தமிழுக்கு அமுதென்று பேர்! - கவிஞர் முத்துலிங்கம்

உலகில் இன்றைக்கு ஆறாயிரம் மொழிகளுக்குமேல் பேசப்படுகின்றன என்றாலும் இவற்றில் இரண்டாயிரத்து ஐந்நூறு மொழிகளுக்குத்தான் எழுத்து வடிவங்கள் இருக்கின்றன
'சிறை' படத்தின் நூறாவது நாள் விழாவில் இயக்குநர் கே.பாலசந்தர் கவிஞர் முத்துலிங்கத்திற்குக் கேடயம் வழங்குகிறார்
'சிறை' படத்தின் நூறாவது நாள் விழாவில் இயக்குநர் கே.பாலசந்தர் கவிஞர் முத்துலிங்கத்திற்குக் கேடயம் வழங்குகிறார்

ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - 53
உலகில் இன்றைக்கு ஆறாயிரம் மொழிகளுக்குமேல் பேசப்படுகின்றன என்றாலும் இவற்றில் இரண்டாயிரத்து ஐந்நூறு மொழிகளுக்குத்தான் எழுத்து வடிவங்கள் இருக்கின்றன. இந்த இரண்டாயிரத்து ஐந்நூறு மொழிகளுக்குள்ளும் இலக்கியம் மட்டுமே உடைய மொழிகள் முந்நூறு. இலக்கிய இலக்கணம் உடைய மொழிகள் நூற்றைம்பது. இதில் இலக்கியச் சிறப்பு இலக்கணச் சிறப்பு உடைய மொழிகள் ஐம்பது. இந்த ஐம்பது மொழிகளுக்குள்ளும் உயர்தனிச் செம்மொழிகள் என்று சொல்லப்படுபவை தமிழ், சீனம், லத்தீன், கிரேக்கம், எபிரேயம், சமஸ்கிருதம் என்ற ஆறு மொழிகள்.
 இந்த ஆறு மொழிகளுக்குள்ளும் இன்னும் பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் உயிர்ப்போடு இருக்கக் கூடிய மொழிகள் இரண்டு. ஒன்று சீனம், அடுத்தது தமிழ். இதில் பழங்காலச் சீனர்கள் அதாவது கன்பூசியஸ் காலத்துச் சீனர்கள் இன்றைக்கு வந்தால் இன்றைய சீனர்கள் பேசுகின்ற உச்சரிப்பு அவர்களுக்குப் புரியாது. அவர்கள் பேசுகின்ற சீனமொழி இவர்களுக்குப் புரியாது. காரணம் அங்கே எல்லாம் மாறிவிட்டது.
 ஆனால் தொல்காப்பியர் இன்றைக்கு வந்தாலும் அவர் பேசுகின்ற தமிழை நாம் புரிந்துகொள்வோம். நாம் பேசுகின்ற தமிழை அவர் புரிந்து கொள்வார். காரணம்? கடந்த இரண்டாயிரத்து எண்ணூறு ஆண்டுகளாகத் தமிழில் எழுத்து வடிவங்கள்தான் மாறி மாறி வந்தனவே தவிர, ஒலி வடிவம் உச்சரிப்பு வடிவம் மாறவே இல்லை.
 தொல்காப்பியர் காலத்திலிருந்த எழுத்து வடிவம் வேறு. சங்க காலத்திலிருந்த எழுத்து வடிவம் வேறு. களப்பிரர் காலத்திலிருந்த எழுத்து வடிவம் வேறு, இடைக்காலத்திலிருந்த எழுத்து வடிவம் வேறு. அதிலும் பத்தாம் நூற்றாண்டிலிருந்து பதினான்காம் நூற்றாண்டு வரை இருந்த எழுத்து வடிவம் வேறு. இன்றைக்கு இருக்கக்கூடிய எழுத்து வடிவம் வேறு.
 உலகில் ஆறாயிரம் மொழிகளுக்கு மேல் பேசப்பட்டாலும், அந்த மொழிகளுக்கெல்லாம் மூலமொழி முதல் மொழி எதுவாக இருக்கும் என்று பல்லாண்டுக்காலம் ஆராய்ச்சி செய்தேன். என் ஆராய்ச்சியின் முடிவில் நான் கண்டு கொண்ட உண்மை என்னவென்றால் அநேகமாக அந்த மூலமொழி முதல் மொழி தமிழ்மொழி ஒன்றாகத் தான் இருக்க முடியும் என்ற முடிவுக்கு வருகிறேன்" என்று கூறினார், அமெரிக்க நாட்டு மொழியியல் அறிஞர் அலெக்ஸ்கொலியர்.
 மூலமொழி மட்டுமல்ல, தனித்தியங்கக் கூடிய ஆற்றல் பெற்ற மொழியும் தமிழ்தான். கால்டுவெல் தமிழ்மொழியை ஆராய்ந்ததைப் போல குண்டர்ட் என்பவர் மலையாள மொழியை ஆராய்ந்தார். கிட்டல் என்பவர் கன்னட மொழியையும், பிரெüவுன் என்பவர் தெலுங்கு மொழியையும் ஆராய்ந்தார்கள்.
 இவர்கள் ஆராய்ந்து என்ன சொன்னார்களென்றால் மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளில் கலந்திருக்கும் தமிழ்ச் சொற்களையும், சமஸ்கிருதச் சொற்களையும் மற்றும் அயல்மொழிச் சொற்களையும் நீக்கிவிட்டுப் பார்த்தால் தெலுங்கு மலையாளம் கன்னடம் என்று சொல்வதற்கு ஒரு மொழியே இருக்காது. எல்லாம் பூஜ்யமாகிவிடும்.
 ஆனால் தமிழில் கலந்திருக்கின்ற சமஸ்கிருதச் சொற்களையும் அயல்மொழிச் சொற்களையும் நீக்கிவிட்டுப் பார்த்தால் தமிழ் சங்ககாலத்தில் இருந்ததைப் போல் தூய தமிழாகவும், தனித்தமிழாகவும் சுடர்விட்டுப் பிரகாசிக்கும் என்கிறார்கள்.
 அத்தகைய சிறப்புக்குரிய மொழி தமிழ் இந்தியாவின் தலைமை மொழி தமிழ் என்றும் இந்தியா ஒரே நாடாக இருக்க வேண்டுமென்றால் விந்தியத்திற்கு அப்பால் இருப்பவர்கள் அனைவரும் தமிழைக் கற்றுக் கொள்ளவேண்டும் என்றும் காந்தியடிகள் அன்றே கூறியிருக்கிறார்.
 சமஸ்கிருதத்தைவிட தமிழ் சிறந்த மொழியென்று தில்லியில் நடந்த ஒரு விழாவில் பேசும்போது பிரதமர் மோடியும் சொல்லியிருக்கிறார். மோடி கட்சியைச் சேர்ந்த தருண் விஜய்யும் இந்தியாவில் இந்திக்கு அடுத்து இன்னொரு மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்றால் தமிழ்தான் அதற்குத் தகுதியான மொழியென்றும் சொல்லியிருக்கிறார்.
 அத்தகைய தமிழைப் பற்றிப் பல கவிஞர்கள் சிறப்பித்துப் பாடியிருக்கிறார்கள். உலக அளவில் ஒரு மொழியை அந்த மொழிக் கவிஞர்கள் அதிக அளவில் போற்றிப் புகழ்ந்து வணங்கியிருப்பது தமிழ்மொழி ஒன்றை மட்டும்தான். வேறு எந்த மொழிக்கும் இந்தப் பெருமை கிடையாது.
 தமிழைப் பல கவிஞர்கள் சிறப்பித்து எழுதியிருப்பினும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எழுதிய கவிதைதான் மிகவும் அருமையானது.
 அத்தகைய கவிதையைப் பாரதிதாசன் எழுதியதும் சென்னை தம்புச் செட்டித் தெருவில் இருந்த "மணிக்கொடி' பத்திரிகைக்கு அதைக் கொடுக்க வருகிறார். அப்போது அந்தப் பத்திரிகை அலுவலக வாசலில் மூன்று பேர் நின்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
 "மணிக்கொடி'க்கு ஒரு கவிதை கொடுப்பதற்காக வந்திருக்கிறேன். யாரிடம் கொடுக்க வேண்டும்'' என்று பாரதிதாசன் கேட்கிறார். "என்னிடம் கொடுங்கள்'' என்று ஒருவர் வாங்கிக் கொள்கிறார். கொடுத்துவிட்டுப் பாரதிதாசனும் சென்றுவிட்டார்.
 அவர் சென்ற சிறிது நேரத்திற்குப் பிறகுதான் அந்தக் கவிதையை வாங்கியவர் படித்துப் பார்க்கிறார். அதைப் படிக்கும் வரையிலும் அந்தக் கவிதையைக் கொடுத்துவிட்டுச் சென்றவர்தான் பாரதிதாசன் என்று அவருக்குத் தெரியாது. கவிதையை வாங்கிக் கொண்டவர்தான் ஏ.என்.சிவராமன் என்று பாரதிதாசனுக்கும் தெரியாது. இது நடந்த ஆண்டு 1934. அப்போது பாரதிதாசனைப் பரவலாகப் பலரும் அறியாத காலம்.
 கவிதையைப் படித்துப் பார்த்தவுடன் மூக்குக் கண்ணாடியைக் கொஞ்சம் உயர்த்திப் போட்டுக் கொண்டாராம் ஏ.என். சிவராமன். எழுதியது சிறப்பாக இருந்தால் அப்படிச் செய்வது அவர் இயல்பாம்.
 உடனே பக்கத்தில் இருந்த சங்கு சுப்ரமணியம், "கவிதை அருமை அருமை'' என்று சொல்லிக் கொண்டே அதை இசையோடு பாடினாராம். அந்தக் கவிதைதான் "தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' என்ற உலகம் அறிந்த கவிதை. ஆக அந்தப் பாடலுக்கு முதல் இசையமைப்பாளர் சங்கு சுப்பிரமணியம். இந்த சங்கு சுப்பிரமணியம்தான் "இராமானுஜர்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தவர்.
 அங்கு நின்ற மூன்று பேரில் இரண்டு பேரை அறிந்து கொண்டோம். அறிய வேண்டிய இன்னொருவர் பி.எஸ். ராமையா. "மணிக்கொடிக் காலம்' என்று சொல்லக்கூடிய காலத்தைத் தோற்றுவித்தவர் அவர்தான். "மணிக்கொடி' இரண்டாவது இதழில் பாரதிதாசனின் இந்தக் கவிதை இடம்பெற்றது.
 மின்னல் கலைக்கூடத்தின் சார்பில் கவிஞர் வசீகரன் நடத்திய ஒருவிழாவில் பேசும்போது கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சுப்பிரமணியம்தான் இந்த நிகழ்ச்சியைக் கூறினார். பி.எஸ். ராமையா எழுதிய ஒரு கட்டுரையில் இது குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் கூறினார். இவர் கூறிய பிறகுதான் இந்த விவரம் என்னைப் போன்றவர்களுக்குத் தெரிந்தது.
 பிற்காலத்தில் பாரதிதாசனின் அந்தப் பாடல் இடம்பெற்ற திரைப்படம் "பஞ்சவர்ணக்கிளி'. எம்.எஸ்.விசுவநாதன் இசையில் பி.சுசீலா பாடியிருப்பார். இந்தப் பாடலை சினிமாவுக்காகப் பாரதிதாசன் எழுதவில்லை. கவிதையாகத்தான் எழுதினார்.
 பல கவிஞர்கள் எழுதிய கவிதைகள் திரைப்படங்களில் பாடல்களாக இடம்பெற்றிருக்கின்றன.
 "தமிழன் என்றோர் இனமுண்டு
 தனியே அவர்க்கொரு குணமுண்டு
 அமிழ்தம் அவனுடை மொழியாகும்
 அன்பே அவனுடை வழியாகும்''
 இது நாமக்கல் கவிஞர் எழுதிய பாடல். "மலைக்கள்ளன்' படத்தில் இடம்பெற்றது.
 "வெய்யிற்கேற்ற நிழலுண்டு
 வீசும் தென்றல் காற்றுண்டு
 கையில் கம்பன் கவியுண்டு
 கலசம் நிறைய அமுதுண்டு''
 இது கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை எழுதிய கவிதை. இது பாடலாக இடம்பெற்ற திரைப்படம் "கள்வனின் காதலி'.
 இலக்கியக் கவிஞர்கள் எழுதுகின்ற கவிதைகள் கூட திரைப்பாடல் வடிவில் வரும்போதுதான் அது பிரபலமாகிறது.
 இன்றைய திரைக்கவிஞர்களில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர்கள் பலர் இருந்தாலும் அவர்களில் மூத்த கவிஞராக இருப்பவர் பிறைசூடன். எஸ்.எம். சுப்பையா நாயுடு இசையில் நானும் அவரும் ஒரு படத்திற்குப் பாடல் எழுதினோம். அப்போது அவர் பெயர் சந்திரசேகரன். ஆனால் அந்தப் படம் வெளிவரவில்லை.
 இன்றைய சினிமா பாடலாசிரியர்களில் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, உருது என்று ஏழு மொழிகளில் பேசக் கூடிய ஒரே கவிஞர் அவர்தான். இதில் தமிழும் ஆங்கிலமும்தான் அவருக்கு எழுதப் படிக்கத் தெரியும். மற்றைய மொழிகள் பேசமட்டும்தான் தெரியும். ஆங்கிலம் சரளமாகப் பேசுவார். பி.எஸ்.சி. பட்டதாரி. சோதிடக் கலையிலும் வல்லவர்.
 ஆர்.சி. சக்தி டைரக்ட் செய்த "சிறை' என்ற படத்தில்தான் "பிறைசூடன்' என்ற பெயரில் பாடலாசிரியராக அறிமுகம் ஆனார். இது 1984-ஆம் ஆண்டில் வெளிவந்து நூறு நாட்கள் ஓடிய வெற்றிப் படம். பிறைசூடன் பாடல் எழுதிய முதற்படமே நூறுநாள் ஓடியது என்பது பிறைசூடனைப் பொருத்தவரை ஒரு மங்கலகரமான ஆரம்பம்.
 அப்போது நான் சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்த நேரம். நானும் அதில் ஒரு பாடல் எழுதியிருக்கிறேன். "பாத்துக்கோ - இந்தப் பஞ்சவர்ணப் பூங்கிளியைப் பட்டுவண்ணப் பூங்கொடியைச் சேத்துக்கோ' என்று தொடக்கமாகும் அந்தப் பாடல்.
 "ராசாத்தி ரோசாப்பூவே வெட்கம் வெட்கம் ஏனோ இன்னும்''
 என்ற பாடல் பிறைசூடன் எழுதிய பாடல். இந்த இரண்டு பாடல்களும் ஓரளவு பிரபலமானது என்றாலும் அந்தப் படத்தில் புலமைப்பித்தன் எழுதிய
 "நான் பாடிக் கொண்டே இருப்பேன்
 உன் பக்கத்துணை இருப்பேன்
 என் எண்ணம் இருக்கும்வரை
 என் ஜீவன் காக்கும் உனை''
 என்ற பாடல்தான் மிகவும் பிரபலமான பாடலாக அமைந்தது.
 பிறைசூடனுக்கு அது முதல் படம். எனக்கு அது ஐம்பதாவது படம். மெல்லிசை மன்னர் எம்.எஸ். விசுவநாதன்தான் அதன் இசையமைப்பாளர்.
 இதற்கு முன்பு ஆர்.சி. சக்தி டைரக்ட் செய்த "உண்மைகள்' என்ற படத்திற்கும் நான் பாடல் எழுதியிருக்கிறேன். அதுவும் நூறு நாள் ஓடிய படம்தான். அதற்கும் எம்.எஸ். விசுவநாதன்தான் இசை. ஆனால் நூறாவது நாள் விழா, அதற்கு கொண்டாடப்படவில்லை.
 "சிறை' படத்திற்குத்தான் நூறாவது நாள் விழாக் கொண்டாடினார்கள். எங்களுக்கெல்லாம் இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர்தான் கேடயம் கொடுத்துச் சிறப்பித்தார். "சிறை' படத்தில் அறிமுகமான பிறைசூடன் ஏறத்தாழ ஆயிரம் பாடல்கள் வரை எழுதியவர். சிறந்த பாடலாசிரியருக்கான விருதை மூன்று முறை பெற்றவர். பல மொழிமாற்றுப் படங்களில் வசனம், பாடல்கள் எழுதிய பெருமை அவரையே சேரும்.
 (இன்னும் தவழும்)
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com