சிந்தை கவர்ந்த திருவிழாக்கள்- 9: தைவான்லான்டர்ன் திருவிழா!

மின்சாரத்தை பென்ஜமின் பிராங்லின் கண்டுபிடித்த பிறகு நான் பிறந்ததால், என் வாழ்நாட்கள் முழுவதிலும் மின்சார விளக்குகளே
சிந்தை கவர்ந்த திருவிழாக்கள்- 9: தைவான்லான்டர்ன் திருவிழா!

மின்சாரத்தை பென்ஜமின் பிராங்லின் கண்டுபிடித்த பிறகு நான் பிறந்ததால், என் வாழ்நாட்கள் முழுவதிலும் மின்சார விளக்குகளே என்னை சூழ்ந்திருந்தன. ஆனால், கார்த்திகை தீபத்தின்பொழுது ஒளிவீசும் அகல் விளக்குகள், மின்சாரம் தடைப்படும்போது ஏற்றி வைக்கப்படும் சிம்னி விளக்குகள், நான் சிறுமியாக கலந்துகொண்ட மாப்பிள்ளை அழைப்பின்போது தலைகளில் பெட்ரோமாஸ் விளக்குகளை சுமந்து கொண்டு வருவார்கள். அந்த விளக்குகளின் ஒளி,  என் மனம் பலவிதமான விளக்குகளின் அழகில் மயங்கி கிடந்திருக்கிறது. 

இன்றைய காலகட்டத்தில் வானத்தில் மிதந்து, ஒளிவீசி, பார்ப்போரின் கண்களையும் உள்ளத்தையும் ஒருசேர கவரும் விளக்குகளை "சைனீஸ் லான்டர்ன்ஸ்' என்றும் "ஸ்கை லான்டர்ன்ஸ்' என்றும் அழைக்கிறார்கள். மூங்கில் சட்டங்களைச் சுற்றி எடை குறைந்த, மக்கும் தன்மையுடைய மெல்லிய தாள்களைக் கொண்டு சுற்றப்பட்ட விளக்கின் நடுவே சிறிய மெழுகினால் ஆன எரிபொருள் கலம் (fuel cell) இருக்கும், இதைப் பற்ற வைத்தால், விளக்கின் உள்ளே சூழ்ந்துகொள்ளும் சூடான காற்று அதை மேல்நோக்கி செல்லவைத்து இரவு வானத்தில் நட்சத்திரமாக மின்ன வைக்கும்.

இத்தகைய சைனீஸ் லான்டர்ன்களைக் கொண்டு வருடந்தோறும், தைவானில் உலகின் தலைசிறந்த திருவிழாக்களில் ஒன்றாகப் போற்றப்படும் லான்டர்ன் திருவிழா கொண்டாடப்படுகிறது. லூனார் நியூ இயரின் பதினைந்தாம் நாள் கொண்டாடப்படும் இந்த திருவிழாவின்போது தைவான் முழுவதிலும் மக்கள் ஒன்றாகக் கூடி பலவிதமான முறைகளில் இந்த திருவிழாவை கொண்டாடி மகிழ்கிறார்கள். 

வடக்கு தைவானில் பிங்ஸியில் (pingxi) பிங்ஸி ஸ்கை லான்டர்ன் திருவிழா, மற்றும் டைபி (Taie) லான்டர்ன் திருவிழா என்றும் தெற்கு தைவானில் (taitung) டைடங் பாம்பிங் ஆப் மாஸ்டர் ஹேன்டன் திருவிழா, என்சுயி பிஹைவ் (Yanshui Beehive) திருவிழா என்றும் கொண்டாடுகிறார்கள். வடக்கில் கொண்டாடப்படும் திருவிழாவை லான்டர்ன்கள் ஆக்கிரமித்துக் கொள்ள, தெற்கு திருவிழாவை பட்டாசுகள் மட்டுமே ஆதிக்கம் செய்கின்றன.

2014-ஆம் ஆண்டு தைவானில் நடக்க இருந்த 25-ஆவது லான்டர்ன் திருவிழாவில் கலந்துகொண்ட பிறகு, அந்த நாட்டைச் சுற்றிப் பார்க்க முடிவு செய்து நானும் என் கணவரும் கிளம்பினோம். கிழக்கு ஆசியாவில் தென் சைனா கடலில், தைவான் ஒரு தீவாக மிதந்து கிடக்கிறது. எங்களை சுமந்து கொண்டு சென்ற கேதேபசிபிக் வான ஊர்தியில் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது கடல் நடுவே மிகப்பெரிய மீன் வடிவப் பாறை ஒன்று படுத்திருப்பது போல தைவான் காட்சி 
அளித்தது.

தைவானின் தலைநகரமான டைபியில் நாங்கள் ஏற்கெனவே புக் செய்திருந்த ஹோட்டலில் சென்று தங்கி சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டு பிறகு அந்த நகரத்தைச் சுற்றிப்பார்க்க கிளம்பினோம். வெளியே கனமழை பெய்யத் தொடங்கியிருந்தது. எலும்புவரை ஊடுருவிச் சென்ற குளிர்க்காற்று, இதைத் தவிர வெளியே சுத்தமாக ஜன நடமாட்டமே இல்லை. பிறகு விசாரித்ததில் தெரிந்தது தைவான் மக்களுக்கு மழை என்றாலே பெரும் பயமாம். சாதாரண தூறல் என்றால் கூட தலை பகுதிக்காக ஒரே ஒரு ஓட்டை போட்ட உடல் முழுவதும் மூடக்கூடிய அங்கியை மாட்டிக்கொண்டு வருகிறார்கள், பல தடவை பெய்த அமில மழைக்காகத்தான் இப்படிப்பட்ட பயம். 

மழை நின்றது. 2004-2010 முதல் உலகின் மிக உயர்ந்த கோபுரமாக புகழ்பெற்ற டைபி டவர் 101-ஐ பார்க்கச் சென்றோம். அதன் அழகில் மயங்கினோம்.
தெற்கில் நடக்கும் திருவிழாவான "டைடங் பாம்பிங் ஆப் மாஸ்டர் ஹேன்டன்'-க்கு செல்வதற்காக, வாடகை கார் ஒன்றை புக் செய்யலாம் என்று எத்தனித்த வேளையில் கிடைத்த தகவல்கள் எங்களை கதிகலங்க வைத்தன.

மாஸ்டர் ஹேன்டன் என்பவரை செல்வத்தின் கடவுளாக தைவானின் மக்கள் போற்றி வணங்கினர். இந்த கடவுளுக்கு குளிர் என்றால் பயமாம். அதனால் அவரை சூடாக வைத்திருக்க பட்டாசுகளைக் கொளுத்தி அவர் மீது எறிவார்களாம். இப்படிச் செய்தால் ஹேன்டன் மகிழ்ச்சி அடைந்து அந்த வருடம் முழுவதும் பெரும் செல்வத்தையும், பேரின்பத்தையும் அளிப்பாராம்.

ஆகையினால் லான்டர்ன் திருவிழாவின்போது டைடங்கில் ஒரு மனிதரைத் தேர்ந்தெடுத்து அவரை மாஸ்டர் ஹேன்டன்னாக நடிக்க வைக்கிறார்கள். ஒரு தூக்கு நாற்காலியில் (நங்க்ஹய் ஸ்ரீட்ஹண்ழ்) அவரை உட்கார வைத்து விடுவார்கள். சிகப்பு நிற குட்டை கால் சட்டையைத் தவிர வேறு எதையும் அவர் அணிந்திருக்க மாட்டார். அவருடைய கையில் ஆலமர கிளை ஒன்றை மட்டும் பிடித்திருப்பார். சுற்றியிருக்கும் மக்கள் அவர்மீது பட்டாசுகளை கொளுத்திப் போடும்பொழுது தன்னுடைய முகத்தைப் பாதுகாத்துக்கொள்ள அந்த ஆலமரக்கிளையை உபயோகப்படுத்துவாராம். இப்படி செய்வதால் கடவுள் ஹேன்டன் மகிழ்ந்து பெரும் அதிர்ஷ்டத்தை நல்குவாராம்.

இந்த வேடிக்கையான, உற்சாகமான திருவிழாவைக் காண உள்நாட்டு மக்களும், வெளிநாட்டு உல்லாசப் பயணிகளும் பெரும் அளவில் வருவார்களாம். இந்த சடங்குகள் முடிந்தபிறகு கண்கவர் வானவேடிக்கைகள் நடக்கும் என்றார்கள்.

இதற்குச் செல்லவேண்டும் என்றால் மணிக்கட்டு வரை மூடும்படியான ஷர்ட்டுகள், கையுறைகள், பாதம்வரை நீளும் பாண்ட், கண்களுக்கு மட்டும் இடைவெளிவிட்டு பிறகு முகத்தை முழுமையாக மறைக்கும் முகக்கவசம், காது பிளக், தலைக்கு தொப்பி, கண்களுக்கு கண்ணாடி என்று வேற்று கிரகத்துக்கு செல்லும் மனிதனைப் போல செல்லவேண்டும். ஏனெனில் மாஸ்டர் ஹேன்டன் மீது எறியப்படும் பட்டாசுகள் நம்மையும் தாக்கும் அபாயம் உண்டு. 
இதற்கெல்லாம் ஒருபடி மேலே சென்று எங்களை பயமுறுத்தியது "என்சுயி பிஹைவ் திருவிழா'. இது இதயத்தை உறைய வைக்கும். இந்த திருவிழாவின் வேர் 1870 வரை நீள்கிறது.

அந்தக் காலகட்டத்தில் என்சுயி நகர மக்களை காலரா என்ற பெரும் நோய் தாக்கி, பல்லாயிரக்கணக்கான மக்களை பலி கொண்டது. பாக்டீரியா மற்றும் வைரஸ்களினால்தான் இத்தகைய நோய்கள் உருவாகின்றன என்பதை அறியாத மக்கள் கெட்ட தேவதைகளால்தான் இப்படிப்பட்ட நோய்கள் உருவாகின்றன என்று நம்பினார்கள். கியுகாங் (ஓன்ஹய் ஓன்ய்ஞ்) என்கின்ற போர் கடவுளை வணங்கி கெட்ட ஆவிகளையும், பேய்களையும் என்சுயி நகரத்தை விட்டு விரட்டி அடிக்க பெரும் அளவில், யாவரும் கற்பனை செய்யமுடியாத முறையில் பட்டாசுகளை கொளுத்தியிருக்கிறார்கள். 

இன்றளவிலும் என்சுயி நகரத்தில் பெரிய, பெரிய மரச்சட்டங்களுக்கு இடையே தேனியின் கூட்டைப்போல துளைகளை இட்டு அதில் ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை சொருகி வைத்து விடுகிறார்கள். லான்டர்ன் திருவிழா அன்றைக்கு இரவு உரிய வேளையில் அத்தனை ராக்கெட்டுகளும் பற்ற வைக்கப்பட்டு சீறிப் புறப்படுகின்றன. வானத்தை நோக்கி அல்ல, சுற்றியிருக்கும் மக்களை நோக்கி என்றால் கேட்பதற்கே எனக்கு நடுங்கிப் போனது. முன்னே கூறிய பாதுகாப்புடன் சென்றால் வாழ்க்கையில் மறக்கமுடியாத அனுபவத்தைப் பெறலாம் என்றனர். கேட்கும்போதே ரத்தத்தை உறைய வைத்த இந்த அனுபவம் தேவையா...?
(தொடரும்...)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com