அந்த நிமிடம் கடந்து சினிமாவில் குதித்தேன்!

நல்ல சினிமா எடுக்கிறவர்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு வெற்றியின் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார்கள்.
அந்த நிமிடம் கடந்து சினிமாவில் குதித்தேன்!

நல்ல சினிமா எடுக்கிறவர்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு வெற்றியின் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் ஆபாசமான, வன்முறையான, அசிங்கமான படத்தை எடுத்துக் கொண்டு வெற்றிக் கிடைத்து விடும் என்று சிலர் ரொம்ப நம்பிக்கையோடு இருக்கிறார்கள். இந்த இரண்டுமே ஆபத்தானது என ஒரு சினிமா சீனியர் சொன்னார். உண்மைதான். இப்படி ஒரு ஆபத்தான காலகட்டத்தில் நான் சினிமாவுக்கு வருகிறேன்.'' அமைதியாக பேசுகிறார் நடிகர் கவின். "சரவணன் மீனாட்சி' தொடர் மூலம் சின்னத் திரையில் வலுவான இடம் பிடித்தவர். இப்போது "நட்புனா என்னானு தெரியுமா' படத்தின் மூலம் ஹீரோவாகக் களமிறங்குகிறார்.

சின்னத்திரையில் முத்திரை பதித்தால், அவர்கள் சினிமாவுக்கு வந்தே ஆக வேண்டும் என்று ஆகி விட்டது....?
எல்லா மனிதர்களிடமிருந்து வருகிற சிரிப்பும், பாராட்டும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. நீங்கள் கேட்கிற கேள்வியும் அப்படியானதுதான். எனக்கென்று எந்த திட்டமும் இல்லை. டூரிஸ்ட்டுக்கும் டிராவலருக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. டூரிஸ்ட்டாக இருந்தால், எங்கே போகிறோம், எப்படி போகிறோம், எங்கே தங்குகிறோம், என்னென்ன பார்க்க போகிறோம். இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் தீர்மானித்துக் கொண்டு போவான். ஆனால், பயணி அப்படி இல்லை. அவன் கையில் திட்டம் இருக்காது. ஃபார்முலா இருக்காது. அவனுக்கு பயணிக்க வேண்டும். ஒரு நாற்காலியில் உட்கார வைத்து அசையாமல் கட்டிப் போட்டாலும் நம் மனசு எங்கேயாவது பயணித்துக் கொண்டே இருக்கும். அப்படி ஒரு பயணம்தான் இது. ஊர் மாறினாலும் உலகத்துக்கு ஒரே ஆகாயம் என்பது போல், எனக்கு எல்லாம் இந்த மீடியம்தான். சினிமா ஹீரோ என்பதே நான் நினைத்துப் பார்க்காத ஒன்று. அதனால், இதற்கு மேல் என்ன நடந்தாலும் ஏற்றுக் கொள்ளலாம். லட்சியம் என்று எதுவும் இல்லை. கிடைத்த இடத்தில் பயணிக்கிறேன். அவ்வளவுதான்.
எந்தளவுக்கு உழைக்கிறோமோ அந்த அளவுக்கு பயன் கிடைக்கும் என்று இருக்கிறதல்லவா, அதுதான் என் எண்ணம். சேனலில் இருந்து வெளியில வந்த போது, "இது ரிஸ்க் எடுக்கிற நேரம். அதனால் கொஞ்ச நாளைக்கு அழைக்காதீர்கள்' என்று சொல்லி விட்டு வந்து விட்டேன்.
"இங்கே இருந்து போய் ஜெயித்தால் எங்க வீட்டுப் பிள்ளை-னு கொண்டாடுறீங்க இல்லையா... ஒருவேளை நான் திரும்பி வந்து விட்டால், அப்போதும் உங்க வீட்டுப் பிள்ளையா என்னை ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா?' என்று கேட்டேன். "நல்லா பேசுறடா தம்பி' என்று வாழ்த்தி அனுப்பினார்கள். அதனால், தொடர்ந்து சினிமாவா இல்லை சின்னத் திரையா என்பதை காலம்தான் தீர்மானிக்கும்.
ரஜினியின் பிரபல வசனம்... சிம்பு பாட்டு... ரம்யா நம்பீசன் ஹீரோயின்.... என சரியான திட்டமிடல்களுடன் வருவது போல் தெரிகிறது...?
கல்லூரி படிப்பு முடிந்து வெளியே வந்த நேரம். என்ன செய்வதென்று தெரியவில்லை. ஒரு கட்டத்தில் டி.வி.யில் முகம் தெரிய வேண்டும் என ஆசைப்பட்டேன். அதுதான் இலக்கு என்றெல்லாம் கிடையாது. ஏதோ ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், சினிமாவில் ஹீரோ அல்லது ஹீரோயினுக்குத் தம்பியாக வந்தாலே வந்தாலே போதும் என்று கூட நினைத்தேன். சம்பளம் மாதம் 25,000 ரூபாய் கிடைத்தால் போதும் என்று நினைத்தேன்.
அப்போதுதான் "கனா காணும் காலங்கள்' சீரியலில் முக்கிய கதாபாத்திரம் கிடைத்தது. அதே போன்று, "சரவணன்-மீனாட்சி' சீரியலில் "இவருக்குப் பதில் இவர்'னு மூன்றாவது சரவணனாக வந்தேன். அப்போது கூட "சீரியலில் கூட சரவணன் என்றுதானே இருக்கிறது. புதிதாக வேட்டையன் என்று பெயர் எதற்கு?' என்று கேட்டேன். ஆனால், அந்த கேரக்டர்தான் எல்லோர் வீட்டுக்கும் கொண்டு போய் சேர்த்தது. அதைத் தொடர்ந்து நிகழ்ச்சித் தொகுப்பாளர் வேலை பார்த்து விட்டேன். அந்த டி.வி. சேனல் பாராட்டுகிற அளவுக்கு வேலை செய்தேன். இது எல்லாமே தானாக நடந்தது. அதே போலத்தான் இந்த சினிமாவையும் பார்க்கிறேன். தோல்விகளுக்குப் பின்னால் இருக்கிற வெற்றிகளை பற்றி யாருக்கும் தெரியாது. அதே மாதிரி வெற்றிக்குப் பின்னால் இருக்கிற தோல்விகளை பற்றியும் யாரும் யோசிப்பது இல்லை. சில தோல்விகள் உண்மைகளை நான் இப்போது பேச காரணம், அந்த தோல்விகள் என்னை அசிங்கமாக்கவில்லை என்கிற கர்வம்தான்.
ரம்யா நம்பீசன் கூட முதல் படம்... எப்படி இருந்தது படப்பிடிப்பு அனுபவம்...?
ஒரு மான்டேஜ் பாடல் காட்சி. ரம்யா ரம்பீசன் ஊஞ்சலில் அமர்ந்தபடி என்னை எதிர் நோக்கிக் காத்திருப்பார். ரொமான்டிக் லுக்கில் ஊஞ்சலைச் சுற்றி வந்து அவர் பக்கத்தில் அமர்ந்து காதல் மொழி பேச வேண்டும். நடந்து போகும்போது சரியாக போய் விட்டேன்.
போய் பக்கத்தில் அமர்ந்து "ம்ம்.. அப்புறம், சாப்பிட்டீங்களா.. ரொம்ப நேரமா வெயிட் பண்றீங்க போல...'இப்படி என்னென்னவோ பேசுறேன். திடீர்னு "கட்..கட்'னு சத்தம். "கவின், ரொமான்ஸ் பண்ணணும், ஆங்கரிங் இல்ல'ங்கிறார் டைரக்டர். எப்படி இருக்கும் சொல்லுங்க... ரம்யா சத்தமா சிரிச்சுட்டாங்க. ஆனால், அந்தச் சிரிப்பு என்னை அவமானப்படுத்துகிற சிரிப்பு இல்லை. அடக்க முடியாத சிரிப்பு. பிறகு ரம்யாவே "கூல்.. கவின்.. ஃபீல் கம்ஃபர்ட்'னு சொல்லி, சில டிப்ஸ் தந்தார். அது சரியாக பொருந்தி வர, அந்த காட்சியும் சரியாக வந்தது. சீனியர் நடிகை என்றாலும், புதிதாக வந்தவருக்கு அப்படி டிப்ஸ் சொல்லி தந்தார். சினிமாவில் ரம்யா மாதிரி ஒரு ஹீரோயின் பார்ப்பது அபூர்வம். நன்றி ரம்யா.
சினிமா கைக்கொடுக்காத நிலையில் டி.வி.க்கே திரும்பி ஓடியவர்கள் நிறைய பேர்.... அப்படி ஏதாவது பயம் இருக்கிறதா...?
என் வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் தந்திருக்கிறது இந்த மீடியம். நீ என்ன திரும்பத் தந்திருக்கே என்று எனக்குள்ளேயே நான் கேள்விக் கேட்டுப் பார்க்கிறேன். சினிமா உலகத்தில் விதவிதமான குணாதிசயங்கள் நிறைந்த மனிதர்கள் வந்து போய் கொண்டே இருக்கிறார்கள். அந்த ஆயிரக்கணக்கான கலைஞர்கள், லட்சக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தவன் நான். கலைஞனாக வாழ்கிற அதே நேரத்தில் ரசிகனாகவும் இருப்பது என் இயல்பு. என் கடந்த காலமும் நிகழ் காலமும் மட்டுமே என் கண்ணுக்குத் தெரிவதால், வருங்காலம் பற்றியெல்லாம் பெரிய நினைப்பே கிடையாது. எது நடந்தாலும் எதிர்கொள்ள தயார்.
என்னதான் கேமிரா பார்த்து பழகினாலும், சினிமாவின் முதல் நாள் அனுபவம்... சுவாரஸ்யமானதாக இருக்கும்...?
பள்ளிக்கூடம் முடிந்து கல்லூரி போகிற மாதிரிதான். தைரியம் கூடவே இருந்தாலும், படபடன்னு இதயம் அடித்துக் கொண்டே இருக்கும். நண்பர்கள் எப்படி இருப்பார்கள். பெண்களை எப்படி அணுகுவது என எல்லாவற்றிலும் படபடப்பு இருக்கும். அந்த உணர்வுதான் இங்கே. முதல் நாள் முதல் காட்சி. பெரிய பங்களா முன்னாடி போய் நின்றேன். செட்டைப் பார்த்ததுமே, "நம்ம படத்தோட ஷூட்டிங்தானா' என்று சந்தேகம். இயக்குநரிடமும் அதைக் கேட்டு விட்டேன். திரைக்கதையில் அது ஹீரோயின் வீடு. "இவ்ளோ பெரிய வீட்டுக்கு நான் மாப்பிள்ளையாகப் போறேனா'னு மைண்ட் வாய்ஸ் வரணும். "ஷாட் ரெடி'னு சொன்னதும் ஒரு மாதிரி ஆகிவிட்டேன். திடீரென்று இயக்குநர், "கவின், இயல்பா நடந்து வாங்க' என்று சொன்னார். எப்படியோ அந்த நிமிடத்தைக் கடந்து, சினிமாவுக்குள் குதித்து விட்டேன்.
வேட்டையன் என்கிற பெயர் உங்களை டி.வி.யோடு தொடர்பு படுத்திக் கொண்டே இருக்கு...?
எனக்கு அடையாளம் தந்த பெயர். அதை மாற்ற வேறு எதாவது ஒரு அடையாளம் வேண்டும். பார்க்கலாம்.
- ஜி.அசோக்


 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com