எல்லா திசைகளிலும் இனி புதிய சிந்தனைகள்!

தமயந்தி எழுதிய "தடயம்' கதையைத் தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் நிறைய பேருக்கு வரிவரியாய்ச் சொல்ல முடியும். அப்படிப்பட்ட ஒரு சிறுகதையைத் துளியளவும் எதார்த்தம் விலகாமல்,
எல்லா திசைகளிலும் இனி புதிய சிந்தனைகள்!

தமயந்தி எழுதிய "தடயம்' கதையைத் தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் நிறைய பேருக்கு வரிவரியாய்ச் சொல்ல முடியும். அப்படிப்பட்ட ஒரு சிறுகதையைத் துளியளவும் எதார்த்தம் விலகாமல், அவரே படமாக்கி வருகிறார். மீரா கதிரவனின் "விழித்திரு'உள்ளிட்ட ஏராளமான திரைக்கதைகளுக்கு துணை நின்றவர். இப்போது இயக்குநராக பரிமாணம் எடுக்கிறார்.
 "தடயம்' சிறுகதையைப் படமாக்கும் எண்ணம் எப்படி வந்தது...?
 இந்தக் கதையைப் படித்ததற்கு பின் எல்லா இடங்களிலிருந்தும் ஏராளமான அழைப்புகள். அவ்வளவு வரவேற்பு. இது ஒரு உண்மை கதை. நிறைய பேர் இந்த கதையை நேசித்து சினிமாவுக்காக கேட்டார்கள். இந்தக் கதையின் மேல் எனக்கு சின்ன காதல் இருந்தது. அதனாலேயே இதை யாருக்கும் கொடுக்கவில்லை. பெண், காதல், காமம் எல்லாமே சினிமாவில் குறைவாகத்தான் பதிவு செய்யப்படுகிறது. அப்படி பதிவு செய்தாலும், அது ஆணின் பார்வையிலேயே பார்க்கப்படுகிறது. ஒரு பெண்ணின் காதலை துல்லியமாக சொன்ன ஒரே தமிழ் திரைப்படம் சசியின் "பூ' படம் தான். அது வர்த்தக ரீதியாக வெற்றி பெறாதது எனக்குள் காயம்தான்.
 காதலுக்கும் காமத்துக்குமான இடைவெளி என்னவென்று இந்த சமூகத்துக்கு இன்னும் தெரியவில்லை. உடம்புக்கும் மனசுக்கும் நடக்கிற போராட்டத்தை வர்ணிக்கிற வார்த்தைகள் எந்த மொழியிலும் துல்லியமாக இல்லை. மனிதனாக பிறந்த நம் ஒவ்வொருத்தருக்கு உள்ளேயும் இந்த மாதிரி காதலும் காமமும் மாறி மாறி ராட்டினம் சுற்றுகிறது. இது பெண்களுக்கும் உண்டு என்பதை நம் சமூகம் ஒத்துக் கொள்வதில்லை. நம் அம்மாக்கள் காதலிப்பார்கள் என்று கூட நம்மால் ஒத்துக் கொள்ள இயலாது. நம்மில் பலர் யாருக்கும் தெரியாமல் அழுது, சிரித்து சமாளித்து வாழ்ந்து விடுகிறார்கள்.. ஒரு பெண்ணின் மனநிலையை உலகத்துக்கு சினிமாவாக சொல்ல வேண்டும் என்கிற ஆசை எனக்குள்ளே உண்டாகியது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், இந்தக் கதையை நிறையப் பேருக்கு அதன் வாழ்க்கைக்கு வெகு பக்கத்தில் இருந்து சொல்ல வேண்டும் என்கிற ஒரே காரணத்துக்காகதான் நான் இதை திரைப்படமாக்க நினைத்தேன்.
 முதல் படம்... நிறைய மெனக்கெடல்கள் இருந்திருக்குமே....?
 திருமணம்தான் ஒரு பெண்ணை, இந்தப் பக்கம், அந்தப் பக்கம் என திசைகள் மாற்றி போடுகிறது. எப்படி வாழ வேண்டும் என்பதில் பெண்ணுக்கு இருக்கிற ஆசைகளை, கனவுகளை இந்த சமூகம் ஏற்றுக் கொள்வதே இல்லை. அப்படி மறுக்கிற போது ஒரு பெண்ணின் வாழ்வில் நடக்கிற சம்பவங்கள் என்ன என்பதுதான் இந்தக் கதையின் அடிப்படை. சுமார் 20 வருடங்கள் கழித்து காதலித்து இருவரும் சந்திக்கிறார்கள். ஒரு சந்திப்புதான் அவர்களுக்குள். அவள் புற்றுநோய் பாதிப்பால், படுத்த படுக்கையாக இருக்கிறாள். இவன் அவளை பார்க்கப் போகிறான். அவளுக்கு விவகாரத்து ஆகிவிட்டது. இவனுக்கு இன்னொரு பெண்ணுடன் திருமணம் ஆகியிருக்கிறது... இப்படித்தான் கதை போகும். இந்தக் கதையை எழுதும் போதே, இதை யாரும் விரும்ப மாட்டார்கள் என்றே நினைத்தேன். முதலில் இதை என் அம்மாவே ஏற்றுக்கொள்ள மாட்டார். வெளியுலகம் எப்படி ஏற்றுக் கொள்ளும் என்று நினைத்தேன். பாலாஜி சக்திவேல் போன்ற இயக்குநர்கள் கூட திரைப்படமாக்க கேட்டார்கள். ஆனால் பெண் குரலாக பதிவு செய்ய நினைத்தேன். மறைக்கப்பட்ட திரைக்கு பின்னால் இருக்கிற வாழ்க்கையை பேச நினைத்தேன். திருமணத்துக்குப் பிறகாய் தொடரும் உறவுகள் இங்கே நிறைய இருக்கிறது. அதை பேசியே ஆக வேண்டும் என்ற முனைப்புதான் இந்தக் கதை.. ஒரு மணி நேரக் கதையாக கொண்டு வந்திருக்கிறேன்.
 ஒரு கட்டத்தில் நாமே இயக்கலாம் என்று தோன்றியது. 9-ஆம் வகுப்பு ஆசிரியை, எழுத்தாளர் செளபா என இப்படி நிறைய பேர் உதவினார்கள். இப்படித்தான் இந்தப் படம் ஆரம்பமாகி வளர்ந்து வந்தது. நடிகர்கள் கனி குஸ்ருதி, கணபதி, முருகேசன்,ஒளிப்பதிவாளர் ஆண்டனி ஜெய், படத்தொகுப்பாளர் பிரவீன் பாஸ்கர் , இசையமைப்பாளர் ஜஸ்டின் கெனன்யா என எல்லோருக்கும் நன்றிகள். படத்தை வியாபார ரீதியாக முன்னெடுத்து செல்லும் பர்ஸ்ட் காப்பி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மாலா மணியனுக்கு பெரு நன்றி.
 பல்லாயிரம் ஆண்டுகளாக இங்கே இருந்து வரும், திருமண சூழல் வாழ்க்கை வேண்டாம் என்கிறீர்களா....?
 கல்யாணத்துக்குப் பிறகும் காதலன் மேல் காதலுடன் இருக்கும் பெண்களை நான் பார்த்திருக்கிறேன். அது போல் ஆண்களும் இருக்கிறார்கள். இங்கு திருமணம் செய்து கொள்வது மட்டுமே ஒரு காதலின் வெற்றியாக கருதப்படுகிறது.
 திருமணம் என்கிற பந்தமே பெரும்பாலும் பெண்கள் மீது திணிக்கப்படுவதுதான் காரணம். பெண்களின் தேர்வுகளைக் குறித்து கேள்வி கேட்கிற படமாகத்தான் இதைப் பார்க்கிறேன். எத்தனை வருடங்கள் ஆனாலும் அன்பும், காதலும் இங்கே ஒரே நிலையில்தான் இருக்கும். கொடுக்க முடியாத ஒரு முத்தம், தீண்டல், வார்த்தை, காமம், தாய்மை எல்லாப் பெண்களிடமும் இன்னும் இருக்கின்றன. அழகும், திடமும் அத்தனையும் உதிர்ந்து விட்ட பிறகு, மரணத்தின் நிழல் படிந்த அந்திமத்தின் தெருவில் மனம் எங்கும் கனக்கும் ரகசியங்களோடு எத்தனை எத்தனை பெண்கள் செத்துப் போக காத்திருக்கிறார்கள். இப்படி ஏராளமான கேள்விகள் பெண் சமூகத்தில் இருந்துக் கொண்டே இருக்கின்றன. இந்த விதத்தில் பூ படம் இதை பேசியது. மாரி உடைந்து அழும் போதாவது ரசிகர்கள் சமாதானமடைவார்கள் என்று எதிர்பார்த்தேன். அதுவும் நடக்கவில்லை. "கல்யாணம் ஆனவளுக்குப் புருஷன் இருக்கானே? எப்படிப் பழைய காதலை நினைத்துப் பார்க்கலாம்?'னு கேள்வி கேட்டார்கள். ஆனால், இதையே "அழகி' படத்தில் பார்த்திபன் செய்யும் போது, கை தட்டிக் கண்ணீர் மல்கி ஏற்றுக் கொண்டார்கள். "அழகி' படத்தை கொண்டாடியவர்கள், "பூ' படத்தை கொண்டாடாத மன நிலையில் இருந்தார்கள்.
 தமிழில் எவ்வளவோ நல்ல இலக்கியக் கதைகள் இருந்தும் படமாக உருவெடுப்பது இல்லையே... ஏன்...?
 தமிழ் சினிமா வாழ்க்கையில் இருந்து விலகி இருக்கிறது என்றுதான் சொல்லுவேன். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு விதமான சினிமாக்கள் நமது உணர்வுகளை கிளற அடிக்கின்றன. எல்லோருடைய வாழ்க்கையிலும் சில சினிமாக்கள் நினைவுகளால் முக்கியத்துவம் அடைந்து விடுகின்றன. காலம் ஒவ்வொரு கலைக்கும் மாற்றம் கொடுத்துக் கொண்டே இருக்கும். காதல், அரசியல், சமூகம் என எல்லாத் திசைகளிலும் இனி புதிய புதிய சிந்தனைகள் வரும். அப்படி சினிமாவும் மாறியே ஆக வேண்டும். சினிமா தரக் கூடிய உணர்வுகளும், கதைகளும் எப்போதும் தீரவே தீராது. கதை பஞ்சம் என்பது பெரிய பொய். சமீபத்தில் "டாலா டீ குன்சி'என்று ஒரு படம். மது அடிமைக்கு எதிரான செய்தி சொல்லும் களத்தில், அப்படி ஒரு ஆத்மார்த்தமான நேர்த்தியுடன் கதை சொல்லியிருந்தார் இயக்குநர் ஷில்பி குலட்டி. அது மாதிரியான படங்கள் தமிழில் வர வேண்டும். எழுத்தாளர்களுக்கும், சினிமாவுக்குமான இடைவெளியை குறைத்தாலே நல்ல சினிமாக்கள் வரும். இயக்குநர்களுக்கான வாசிப்புத் திறனும் கூட வேண்டும். அதே சமயத்தில் எழுத்தாளர்களுக்கும் காட்சி ஊடகத்தின் நுட்பங்கள் புலப்பட வேண்டும். இலக்கியத்தின் அருமை புரிந்து தமிழ்ப் படைப்புகளின் மூலம் வாழ்க்கையை திரைப்படமாக்க வேண்டும்.
 - ஜி.அசோக்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com