ஆசியாவில் மிகப்பெரிய டியுலிப் தோட்டம்! - சாந்தகுமாரி சிவகடாட்சம்

பூக்களைப் பார்க்கும்பொழுது எல்லாம் நான் பூரித்துப்போவேன். டால் ஏரியில் ஆயிரக்கணக்கில் தாமரைப் பூக்களைப் பார்த்தபொழுது ஆனந்தத்தின் எல்லைக்கோடுகளைக் கடந்தேன்.
ஆசியாவில் மிகப்பெரிய டியுலிப் தோட்டம்! - சாந்தகுமாரி சிவகடாட்சம்

சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 21
"பூமி மலர்கள் மூலமாக சிரிக்கிறது'
- ரால்ப் வால்டோ எமர்சன்
பூக்களைப் பார்க்கும்பொழுது எல்லாம் நான் பூரித்துப்போவேன். டால் ஏரியில் ஆயிரக்கணக்கில் தாமரைப் பூக்களைப் பார்த்தபொழுது ஆனந்தத்தின் எல்லைக்கோடுகளைக் கடந்தேன். தாமரைப்பூவின் தண்டுகளை "நடுரு' (Nadru) என்று காஷ்மீரின் மக்கள் அழைக்கின்றனர். இந்தத் தண்டுகள் அவர்களுக்கு மிக விருப்பமான உணவாக இருப்பதால் டால் ஏரியில் இந்த தாமரைகளை வளர்க்கின்றனர். "நடுருயக்னி' (N​adru yakhni) என்கின்ற தாமரைத் தண்டுகளையும், தயிரையும், மசாலாப் பொருட்களையும் கொண்டு செய்யப்பட்ட உணவைச் சாப்பிட்ட என் நாக்கு இன்றளவும் அதன் சுவையில் மூழ்கியிருக்கிறது.
மறுநாள் காலைப்பொழுதில், கைகளில் கேமரா, வீடியோ கேமராக்களை சுமந்த வண்ணம் ஆசியாவிலேயே மிகப்பெரிய தோட்டமாகத் திகழ்கின்ற "இந்திராகாந்தி மெமோரியல் டியுலிப் தோட்டத்திற்குள்" நுழைந்தோம். ஜபர்வன் மலைத்தொடர்களின் அடிவாரத்தில், ஏழு படிகளாக அமைக்கப்பட்ட கடல்மட்டத்திலிருந்து 2,600 அடிகள் உயரத்தில் அமைந்திருக்கும் இந்த தோட்டத்தில் டியுலிப்களைப் பயிர் செய்திருக்கிறார்கள். இந்த தோட்டத்தின் மூன்று பக்கங்களில் டால் ஏரி, நிஷாட் பாக் மற்றும் ஷெஷ்மசாஹி என்கின்ற அழகிய பூங்காவனங்கள் சூழ்ந்து இதற்கு மேலும் அழகூட்டுகின்றன. நுழைவுச்சீட்டுகளை வாங்கிக்கொண்டு உள்ளே நுழைந்து, என் பார்வையைப் படரவிட்டேன், சிலையாகிப்போனேன்.
கண்களுக்கு எட்டியவரை வரிசைகட்டி நின்ற, விதவிதமான நிறங்களைக் கொண்ட, டியுலிப் மலர்கள் காற்றில் அசைந்துகொண்டிருந்தன. வெள்ளை, சிகப்பு, ஆரஞ்சு, மஞ்சள், ஊதா, கலப்பு செய்யப்பட்ட பல வண்ணங்களைக் கொண்ட டியுலிப் மலர்களின் அழகு என் நெஞ்சினை நிறைத்தது.
லட்சக்கணக்கான மலர்களையும் அவைகளின் அழகினையும் என்னுடைய வாழ்க்கையில் முதல்முறையாகப் பார்த்தேன். இந்த அழகிய சூழ்நிலையில் இப்படிப்பட்ட தோட்டத்தை அமைக்கும் எண்ணம் ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் குலாம் நபி ஆசாத்துக்கு முதல்முதலில் தோன்றியிருக்கிறது.
இதுபோன்ற டியுலிப் தோட்டங்களை நெதர்லாண்டில் பார்த்த குலாம் நபி ஆசாத், இத்தகைய தோட்டங்களை ஏன் ஸ்ரீநகரில் உருவாக்கக்கூடாது? என்று எண்ணி அதை செயல்படுத்தத் தொடங்கினார். இதற்கு ஒரு முக்கியமான காரணமும் இருக்கிறது. டியுலிப் மலர்கள் மத்திய ஆசிய நாட்டிற்கு உரியது. பிறகு அது டர்க்கி நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஆனால், நெதர்லாண்டில் லட்சக்கணக்கில் பயிரிடப்பட்டு மக்களின் கண்களுக்கு விருந்தானபோதுதான் இந்த உலகம் இந்தப் பூவின் அழகையும், பெருமையையும் புரிந்துகொண்டது.
ஸ்ரீநகரில் டியுலிப் திருவிழாவைத் தொடங்கி வைக்க வந்த சோனியா காந்தி சொன்னார் "டியுலிப் மலர்களின் பிறப்பிடம் காஷ்மீர். காட்டுப்பூவாக மலர்ந்த இந்த மலர்களின் தோற்றம் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலானது, இப்படி இங்கே பூத்த பூக்கள் மேலைநாடுகளுக்கு பிற்காலத்தில் பயணப்பட்டது.
நெதர்லாண்டில் 1634-1637, டியுலிப் மேனியா என்ற ஒரு காலகட்டம் ஏற்பட்டது. அப்பொழுது இந்த டியுலிப் மலர்கள் சிலவற்றை வாங்கவேண்டும் என்றால் ஒரு வீட்டை வாங்கக் கொடுக்கும் தொகையைக் கொடுக்க வேண்டி இருந்தது'' என்ற உண்மையான தகவலைத் தெரிவித்திருக்கிறார்.
இன்றளவும் நெதர்லாண்டில் மூன்று பில்லியன் டியுலிப் பூக்கள் வருடம்தோறும் அறுவடைசெய்யப்பட்டு உலகெங்கிலும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இப்படி நம் நாட்டில் பிறந்து, மேல்நாட்டின் மேன்மை அடைந்த டியுலிப் பூக்களை மீண்டும் அதன் பிறப்பிடத்திற்குக் கொண்டு வந்து லட்சக்கணக்கில், பலவண்ணங்களைக் கொண்ட இந்த மலர்களை மலரச்செய்து நம் கண்களுக்கு விருந்தாக்கி இருக்கும் குலாம் நபி ஆசாத்துக்கு என் உள்ளம் ஆயிரம் நமஸ்காரங்களைக் காணிக்கை ஆக்கியது.
என்னுடைய அதிர்ஷ்டம் டியுலிப் தோட்டத்தைப் பார்த்துவிட்டு எங்களுடைய ஹோட்டலுக்கு வந்தபொழுது, வரவேற்பு அறையில் குலாம் நபி ஆசாத்தைப் பார்க்கும் பெரும் பாக்கியம் கிட்டியபோது, என் வாழ்த்துகளை அவருக்குத் தெரிவித்து நான் மகிழ்ந்தேன்.
ஒரு தண்டில் ஒரு டியுலிப் பூ என்பதுதான் நியதி. ஆனால் சில சமயம் நான்கு பூக்களும் கொத்தாகப் பூக்கின்றன. இப்படி இருந்த பூக்களை டியுலிப் திருவிழாவின்போது இந்திராகாந்தி மெமோரியல் தோட்டத்தில் பார்த்து மகிழ்ந்தோம். பட்டு போன்ற மென்மையைக் கொண்டு, டர்பன் போன்ற தோற்றத்துடன் இருக்கும் டியுலிப் மலர்கள் 3-7 நாட்கள் இப்படி இருந்து பிறகு முழுமையாக மலர்ந்துவிடும். பெர்ஷியன் மொழியில் டியுலிப் என்றாலே டர்பன் என்று அர்த்தமாம்.
புகைப்படம் எடுத்து, எடுத்து கைகள் சோர்ந்து போயின. பலவகையான டிசைன்களிலும், அமைப்புகளிலும் அந்த மலர்கள் அணிவகுத்து நின்றன. இந்தத் தோட்டத்தின் கடைசி பகுதிகளில் டேபடில்ஸ், ரோஜா, ஐரிஸ், ஹாயஸிந்த் (Hy​a​cinth) போன்ற பலவகையான பூக்களையும் பார்த்து மகிழ்ந்தோம்.
ஸ்ரீநகரின் வசந்தகாலம் எங்களைத் தன் வசப்படுத்திக் கொண்டது. கண்கள் பார்த்த இடங்களில் எல்லாம் பூக்கள், இதற்கு எல்லாம் மகுடம் வைத்தாற்போல இந்திராகாந்தி மெமோரியல் தோட்டத்தில் கண்ட லட்சக்கணக்கான டியுலிப் மலர்கள் காட்டிய அழகிய கோலங்கள், ஸ்ரீநகரின் பல இடங்களில் இந்த டியுலிப் திருவிழாவுக்காக அரங்கேறிய நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள், சிறப்பு உணவுகளின் சுவை, கைவினைப் பொருட்கள் பொருட்காட்சிகள் அப்பப்பா, இயந்திரமயமாகிப்போன மனிதனின் மனமும் இங்கே மலராகி மணம் வீசுகின்றது.
- தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com