்கையின் கரையில் காலார, மெதுவாக நடக்கப் பிடிக்கும். நடந்தும் இருக்கிறேன்.
வீணை: சுமார் 50 ஆண்டுகளாக நான் வீணை வாசித்து வருகிறேன் என்று சொல்வதை விட, என்னுள் இந்த நாதம் கலந்து என்னை வழிநடத்துகிறது. எனது வாழ்க்கையில் இந்த வீணை ஓர் அங்கமாகிவிட்டது. எனது சுக துக்கங்களில் இந்த வீணை மிகப் பெரிய அளவில் பங்கு கொண்டுள்ளது. எனது வீணை என்னை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டுள்ளது. இதை எடுத்து என் மடியில் வைத்துக் கொண்டாலே என்னை இந்த வீணை பல்வேறு பிரச்சனைகளில் இருந்து காக்கும் என்பது என் திடமான நம்பிக்கை. அந்த நம்பிக்கை பல சமயம் பலித்துள்ளது. பல்வேறு சமயங்களில் இந்த வீணை என்னோடு பேசுகிறது, என்னைப் புரிந்து கொள்கிறது. இன்னும் சொல்லப் போனால் இந்த வீணை, வாசித்தாலும் வாசிக்காவிட்டாலும் என்னோடு தினமும் தனது தெய்வீக மொழியால் தொடர்புடன் இருக்கிறது என்பதுதான் உண்மை.
காட்சிப்படுத்தும் தொழில்நுட்பம்: இதை ஆங்கிலத்தில் visualization technique என்று கூறுவார்கள். உட்கார்ந்த இடத்தில் இருந்தே நாம் வாரணாசியில் அல்லது நாம் விரும்பும் இடத்தில் இருப்பது போன்ற உணர்வுடன் வாழ முடியும். இதற்கு கொஞ்சம் பயிற்சி தேவை. அவ்வளவுதான். இந்த உணர்வு உங்களுக்கு வந்து விட்டால், நீங்கள் எங்கேயும் போகவேண்டாம், இருக்கும் இடத்தில் இருந்தே உலகை 
சுற்றலாம். 
அசாதாரண பாடங்கள்: இதை ஆங்கிலத்தில் esoteric subjects என்று கூறுவார்கள். இவற்றைப் பற்றி நான் ஆராய்ச்சி செய்து வருகிறேன். எனது ஆராய்ச்சியின் பலனாக பல்வேறு ஆச்சரியகரமான பலன்களும் ஏற்பட்டுள்ளது. ஆராய்ச்சி இன்னும் முழுமை அடையவில்லை. ஆனால் தொடர்ந்து நான் இதில் ஈடுபட்டால் கண்டிப்பாக நல்ல பலன்கள் ஏற்படும் என்று மட்டும் தைரியமாக கூறலாம். 
ஐஸ் கிரீம்: சிறுவயதில் இருந்தே எனக்கு ஐஸ் கிரீம் மீது அலாதியான விருப்பம் என்றும் கூறலாம். சிறுவயதில் எனது உறவினர் ஒருவரிடம் நான் ஐஸ் கிரீம் கேட்க, அவர் குழந்தை கேட்கிறதே என்று என்னை அழைத்துக் கொண்டு கொஞ்சம் தூரம் போய் வாங்கிக் கொடுக்க, அதற்குள் வீட்டில் உள்ளவர்கள் என்னை காணாமல் தேட, ஒரே களேபரம் ஆகிவிட்டது. அந்த அளவிற்கு இன்று கூட ஐஸ் கிரீம் பைத்தியம் நான். 
மல்லிகைப் பூ, கண்ணாடி வளையல் (சிவப்பு), குங்குமம் (சிவப்பு), புடவை, வாசனை திரவியங்கள்: இவை இல்லாமல் நான் இல்லை. ஒவ்வொன்றும் என்னுடன் இணைந்துள்ளது.இன்னும் சொல்லப் போனால் இவைகளை பார்த்துவிட்டால் வாங்காமல் இருக்க மாட்டேன். எந்த ஊருக்கு சென்றாலும் இவை என்னுடன் வருபவை. 
ஹிந்தோளம்: இந்த ராகம் உயிர் ராகம் என்று கூறலாம். நான் பிறவி எடுத்ததற்கு பயன் இந்த ராகத்தை நான் தெரிந்து கொண்டதால்தான் என்று நினைக்கிறேன். ஒரு பழமையான கோயில், இருட்டான கற்பக கிரத்தில் ஒரே ஒரு எண்ணெய் விளக்கு, நல்ல குரலும், இசையும் தெரிந்த ஒருவர் பாடல் பாடினால், அல்லது இசைக் கருவி வாசித்தால் அது ஹிந்தோள ராகத்தில் அமைந்திருந்தால், அதுவே பெரும் பேறு என்று கூறலாம்.
சமையல்: நான் நன்றாக சமைப்பேன். சமையல் அறையில் நான் நுழைந்து விட்டால் வாய்க்கு ருசியான சாப்பாடு கண்டிப்பாக கிடைக்கும். தமிழ், தெலுங்கு வகை சமையல் பல எனக்கு தெரியும். ராஜஸ்தான், குஜராத்தி ஆகியவைகளில் சிலவும் நான் அறிவேன். சில சமயம் பொழுதுபோக்காக பரீட்சித்து பார்ப்பதும் உண்டு. அவை பல சமயம் ருசியாக அமைந்துவிடும்.
- சலன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com