ஸ்ரீநகர் டியூலிப் திருவிழா- சாந்தகுமாரி சிவகடாட்சம் 

இவை எவ்வளவு சத்தியமான வார்த்தைகள் என்பதை ஒவ்வொரு முறையும் அங்கே செல்லும்பொழுது உணர்ந்திருக்கிறேன்
ஸ்ரீநகர் டியூலிப் திருவிழா- சாந்தகுமாரி சிவகடாட்சம் 

சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 20
"காஷ்மீர் சொர்க்கத்தைவிட அழகாக இருக்கிறது. உயர்ந்த பேரின்பத்தை வழங்குகின்ற கொடையாளியாகத் திகழ்கின்றது. இங்கே இருக்கும்பொழுது தேன் ஏரியிலே குளிக்கின்ற இன்பத்தை அடைகின்றேன்.'
- காளிதாஸ்
இவை எவ்வளவு சத்தியமான வார்த்தைகள் என்பதை ஒவ்வொரு முறையும் அங்கே செல்லும்பொழுது உணர்ந்திருக்கிறேன். வசந்தகாலம், கோடைக்காலம், குளிர்காலம் என்ற மூன்று காலக்கட்டங்களிலும் காஷ்மீரின் அழகினை என் கண்கள் கண்டு மகிழ்ந்திருக்கிறது.
ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தின் கோடைக்கால தலைநகரமாகத் திகழும் ஸ்ரீநகரின் இயற்கையின் அற்புதங்களைப் பார்த்தபொழுது தேன்குடித்த வண்டாக மாறினேன். 1983-ஆம் ஆண்டு என் கணவருடன் சென்றபொழுது தீவிரவாதத்தின் சுவடுகள் அங்கே காணப்படவில்லை. எங்களுக்கு திருமணம் முடிந்து சில ஆண்டுகள்தான் ஆகியிருந்தது. குளிர்காலம் என்பதால் எங்கும் நிலமங்கை பனிப்போர்வையை அணிந்திருந்தாள். பாறைகள் மீது பனி, சாக்லேட் கேக்கின் மீது பரவியிருக்கும் கிரீம்போல அழகு காட்டி அசத்தியது. மலைகளின் மீது படர்ந்திருந்த பனித்துகள்கள், காலை சூரியனின் கதிர்களால் கரைந்து கீழே நோக்கி வரும்பொழுது, மீண்டும் உறைந்து, ஊசிகளாய் சூரிய ஒளியில் பளபளத்த காட்சியைக் கண்ட கண்கள் இமைப்பதை மறந்தன. 
அதுமட்டுமா! சினார் (Chinar) மரக்கிளைகளில் கொத்துக்கொத்தாக பனிகள், வீட்டு கூரைகளின் மீது பஞ்சுப்பொதிகளாக பனிகள், ஓடும் ஆறுகளில் மிதந்து செல்லும் ஐஸ்கட்டிகள் அம்மம்மா, ஒரு பனிக்கரடியாக மாறி அந்தப் பனிப்போர்வையில் உருண்டு மகிழ்ந்தேன். பனியைப் பந்துகளாக ஆக்கி வீசி விளையாடி வீடுகட்டி, இப்பொழுது நினைத்தாலும் இன்பப்பெருக்கால் நெஞ்சு நிறைந்துவிடுகிறது.
உலகின் பல அழகிய நாடுகளைப் பார்த்திருந்தாலும், ஸ்ரீநகரின் அழகு என்னை அங்கே அடிக்கடி செல்லத்தூண்டியது. ஆனால் பலவிதமான காரணங்களால் அங்கே போகமுடியாமல் இருந்தாலும், 2012-இல் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வசந்தகாலத்தில் ஸ்ரீநகரில் அரங்கேறும் டியூலிப் திருவிழாவில் கலந்து கொள்வதற்காகப் புறப்பட்டோம்.
ஸ்ரீநகரின் விமானதளத்திலிருந்து, நாங்கள் தங்கப்போகின்ற ஹோட்டலை நோக்கி எங்களை சுமந்துகொண்டு அந்தக் கார் விரைந்து சென்றது. பனியின் ஆதிக்கத்தின்கீழ் கட்டுண்ட ஸ்ரீநகரை பார்த்துப் பழகிய என் கண்களுக்கு இப்பொழுது அந்த நகரம் முற்றிலும் மாறுபட்ட காட்சிகளைக் கடைவிரித்தது.
வசந்தகாலம் என்பதால் எங்கு பார்த்தாலும் பூக்கள் பூத்து குலுங்கிக் கொண்டிருந்தன. வானுயர்ந்த மலைகள், தலைகளில் மட்டும் பனிக்குல்லாக்களை அணிந்திருந்தன. கிடு, கிடு பள்ளத்தாக்குகளில் பலவிதமான காட்டுப்பூக்கள் தலையாட்டி எங்களை வரவேற்றன. அதுமட்டுமா, ஸ்ரீநகரின் விவசாயிகள், பல ஏக்கர் நிலங்களில் கடுகை விதைத்திருந்தார்கள். அவை இரண்டு அடி நீளமுள்ள செடிகளாக வளர்ந்து, மஞ்சள் பூக்களை ஏந்தி இருந்தன. நீலவானம், வெள்ளை முகில்கள், மலைகள், கண்ணுக்கு எட்டியவரை மஞ்சள் போர்வையில் விரிந்து காட்சிதரும் கடுகுச்செடிகள், இதைத்தவிர தென்றல் காற்று சுமந்து வந்த நறுமணம், மூக்கின் வழியாக மூளையை அடைந்து மயக்கியது.
ஸ்ரீநகரில் தங்கியிருந்த அந்த பத்து நாட்களில், எதனால் வீசும் காற்றில் இத்தகைய மணம் என்ற காரணம் புரிந்துபோனது. பாதாம் மரங்கள், செரி, ஆப்பிள், பீச், பேரிக்காய் என்று எல்லா மரங்களும் சுமக்கமுடியாமல் பூக்களைத் தங்களுடைய கிளைகளில் சுமந்திருந்தன. பூக்களின் வழியே தவழ்ந்து வரும் தென்றல் மணக்காமல் இருக்குமா?
ஹோட்டலை அடைந்தோம். பகல் உணவை முடித்துக்கொண்டு சிறிது ஓய்வு எடுத்தோம். தகிக்கும் சூரியன், உஷ்ணம் அடங்கி, தங்கத்தட்டாக மாறி குளுமை காட்டி நின்றான். கைக்கடிகாரம் மாலை மணி ஐந்து என்று காட்டியது. 
அன்றைய தினம் உலகப்புகழ் பெற்ற டால் (Dal) ஏரியில் படகுசவாரி செய்ய முடிவு செய்தோம். மறுநாள் காலையில் இந்திராகாந்தி மெமோரியல் டியூலிப் கார்டனில் நடக்கும் டியூலிப் திருவிழாவைக் காண முடிவு செய்திருந்தோம். நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலின் பின்பக்க பால்கனியில் இருந்தே, வானத்தில் இருந்து தரையில் இறங்கிய வானவில்லாக டியுலிப் தோட்டம் காட்சி அளித்தது.
அறுபது வகைகளைக் கொண்ட டியூலிப் மலர்கள் எண்ணிக்கையில் இருபது லட்சம் என்றால் சும்மாவா. இப்பொழுதே சென்று பார்க்கவேண்டும் என்ற ஆவலை உள்ளடக்கி, டால் ஏரியை நோக்கி நடையைக் கட்டினோம்.
டால் ஏரியின் ஒருபுறம் ஆயிரக்கணக்கில் படகுவீடுகள் வரிசைகட்டி நின்றன. இவைகளில் உல்லாசப் பயணிகளும் தங்குகிறார்கள், ஸ்ரீநகரின் மக்களும் வாழ்கிறார்கள். பளிங்குபோன்ற டால் ஏரியின் தண்ணீர் மனதைக் கவ்வியது. ஷிகாரா என்று அழைக்கப்படும் சொகுசுப் படகில் ஏறி டால் ஏரியை வலம் வந்தோம்.
ப்ளக்...ப்ளக் என்ற துடுப்புகளின் சத்தம் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது. குளிர்ந்த தென்றல் காற்று என் கேசத்தைக் கலைத்து, என் உடலைத் தழுவிக்கொண்டது. மறையும் சூரியனின் சிகப்பு வண்ணம் ஆகாயத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. அந்த அழகிய காட்சியை ஏரியின் பளிங்குத் தண்ணீர் படம் பிடித்துக் காட்டியது. என்னைச் சுற்றிலும் தாமரை இலைகள் தட்டுகளாய் மிதந்தன. அவைகளின் இடைவெளியில் தாமரை மலர்கள் நம் ஊரில் கிடைப்பதைப் போன்ற தோற்றத்தில் ஆனால் இரண்டு மடங்கு பெரிய அளவில் ஆயிரக்கணக்கில் பூத்து மதியை மயக்கின.
படகோட்டி ஒரு நாட்டுப்புறப் பாடலை மென்மையான குரலில் பாடத்தொடங்க, நான், "இதோ சொர்க்கம் என் முன்னாலே' என்று முணுமுணுத்தேன். என் கண்களில் சுரந்த கண்ணீர், உதடுகளில் பட்டு, என்னை இவ்வுலகத்திற்கு இட்டு வந்தது.
தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com