நிராகரிப்புதான் பெரும் வலி

'கோலி சோடா' இப்படியொரு ஹிட் அடிக்கும் என யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். குறைந்தபட்ச உத்திரவாதம் என்கிற மன நிலையில்தான் எடுத்து வந்தேன். ஆனால், அது அடைந்த வெற்றி பெரியது.
நிராகரிப்புதான் பெரும் வலி

'கோலி சோடா' இப்படியொரு ஹிட் அடிக்கும் என யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். குறைந்தபட்ச உத்திரவாதம் என்கிற மன நிலையில்தான் எடுத்து வந்தேன். ஆனால், அது அடைந்த வெற்றி பெரியது. கிடைத்த வரவேற்பும், பாராட்டுகளும் எதிர்பார்க்காத ஒன்று. நல்ல விஷயத்துக்கு எந்த நட்சத்திர முகங்களும் தேவையில்லை என்கிற ஆகச் சிறந்த நம்பிக்கையை கொடுத்து சென்றது அது. அதன் பின்னும் எனக்கு எந்த இலக்கும் இல்லை. இதில் உதாசீனம் கிடையாது. அதற்காக இது அகம்பாவமும் இல்லை. இருந்தாலும் பிடித்ததை ரசிகனுக்கு கொடுக்க வேண்டும் என்கிற நோக்கம் இருந்தது. அப்படி ஒரு நோக்கம் இந்தப் படத்திலும் தொடரும்''. நம்பிக்கையாக பேசத் தொடங்குகிறார் விஜய் மில்டன். "கோலி சோடா 2' படத்தை திரைக்கு கொண்டு வருவதற்கான வேலைகளுக்கிடையே அவருடன் தொடர்கிறது உரையாடல்.

வெற்றிப் பெற்ற படத்தின் இரண்டாம் பாகம் என்பது இயக்குநராக உங்களுக்கு பெரிய அழுத்தம் கொடுக்குமே....?

அதை உணர்ந்தே வந்திருக்கிறேன். "கோலி சோடா' கதை என்பது என் வாழ்வில் நான் பார்த்து உணர்ந்த ஒரு சம்பவம். அதை சினிமாவுக்கான மொழியில், எடுத்து வந்தேன். ரசிகர்களுக்கு பெரும் பரவசமாக இருந்தது. த்ரில்லரும், சுவாரஸ்யமும் கலந்த ஏரியா அது. இதுவும் அப்படித்தான். எல்லோருமே ஏதோ ஓர் அடையாளத்துக்காகத்தான் ஏங்கி நிற்கிறோம். நேற்று வரைக்கும் ஒரு வேலை பார்த்து வந்திருப்போம். இன்றைக்கு நிலை மாறி வேறு ஓர் அடையாளத்தில் இயங்கி கொண்டிருப்போம். ஆனால் திறமையை வைத்துக் கொண்டு என்ன செய்வது? அன்றாட சாப்பாட்டுக்கும், தண்ணீருக்கும் வழி இல்லையே என புலம்புவர்கள் எத்தனையோ பேர். ஆடம்பரமாக இருந்து விட்டு, யாரும் கண்டுக் கொள்ளாத இருப்பது பாருங்க.. அதுதான் பெரிய கொடுமை. இருப்பதிலேயே காலத்தின் நிராகரிப்பு தரும் வலிதான் இங்கே கொடுமை. அது நிகழ்ந்து விடக் கூடாது என ஓடிக் கொண்டிருப்பவர்கள் அடுத்தடுத்த அடையாளங்களை நோக்கி நகர்கிறார்கள். தவறுகிறவர்கள் வழி மாறுகிறார்கள். பிடிவாதமாக உழைத்து தங்களுக்கான நாற்காலிகளை பிடித்தவர்களை கொண்டாடும் உலகத்தில் வாழ்கிறோம் என்பதுதான் உணர வைக்கும் விதமாக இந்தக் கதை இருக்கும். எதிர்பாராத ஒரு கணம், அந்த வாழ்க்கையின் அனைத்து நிமிடங்களை மாற்றி காட்டி விடும். அந்தப் புள்ளியில் இருந்துதான் கதை நகர்ந்து போகும்.

கதையின் உள்ளடக்கம் இன்னும் பேசுமா...? 

முதல் பாகத்தில் அடையாளத்துக்காக அந்த கதாபாத்திரங்கள் போராடியது. இதில் அந்த அடையாளத்தை தக்க வைக்க, அடையாளத்தை விரிவாக்கம் செய்வதற்கான போராட்டமாக இருக்கும். எல்லோருக்குமே அடையாளம் முக்கியம். உணவு, உடை, இருப்பிடம் இதுவெல்லாம் கிடைக்காத ஒருவன், சமூகத்துக்கு எதிராக சண்டைப் போடுகிறான். அது அவனை திருடன், சமூக விரோதி, தீவிரவாதி என மாறுபட்ட அடையாளங்களில் போய் நிறுத்திக் காட்டுகிறது. காலையில் எழுந்து உதயம் தியேட்டர் பக்கம் போனால், இந்தப் பக்கம் பளீர் பள்ளிச் சீருடைகள் அணிந்த குழந்தைகளை ஏற்றி விட அதன் பெற்றோர் காத்திருக்கிறார்கள். எதிர்புறம் பார்த்தால் பல் தேய்க்காமல், குளிக்காமல், கந்தல் ஆடைகளுடன் அநாதை குழந்தைகள். இதை தீர்மானித்தது யார்...? அந்த குழந்தைகள் இங்கேயும், இந்த குழந்தைகள் அங்கேயும் இருந்தால் எப்படியிருக்கும். ஆக, பிறப்புதான் அநேக பேருக்கு அடையாளமாக இருக்கிறது. அம்சத்தை திரைக்கதை தாங்கி பிடித்து பெரும் பங்காக எடுத்து வைக்கும். அடையாளமும், அங்கீகாரமும், வெளிச்சமும் இல்லாமல் மகத்தான திறமைகளோடு சாமானியர்களாக வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள் எத்தனை பேர்... ரசிப்பதற்கும், ஸ்பரிசிப்பதற்கும், பறிப்பதற்கும், தொடுப்பதற்கும் விரல்கள் இல்லாமல் பூத்து பூத்து உதிர்ந்து கொண்டு இருப்பவர்கள் எவ்வளவு பேர்... இதுதான் இதன் சிறந்த அம்சம்.
 
முதல் பாகத்தில் நடித்தவர்களையே, அடுத்த பாகத்திலும் இணைத்து வேலை செய்வதுதான் பொது பாணி.... இது வேறு மாதிரி இருக்கே...?

அது மாதிரி இருக்கக் கூடாது என்பதை முதலிலேயே தீர்மானித்து விட்டேன். அதுவும் இல்லாமல் முதல் பாகத்தில் எனக்கு சில வரையறைகள் இருந்தன. அவர்கள் எல்லாம் சிறுவர்கள். அவர்கள் பேசும் வசனங்களில் கூட ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. அதனால் பல விஷயங்களை அதில் வைக்க முடியவில்லை. வசனங்களில் அழுத்தம், சண்டைகளில் அதிரடி என எதுவும் இல்லை. அப்படி வைத்திருந்தால் அது அந்நியப்பட்டு போயிருக்கும். 

இது 20 வயதுக்கு மேற்பட்டோர் கதாபாத்திரங்களாக உலவும் கதை. இதில் என்ன வேண்டுமானாலும் பேசலாம். அவர்களுக்கென்று ஒரு சுயம் இருக்கிறது. அதனால் சமரசமின்றி கதை நகர்த்தியிருக்கிறேன். முதல் பாகத்தைப் போலவே, இதிலும் புதுமுகங்கள்தான். "கடுகு' படத்தில் நடித்த என் தம்பி பரத் இதிலும் நடித்திருக்கிறார். இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் இசக்கி பரத், வினோத் என்று இன்னொரு பையன். "கடுகு' படத்தில் நடித்த சுபிக்ஷா இப்படி நிறைய பேர் இருக்கிறார்கள். முக்கியமான இடத்தில் இயக்குநர்கள் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ்மேனன் இருவரும் இருக்கிறார்கள். 

இயக்குநர், கேமிராமேன் என்கிற இரு பெரும் பொறுப்புகளிலிருந்து, எதிர்கால சினிமா எப்படி இருக்கும் என கணிக்க முடிகிறதா....?

சமுதாயம் மாதிரி... அரசியல் மாதிரி.... இந்த மக்கள் மாதிரிதான் சினிமாவும் இருக்கும். மக்கள் எப்படியோ, அரசனும் அப்படியே என்று சொல்லுவார்களே, அது போல்தான். ஒரு தலைவனை போல் கலைஞனுக்கு இங்கே பங்கு உண்டு. மக்கள் விரும்புகிற ஆட்சி போல், மக்கள் விரும்புகிற சினிமாவை கொடுக்க வேண்டிய கட்டாயம் வந்திருக்கிறது. 

ஒரு தலைவன் வகுக்கிற திட்டம் 50 வருடங்களுக்குப் பின் எப்படியாக வரும் என கணித்து பார்க்கிற மக்கள் இங்கே குறைவு. அது போல்தான் சினிமாவும் இருக்கிறது. சில நல்லப் படங்கள் வந்த சுவடே தெரியாமல் போய் விடுகின்றன. இந்த மாற்றங்களை புதிதாக வருகிறவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். புரிந்துக் கொள்ளவில்லை என்றால் தடுமாற்றம்தான். அதற்காக "ஹாரிபார்ட்டர்' மாதிரியான படங்களை இங்கே எடுத்துக் கொண்டிருக்க முடியாது. 

முதலில் எது யதார்த்தம் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அது போல் எதை காட்டினாலும் அதன் உண்மை முகத்தை காட்டியாக வேண்டும். "தி செபரேஷன்' பார்த்தால் நம்மூர் படைப்பாளிகள் மீது கோபம் வரலாம். மக்களின் வாழ்க்கையை, போராட்டங்களை காட்டுகிற படங்கள் ஒருபோதும் தோற்காது என்கிற நிலை வர வேண்டும். அப்போதுதான் சினிமாவின் எதிர்காலம் பற்றி பேச முடியும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com