மனிதர்களின் மனசுகளை படம் பிடிக்கிறேன்!

"கற்றது தமிழ்' தொடங்கி "பேரன்பு' வரைக்கும் ராமிடம் சினிமா கற்ற மாரி செல்வராஜ், இப்போது "பரியேறும் பெருமாள்' படத்தின் இயக்குநர். "மறக்கவே நினைக்கிறேன்', "தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்'
மனிதர்களின் மனசுகளை படம் பிடிக்கிறேன்!

"என் நிலம். என் காற்று... என் வெப்பம்.. என் மனிதர்கள் இதுதான் இந்தப் படத்தின் லைன்!''
"கற்றது தமிழ்' தொடங்கி "பேரன்பு' வரைக்கும் ராமிடம் சினிமா கற்ற மாரி செல்வராஜ், இப்போது "பரியேறும் பெருமாள்' படத்தின் இயக்குநர். "மறக்கவே நினைக்கிறேன்', "தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்' மூலம் எழுத்துலகில் பரிச்சயமானவர். 
"அனுபவங்கள்தான் சினிமா என்பேன். அப்படி எங்கள் திருநெல்வேலி கிராமத்து பக்கங்களில் நான் பார்த்து வளர்ந்த சம்பவங்கள் எல்லாமே அனுபவங்கள் தான். அப்படி நான் பார்த்த, ரசித்த, வியந்த, தரிசித்த மனிதர்களின் உலகம்தான் இந்த "பரியேறும் பெருமாள்'. முதல் பட வாய்ப்புக்காக எங்கோ யோசித்து, பெரும் ஆய்வுகள் எல்லாம் நடத்தி கதைக்குள் வரவில்லை. எளிய மனசுகளை நோக்கியே ஓடி வந்து கரை சேர்ந்தவன் நான். அப்படி அந்த மனிதர்களின் மனசுகளை படம் பிடித்து காட்டுவதுதான் இந்தப் படம். பல காட்சிகள் உண்மைக்கு நெருக்கமாக இருக்கலாம். ஆனால், இது உண்மையேதான்..'' 
படத்தின் உள்ளடக்கம் பற்றி இன்னும் பேசலாமே...?
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் இருக்கிற அனைத்து சமூக மக்களும் ஒன்றாக சேர்ந்து வணங்குகிற, சாஸ்தா வழிபாட்டு தெய்வம் பரியேறும் பெருமாள். அந்த பகுதிகளில் எல்லா வீடுகளிலும் ஒரு பரியேறும் பெருமாள் இருப்பான். எங்கள் ஊரிலும் ஒருவன் இருந்தான். சுருக்கமாக சொன்னால், அவன் வாழ்க்கைதான் படம். அந்த வட்டத்துக்குள் நான் பார்த்து, ரசித்த, வியந்த மனிதர்களை கொண்டு வர முயற்சித்திருக்கிறேன். பெரிய எல்லைகளை கடந்து வெளிச்சத்தை நோக்கி போகிறவன் அந்த பரியேறும் பெருமாள். என் உலகம் மனித முகங்களாலும், மனங்களாலும் நிறைந்து கிடக்கிறது. அந்த விதமாக நான் பார்த்த பரியேறும் பெருமாள்தான் இந்த கதையின் நாயகன். தென் தமிழக கிராமங்களிலும் நகரங்களிலும் பள்ளி, கல்லூரிகளிலும் எளிய மக்களிடமும் நுணுக்கமாக பரவிக் கொண்டிருக்கும் பிரிவினை படிநிலைகளையும் அது உருவாக்கும் பெரும் தாக்கத்தையும் பற்றி உண்மைக்கு மிக அருகில் சென்று பேசுகிற படமாக இது இருக்கும். யோசிக்கவே முடியாத இடத்தில் காதலும் உண்டு. அன்பை, அக்கறையை முன் வைக்கிற காதல். ஒவ்வொரு மனிதனுக்குமான அன்பும் வன்மமும் மாறி மாறி கண்ணீரிலும் புன்னகையிலும்தான் போய் முடியும். 
திரை பாணி வடிவம் எப்படி வித்தியாசம் காட்டும்...?
நம் கண் முன்னே கொட்டிக் கிடக்கிற மனித வாழ்க்கைதான் இந்தப் படத்துக்கான வடிவம். நீங்கள் எப்படி நினைத்தாலும், கதை அப்படியே வந்து பேசும். ஒரு சினிமா, இரண்டரை மணி நேரம்தான். ஆனால், ஒவ்வொரு நாள் வாழ்க்கையும் 24 மணி நேரம். வாழ்க்கைதான் இங்கே யோசிக்கவே முடியாத சினிமா. உங்களை கடந்து போகிற ஒவ்வோர் எளிய மனிதனும் இந்தக் கதைக்குள் வருவான். ஒரு காதல், ஒரு சம்பவம், ஒரு பிரச்னை என எதையும் நீங்கள் இந்த கதையில் முன்னிலைப்படுத்தி பார்க்க முடியாது. அப்படி பார்த்தால், அதைச் சுற்றியிருக்கிற மனிதர்களை விட்டும் அகல முடியாது. எழுதுவதும், பேசுவதும், சினிமா எடுப்பதும் ஒரு சந்தோஷத்துககாக மட்டுமேதான். சக மனிதர்களின் அன்பும் அரசியலும்தான் இங்கே மூலதனம். ஒரு சமான்ய இளைஞனின் குறிப்புகளாக கூட இந்தக் கதை உங்களை அணுகி பார்க்கலாம். 
"மறக்கவே நினைக்கிறேன்' எழுத்துக்களை படித்து விட்டு அண்ணன் பா.ரஞ்சித் பேசுவார். சில இடங்களை குறிப்பிட்டு சிலாகிப்பார். அப்படி ஒரு நாள் பேசும் போது, "கதை ஏதாவது இருக்கா... சொல்...' என்றார். ஒரு கதை சொன்னேன். கேட்டு விட்டு, "இதை நானே தயாரிக்கிறேன். கபாலி வெளியாகட்டும். அதுவரை பொறு' என்றார். கபாலி வெளிவந்ததும் அந்தக் கதையை விரிவுப்படுத்தி சொன்னேன். முழு மனதுடன் ஏற்று சுதந்திரமாக படம் எடுக்க வைத்தார். "நல்லா வந்திருக்கு மாரி.. இந்தக் கதை எந்த விதத்தில் பார்த்தாலும் தமிழ் சினிமாவுக்கு புதுசு' என உற்சாகம் தந்தார் பா.ரஞ்சித் அண்ணன். 
ப்ளஸ் டூ முடித்து விட்டு சட்டக்கல்லூரிக்கு போகிற மாதிரி, கிராமத்தில் இருந்து நகர வெளிச்சத்தை பார்க்கிற மாதிரியான ஹீரோ கதிர். அவர்தான் என் பரியேறும் பெருமாள். நல்ல சினிமாவுக்காக எதையும் செய்ய காத்திருக்கும் கலைஞன். வாய்ப்புகளுக்காக படம் நடிக்காமல், கதைக்காக படம் நடிக்க காத்திருக்கும் இளைஞன். இதற்கு அவ்வளவு பொருந்தி வந்தார். ஆனந்தி. ஜோ என்ற கதாபாத்திரத்தில் வருகிறார். கயல் படம் பார்த்த நம்பிக்கையில் அவரை இதற்குள் கொண்டு வந்தேன். மொத்த படத்துக்கும் ஆனந்திதான் ஒளி. எல்லாவற்றையும் தாங்கி பிடிக்கிற மாதிரி கதாபாத்திரம். கதிர் - ஆனந்தி இரண்டு பேரின் உழைப்புமே அவ்வளவு அபாரம். இருவருக்குமே பெரும் பெயர் காத்திருக்கிறது. இரண்டு பேருமே தங்களை நிறைய வருத்திக் கொண்டு நடித்திருக்கிறார்கள். கறுப்பி, அலமு, மஞ்சு, அபர்ணா என நாய்களுக்கும் படத்தில் உடம் உண்டு. நிறையப் பேர், ஆங்காங்கே பிடித்த நிஜமான பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசை. விவேக் பாடல்களை எழுதியிருக்கிறார். ஸ்ரீதர் ஒளிப்பதிவு. ஆர்.கே.செல்வா படத்தொகுப்பு என எல்லோருமே நல்ல டீம். 
படத்துக்கு அரசியல் சார்ந்த ஒரு வெளிச்சம் விழுந்து இருக்கிறதே...?
முழுக்க முழுக்க தென் மாவட்டக் கதை என்று மட்டும் இதை சொல்லி விட முடியாது. ஏனென்றால் தமிழ்நாட்டில் இருக்கிற எல்லா சட்டக் கல்லூரிகளிலும் இந்த கதை உண்டு. தென் மாவட்டம் என்பது கதை சொல்லும் களம்தான். அதைத் தாண்டி கிராமத்து மோதல் தொடங்கி, உலகத்துக்காக ஒருவன் செய்கிற யுத்தம் வரைக்கும் இருக்கிறது. என் நிலம் என்றாலும், இது பொது நிலத்துக்கான கதை. தூய்மையான மாண்புமிக்க அரசியல் இதில் உண்டு. அது திணிப்பாக இல்லாமல், நீங்கள் உங்கள் ஊரில் பார்த்து வந்த அரசியலாக இருக்கும். படம் பார்த்த ரஞ்சித் அண்ணன் கட்டித் தழுவி "ஐ லவ் யூ டா' என்றார். ராம் சார் "இது உன் முதல் படம் அல்ல. முதல் கோபம்' என்றார். இதுதான் இந்த சினிமா.
- ஜி.அசோக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com