ஓரிகாமி: குழந்தைகள் கலை..! குழந்தைகளின்  கொண்டாட்டம்.!!

காகிதத்தை மடித்து  அம்பு செய்து  அதை எறிந்து விளையாடாத குழந்தைகள்  இருப்பார்களா என்ன..!  அந்த  காகித   ராக்கெட்   அம்பு   கல்லூரி  வரை
ஓரிகாமி: குழந்தைகள் கலை..! குழந்தைகளின்  கொண்டாட்டம்.!!

காகிதத்தை மடித்து  அம்பு செய்து  அதை எறிந்து விளையாடாத குழந்தைகள்  இருப்பார்களா என்ன..!  அந்த  காகித   ராக்கெட்   அம்பு   கல்லூரி  வரை   பயணம்போகிறதே ..! இப்படி காகிதத்தை மடிக்கும் கலைக்கு  "ஓரிகாமி'  என்ற ஜப்பானிய பெயர் இருக்கிறது.  குழந்தைகளுக்கு கலை  உணர்வும், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யூகிக்கும் திறமையை வளர்க்கவும்,  ஓய்வு நேரத்தை பயனுள்ள ரீதியில் செலவழிக்கவும் இந்த ஓரிகாமி  உதவுகிறது.  ஓரிகாமி கலையைத் தமிழகத்தில் பரப்பி வருவதில்  முன்னணியில்  இருப்பவர்  தியாகசேகர்.  

கடந்த பத்து ஆண்டுகளில்  தமிழகத்தின்  நான்கு திசைகளிலும் பயணித்து சுமார் நானூறு பள்ளிகளில்  நான்காயிரம் மாணவர்களுக்கு "ஓரிகாமி'-யை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.   "கொக்குகளுக்காகவே வானம்' என்ற ஓரிகாமி பயிற்சிப் புத்தகத்தையும்  வெளியிட்டுள்ளார் .

தனது  பயணம் குறித்து தியாகசேகர் சொல்வது:
""சொந்த  ஊர் கபிஸ்தலத்திற்கு பக்கத்தில் இருக்கும் நக்கம்பாடி. பள்ளிப்படிப்பு பாபநாசத்தில். பள்ளியில் காகிதத்தில் பலவிதப் பூக்கள் செய்வதை கற்றுக் கொடுத்தார்கள். கையில் காகிதம் கிடைத்தால் போதும். அதை விதம் விதமாக கத்தரித்து பூக்களை உருவாக்குவேன். கப்பல், ராக்கெட், விலங்குகள் என்று பல உருவங்களை உருவாக்குவேன்.  பிற்காலத்தில் அதுவே வாழ்க்கையாகும் என்று அப்போது தெரியாது.  பள்ளிகளில் விழா ஏதும் நடந்தால் அலங்காரத்திற்காக என்னிடம்தான்  பொறுப்பு தருவார்கள். வண்ண வண்ண காகிதத்தில் கண்ணைக் கவரும்  தோரணங்கள்  உருவாக்கி  அசத்துவேன்.  பள்ளிக் காலத்தில் "அறிவொளி' இயக்கம் பிரபலமாக இருந்தது. அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் காகிதத்தை விதம் விதமாக மடிப்பதன் மூலம் பல வடிவங்களை உருவங்களை உருவாக்கலாம்  என்று சொல்லிக் கொடுத்தார்கள்.  அன்று  இட்ட "பொறி'  என்னை இத்தனை தூரம்  அழைத்து வந்துவிட்டது.   
 
 கல்லூரியில் சமூகப்பணி  பாடமாக அமைந்தது. பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக மலை கிராமங்களுக்குச் செல்வோம். அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடுவோம். அப்போது கிராம நலத்திற்காக செயலாற்றும் பொது நல தொண்டர்களின் அறிமுகம் கிடைத்தது. அவர்களைப் போலவே குழந்தைகளுக்கு நாமும்  சேவை செய்ய வேண்டும்  என்ற உந்துதல் ஏற்பட்டது.  எனக்குத் தெரிந்த  காகித மடிப்பு கலையை குழந்தைகளிடம் பரப்புவது என்று தீர்மானித்து  செயல்பட ஆரம்பித்தேன்.   சில மாதம் அண்ணன் நடத்தும்  உணவு விடுதியில் வேலை பார்த்தேன். ஆயினும், எனது மனம்  குழந்தைகள், ஓரிகாமி, என்று அலை பாய்ந்து கொண்டிருந்தது. உணவு விடுதியை விட்டு மனம் சொன்னதைக் கேட்டு, எனது இலக்கை நிச்சயம் செய்தேன்.

"திருவண்ணாமலையில் குழந்தைகளுக்கான "கூக்கூ' அமைப்பு   செயல்பட்டு வருவதை அறிந்தேன். அதன் பொறுப்பாளர் சிவராஜின்  நட்பும் ஆதரவும் கிடைத்தது.  அதை ஒரு திருப்பம் என்றே சொல்லலாம்.  அவருடன் இணைந்து மூன்று ஆண்டுகள் களப்பணி செய்தேன்.  குழந்தைகளுக்கு காகிதத்தை மடிப்பதை மட்டும் சொல்லிக் கொடுக்காமல், சுற்றுப்புறச் சூழல் குறித்தும் விழிப்புணர்வைத் தர ஆரம்பித்தேன்.

அடுத்த திருப்பமும் வந்தது. "கூக்கூ' சிவராஜ்,  " கொஞ்ச நாட்கள்  மண் வாசனை விஞ்ஞானி நம்மாழ்வாரிடம் பயிற்சி பெற்று வா..' என்றார்.  அவர் சொன்னபடியே நம்மாழ்வாரின் "வானகம்' அமைப்பில் சேர்ந்தேன்.  அவரிடம் இருந்த நாட்கள்  எனக்குள் புது வெளிச்சத்தை விதைத்தது. "யார் என்ன செய்தாலும், அது மனித  குலத்திற்கு  பயன்படுவதுபோல்  இருக்க வேண்டும். உனக்குப் பிடித்தத்தைச் செய்யும்போது அலுப்போ சோர்வோ வராது. உனக்குப் பிடித்தது மற்றவர்களுக்கு பயன்படுமா என்று மட்டும் பார்த்துக்கொள்'  என்று பெரியவர் சொன்னார். அவரது விளக்கம், வாழ்க்கையின்   லட்சியம் என்னவாக இருக்க வேண்டும் என்று அடையாளம் காட்டியது. 

"குழந்தைகள்தான் நமது உலகம் என்று நான் முன்பு தீர்மானித்தது சரிதான் என்று புரிந்து கொண்டேன். தொடர்ந்து ஓரிகாமி கலையை நானும் தீவிரமாகக் கற்கத் தொடங்கினேன். ஓரிகாமி கலையை  வெளிநாடுகளில் எப்படி கையாளுகிறார்கள்,  அதை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்று 
இணையதளங்களில் தேடி என்னையும் எனது ஓரிகாமி அறிவையும் புதுப்பித்துக் கொண்டேன். சுமார் ஐநூறு   வடிவங்களை காகிதத்தில் என்னால் உருவாக்க முடியும்.  குழந்தைகளிடம் அவர்கள் ரசிக்கும் விதத்தில் எப்படி பேசுவது.. கலந்துரையாடுவது என்பதையும் பழகிக் கொண்டேன். 

ஓரிகாமிக்காக  சாதாரண  காகிதம் முதல்  வண்ணக் காகிதம்  வரை பயன்படுத்தலாம்.  செய்தித்தாளைக் கூட பயன்படுத்தலாம்.  எல்லா  குழந்தைகளும் ஓரிகாமி பயிலலாம். ஓரிகாமியில் காகிதத்தை ஒட்டவோ வெட்டவோ கூடாது. காகிதத்தை மடிப்பதன் மூலமாக உருவங்களை உருவாக்க வேண்டும். ஓரிகாமி காகிதத்தை மடித்தும் வளைத்தும் உருவங்களை  உருவாக்கும்  கலை. "ஓரி' என்றால் காகிதத்தையும்  ‘காமி' என்றால் காகிதத்தை மடிப்பதையும் குறிக்கும்.

"சடாகோ சாசாகி' என்னும் ஜப்பானிய பெண்,  ஓரிகாமியுடன்  இணைத்துப் பேசப்படுபவர். "காகிதத்தைப் பயன்படுத்தி ஆயிரம் கொக்குகள்   செய்தால் உனது நோய் குணமாகும். நீயும் உயிர் பிழைப்பாய்" என்று   சடாகோ சாசாகியிடம் சொல்ல, சடாகோவும்  காகிதத்தில்  கொக்குகளை  உருவாக்க ஆரம்பிக்கிறாள். 650 கொக்குகளை உருவாக்கி முடித்த தருணத்தில்  சடாகோ  இறந்து போகிறாள்.  அவளது  தோழிகள் மிச்சம்  கொக்குகளைச் செய்து சடகோவின் லட்சியத்தை நிறைவேற்றுகிறார்கள்.  இது ஜப்பானில் உண்மையாக நடந்த நிகழ்ச்சியாம். அதை நினைவு கூறும் விதமாக சடாகோவின் நினைவு நாளையொட்டி ஆனைமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி குழந்தைகளைக் கொண்டு ஓரிகாமி முறையில்  ஆயிரம் காகிதக் கொக்குகளை உருவாக்கி கயிற்றில் தொங்கச் செய்து   தோரணம் கட்டினோம். 

  ஒரு குழந்தை காகிதத்தை மடிப்பதைக் கவனித்து இன்னொரு  குழந்தை செய்யும்போது அவர்களுக்குள் ஓர் இணக்கம், நட்பு  ஏற்படுகிறது. அடுத்த முறை தானாகச் செய்ய வேண்டும் என்ற ஆவலும்   உருவாகும். காகிதத்தை  பல கோணங்களில்  பல நீளங்களில் மடிக்க வேண்டும். அதற்கு  "இப்படி செய்ய வேண்டும்.. இந்த மாதிரி  மடிக்க வேண்டும்..'  என்கிற ஒரு கணிப்பு  தோன்ற வேண்டும். அந்தக் கணிப்புத் திறன்,  கணக்கு  பாடம் படிக்க  குழந்தைகளைத் தயாராக்குகிறது. கணக்கு கசப்பானது என்ற கண்ணோட்டத்தையும் மாற்றுகிறது.  கற்பனைத் திறன்,  படைப்பாற்றலை  குழந்தைகளிடம்  ஏற்படுத்துகிறது.  ஓரிகாமியில் குழந்தைகளை உருவங்களை உருவாக்குவதன் மூலம் அவர்கள் மனதுக்கு மகிழ்ச்சி திருப்தி கிடைப்பதால் உளவியல் குறைபாடுகள்  வராது. பல உளவியல் பிரச்சினைகளையும் போக்கும்'' என்கிறார்  தியாகசேகர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com