காமெடிகளால் ஆனது வாழ்க்கை

சமூகத்தின் மேல் இருக்கிற கோபம்தான் என் படங்களில் எப்போதுமே வெளிப்படும்.
காமெடிகளால் ஆனது வாழ்க்கை

சமூகத்தின் மேல் இருக்கிற கோபம்தான் என் படங்களில் எப்போதுமே வெளிப்படும். "சட்டம் ஒரு இருட்டறை', "சாட்சி' என அந்தக் காலம் தொடங்கி கடைசியாக வந்த "நையப்புடை' வரைக்குமே அப்படித்தான் இருக்கும் என் படங்கள். கமர்ஷியலுக்காக சில சமரசங்கள் செய்து கொண்டாலும், எப்போதுமே இந்த சிக்கல்களைத்தான் என் படங்கள் பேசும். சமூகத்தில் நடக்கும் தவறுகளைப் பார்த்து கோபம் அடையுங்கள் என்பதுதான் என் கதைகளின் ஒன்லைன். அப்படித்தான் இது. டிராபிக் ராமசாமி எல்லோருக்கும் பரிச்சயமானவர். ஆட்சி, அதிகாரத்துக்கு எப்போதுமே சிம்ம சொப்பனம். ஆனால், அவரை காமெடியனாக பார்ப்பதுதான் கேவலத்திலும் கேவலம். அவர் வாழ்க்கையை சினிமாவில் நான் வாழ்ந்து பார்க்க வேண்டும் என்பது ஆசை. அதை உணர்வுபூர்வமாக சொல்லுவதுதான் இந்தப் படம்''. டிராபிக் ராமசாமியின் வாழ்க்கைத் தழுவலாக உருவாகும் படத்தில், டிராபிக் ராமசாமியாக நடிக்கிறார் எஸ்.ஏ.சி. சாலிகிராமத்து வீட்டில் நிம்மதியாக பேசத் தொடங்குகிறார் எஸ்.ஏ.சந்திரசேகரன்: 

இப்போதுதான் அதிகமாக வெளிப்படுறீங்க.... அதுவும் நடிகராக...?

சினிமாவைக் காதலித்து கையில் சில கதைகளோடு சென்னைக்கு வந்தவன் நான். ஒன்றுமே இல்லாமல் இருந்த எனக்கு அரண்மனை மாதிரி இந்த வீடு, வாழ்வு கொடுத்தது இந்த சினிமாதான். இந்த வீட்டை எல்லோருமே அரண்மனை என்றுதான் சொல்லுவார்கள். ஒருமுறை வீட்டுக்கு வந்த இளையராஜா, "என்னய்யா பேலஸ் மாதிரி வீடு கட்டி வெச்சிருக்க...' என்று சொன்னார். "கனவுதான் ராஜா. அதுதான் இது' என்றேன். நான், பாரதிராஜா, இளையராஜா எல்லாம் ஒரே காலக் கட்டத்தில் சினிமாவுக்கு வந்தவர்கள். சினிமாவில் போதும் போதும் என்ற அளவுக்கு நிறைய முறை வந்து விட்டேன். ஆனாலும் சினிமா என்னை விட்டபாடில்லை. தமிழில் ரஜினி, ஹிந்தியில் ராஜேஷ் கன்னா, தெலுங்கில் சிரஞ்சீவி, கன்னடத்தில் விஷ்ணுவர்தன் இப்படி எல்லா மொழி சூப்பர் ஸ்டார்களோடு பயணித்து வந்து விட்டேன். இனிமேல் என்ன என்று சினிமாவை விட்டு விலகி விட்டேன். அதன் பின் விஜய்க்காக மீண்டும் வந்தேன். அவரை ஆளாக்கி விட்ட பின்னர், மீண்டும் ஒதுங்கி விட்டேன். அதன் பின் நல்ல வாய்ப்புகள் வந்ததால் "டூரிங் டாக்கீஸ்', "நையப்புடை' என வேறு உருவத்தில் சினிமாவுக்கு வந்தேன். அதில் சின்ன சறுக்கல். இருந்தாலும், நிறைவாக ஒரு படம் முடித்து விட்டு சினிமாவை ஒதுங்கி விடலாம் என்று தோன்றியது. அதுதான் இது. இது என் கடைசிப் படம்.

சினிமாவில் போதும் என நினைக்கிற பக்குவம் பெரிய விஷயம்....?

அந்த மனநிலையை கொடுத்த கடவுளுக்கு நன்றி. இப்போதும் மனதை இளமையாக வைத்திருக்கிறேன். 70 படங்கள் இயக்கி விட்டேன். இன்றைக்குப் பெரிய இடத்தில் இருக்கிற பல ஹீரோக்களை அறிமுகப்படுத்தியிருக்கிறேன். அவர்களுக்கு எல்லாம் நான்தானே நடிப்பு சொல்லிக்கொடுத்தேன். அப்பவே எனக்குள் ஒரு நடிகன் இருந்தான். அந்த நடிகன்தான் இத்தனை வருஷம் கழித்து இப்போது வெளியே வந்திருக்கிறான். பல நாடுகளுக்கு சென்று வந்திருந்தாலும், இந்தியா முழுக்க சுற்றி வர வேண்டும் என ஓர் ஆசை இருந்தது. அதிக மழை பொழியும் சிரபுஞ்சி பக்கம் மட்டும் போகவில்லை. மற்றபடி எல்லா இடங்களுக்கும் போய் வந்து விட்டேன். இது மாதிரிதான் இனி மனசு இருக்கப் போகிறது. இதோ, இந்த வயதிலேயும் காலையில வாக்கிங் போறேன். யோகா செய்கிறேன் . ராத்திரி 9 மணிவரைக்கும் வேலை பார்க்கிறேன் மத்தபடி, நான் பெரிதாக மெனக்கெடவில்லை. கடவுள் கொடுத்த வாழ்க்கையில கடைசி நொடி வரைக்கும் சந்தோஷமா செலவழிக்கணும்.

"டிராபிக் ராமசாமி'.... என்ன ஸ்பெஷல்...?

சமூகம் என்கிற வார்த்தைதான் இருப்பதிலேயே சூப்பர் காமெடி. எது சீரியஸாக இருக்கிறதோ, அது எல்லாமே மிகப் பெரிய காமெடிதான். லாஜிக் இல்லாத காமெடியைச் சமூகம் எவ்வளவு எளிதாக நடத்திக் காட்டுகிறது. போராளிகள் எப்போதுமே காமெடியன்களாக பார்க்கப்படுகிறார்கள். சொல்லப் போனால், டிராபிக் ராமசாமியை நானும் அப்படித்தான் பார்த்தேன். இயக்குநர் விக்கிதான் டிராபிக் ராமசாமி பற்றிய புத்தகம் தந்து படிக்க சொன்னார். படிக்க படிக்க அவ்வளவு விஷயங்கள். எத்தனை போராட்டங்கள், வலி, துயரம் என அவரின் வாழ்க்கை வேறு விதமான தாக்கத்தை தூக்கி வந்தது. "இவர் கேரக்டர்தான் கதை.. நீங்க நடிக்கிறீங்க...' என்றார் இயக்குநர் விக்கி. பிடித்திருந்தது. நானும் சம்மதம் சொல்லி நடிக்க வந்து விட்டேன். காரியவாதிகளை காமெடியன்களாக புரிந்து வைத்திருக்கும் அதே சமூகம்தான், போராளிகளையும் காமெடியன்களாக புரிந்து வைத்திருக்கிறது. உண்மையில் அபத்த காமெடிகளால் நிறைந்து இருக்கிறது இந்த வாழ்க்கை. இந்த நாடு எப்போதும் அதிகாரம் உள்ளவர்களுக்கு ஒன்றாகவும் இல்லாதவர்களுக்கு வேறாகவும் இருக்கிறது. இந்த பாகுபாடுகளின் வழி நின்று டிராபிக் ராமசாமி என்ற உன்னத போராளியை படம் பிடித்திருக்கிறோம். சினிமா சமரசங்கள் இருந்தாலும், அதை உங்களை கேள்வி கேட்கும். 

இவ்வளவு உயரத்தில் இருக்கிறது விஜய்யை பார்க்கும் போது என்ன தோன்றும்....?

விஜய் ப்ளஸ் டூ முடித்ததும், அவரை மருத்துவராக்கி விட வேண்டும் என்பது என் கனவு. எனக்கு ஒரு மகள் இருந்தாள். அவள் லிக்குபியா நோயால் இறந்து விட்டாள் என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். அதனால் விஜய்யை மருத்துவராக்கி, குறிப்பாக இந்த புற்றுநோய்க்கு மருத்துவம் பார்க்கிற அளவுக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்று நினைத்தேன். பி.எஸ்.சி.க்கு சீட்டு வாங்கி விட்டு, அவரிடம் கையெழுத்து வாங்கும்போது, "நான் விஸ்காம் படிக்கப் போகிறேன்' என்றார். "நான் டெக்னிக்கல்லாக படிக்க வேண்டும்' என்றார். நானும் "சரி' என்று சொல்லி விட்டேன். அப்போது லயோலாவில் விஸ்காம் வந்த புதிது. அதில் ஒரு வருடம் முடிந்து இரண்டாவது வருடம் போகும் போது, சினிமாவில் நடிக்க வேண்டும் என்றார். "வேண்டாம்' என்றேன். பிடிவாதமாக இருந்தார். அந்தக் காலகட்டத்தில் சினிமாவை விட்டு நான் ஒதுங்கியிருந்த நேரம் அது. அந்த சமயத்தில் ஒரு போட்டோ ஷூட் செய்து, ஆல்பம் தயார் செய்து அன்றைக்கு முன்னணியில் இருந்த பல இயக்குநர்களிடம் போய் நின்றேன். அப்போது ஹீரோக்களுக்கான இலக்கணம் விஜய்யிடம் இல்லை என்று நினைத்தார்கள் என்று நினைக்கிறேன். அதனால் வாய்ப்பு வசப்படவில்லை. அதனால் அவரை நானே இயக்க வந்தேன். அவர் இப்போது எங்கேயோ இருக்கிறார். நன்றாக இருக்கட்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com