செனகல் நாட்டு நாடோடிக் கதை: பாம்புத் தம்பி!

ஒரு தாயாருக்கு இரு குழந்தைகள். மூத்தவன் ஆண். அடுத்தது பாம்புக் குழந்தை. இப்படி ஒரு குழந்தை பிறக்குமா என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் உண்மையில் சில இடங்களில் இப்படி நடந்துள்ளது. 
செனகல் நாட்டு நாடோடிக் கதை: பாம்புத் தம்பி!

ஒரு தாயாருக்கு இரு குழந்தைகள். மூத்தவன் ஆண். அடுத்தது பாம்புக் குழந்தை. இப்படி ஒரு குழந்தை பிறக்குமா என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் உண்மையில் சில இடங்களில் இப்படி நடந்துள்ளது. 
இரட்டைக் குழந்தைகளான அந்த இருவரையும் அவர்களது தாய் வளர்த்தாள். பாம்புக் குழந்தைக்கு காட்டிற்கு ஓடிவிட வேண்டும் என்று விபரீத ஆசை. 
இந்நிலையில், ஆண் குழந்தை பெரிய வாலிபனானதும் அவனுக்குத் திருமணம் செய்ய அந்தத் தாய் தீர்மானித்தாள். 
இதனிடையே, அந்த பாம்புக் குழந்தையும் பாம்பு வாலிபனாக வளர்ந்தது. அப்போதும், அது காட்டிற்குச் செல்ல தீர்மானித்தது. ஆனால், அதைப் பிரிவதற்கு தாய்க்கும், அண்ணனுக்கும் மனமில்லை. 
அதனால், பாம்பு வாலிபனை ஒரு அறையில் வைத்து பூட்டினர். ஆனால், அதற்கு வேண்டிய உணவை தாயும், அண்ணனும் வேளாவேளைக்கு கொடுத்து வந்ததோடு, அந்த அறைக்குச் சென்று சிறிது நேரம் பிரியமாகப் பேசிவிட்டு வருவது வழக்கம். அந்த பாம்புத் தம்பியும் தனது தாயையும், அண்ணனையும் ஒன்றும் செய்யாது அன்பு பாராட்டி வந்தது.
இதனிடையே, அண்ணனுக்கு ஒரு பெண் பார்த்து, அவளைத் திருமணம் செய்ய முன்வந்தனர். ஆனால், அந்தப் பெண்ணிடமோ அல்லது பெண் வீட்டாரிடமோ வீட்டினுள் ஒரு பாம்பு சகோதரன் வளர்ந்து வருவது குறித்து இருவரும் எதுவும் கூறவில்லை. அதேபோன்று, அண்ணனுக்குத் திருமணம் நடைபெற்றதும் அந்தப் பாம்பு சகோதரனுக்குத் தெரியாது. திருமணம் ஆன பிறகும், அண்ணன் தனது புது மனைவியிடம் பாம்புத் தம்பி பற்றி கூறவில்லை.
ஆனால் அவன் தினமும் மறக்காமல் ஒரு அறைக்கு உணவு எடுத்துச் செல்வதையும், ரகசியமாக அந்த அறையைத் திறந்து உள்ளே இருப்பவருக்கு உணவு கொடுத்து வருவதையும் அந்த மனைவி பார்த்துக் கொண்டிருந்தாள். தொடர்ந்து தன் கணவரைக் கண்காணித்து வந்த அவளுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. 
தனக்குப் போட்டியாக அந்த அறைக்குள் ஒரு பெண் இருக்கிறாள். அந்தப் பெண்ணுடன் தனது கணவர் கள்ள உறவில் இருக்கிறார். அதனால்தான் இதனை ரகசியமாகச் செய்கிறார் என்று அந்த மனைவி முடிவு செய்தாள்.
மேலும், அந்த அறைக்குள் இருக்கும் பெண்ணை கையும் களவுமாகப் பிடித்து, தன் கணவனை நறுக்கென்று நான்கு கேள்வி கேட்டுவிட வேண்டும் எனவும் தீர்மானித்தாள்.
கணவனைத் தொடர்ந்து கண்காணித்து,அந்த அறை சாவியை அவன் எங்கே வைக்கிறான் என்பதையும் பார்த்துக் கொண்டாள்.
இந்திலையில் ஒருநாள், கணவன் வெளியே சென்றிருந்தபோதும், தனது மாமியார் இல்லாதபோதும், அந்த மர்ம அறையின் சாவியை எடுத்துக் கொண்டு, அந்த அறைக்குச் சென்றாள். ஏதாவது பேச்சுக்குரல் வருகிறதா என்று கவனித்தாள். பின்னர், கதவைத் திறந்து உள்ளே சென்றாள். அவளுக்கு அங்கே ஓர் அதிர்ச்சி காத்திருந்தது.
அவள் கதவைத் திறந்ததும், ஒரு பெரிய பாம்பு அந்த அறையிலிருந்து வெகுவேகமாக வெளியேறி சென்றுவிட்டது. அது பாம்புத் தம்பி என்பது அந்தப் பெண்ணுக்குத் தெரியாது. இருந்தாலும், "ஏதோ தப்பு செய்துவிட்டோம்' என்பது மட்டும் அவளுக்குப் புரிந்தது. அதே சமயம், அந்த பாம்பு வீட்டை விட்டு வெளியேறி அருகிலிருந்த காட்டிற்குள் ஓடிவிட்டது. 
புதுமனைவிக்கு பயமெடுத்தது. தான் சாவியை எடுத்து கதவைத் திறந்ததை கணவன் அறிந்தால் தன்னைக் கோபித்துக் கொள்வாரே என்பதை நினைந்து அவள் பயந்தாள். 
கணவன் வந்ததும் உடனடியாக அவனிடம் சென்று ரகசிய அறையின் கதவைத் தான் திறந்ததையும், அறையிலிருந்து ஒரு பாம்பு வெளியே ஓடி சென்றதையும் கூறினாள்.
அவனுக்கு கடுங்கோபம் வந்தது. மனைவியைக் கடிந்து கொண்டு விட்டு காட்டுக்குச் சென்றுவிட்ட பாம்புத் தம்பியை நினைத்து வருந்தினான்.
பிறகு சமாதானமாகி, தனக்கு பாம்புத் தம்பி உண்டென்றும், அவனைப் பற்றி வெளியே சொன்னால் மற்றவர்கள் பயப்படுவார்கள், அவனை அடித்துக் கொன்றுவிடுவார்கள் என்பதால் அதைப் பிறருக்குச் சொல்லாமல் மறைத்ததையும் தன் மனைவியிடம் தெரிவித்தான்.
பிறகு, தன் தம்பியைத் தேடி பல இடங்களில் அலைந்தான். இறுதியில், ஒரு மலையடிவாரத்தில் பாம்புத் தம்பியைக் கண்டான். அருகில் சென்று, வீட்டிற்கு வர வேண்டும் என்று கட்டாயப்படுத்தினான். ஆனால் பாம்புத் தம்பி வர மறுத்தான்.
அண்ணன் காரணம் கேட்டான். அதற்கு, ""நான் பாம்பு பிறவி. எனது வசிப்பிடம் காடும், செடி கொடிகளும்தான். ஆக உன் வீட்டில் என்னால் வசிக்க முடியாது. என்னை இங்கேயே விட்டுவிடு. என் மீது அன்பு இருந்தால் என் சார்பாக ஒரு வேண்டுகோள். எந்தப் பாம்பையும் அடிக்காதே. மற்றவர்களையும் அடிக்க விடாதே'' என்றான் பாம்புத் தம்பி.
அரை மனதுடன் வீடு திரும்பிய அண்ணன், எந்தப் பாம்பையும் அடித்ததில்லை. மற்றவர்களையும் அடிக்க விட்டதில்லை. 
நீங்களும் பாம்பைக் கண்டால் அடித்துத் துன்புறுத்தாதீர்கள்...!
டாக்டர் க.ப. அறவாணன் எழுதிய "பாம்பு வழிபாடு' (செனகல் நாட்டுக் கதை) நூலிலிருந்து
சுருக்கமாக: ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com