சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 31: ஓமானிய செயற்கை கிராமம்!

கபோஸ் மசூதி தன்னுள் பல பொக்கிஷங்களை வெளிப்படுத்தி நிற்கிறது. 6,00,000 ஸ்வரோஸ்கி கிரிஸ்டல்களால் ஆன கண்களைப் பறிக்கும் 14 மீ உயரமும் 8.5 டன் எடையும் கொண்ட அழகிய சரவிளக்கு ஆண்கள் தொழுகை
சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 31: ஓமானிய செயற்கை கிராமம்!

"நல்லதைப் பேசு, அல்லது 
அமைதியாக இரு'

- நபி முஹம்மது

கபோஸ் மசூதி தன்னுள் பல பொக்கிஷங்களை வெளிப்படுத்தி நிற்கிறது. 6,00,000 ஸ்வரோஸ்கி கிரிஸ்டல்களால் ஆன கண்களைப் பறிக்கும் 14 மீ உயரமும் 8.5 டன் எடையும் கொண்ட அழகிய சரவிளக்கு ஆண்கள் தொழுகை நடத்தும் இடத்தின் மேற்கூரையை அலங்கரிக்கிறது. 1,700,000,000 முடிச்சுகளோடு 21 டன் எடை உள்ள கம்பளம் மக்கள் தொழுகின்ற பகுதியின் தரையை அழகுபடுத்துகிறது. உலகிலேயே இரண்டாவது பெரிய கம்பளம் இது. இதை உருவாக்க நான்கு வருடங்கள் ஆனது. இந்த கபோஸ் மசூதியின் உள்ளே 20,000 புத்தகங்களைக் கொண்ட நூலகமும் இயங்குகிறது.

கபோஸ் மசூதி என்னுள் ஏற்படுத்திய பிரமிப்புக்கு இணையாக பல செயல்பாடுகளை மஸ்கட் பெருவிழா வெளிப்படுத்தியது. அமரட் பூங்காவிலும் நசீம் பூங்காவிலும் மஸ்கட் திருவிழா கொண்டாடப்பட்டது. இந்த பூங்காக்கள் மஸ்கட் நகரத்தின் மையத்தில் இல்லாமல், அதனுடைய புறநகர் பகுதியில் இருந்தது. நாங்கள் அமரட் பூங்காவில் நடைபெறும் திருவிழாவைக் காண காரில் பயணம் செய்து கொண்டிருந்தோம். பூங்காவை நெருங்க, நெருங்க போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இருபது நிமிடங்கள் தாமதத்திற்குப் பிறகு, நுழைவுக் கட்டணத்தைக் கொடுத்துவிட்டு பூங்காவிற்குள் நுழைந்தோம். 

மின்சார பல்புகளால் அலங்கரிக்கப்பட்ட வளைவுகளும், மரங்களின் கிளைகளில் தொங்கிய மின்சார சரவிளக்குகளும் அந்தப் பூங்காவையே சொர்க்கபூமியாக்கி இருந்தன. ஓமானிய பாரம்பரிய கிராமத்தின் நுழைவாயிலிலேயே நாங்கள் கண்களை இமைக்க மறந்த நிகழ்வு ஒன்று அரங்கேறிக் கொண்டிருந்தது.

வாயில்களில் இருக்கும் கிணறுகளிலிருந்து பம்பு செட்டுகள் மூலம் தண்ணீரை இறைத்து வயல்களுக்குப் பாய்ச்சுவது இன்றைய விஞ்ஞான உலகில் அதிகரித்துவிட்ட நிலையில், 1940-களில் கிணற்றில் இருக்கும் நீரை மாடுகளைக் கொண்டு பெரிய தோல் கூடைகளில் இறைத்து வெளியே கொட்டி அது வாய்க்கால்கள் மூலம் வயல்களுக்குச் சென்று அடைவதை அப்படியே நடைமுறையில் இந்த ஓமானிய செயற்கை கிராமத்தில் காட்டியிருந்தார்கள். ஒரு ஓமானிய பெரியவர் மாடுகளை ஓட்டி நீர் இறைத்துக் காட்ட மக்கள் கைகளைத் தட்டி மகிழ்ந்தனர்.

தேங்காய் மட்டைகளிலிருந்து நாரைப் பிரித்து கயிறுகளை உருவாக்கிக் காட்டினார்கள். நாணல்களைக் கொண்டு பாய்களை முடைவது, கூடைகள், கைவிசிறிகள் போன்றவற்றை செய்வது என்று கிராமிய கைவினைப் பொருட்களை ஆண்களும், பெண்களுமாக செய்து காட்டினார்கள்.

பெரிய வீடு. அதன் முன்னே திறந்தவெளி. ஒரு பேரீச்சம்பழ மரம், அதைச் சுற்றி சிமென்ட் இருக்கைகள். அதில் உட்கார்ந்து ஓமானின் பாரம்பரிய வாத்தியங்களை வாசித்துக் கொண்டிருந்தனர். பிறகு கைகளில் ஏந்திய ஜால்ரா பொருத்தப்பட்ட டாமரங்களைத் தட்டியபடி ஆண்கள் வட்டமாக நின்று கிராமியப் பாடல்களுக்கு ஏற்றார்போல நடனமாடிக் கொண்டிருந்தனர். அப்பப்பா, அந்த இசையும், ஆட்டமும் சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பவர்களையும் தங்கள் அங்கங்களை அசைக்க வைத்தது.

மற்றொரு புறம் உழவர் ஒருவர் மண்ணைக் கிளறி உழுது கொண்டிருந்தார். மரங்களால் செதுக்கப்பட்ட ஓமானிய பாரம்பரிய உடைகளை அணிந்திருந்த ஆண், பெண் மர பொம்மைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்த பொம்மைகளின் அழகில் மனதைப் பறிகொடுத்ததால் அவைகளை வாங்க விரும்பினேன். ஆனால் அவைகள் பார்க்க மட்டுமே, விற்பனைக்கு இல்லை என்றதும், என் உற்சாகம் வடிந்து போனது.

வாசனைத் திரவியங்களையும், அகர்பத்திகளையும், சாம்பிராணிகளையும் விற்கும் கடைகள் கண்களில் பட்டதும் அருகில் சென்று நோட்டம் விட்டேன். பொதுவாகவே அரபு நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு வாசனைப் பொருட்கள் மீது அபார மோகம் உண்டு.

எங்கள் கூடவே வந்துகொண்டிருந்த நண்பர்கள், எங்களை இந்தக் கடைகளில் விற்கும் சாம்பிராணியை அவசியம் வாங்கச் சொன்னார்கள். அவைகளை வீடுகளிலும், பூஜை அறைகளில் உபயோகப்படுத்தினால் அவை வெளிப்படுத்தும் மணத்தை மிஞ்ச எதுவும் இல்லை என்று சொன்னதால் நானும் வாங்கினேன். இந்தியா திரும்பிய உடன் வீட்டில் உபயோகித்தேன், அந்த சாம்பிராணி மணம் தெய்வீக மணமாக எங்களை மகிழ்விக்கிறது.

பண்டைய காலத்தில் ஓமானிய கிராமங்களில் உபயோகப்படுத்தப்பட்ட பொருட்களை காட்சிக்கு வைத்திருந்தனர். அவைகளைப் பார்த்து ஆச்சர்யத்தில் மூழ்கினேன். அம்மிக்கல், ஆட்டுஉரல், மாவரைக்கும் இயந்திரம் என்று நமது கிராமங்களில் உள்ள வீடுகளில் உபயோகப்படுத்தின பொருட்களுக்கு நிகராக அவை இருந்தன.

தெருக்களில் பிள்ளைகள் விளையாடினர். பெண் குழந்தைகள் பேரீச்சம் மரங்களுக்கு இடையே ஊஞ்சல் கட்டி ஆடிக் கொண்டிருந்தனர். குயவர்கள் செய்த மண்பாண்டப் பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஓமானியப் பெண்கள் உருவாக்கிய உடைகள், மணி மாலைகள் என்று திரும்பிய திசைகளில் எல்லாம் ஓமானிய பாரம்பரியம் கண்களுக்கு 
விருந்தளித்தது.

ஓமானிய சரித்திர ஏடுகளைப் புரட்டினால் கிழக்கு ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த குடிமக்கள் இங்கே குடியேறியதற்கான சான்றுகள் உள்ளன. அவை உண்மை என்று வலியுறுத்துவதைப் போன்ற உருவத்தோடு கூடிய ஓமானியப் பெண்கள் பலவிதமான திண்பண்டங்களைச் செய்து விற்றுக் 
கொண்டிருந்தனர்.

இங்கே எங்களை மிகவும் கவர்ந்தது கவா (ஓஹட்ஜ்ஹ) என்கின்ற ஓமானிய காபி. ஏலக்காய் சேர்த்த காபியும் நாங்கள் சாப்பிட்ட அல்வாவின் சுவையையும் இன்றளவும் மறக்க முடியவில்லை. சர்க்கரை, தேன், ரோஸ் வாட்டர், முட்டைகள், கொட்டைகள், வாசனைப் பொருட்கள் சேர்த்து செய்யப்பட்ட ஓமானிய அல்வாவை, சாப்பிட்டு ரசித்ததோடு அல்லாமல், செய்முறையை நேரிலும் கண்டு களித்தோம். 

கண்கவர் வானவேடிக்கைகளுக்கும் மக்கள் அடிமையாகி கைகளைத் தட்டி அகமகிழ்கின்றனர். நாங்களும் அவர்களோடு ஒன்றி மகிழ்ந்தோம். மஸ்கட் திருவிழா மனதை மயக்கி, மதியில் நிலைக்கின்றது.
தொடரும்...
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com