பிளாஸ்டிக்: நார்வேயின் தீர்வு...!

மனித சமுதாயத்திற்கு  ஏற்ற சுற்றுப்புற சூழலை  பல வகைகளில் கெடுத்து வருவது  பிளாஸ்டிக் பொருள்கள். அதிலும் குடிநீர், இயற்கை
பிளாஸ்டிக்: நார்வேயின் தீர்வு...!

மனித சமுதாயத்திற்கு  ஏற்ற சுற்றுப்புற சூழலை  பல வகைகளில் கெடுத்து வருவது  பிளாஸ்டிக் பொருள்கள். அதிலும் குடிநீர், இயற்கை செயற்கை பழரச பானங்கள், குளிர்பானங்கள் அடைத்து விற்கப்படும்  பெட் பாட்டில்கள் ஆகியவை இந்தியாவில் மட்டுமல்ல, உலக நாடுகள் முழுவதிலும்  பெரிய தலைவலியாக   மாறியிருக்கின்றன.  

பயன்பாட்டிற்குப்  பிறகு பிளாஸ்டிக்  பாட்டில்கள்  பொருள்கள்   தெருவில் தூக்கி எறியப்படும் அல்லது  குப்பைக் கூடைகளில் போடுவார்கள். பிறகு அவை எரிக்கப்படும். இல்லையெனில் ஊருக்கு வெளியே  குப்பைக் கிடங்கில் குவிக்கப்
படும்.    

இமயமலையில் கூட  இந்த பிளாஸ்டிக்  பாட்டில்கள் குப்பையாக குவிந்து கிடக்கின்றன. சில நாடுகள், டன் கணக்கில்   பிளாஸ்டிக் கழிவுகளை கடலில் தூக்கி எறிகிறார்கள்.  அதனால் கடல் நீரும் கெட்டுப் போகிறது . மீன்வளம் குறைகிறது.  

ஒவ்வொரு நாட்டிலும் பிளாஸ்டிக்கின் அபாயம் குறித்து பேசப்பட்டாலும், பிளாஸ்டிக் கழிவுகள் நாளுக்கு நாள்  துரித  கதியில் பெருகி வருகின்றன. அனைத்து நாடுகளும் கையைப் பிசைந்து கொண்டிருக்கும்  வேளையில், நார்வே மட்டும்  தனித்து நிற்கிறது.

நார்வே தயாரிக்கும், நார்வே மக்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களில் 97  சதவீதம்  "மறு சுழற்சிக்கு' பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக  தண்ணீர், பழரச, கோலா பாட்டில்கள் பயன்பாட்டிற்குப் பிறகு கிட்டத்தட்ட   அனைத்து  பாட்டில்களும் மறுசுழற்சிக்கு உள்ளாகின்றன.  

இது எப்படி வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது...?
தண்ணீர், பழரசம்,  கோலாவைக் கொண்டிருக்கும்  ஒவ்வொரு பாட்டிலும் விற்பனையாகும் போது விலையுடன் நார்வே  நாட்டின் ஒரு ரூபாய் பாட்டிலுக்கென கூடுதலாக  வாங்கப்படுகிறது.  பாட்டிலைத் திரும்ப கடைக்காரரிடம்  அல்லது  பாட்டிலைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும் மெஷினிடமும்  ஒப்படைக்கலாம். பணத்தை ஏற்றுக் கொள்ளும் ஏடிஎம்  மெஷின் போல  இந்த மெஷின் இருக்கும். பாட்டிலில் இருக்கும் பார்கோடை சரிபார்த்து  ஒரு ரசீதை அந்த மெஷின் தரும். அதைக் காட்டி அடுத்த தடவை  இன்னொரு பாட்டில் தண்ணீர், பழரசம் அல்லது கோலா வாங்கும் போது ரசீதைக் கொடுத்தால்  தள்ளுபடி கிடைக்கும். கடைக்காரர் என்றால் பயன்படுத்தப்பட்ட பாட்டிலைப் பெற்றுக் கொண்டு,  பாட்டிலுக்கு வாங்கிய  பணத்தைத் திரும்பத்  தந்துவிடுவார்.

இந்தத் தள்ளுபடிக்காக  மட்டும் நார்வேயில்  பெட் பாட்டில்களைத் திரும்பத் தருவதில்லை. இந்த ரக பாட்டில்கள் குறித்த  விழிப்புணர்வு இருப்பதாலும், பயன்பாட்டிற்குப் பிறகு  திரும்ப வாங்கிக் கொள்ளும்  வழிவகை நார்வே அரசு செய்திருப்பதால், இந்தத் திட்டம் சிறப்பாக  நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டத்தில்  பெட் பாட்டில்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் கை கோர்த்துள்ளன. அதனால்,  உற்பத்தி செய்யும்  பிளாஸ்டிக் பொருள்களில் 97  சதவீதம்  மறுசுழற்சி செய்யப்பட்டு  மீண்டும் பிளாஸ்டிக் பொருள்களாக பயன்பாட்டிற்கு வருகின்றன. மூன்று சதவீதம்  மட்டுமே  புதிதாக  தயாரிக்கப்படுகின்றன.

வெண்ணிற   பெட் பாட்டில்களை  12  தடவைகள் மறுசுழற்சி   செய்து வெண்ணிற  பாட்டில்களை  தயாரிக்கலாம்.    வண்ண நிற பாட்டில்களை  மறுசுழற்சி செய்து பாட்டில்கள் அல்லாத  வேறு பிளாஸ்டிக் பொருள்களைத் தயாரிக்கலாம்.  இந்த வசதி  நார்வே தொழில்நுட்பத்தில்  இருப்பதால், புதிதாக பிளாஸ்டிக்  நுகர்பொருள்கள் தயாரிப்பில்  புதிய பிளாஸ்டிக் தயாரிக்கும் மூலப் பொருள்களின்  தேவை நார்வேயில்  வெகுவாகக் குறைந்துள்ளது. 

நார்வே பிளாஸ்டிக் பொருள்களின்  மறுசுழற்சி  தொழில்நுட்பம் ,  இந்தியாவிற்கு வந்தால்  ஒரு வரப் பிரசாதமாக  அமையும் என்பதில் ஐயமென்ன?.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com