பிடித்த பத்து: பதினைந்து முறை படித்த புத்தகம்!

"நான் யார் நான் யார் நீ யார்' என்ற பாடலின் மூலம் மக்கள் எல்லோருக்கும் தான் யார் என்று தெரியவைத்தவர் புலமைப்பித்தன்.
பிடித்த பத்து: பதினைந்து முறை படித்த புத்தகம்!

"நான் யார் நான் யார் நீ யார்' என்ற பாடலின் மூலம் மக்கள் எல்லோருக்கும் தான் யார் என்று தெரியவைத்தவர் புலமைப்பித்தன். தமிழ்நாடு மேலவை இருந்த காலத்தில் அதன் துணைத் தலைவராகவும் பதவி வகித்தவர். அரசவை கவிஞராகவும் பொறுப்பேற்றவர். தனக்கு "பிடித்த பத்து' பற்றி புலமைப்பித்தன் இங்கு கூறுகிறார்.
தொண்டு: தொண்டு செய்து பழுத்த பழம்
துயதாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மணக்குகையில் சிறுத்தை எழும்
என்று பாவேந்தர் பாரதிதாசன் பெரியாரைப் பற்றிப் பாடினார். 
தந்தை பெரியார் தன்னுடைய 95-ஆவது அகவை முடிகிற வரை ஓயாது ஓழியாது பாடுபட்டார். தமிழ்ச் சமுதாயத்தைச் சீர்திருத்தினார். 
பேச்சு: ஒருவர் தன்னுடைய நாவன்மையால் நாட்டின் ஆட்சியையே மாற்றி காட்ட முடியும் என்பதற்கு அண்ணாவின் நாவன்மையே சான்று. 1967-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இருந்த காங்கிரஸ் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மலரச் செய்தார். பணபலமோ, வேறு பக்கபலமோ எதுவும் இல்லாமல் தன்னுடைய பேச்சுவன்மை மட்டுமே வைத்து ஆட்சியை மாற்றி காட்டினார்
தமிழ் இனப் பற்று: எம்.ஜி.ஆரின் பெயரைச் சொன்னதுமே அவருடைய கொடைத்திறன்தான் நினைவுக்கு வரும். ஆனால் அவர் தமிழினத்தின் மீது எத்தனை பற்று வைத்திருந்தார் என்பது பலருக்குத் தெரியாது. 1983-ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் தம்பி பிரபாகரனை நான் எம்.ஜி.ஆருக்கு அறிமுகப்படுத்தினேன். அதற்குப் பின்னால் எம்.ஜி.ஆர். பிரபாகரனுக்கு பலகோடி ரூபாய் வாரிக் கொடுத்தார். தமிழீழம் என்கிற நாடு மலர்ந்து, தமிழனுடைய ஆட்சி நடைபெற வேண்டுமென்பதில் அவருக்கு இருந்த ஆர்வம் வியக்கத்தக்கது. 
நடிப்பு: சிவாஜி எந்தப் பாத்திரம் ஏற்று நடித்தாலும் அந்தப் பாத்திரமாகவே மாறிவிடுவார். அது அவருக்கு மட்டுமே அமைந்த தனித்திறமை. "கப்பலோட்டிய தமிழன்', வீரபாண்டிய கட்டபொம்மன்' ஆகிய படங்கள் அவருடைய நடிப்புத் திறமைக்கு சாட்சி சொல்லும். "தில்லானா மோகனாம்பாள்' படத்தில் நாதஸ்வர வித்துவானாகவும், மிருதங்கச் சக்கரவர்த்தியில் மிருதங்க வித்வானாகவும் அவர் தோன்றி நடித்த பாங்கு நம்மை வியப்படையச் செய்யும்.
எளிமை: பிரபாகரன் என்ற பெயரைக் கேட்டவுடன் அவருடைய வீரம்தான் நம் கண்முன்னால் நிற்கும். அதே அளவிற்கு அவரிடம் ஈரம், பாசம், எளிமை ஆகியவவையும் இருந்தன. 1980-ஆம் ஆண்டு என்னைப் பார்ப்பதற்காக என் வீடு தேடி ஒரு மாலைப் பொழுதில் வந்தார். அதிலிருந்து தொடர்ந்து எங்கள் வீட்டிற்கு வந்தார். எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே மாறி விட்டார். எங்கள் வீட்டின் கூடத்தில் நான், என் மனைவி, என் மக்கள் எல்லோரோடும் அவரும் தன் தோழர்களோடு ஒன்றாக வட்டமாக உட்கார்ந்து சாப்பிடுவோம். என்னுடைய பிள்ளைகள் புகழேந்தி, கண்ணகி ஆகிய இருவரும் அவரை சித்தப்பா என்று தான் அழைப்பார்கள். 
புத்தகம்: நெல்சன் மண்டேலா தன் சுயசரிதையை ‘Long walk to Freedom' என்ற தலைப்பில் எழுப்பியுள்ளார். 751-பக்கங்கள் உள்ள புத்தகம் அதில் அவர் 27 ஆண்டுகள் இருட்டு சிறையில் இருந்து அனுபவத்தை நிரல்பட அழகாக விவரித்துள்ளார். சிறைச்சாலை எவ்வளவு கொடுமையானது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடியும். அந்தப் புத்தகத்தை நான் 15 முறை படித்திருக்கிறேன்.
படம்: இயக்குநர் மணிரத்தினத்துடைய இயக்கத்தில் தயாரான படம் "நாயகன்'. அந்தப் படத்திற்கு தம்பி இசைஞானி இளையராஜா இசை அமைத்தார். நான் பாடல்கள் எழுதினேன். நண்பர் கமல்ஹாசனின் நடிப்பு வியக்க வைப்பதாக இருந்தது. அந்தப் படத்தில் வரும் "தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே' என்ற பாடல் காலங்களை வென்று வாழ்கின்ற ஒன்றாகும். 
இசை: மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் வியக்கத்தக்க அசாத்தியமான ஆற்றல் பெற்றவர். ஒரு பாடல் வரிகளை எழுதிக் கொடுத்தால் அந்த வரிகளைப் பார்த்த உடனே நொடிப் பொழுதில் இசைத்துப் பாடுகின்ற ஆற்றல் அவரிடமிருந்து. பாட்டில் பொதிந்திருக்கிற உணர்வு முழுவதும் அவர் இசையில் வரும். நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு அவர் போட்ட பாடல்கள் உண்மையில் சிவாஜியின் நடிப்புக்கு உந்துசக்தியாக இருந்தன. உண்மையைச் சொன்னால் அவர் போட்ட பாடல்களின் இசையிலும் நடிப்பிருந்தது. அவர் பாடிக்காட்டுவதில் 50 விழுக்காடு அளவிற்கு மற்ற பாடகர்கள் பாடியிருக்கிறார்களா என்பது சந்தேகம். அவர் மெல்லிசை மன்னரல்ல; மெல்லிசை சக்கரவர்த்தி.
கொடை: பொதுவாகக் கொடை என்று சொன்னவுடன் நம்முடைய நினைவுக்கு வருகிறவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆகத்தான் இருக்கமுடியும். ஆனால் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் கொடைத்திறன் மிக்கவர்தான். நான் திராவிட நலநிதியில் என் வீட்டை அடகு வைத்து ரூபாய் 12 லட்சம் கடன் வாங்கியிருந்தேன். அதற்கு ஒரு காலகட்டம் வரை 21 லட்சம் ரூபாய் வட்டியும் கட்டியிருந்தேன். எனக்கு உள்ள கடன் நெருக்கடி பற்றி புரட்சித் தலைவி அம்மா அவர்கள் எப்படியோ தெரிந்திருந்தார்கள். ஒருநாள் என்னிடம் "உங்களுக்கு இவ்வளவு கடன் நெருக்கடி இருப்பதாக ஏன் சொல்லவில்லை' என்று கேட்டுவிட்டு, 10 லட்சம் ரூபாய் ஒரு பையில் போட்டு தன் காரிலேயே என்னை வீட்டிற்கு அனுப்பி வைத்தார். "மிச்சமிருக்கிற கடனையும் நானே கட்டிவிடுகிறேன் நீங்கள் கவலைப்பட வேண்டாம்' என்றார்கள் அந்தத் தாயுள்ளத்தை நான் வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டேன்.
சமையல்: நானும் சரி என் மனைவியும் சரி மிகவும் ஏழை குடும்பத்தில் பிறந்தவர்கள். எங்களுக்கு பசியும் பட்டினியும் மிக நெருக்கமான பழக்கம். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு மற்றவர்களை தன்னோடு சாப்பிடவைத்துப் பார்க்க வேண்டும் என்கிற ஆசை எப்போதும் உண்டு. அவர் சாப்பிடுகிறபோது குறைந்தது 20 பேராவது அவருடன் அமர்ந்து சாப்பிடுவார்கள் அவரளவுக்கு இல்லாவிட்டாலும் எங்களால் இயலாவிட்டாலும் எங்கள் அளவிற்கு அந்த விருந்தோம்பல் இயல்பு இருந்தது. தம்பி பிரபாகரன் என் மனைவியின் சமையலை வெகுவாகப் பாராட்டுவார். சிலம்புச் செல்வர் மா.பொ.சி. என்வீட்டுக்கு வந்தபோது என் மனைவியின் சமையலை ரசித்து ருசித்து சாப்பிட்டார். அவருக்கு ஒரு பழக்கம், எங்கே போனாலும் தனக்கான உணவை தன் கையிலேயே கொண்டு போய்விடுவார். ஆனால் விதிவிலக்காக என் வீட்டிற்கு வந்தபோது தான் கொண்டு வந்திருந்த உணவை வைத்துவிட்டு, எங்கள் வீட்டு உணவை சாப்பிட்டார்.
- சலன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com