சந்திரபாகா திருவிழா! - சாந்தகுமாரி சிவகடாட்சம்

நமது பாரதத் திருநாட்டின் பல மாநிலங்களுக்குச் சென்றிருந்தாலும், ராஜஸ்தானுக்கு போகவேண்டிய அவசியம் வந்தால் என் மனம் துள்ளிக் குதிக்கும். பலமுறை ராஜஸ்தானைச் சுற்றிப் பார்க்க,
சந்திரபாகா திருவிழா! - சாந்தகுமாரி சிவகடாட்சம்

சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 28

நமது பாரதத் திருநாட்டின் பல மாநிலங்களுக்குச் சென்றிருந்தாலும், ராஜஸ்தானுக்கு போகவேண்டிய அவசியம் வந்தால் என் மனம் துள்ளிக் குதிக்கும். பலமுறை ராஜஸ்தானைச் சுற்றிப் பார்க்க, அங்கே நடந்தேறும் இருதய மாநாடுகளில் கலந்துகொள்ள என் கணவருடன் கிளம்பி சென்றிருக்கிறேன்.
ஜெய்ப்பூர், உதயப்பூர், பிகானிர், ஜோத்பூர், ஜெய்சல்மீர் என்று ராஜஸ்தானின் புகழ்பெற்ற, சுற்றுலா பயணிகள் பெரும் அளவில் வந்துபோகின்ற நகரங்களுக்கு விசிட் அடித்திருக்கிறேன். "வாவ்' என்று கூவ வைக்கும் அரண்மனைகள், கோட்டைகள், பாலைவனம், நெஞ்சில் நிறைந்து நினைத்தாலே வாயில் உமிழ்நீரைச் சுரக்க வைக்கும் பலவிதமான சுவையான ராஜஸ்தானிய உணவு வகைகள், வண்ண வண்ண உடைகள், விதவிதமான நடனங்கள், கம்பீரமான ஆண்கள், அழகான பெண்கள், அவர்களின் கலாச்சாரம், சரித்திரம் என்னை பிரம்மிப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
ஒருமுறை ராஜஸ்தானின் பிரதான நகரமான ஜெய்ப்பூரில், காரில் சென்று கொண்டிருந்தேன். ஓட்டுநராகவும், கைடாகவும் இருந்த சந்தீப் சொன்னார்,
"மேடம் ராஜஸ்தானின் பிரதான நகரங்களை மட்டுமே பார்த்திருக்கிறீர்கள். சற்று உள்ளே பயணப்பட்டு, பூந்தி, கோட்டா, (Jalawar) ஜலாவர் போன்ற புராணங்களில் பேசப்பட்ட, சரித்திரப் புகழ்வாய்ந்த இடங்களையும் பார்க்கவேண்டும்'' என்றார்.
பூந்தி, கோட்டா போன்ற நகரங்களைப் பற்றி கேட்டுவிட்டு, "ஜலாவரில் என்ன இருக்கிறது?'' என்றேன்.
"ஜலாவரில் இருந்து 6 கி.மீ தொலைவில் (Jhalrapatan) ஜால்ரபட்டான் என்கின்ற மிக பழமையான நகரம் இருக்கிறது. ஒரு காலத்தில் இந்த நகரம் பல கோயில்களைத் தன்னகத்தே கொண்டிருந்தது. பூஜைகளின்பொழுது எழுப்பப்படும் ஆலய மணிகளின் ஓசை ஓயாமல் இந்த நகரத்தில் கேட்டுக் கொண்டிருந்ததால் (City of bells) "சிட்டி ஆஃப் பெல்ஸ்' என்ற காரணப் பெயரும் ஜால்ர பட்டானுக்கு உண்டு.
காலத்தின் கோரப்பிடிகளில் சிக்கி மனித உருவம் சின்னாபின்னமாவது போல இங்கே இருந்த பல கோயில்கள் அழிவைக் கண்டன. ஆனாலும் இன்னும் இங்கே நான்கு கோயில்கள் அழியாமல் இருக்கின்றன'' என்றார். 
"என்ன கோயில்கள் அவை?'' என்று ஆவலை அடக்கமுடியாமல் கேட்டேன்.
"சூரிய கோயில், சாந்திநாதா ஜெயின் கோயில் மற்றும் சீதலேஸ்வரா மகாதேவா கோயில். இது இன்னும் காலத்தால் அழிக்க முடியாத, அந்த கால (6th C) ஆறாவது நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயிலாக சிற்பக் கலையின் மகத்துவத்தை பறைசாற்றி நிற்கின்றன. (Fergusson) "ஃபெர்குசன்' என்கின்ற புகழ்மிக்க சரித்திர வல்லுநர், இந்த கோயிலை மிகவும் பழமையானது, மிக அழகானது, சிற்பக்கலையில் மகத்துவத்தை எடுத்துக்காட்டுவதில் இந்தியாவில் முன்னணியில் நிற்கும் கோயில்களில் ஒன்று என்று அறுதியிட்டு கூறலாம்'' என்றார்.
"சீதலேஸ்வரா மகாதேவா என்பதில் இருந்து இது ஒரு புனித சிவன் கோயில் என்று தெரிகிறது. இதை இப்பொழுதே சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவலை என்னுள் எழுப்புகிறதே!'' என்றேன்.
"மேடம், இந்த கோயிலின் கரையில் புனித சந்திரபாகா (Chandrabhaga) நதி ஓடுகிறது. ஜால்ரபட்டானிலிருந்து ஒரு கி.மீ தூரத்தில் இந்த புனித நதி ஓடுவதால் அந்த இடத்திற்கு "சந்திரபாகா' என்று பெயர். இங்கே வருடம்தோறும் சந்திரபாகா திருவிழா கார்த்திக் பூர்ணிமா தினத்தன்று நடக்கிறது. ஆயிரக்கணக்கில் இங்கே மக்கள் கூடி மருத்துவ குணம் உடையதும், நோய்களைத் தீர்க்கும் வலிமை கொண்டதுமான இந்த புனித நதியான சந்திபாகாவில் குளிப்பார்கள். அந்த சமயத்தில் வந்தால் நதியிலும் குளிக்கலாம், கோயில்களை வலம் வரலாம், அப்பொழுது நடக்கும் சந்தையையும் கண்டு களிக்கலாம்'' என்றார் சந்தீப்.
"சந்திரபாகா நதிக்கு மருத்துவ குணம் உண்டு என்கிறீர்களே?'' என்று நான் முடிக்கும் முன் சந்தீப் தொடர்ந்தார்:
"ஒரு முனிவரின், மகளின் பேரழகில் மயங்கிய சூரியன் அவளிடம் தன்னை மணந்து கொள்ளும்படி வேண்டினான். அவளுக்கு அதில் உடன்பாடு இல்லை என்று தெரிந்தும் சூரியன் இடைவிடாமல் அவளை வற்புறுத்த மனம் நொந்த அந்த மங்கை தன்னுடைய கற்பை காப்பாற்றிக்கொள்ள நதியில் மூழ்கி இறந்துபோனாள். சூரியன் மனம் கலங்கித் தான் செய்த செயலுக்கு வருந்தி தன் காதலி மூழ்கி இறந்த நதிக்கு, நோய்களை குணப்படுத்தும் மருத்துவத் தன்மையைத் தந்து, அந்த நதிக்கு "சந்திரபாகா' என்ற பெயரையும் சூட்டினான். 
"அட, நிஜத்திலே இந்த நதிக்கு அந்த சக்தி இருக்கிறதா?'' என்றார் என் கணவர்.
"சார், இதற்கும் ஒரு புராணக் கதை இருக்கிறது'' என்றார் சந்தீப்.
"சொல்லுங்கள், கேட்க ஆவலாக இருக்கிறோம்'' என்றோம் நானும் என் கணவரும். 
"சார், இந்த கடையிலே மிக சுவையான, சமூசாவும், மசாலா டீயும் கிடைக்கும், வாங்க சாப்பிட்டுக் கொண்டே பேசலாம்''.
இப்படி ஒரு மசாலா டீயை, நான் என் வாழ்நாளிலேயே குடித்தது இல்லை. இஞ்சியின் சுவை சற்று கூடுதலாக தொண்டையில் இதமாக இறங்கி நெஞ்சில் நிறைந்தது அந்த டீ. சமூசாவும் நான் மட்டும் இளைத்தவனா என்று போட்டி போட்டது.
சந்தீப் அந்த புராணக் கதையை சொன்னாரா! சந்திரபாகா திருவிழாவுக்கு சென்றேனா, வாழ்க்கையில் எண்ணி, எண்ணி மகிழும் அனுபவங்களைப் பெற்றேனா என்பதை அடுத்த வாரம் சொல்கிறேன்!
தொடரும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com