திரை இசைத் திலகம்! கே.வி. மகாதேவன் நூற்றாண்டு

கேவி. மகாதேவன் தமிழ்த் திரை (கர்நாடக) இசையில் ஒரு சகாப்தம். தன் திரை இசையால் அரை நூற்றாண்டுக்கும் மேலாக திரை இசை ரசிகர்கள் மற்றும் வெகுஜனங்களின் மனங்களைக் கொள்ளை கொண்டவர்.
ஜெயலலிதாவை தனது இசையமைப்பில் பாடவைக்கும் போது... உடன் எம்.ஜி.ஆர்.
ஜெயலலிதாவை தனது இசையமைப்பில் பாடவைக்கும் போது... உடன் எம்.ஜி.ஆர்.

கேவி. மகாதேவன் தமிழ்த் திரை (கர்நாடக) இசையில் ஒரு சகாப்தம். தன் திரை இசையால் அரை நூற்றாண்டுக்கும் மேலாக திரை இசை ரசிகர்கள் மற்றும் வெகுஜனங்களின் மனங்களைக் கொள்ளை கொண்டவர். "திரை இசைத் திலகம்' என்று போற்றப்பட்டவர்.
 திரை உலகில் திலகம் என்ற பட்டத்துக்கு சொந்தக்காரர்கள் நான்கு பேர். மக்கள் திலகம், நடிகர் திலகம், நடிகையர் திலகம் மற்றும் திரை இசைத் திலகம். பின்னர் பல திலகங்கள் வந்தாலும் தமிழ்த் திரை உலகம் இருக்கும் வரை இந்த நான்கு திலகங்களும் தமிழ் மக்களின் மனதில் என்றும் நிலையாக இருப்பார்கள்.
 பல்வேறு இசை வல்லுநர்களிடம் இசைப் பயிற்சி எடுத்துக்கொண்ட அவரது திரை இசைப் பயணம் 1942-ஆம் ஆண்டு மாடர்ன் தியேட்டர்ஸில் ஆரம்பமானது. அப்போது, டி.ஆர். சுந்தரம் "மனோண்மணி' என்ற படத்தை தயாரித்துக் கொண்டிருந்தார். இசைக்கு பொறுப்பாக டி.ஏ. கல்யாணம் இருந்தார். உதவியாளராக கே.வி. மகாதேவன் இணைந்து கொண்டார். இவரது இசை நுணுக்கங்கள் மற்றும் இசையறிவை தெரிந்து கொண்ட டி.ஏ. கல்யாணத்திற்கு பெரும் மகிழ்ச்சி. ஏனென்றால், டி.ஏ. கல்யாணத்திடம் உதவியாளராக இருந்த சி.ஆர். சுப்பராமன், திரைப்படம் ஒன்றிற்கு இசையமைப்பதற்காக கல்யாணம் குழுவிலிருந்து வெளியேறிவிட்டார். சுப்பராமனின் வெளியேற்றம், கல்யாணத்திற்கு கவலை அளித்த நேரத்தில், மகாதேவனின் வருகை அவருக்கு மகிழ்ச்சியைத் தந்தது.
 இதற்கிடையே இன்னொரு தகவலை சொல்ல வேண்டும். மகாதேவன் சேர்ந்த சில நாட்கள் கழித்து, இன்னொரு சிறுவன் உதவியாளராக சேர வேண்டும் என்று டி.ஏ. கல்யாணத்தை சந்திக்கிறான். "என்னிடம் போதுமான உதவியாளர்கள் இருக்கிறார்கள், ஆனால், சி.ஆர். சுப்பராமனுக்கு உதவியாளர் தேவைப்படுகிறது. நீ, அவனைச் சென்று பார்!'' என்று கூறி அனுப்பி வைத்தார் டி.ஏ. கல்யாணம். அந்த சிறுவன் வேறு யாருமில்லை. எம்.எஸ்.விஸ்வநாதன் தான்.
 கே.வி. மகாதேவனின் பயணம் 1942-இல் "மனோண்மணி' படத்தில் தொடங்கியது என்றாலும் 1954 வரை கடினமான வருடங்கள்தான். "மனோன்மணி' படத்திற்கு பிறகு இரண்டு வருடங்கள் எந்த படத்திற்கும் இசையமைக்க வாய்ப்பு வரவில்லை. 1952 வரை வருடத்திற்கு ஒரு படத்திற்குதான் இசையமைக்க வாய்ப்பு வந்தது. 1953-இல் "மதனமோகினி', "ரோகினி', "நால்வர்' ஆகிய மூன்று படங்களுக்கு இசையமைத்தார். "மதனமோகினி' முதலில் வெளிவந்தது. மற்ற இரண்டு படங்களும் 1953-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளிவந்தது.
 "நால்வர்' படத்தில் கதை எழுதி நடித்த நாகராஜன், பின்னாளில் தமிழில் பல புகழ் பெற்ற புராணப் படங்களை தயாரித்து இயக்கிய ஏ.பி. நாகராஜன் ஆவார்.
 "ரோகினி' படத்திற்கு இசையமைக்க பழம்பெரும் இசையமைப்பாளர் ஜி. ராமநாதன் மற்றும் தத் என்ற இசையமைப்பாளரையும் சேர்த்துக் கொண்டார்.இந்தப் படத்தில் இடம்பெற்ற 8 பாடல்களையும் இந்த மூன்று இசையமைப்பாளர்களே பாடியிருப்பார்கள்.
 1954-ஆம் ஆண்டில் கே.வி.மகாதேவன் "நல்லகாலம்', "மாங்கல்யம்', "கூண்டுக்கிளி' ஆகிய மூன்று திரைப்படங்களுக்கு இசையமைத்தார். "கூண்டுக்கிளி' பற்றி சொல்லத் தேவையில்லை, அப்படம் வரலாறு.
 1955-ஆம் ஆண்டில் இசையமைத்த 4 படங்களில், கே.சோமு இயக்கிய "டவுன் பஸ்' படம் கே.வி.மகாதேவனுக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதில் இடம்பெற்ற "சிட்டுக் குருவி சிட்டுக் குருவி சேதி தெரியுமா?' என்ற பாடல் பட்டித்தொட்டிகளிலும் ஒலிக்க ஆரம்பித்தது. கே.வி.மகாதேவனுக்கு நாதஸ்வர இசை பிடிக்கும். படத்தில் புதுமை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், "டவுன் பஸ்' படத்தில் நாமகிரிப்பேட்டை கிருஷ்ணனை நாதஸ்வரம் வாசிக்க வைத்திருப்பார்.
 1956-ஆம் ஆண்டு "தாய்க்குப் பின் தாரம்' என்ற படத்திற்கு இசையமைத்தார். கே.வி. மகாதேவன், முதன் முதலாக சாண்டோ எம்.எம். சின்னப்ப தேவருடன் இப்படத்தில் இசைக்காக கூட்டணி சேர்ந்தார். பின்னர், தேவர் பிலிம்ஸ் தயாரித்து எம்.ஜி.ஆர் நடித்த அனைத்துப் படங்களுக்கும் மற்ற படங்களுக்கும் கே.வி. மகாதேவன்தான் இசையமைத்தார்.
 1957 முதல் கே.வி.மகாதேவனின் இசை வரைபடத்தில் ஏறுமுகம்தான். 1957-ஆம் ஆண்டு "மக்களை பெற்ற மகராசி' (27-02-1957), "ராஜராஜன்' (25-04-1957), "நீலமலைத்திருடன்' (20-09-1957), "முதலாளி' (22-10-1957) ஆகிய நான்கு படங்களுக்கு இசையமைத்தார். "மக்களைப் பெற்ற மகராசி' படத்தில் -
 "மணப்பாற மாடு கட்டி மாயவரம் ஏறுபூட்டி
 வயக்காட்ட உழுது போடு சின்னக்கண்ணு'
 என்ற பாடல் சூப்பர் ஹிட்டான பாடல்.
 இதே படத்தில்,
 "போறவளே போறவளே பொன்னுரங்கம்
 என்னை புரிஞ்சுக்காம போறியே நீ'
 என்ற பாடலும், "ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா' என்ற பாடலும் எந்தக் காலத்திற்கும் ஏற்ற பாடல்களாக தேனிசையைக் கலந்து கொடுத்திருப்பார் கே.வி. மகாதேவன்.
 இரண்டாவதாக வெளிவந்த படம் "ராஜராஜன்'. இப்படத்தில் எம்.ஜி.ஆர் பத்மினி நடித்திருப்பார்கள். பாடல்களும் கேட்கும்படியாக இருந்தன. மூன்றாவதாக வெளிவந்த படம் "நீலமலைத் திருடன்'. இப்படத்தில் இடம்பெற்ற "சத்தியமே லட்சியமாய் கொள்ளடா', "கொஞ்சும் மொழிப் பெண்களுக்கு', "உள்ளம் கொள்ளை போகுதே' ஆகிய மூன்று பாடல்களும் கே.வி.மகாதேவனை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றன.
 நான்காவதாக வெளிவந்தப் படம் "முதலாளி'. சமீபத்தில் மறைந்த தமிழ்ச் சினிமாவின் மூத்த இயக்குநர் முக்தா சீனிவாசன் இயக்கிய முதல் படம். இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே கேட்கும்படியாக இருந்தன. படத்திற்கு மகுடம் சூடிய பாடல், "ஏரிக்கரை மேலே போறவளே' என்ற பாடல்தான்.
 கே.வி.மகாதேவன்தான் இசையமைக்கத் தொடங்கிய ஆரம்ப காலத்தில், அந்த காலத்திற்கு ஏற்றாற்போல்தான் இசைஅமைத்திருந்தார். அவருடைய மிக பிரபலமான பாடல்களில் மேற்சொன்ன "ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே' என்ற பாட்டை கேட்டு பாருங்கள். இங்கு ராகத்தை வெளிக்கொணருவதுதான் முக்கியமாக இருக்கும். அந்த கமகங்கள், அந்த பிருகாக்கள், அந்த ஆகாரம் எல்லாமே கர்நாடக இசையைத் தீவிரமாகப் பின்பற்றியபடியே இருக்கும். டி.எம்.செüந்தரராஜனும் ஒரு கச்சேரிக்கு வேண்டிய அனைத்து நுணுக்கங்களோடு இந்தப் பாட்டை பாடியிருப்பார். ஆரபி ராகத்தை இந்தப் பாடல் நன்றாக பிடித்துக்கொண்டிருக்கும்.
 1958-ஆம் ஆண்டு ஏறத்தாழ 11 தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்தார். இதில் "சம்பூர்ண ராமாயணம்', "நல்ல இடத்து சம்பந்தம்', "தை பிறந்தால் வழி பிறக்கும்' ஆகிய படங்களில் இடம்பெற்ற பாடல்கள் கே.வி.மகாதேவனை இசையில் அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றன. "சம்பூர்ண ராமாயணம்' படத்தில் கே.வி.மகாதேவனும் பாடகர் சி.எஸ். ஜெயராமனும் ஒரு இசை ராஜாங்கமே நடத்தியிருப்பார்கள். நல்ல இடத்து சம்பந்தம் படத்தை மறைந்த நகைச்சுவை நடிகர் வி.கே. ராமசாமியும், புராணப் பட இயக்குநர் ஏ.பி. நாகராஜனும் இணைந்து தயாரித்தனர். இதே படத்தில்தான், கோரஸ் பாடகியாக இருந்த எல்.ஆர். ஈஸ்வரிக்கு தனியாக பாடும் வாய்ப்பை அளித்தார்.
 "தை பிறந்தால் வழி பிறக்கும்' படத்திற்கு கதை-வசனம் எழுதி தயாரித்து இயக்கியவர் ஏ.கே.வேலன். இவர் சென்னை சாலிகிராமத்தில் இருந்த அருணாசலம் ஸ்டுடியோவின் அதிபர். இப்படத்தில் பாடல்கள் அனைத்துமே சூப்பர்ஹிட். மறைந்த பாடகர் சீர்காழி கோவிந்தராஜன், "அமுதும் தேனும் எதற்கு நீ அருகினில் இருக்கையிலே' என்று தொடங்கும் பாடலின் ஒலிப்பதிவன்று காலை சீர்காழி கோவிந்தராஜனுக்கு காய்ச்சல், எனவே கே.வி.மகாதேவனை தொலைபேசியில் தொடர்புகொண்டு, "காய்ச்சலாக இருப்பதால் தன்னால் இன்று பாடமுடியாது' என்று சொல்ல, அதற்கு கே.வி. மகாதேவன், "கோவிந்து சரீரம்தானே (உடம்பு) சரியில்ல சாரீரம் (குரல்) நல்லாத்தானே இருக்கு, அதனால, நீ வந்து பாடிட்டு போ, அப்புறம் இரண்டு தம்பூரா வாசிப்பவர்களையும் கூட கூட்டி வா!' என்று மறுமுனையில் சொல்ல, சீர்காழி கோவிந்தராஜன் எவ்வித மறுப்பும் சொல்லாமல் காய்ச்சலோடு, இரண்டு தம்பூரா வாசிப்பவர்களையும் பாடல் ஒலிப்பதிவிற்காக கூட்டிச் சென்றார். ஓலிப்பதிவு கூடத்தில் பார்த்த காட்சியினால் சீர்காழி கோவிந்தராஜனுக்கு காய்ச்சலும் கவலையும் தொற்றிக்கொண்டது, எனென்றால் ஒலிப்பதிவுக் கூடத்தில் ஏற்கெனவே இரண்டு தம்பூரா வாசிப்பவர்கள் இருந்தனர். எனவே, "நான் கூட்டி வந்த இருவருக்கும் பணத்தைக் கொடுத்து அனுப்பி விடவா?' என்று கேட்க, அதற்கு கே.வி.எம்.மோ, சீர்காழியைப் பார்த்து கண் சிமிட்டி விட்டு, "அதெல்லாம் ஒண்ணும் அனுப்ப வேண்டாம், அவர்களும் வாசிக்கட்டும்' என்று சொல்லி, சீர்காழியை உட்கார வைத்து அவருக்கு இருபுறமும் இரண்டு, இரண்டு தம்புராக்களை வாசிக்கச் சொல்லி சீர்காழி கோவிந்தராஜனை பாடச்சொல்லி ஒலிப்பதிவு செய்தார் "அமுதும் தேனும்' பாடலை. காய்ச்சலோடு பாடினாலும், தனது கம்பீரக் குரலில் பாடியதால் இன்றளவும் கேட்கும்படியாக உள்ளது.
 60-களின் தொடக்கத்திலிருந்து 70-களின் தொடக்கம் வரை பல சமூகப் படங்களுக்கும் புராணப் படங்களுக்கும் இசையமைத்தார். ஏ.பி.நாகராஜனின் "திருவிளையாடல்', "சரஸ்வதி சபதம்', "திருவருட்செல்வர்', "கந்தன் கருணை', "தில்லானா மோகனாம்பாள்' போன்ற புராணப் படங்களின் வெற்றிக்கு கே.வி.மகாதேவனின் இசை முக்கிய காரணமாக இருந்தது.
 "கந்தன் கருணை' படத்தில் "திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்' என்ற பாடல் இடம்பெற்றிருக்கும். பூவை செங்குட்டுவன் வரிகளுக்கு குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைத்து தனிப்பாடல் தொகுப்பில் ஒரு பாடலாக வெளிவந்தது. காட்சிக்கு மிகவும் பொருத்தமான பாடலாக இருந்ததால் குன்னக்குடி வைத்தியநாதனிடம் சென்று பாடலை படத்தில் சேர்த்துக்கொள்வதற்கு அனுமதி கேட்டார். குன்னக்குடியும் அனுமதி கொடுத்தார். இருவருமே மிகவும் பெருந்தன்மையான குணம் படைத்தவர்கள்.
 "திருவட்செல்வர்' படத்தில் இடம்பெற்ற "மன்னவன் வந்தானடி தோழி' என்ற பாடல் கலப்படமில்லாத சுத்தமான கர்நாடக ராகத்தின் அடிப்படையில் அமைந்த பாடல். இதில் "ச ரி க ம ப த நி ச' என்ற ஸ்வரத்திற்கு அருமையான வரிகளை அள்ளிக் கொடுத்திருப்பார் கவிஞர் கண்ணதாசன். அது கீழ்வருமாறு:
 ச.... சத்தமதுதரவாட
 ரி.... ரிகமபதநிசா
 க.... கருணையின் தலைவா
 ம.... மதிமிகு முதல்வா
 ப.... பரம்பொருள் இறைவா
 த.... தனிமையில் வரவா
 நி.... நிறையருள் பெறவா
 -என்று சொல்லி கடைசி வரிகளை பாடி முடிப்பார் பி. சுசிலா. அப்போது, கே.வி.மகாதேவனின் இசையும் கண்ணதாசனின் வரிகளும் எந்தளவிற்கு பிண்ணி பினையப்பட்டுள்ளது என்பது புரியும்.
 1979-ஆம் ஆண்டு வெளிவந்த "சங்கராபரணம்' தெலுங்கு திரைப்படம். மொழி தெரியாதவர்களையும் இசை அறியாதவர்களையும் ரசிக்க வைத்தது.
 1962-ஆம் ஆண்டு முதல் தெலுங்கு திரைப்படங்களுக்கு தன்னுடைய இசை சாம்ராஜ்ஜியத்தை கே.வி. மகாதேவன் விரிவுபடுத்தினார். அதேபோன்று சில மலையாள படங்களுக்கும் மூன்று கன்னட படங்களுக்கும் இசையமைத்தார்.
 திரை இசையில் சுமார் 50 ஆண்டு காலம் கோலோச்சிய கே.வி.மகாதேவனுக்கு இது நூற்றாண்டு. இறக்கும் மனிதர்கள், இறவாப் பாடல்கள் என்பது போல கே.வி.மகாதேவன் மறைந்தாலும் அவர் இசையமைப்பில் வெளிவந்த அத்துணைப் பாடல்களும் இறவா வரம் பெற்றவை.
 - ரா. சுந்தர்ராமன்
 பெற்ற விருதுகள்
 "கந்தன் கருணை' மற்றும் "சங்கராபரணம்' படத்தில் இசையமைத்ததற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது இருமுறையும் தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார்.
 சிறப்புகள்: எல்.ஆர். ஈஸ்வரியை தனிப்பாடல் பாட வைத்தவர். ஜெயலலிதாவை தன்னுடைய இசையமைப்பில் பாட வைத்தவர். நாதஸ்வர வித்வான்களான காலஞ்சென்ற நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் மற்றும் மதுரை எம்.பி.என். சேதுராமன் மற்றும் பொன்னுசாமியையும் தன் இசையமைப்பில் வாசிக்க வைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com