பிடித்த பத்து: கனவுகள் எனக்கு உயிர்

புணே திரைப்படக் கல்லூரியில், நடிப்புத் துறையில் படித்து பட்டம் பெற்று திரையுலகில் நுழைந்த தென்னகத்தைச் சேர்ந்த முதல் மாணவர்.
பிடித்த பத்து: கனவுகள் எனக்கு உயிர்

புணே திரைப்படக் கல்லூரியில், நடிப்புத் துறையில் படித்து பட்டம் பெற்று திரையுலகில் நுழைந்த தென்னகத்தைச் சேர்ந்த முதல் மாணவர். மலையாளத்தில் வெளிவந்த "சட்டக்காரி' படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகர். தயாரிப்பாளர், நடிகர், கதை வசனகர்த்தா, இயக்குநர் என்ற பல முகங்களை கொண்ட மோகன் சர்மா தனக்கு "பிடித்த பத்து' பற்றி இங்கு கூறுகிறார்:
 தாய்நாடு: பாரதத் திருநாடு, பல நூற்றாண்டுகளாக, பல்வேறு படையெடுப்புகளையும் கொந்தளிப்புகளையும் வெற்றி கண்டு, நாட்டு மக்களுக்கு அமைதியையும் பாதுகாப்பையும் அளித்துள்ளது. உயிர்த்துடிப்புள்ள மக்களாட்சி, பத்திரிகைச் சுதந்திரம், நம்பகமான நீதித்துறை, நெறி சார்ந்த கல்வி முறை ஆகியவை நமது வெற்றிக்குப் பங்களித்துள்ளன.
 ஹிந்து சமயம்: சமயம் என்பது, மக்களை உணர்வுபூர்வமாகவும் ஆன்மிக ரீதியிலும் தெளிவுபடுத்த வேண்டும்; உதவ வேண்டும்; வலுப்படுத்த வேண்டும்; விழிப்பூட்ட வேண்டும்.ஹிந்து சமயம் இந்த வகையில் இயங்கி, கடந்த ஆறாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மனித குலத்துக்கே ஒரு துருவ நட்சத்திரமாகத் திகழ்கிறது. சமயம் என்பதைத் தாண்டி, ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை. அது எனக்கு, பண்பாட்டு வேர்களையும், நெறிகளையும், என் வாழ்க்கையை எத்தகைய பலவந்தமுமின்றி விருப்பம் போல வாழும் உரிமையையும் வழங்கியுள்ளது.
 சென்னை: உயரிய பண்புள்ள, நல்லுள்ளம் படைத்த, பிறரை மதிக்கும் தன்மையுள்ள மக்களைக் கொண்ட உண்மையான பரந்த நோக்குடைய நகரம் நமது சென்னை. நல்ல நண்பர்களும் நல்ல அண்டை அசலாரும் நிறைந்த ஊர். மெரினா கடற்கரை- உலகிலேயே மிக நீளமான இரண்டாவது கடற்கரை என்று பெயர் பெற்றது. இது போன்றதோர் இடம் வேறெங்கும் இல்லை.
 சைவ உணவு: சைவ உணவு மட்டுமே உண்ணலாம் என்ற நியதி வரும்போது, இவ்வுலகம், மேலும் சிறப்பு பெறும்.
 "நம்ம கிராமம்': எனது தமிழ்த் திரைப்படம், "நம்ம கிராமம்'. அது வெளிவந்திருக்க வேண்டிய காலத்துக்கு முன்னதாகவே வந்துவிட்டதாக எண்ணுகிறேன். இந்த வகையான படங்களில் இது ஒன்றே ஒன்று தான் என்பது என் கருத்து. ஒரு தயாரிப்பாளர் என்ற வகையில், "நம்ம கிராமம்' எனக்கு அளவில்லா மன நிறைவு தந்தது. திரை இலக்கணத்துக்கு ஏற்ப ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்ற எனது நீண்டநாள் கனவு இதன் மூலம் நனவாயிற்று. இரு தேசிய விருதுகளும் தமிழக அரசின் விருதும் "நம்ம கிராமம்' படத்துக்குக் கிடைத்தது, சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பொழிந்ததுபோல இருந்தது.
 உறக்கம்: மனிதர்களுக்குக் கிடைத்துள்ள வரப்பிரசாதம் - மிகப் பெரிய ஆறுதல் - உறக்கம் தான். கற்பனையையும், மரணத்தையும் அது ஒரு விதத்தில் உருவகப்படுத்துகிறது என்றே சொல்லலாம். கனவுகள் என்றால் எனக்கு உயிர். இவ்வுலகை விட்டு எங்கோ சென்றுவிட்ட, எனது நெருங்கிய அன்பர்கள் விடாமல் என்னிடம் வந்துசெல்வது, இரவில் உறக்கத்தில்தான். கனவு காணும்போது, எனது கற்பனைகள் இறக்கை கட்டிப் பறக்கின்றன. மனிதன் கருவில் உயிர் பெறுவதும், முடிவில் உயிர் விடுவதும் இந்த உறக்கத்தில் தான். பெரும்பாலோர் உறக்கத்தில் இறக்கவே விரும்புகிறார்கள்.
 சாஸ்திரீய இசை: நம் நாட்டு சாஸ்திரீய சங்கீதம், ஆன்மாவுக்கும் அறிவுக்கும் வலு சேர்ப்பதாகும். ஐம்புலங்களுக்கும் அப்பாற்பட்டதொரு உணர்வை தரக்கூடியது; மறைபொருளானது. நினைவு தெரிந்த நாள் முதலே, கர்நாடக இசையும், ஹிந்துஸ்தானி இசையும் என் வாழ்வின் ஓர் இன்றியமையாத பகுதியாகி விட்டது. எனது இளம் வயதில், என் கவனம் தேவையற்ற வகையில் சிதறாமல், மனதை ஒருமுகப்படுத்த இந்த வகையான இசை எனக்கு மிகவும் உதவியது.
 புணே திரைப்படக் கல்லூரி: வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்கள் எப்படிப்பட்டவை என்பதை முதன் முதலில் என்னை உணரச்செய்தது, புணே திரைப்படக் கல்லூரி தான். போட்டாப்போட்டி நிறைந்ததொரு சூழலை எவ்வாறு தாக்குப் பிடிப்பது என்பதை நான் கற்றுகொண்டதும் அங்கே தான்.
 பல அதிசயங்களைக்கொண்ட திரைப்பட உலகில் நான் அடி எடுத்துவைக்க உதவிய இடம் அது. உலகைப் பற்றிய என் பார்வையையே முற்றிலும் மாற்றியமைத்த கல்லூரி. உலகின் பல பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் வரும் உண்மையான உலகத்
 தரம் வாய்ந்த கல்விக்கூடம்.
 நீச்சல்: என்னைப் பொருத்தமட்டில், மன அழுத்தத்தை நொடிப்பொழுதில் நீக்கக் கூடிய அருமருந்து, நீச்சல் தான். 1975-ஆம் ஆண்டு, கேரளத்தில் உள்ள பாரதப்புழை ஆற்றில், உக்கிரமாகப் பொங்கிவரும் நீரொழுக்கில் எதிர்நீச்சல் போட்டு இயக்குநர்கள் பாலு மகேந்திராவையும் பரதனையும் மூழ்காமல் காப்பாற்றியது, என் வாழ்நாளில் எனக்கு மறக்கமுடியாத அனுபவம்.
 நான் (மோகன் சர்மா): ஒவ்வொரு மனிதருக்கும் முதலில் தன்னைப் பிடிக்க வேண்டும். நான்கு தென்னிந்திய மொழிகளிலும் நடிகன், கதை-வசனகர்த்தா, தயாரிப்பாளர், இயக்குநர், நிர்வாகி ஆகிய மாறுபட்ட பொறுப்புகளில், 150 திரைப்படங்கள் - பெரும்பாலும் யதார்த்த படங்களிலும், 30 தொலைக்காட்சித் தொடர்களிலும் பங்காற்றிய, பரபரப்பான ஐம்பது ஆண்டு திரை வாழ்க்கைக்குப் பின், எழுபதைத் தாண்டிய இளைஞனான நான், பெருமைப்பட ஏரளமானவை உள்ளன. பணத்துக்கோ பெருமைக்கோ ஆசைப்பட்டு, நான் ஒருபோதும் என் மனச்சாட்சியை அடகு வைத்ததில்லை. சட்ட திட்டங்களைக் கண்டிப்புடன் பின்பற்றி, நீதிக்காகப் போராடி வந்துள்ளேன். அண்ணல் காந்தி சொன்னதுபோல, "என் வாழ்க்கையே நான் விடுக்கும் செய்தி'. உண்மை, இதையே தான் நானும் இங்கே சொல்ல விரும்புகிறேன்.
 - சலன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com