சென்னை வானொலி- 80

இந்திய மக்களின் வாழ்க்கையோடு இரண்டற கலந்த ஊடகம் வானொலி. காலை 5.55 மணிக்கு விக்டர் பரஞ்சோதி இசையமைத்த அகில இந்திய வானொலியின் பிரத்யேக இசையுடனும், பண்டிட் ரவிசங்கர் இசையமைத்த
சென்னை வானொலி- 80

இந்திய மக்களின் வாழ்க்கையோடு இரண்டற கலந்த ஊடகம் வானொலி. காலை 5.55 மணிக்கு விக்டர் பரஞ்சோதி இசையமைத்த அகில இந்திய வானொலியின் பிரத்யேக இசையுடனும், பண்டிட் ரவிசங்கர் இசையமைத்த வந்தே மாதரம் பாடலுடனும் தொடங்கும் நிகழ்ச்சிகள், இரவு 12 மணி வரை நீளும். வானொலி சேவைகள் நாட்டில் பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்தாலும், சென்னை வானொலி நிலையத்துக்கென பல்வேறு சிறப்புகள் உண்டு. கடந்த 1938}ஆம் ஆண்டு ஜூன் 16}ஆம் தேதி தொடங்கிய அதன் பயணம், தற்போது 80 ஆண்டுகளைக் கடந்து, 81-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அதையொட்டி, சென்னை வானொலி நிலைய இயக்குநர் வி.சக்கரவர்த்தியை சந்தித்துப் பேசினோம்:

இந்த 80 ஆண்டுகளில் சென்னை நிலையத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள் என்னவென்று குறிப்பிடுவீர்கள்?

சுதந்திரம் பெற்ற காலத்தில் நாடு முழுவதும் 6 வானொலி நிலையங்கள் தான் இருந்தன. அவற்றில் தென் மாநிலங்களில் இருந்த நிலையங்கள் சென்னையும், திருச்சியும் தான். அவற்றில் முதலில் தொடங்கப்பட்டது சென்னை நிலையம். அன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், செய்திகளைக் கொண்டு சேர்க்கவும் பயன்பட்டது வானொலி மட்டும்தான்.
தொழில்நுட்ப மாற்றங்களைப் பொருத்தவரை, முதலில் வானொலி மூலம் நேரடி ஒலிபரப்புகள் மட்டும் ஒலிபரப்பப்பட்டன. அன்றைக்கு வானொலி தொழில்நுட்பக் கருவிகள் விலை உயர்ந்ததாக இருந்ததுதான் காரணம். பேச்சில் காணப்படும் தடுமாற்றம் போன்ற தவறுகள் நேரடி ஒலிபரப்பில் எதிரொலிக்கும் நிலை இருந்தது. பிறகு 1950}களில் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டு, நிகழ்ச்சிகளைப் பதிவு செய்து ஒலிபரப்பும் முறை ஏற்பட்டது. தற்போது டிஜிட்டல் வசதிகளுடன் அதிநவீன வசதிகளுடன் துல்லியமாக ஒலிபரப்பப் படுகின்றன.

அகில இந்திய வானொலி என்றாலே பிரபலங்கள் தான். இங்கே வருகை புரிந்த, பணியாற்றியவர்களைப் பற்றி சொல்ல முடியுமா?

938-இல் சென்னை நிலையத்தை முதலில் ஒலிப்பதிவு செய்து தொடங்கி வைத்தவரே அன்றைய சென்னை மாகாண பிரதம மந்திரி ராஜாஜி தான். எத்தனையோ பிரபலங்கள் இங்கே வந்திருக்கிறார்கள். இசை அறிஞர்களில் இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமி, பாலமுரளி கிருஷ்ணா, செம்மங்குடி சீனிவாச அய்யர், டி.கே.பட்டம்மாள் போன்றவர்கள் வானொலியில் கச்சேரிகள் நடத்தி, வானொலியோடு தாங்களும் வளர்ந்தனர். உரைநடைத் துறையில் கல்கி கிருஷ்ணமூர்த்தி, கி.வா.ஜகந்நாதன், அறிஞர் அண்ணா, புலவர் கீரன், மு.வரதராசனார் என்று பலர் வந்து பேசியிருக்கிறார்கள். அதேபோல, தமிழில் முதன் முதலில் ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் அகிலன் சென்னை வானொலி நிலையத்தில் பணியாற்றியவர் தான். அதில் எங்களுக்கு தனிப் பெருமையே உண்டு.

பேரிடர் காலங்களில் வானொலி நிலையத்தின் செயல்பாடு எப்படி?

பேரிடர் மேலாண்மையைப் பொருத்தவரை, வானொலி நிலையம் துரிதமாகவும், சிறப்பாகவும் இயங்கி வருகிறது. சுனாமியின்போது மக்களையும், அவர்களது உடமைகளையும் பாதுகாப்பது பற்றிய தகவல்களை அளித்தோம். 2015 டிசம்பர் 1}ஆம் தேதி பெய்த பேய் மழையில் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் மூழ்கிவிட்டன. பல இடங்களில் இருக்கும் குடியிருப்புகளில் மூன்றாவது மாடி வரை மழையில் மூழ்கிய நிலைமை. அந்த நேரத்தில் நான் சென்னை நிலையத்தின் நிகழ்ச்சிகள் பிரிவுத் தலைவராக இருந்தேன். உதவி வேண்டுவோரும், உதவும் உள்ளங்களும் பங்கேற்கும் தொலைபேசி வழி நிகழ்ச்சியை நடத்தினோம். எங்கெல்லாம் தேவை இருக்கிறதோ, அது பற்றிய தகவல்களை எங்கள் வாசகர்களுக்கு அளித்து உதவிகள் கோரினோம். சுமார் 15 நாட்கள் வரை இந்த நிகழ்ச்சி ஒலிபரப்பானது. எங்களுக்குக் கிடைத்த புள்ளிவிவரங்களின்படி, வானொலி சேவை மூலமாக சுமார் மூன்றரை லட்சம் பேருக்கு உதவிகளும் உணவுப் பொட்டலங்களும் கிடைத்ததாகத் தெரியவந்தது. இதுபோன்ற நேரங்களில் வானொலியால் மட்டுமே இயங்க முடியும். உதாரணமாக, சென்னையில் மூன்று நாட்கள் மின்சாரம் இல்லாத நேரத்திலும் வானொலியின் சேவை அனைத்து மக்களையும் சென்றடைந்தது.

சென்னை நிலையத்தில் இருந்து என்னென்ன சேவைகள் அளிக்கப்படுகின்றன?

1938}இல் நிலையம் தொடங்கப்பட்ட காலத்தில் சென்னை}1, சென்னை}2 என இரண்டு அலைவரிசைகள் ஒலிபரப்பாகின. சென்னை}1 அலைவரிசையில் செய்திகள், நிகழ்ச்சிகள், உரைநடைகள், இசைக் கச்சேரிகள் என்று தமிழில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வருகிறோம். சென்னை}2 அலைவரிசையில் இந்நகரத்தில் பல்வேறு மொழி பேசும் மக்களுக்காக தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், இதில் 40 சதவீத நிகழ்ச்சிகள் இளைஞர்களை மையமாக வைத்து தமிழிலும், ஆங்கிலத்திலும் ஒலிபரப்பப்படுவதுதான். இந்தியாவில் முதல் பண்பலை சேவை (எஃப்.எம்) தொடங்கியது சென்னையில் தான். இந்தியாவில் வானொலி சேவை 18.8.1927 அன்று தொடங்கியது. அதன் 50}ஆவது ஆண்டை முன்னிட்டு, 1977}இல் முதல் பண்பலை ஒலிபரப்பு சென்னையில் தொடங்கியது. முதலில் அதன் பெயர் சென்னை எஃப்.எம். பிறகு, 1997}இல் ரெயின்போ எஃப்.எம். என்று பெயர் மாறியது. 1997}இல் நாட்டின் சுதந்திரப் பொன்விழாவை முன்னிட்டு எஃப்.எம். கோல்டு என்ற சேவையும் தொடங்கியது.

பிற மொழி சேவைகள், அயலகச் சேவைகள் சென்னையிலிருந்து இயங்குகிறதா?

பிற மொழி சேவைகள் சென்னையில் இல்லை. அந்தந்த மாநிலத்தில் இருந்தே மாநில மொழி சேவைகள் இயங்குகின்றன. சென்னையிலிருந்து தெற்காசிய நாடுகளுக்கான சேவையை தினமும் மாலை 4.45 முதல் 5.45 வரை ஒலிபரப்பி வருகிறோம். அதில் இந்தியா சார்ந்த செய்திகள், உரைநடை சித்திரங்கள், இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகளை போன்றவற்றை அளித்து வருகிறோம். 
இன்று தனியார் பண்பலை சேவைகளின் எண்ணிக்கை பெருகி விட்டதே?
ஆமாம். சென்னையில் மட்டும் 11, 12 பண்பலை சேவைகள் இயங்குகின்றன. ஆனால், செய்திகளை சென்னை வானொலி மட்டும்தான் ஒலிபரப்ப முடியும். அது தவிர, நிகழ்ச்சிகளில் நாங்கள் தொடர்ந்து தரத்தைக் கடைப்பிடித்து வருகிறோம். எங்களுக்கென்று ஒரு பொறுப்புணர்வு இருக்கிறது. மொழிநடையில், திரையிசைப் பாடல்களை ஒலிபரப்புவதில் இன்னும் தனித்தன்மை இருக்கவே செய்கிறது.

திரையிசை பாடல்களைத் தேர்ந்தெடுப்பதில், நிகழ்ச்சிகளில் என்னென்ன விதிமுறைகளைப் பின்பற்றுகிறீர்கள்?

திரையிசைப் பாடல்களைத் தேர்வு செய்வதற்காக, ஒரு தேர்வுக்குழு சென்னையில் இயங்குகிறது. அருவருப்பான, ஆபாசமான வார்த்தைகள் அற்ற, அரசியல் சார்பற்ற, வன்முறையைத் தூண்டாத பாடல்களை மட்டுமே தேர்ந்தெடுக்கிறோம். அந்தப் பாடல்களின் பட்டியலை தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள மற்ற நிலையங்களுக்கும் அனுப்புகிறோம். தவிர, படம் வெளியாவதற்கு முன்பு இங்கே பாடல்களை ஒலிபரப்புவதில்லை. அப்படியே வெளியிட நேர்ந்தாலும், அதை வர்த்தக ரீதியாக மட்டுமே ஒலிபரப்புவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com