நாட்டிய மேதை பாலசரஸ்வதி நூற்றாண்டு!

நமது பாரம்பரியக் கலையான பரத நாட்டியத்தில் பத்து முக்கிய பிரிவுகள் உண்டு.அதில் பதம் என்பது முக்கிய பங்கு வகிக்கிறது.
மகள் லட்சுமியுடன்  பாலசரஸ்வதி
மகள் லட்சுமியுடன் பாலசரஸ்வதி

நமது பாரம்பரியக் கலையான பரத நாட்டியத்தில் பத்து முக்கிய பிரிவுகள் உண்டு.அதில் பதம் என்பது முக்கிய பங்கு வகிக்கிறது.மூச்சு இரைக்க வர்ணம் ஆடி வந்த பரதக் கலைஞருக்கு, பதம் ஆடுதல் ஒரு ஒய்வு என்றே சொல்லலாம்.இதற்கு முகத்தில் காட்டக்கூடிய பாவங்களும், கைகள் அசைவு, கண்களால் பேசுதல் இவைகளால் பிடிக்கும் அபிநயங்கள்தான் முக்கியம்.
குரு ஒருவர், பதத்தைப் பற்றி கீழ்க்கண்டவாறு சொல்கிறார்:
கை வழி கண்ணும்
கண் வழி கருத்தும்
கருத்து வழி ரசமும்
கால் வழி தாளமும்
சொல் வழி ராகமும்
சென்று சுவை பிறக்கும்
இவை எல்லாம் சேர்ந்ததுதான் அபிநயம். பரத நாட்டியத்தில் பாவம் (BAVAM) என்பது முக்கியம். இந்த பாவம் உட்பட பரத நாட்டியத்தில் உள்ள அனைத்து நுட்பங்களையும் ஒருங்கே பெற்று இந்தியாவிலும் உலகமெங்கும் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற பரத நாட்டியக் கலைஞராக திகழ்ந்தவர் டி. பாலசரஸ்வதி என்றழைக்கப்படும் தஞ்சாவூர் பாலசரஸ்வதி. இவருக்கு இந்த ஆண்டு மே-13 நூற்றாண்டு பிறந்தநாள்.
பரத நாட்டியத்தை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.பாலசரஸ்வதியின் நாட்டியம் ஒன்று. இன்னொன்று மற்றவர்களின் நாட்டியம். இப்படிச் சொன்னவர் எழுத்தாளர் தி.ஜானகிராமன். பரதக் கலையே தன் உயிர்மூச்சு என்று வாழ்ந்தவர். சின்ன வயதில் சலங்கை கட்டியதிலிருந்து இறக்கும் வரை பரத பாரம்பரியத்திலிருந்து துளி கூட விலக மாட்டேன் என்று உறுதியாக வாழ்ந்து காட்டிய வைராக்கிய பெண்மணி டி. பாலசரஸ்வதி.
சமுதாயத்தில் மிகப்பெரிய அந்தஸ்த்தில் உள்ளவர்களுக்கும் மற்றும் மிகப்பெரிய பணக்காரர்களுக்கும் மட்டுமே சொந்தமாக இருந்த கர்நாடக சங்கீதத்தை எளியவர்களும் பாமரர்களும் புரிந்து கொண்டு இப்போது பாடப்படுகிறதே அதேபோன்று பரத நாட்டியத்தையும் எளியவர்களும் புரிந்து ரசிக்கும் வண்ணம் பல மேடைகளில் அரங்கேற்றியவர் டி. பாலசரஸ்வதி. அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து உட்பட பல நாடுகளுக்கு பரதத்தை எடுத்துச் சென்றவர்.
"பாலா என்றால் பரதம், பரதம் என்றால் பாலா' என்ற தஞ்சாவூர் பாலசரஸ்வதி 1918-ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் தேதி தஞ்சாவூரில் பிறந்தார். பாலசரஸ்வதியின் பாட்டி புகழ்பெற்ற வீணை விதூஷி வீணை தனம்மாள். பாலசரஸ்வதி ஏழாவது தலைமுறை இசைக் கலைஞர். இவரது பாட்டி வீணை தனம்மாளின் பாட்டி காமாட்சி அம்மாள், இவரது பாட்டி பாப்பம்மாள், இவர் தஞ்சாவூரை ஆண்ட துளசி ராஜா காலத்தில் இசைக் கலைஞராக இருந்தவர் என்று அறியப்படுகிறது.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் பாலாவின் பாட்டி வீணை தனம்மாளின் கச்சேரி நடைபெறும். இக்கச்சேரி அன்றிருந்த வித்வான்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். தற்போது வடசென்னையில் இருக்கும் ஜார்ஜ் டவுன் பகுதியில் இருந்த வீணை தனம்மாளின் வாடகை வீடொன்றில் அப்போதைய சங்கீத வித்வான்கள் மற்றும் விதூஷிகள் சகஜமாக பழகிய சூழலில் பாலசரஸ்வதி வளர்ந்தார்.
பாலா நடனம் கற்பதில் சில இடையூறுகள் இருந்தன. அவற்றில் ஒன்று பாட்டி வீணை தனம்மாளின் விருப்பமின்மை. இதனால் மதில் மேல் பூனையாக இருந்தார் தனம்மாள். ஆனால், நாட்டியத்தின் மீது பாலாவின் அலாதியான ஈடுபாடு வீட்டிலிருந்த அனைத்து உறவினர்களையும் சமாதானப்படுத்தியது. கர்நாடக சங்கீத வித்வான் மறைந்த மகாராஜபுரம் சந்தானத்தின் தந்தை மகாராஜபுரம் விஸ்வநாத அய்யர் சங்கீத மற்றும் நடன நுட்பங்களை வீணை தனம்மாளிடம் கற்பதற்காக வந்து போவார். அப்படியொரு நிகழ்வு 1922-ஆம் ஆண்டு நடந்தது. அப்போது, பாலாவின் நடனம் பற்றிய பேச்சு வந்தது. அதற்கு விஸ்வநாத அய்யர், ""குழந்தை பாலாவிற்கு நடனத்தின் மீது பேரார்வம் உள்ளது, எனவே பாலாவின் ஆர்வத்தை ஆதரிக்கிறேன், மேலும் பாலா ஆடுவதற்கு தகுதியானவள், அதுமட்டுமல்ல, அவளிடம் இசை மற்றும் நடன பாரம்பரியம் உள்ளது. எனவே ஏன் அவளை நடனமாட பயிற்றுவிக்கக் கூடாது?'' என்றார்.
கூடுதல் செய்தி என்னவென்றால், பாலசரஸ்வதிக்கு ஆதரவாக பேசிய மகாராஜபுரம் விஸ்வநாத அய்யர் தனது 55-வது வயதில் இசைக்கும், பாலசரஸ்வதி தனது 37-வது வயதில் நடனத்திற்கும் சங்கீத நாடக அகாதெமி விருதை இருவரும் ஒரே ஆண்டில் அதாவது 1955-ஆம் ஆண்டு பெற்றனர் என்பதுதான். 
ஆனால், வீணை தனம்மாள், பாலா நடனம் படிக்கக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தார். நட்டுவனார் கந்தப்ப பிள்ளை மற்றும் மயிலாப்பூர் கெளரி அம்மாள் சொல்லியும் கேட்கவில்லை. மகாராஜபுரம் விஸ்வநாத அய்யரிடம் ஆலோசனை கேட்டது போல், தனது ரசிகரான அரியக்குடி ராமாநுஜ அய்யங்காரிடமும் வீணை தனம்மாள் ஆலோசனை கேட்டார். அதன் பிறகு திடீரென்று ஒருநாள் வீணை தனம்மாள் தனது மகளான ஜெயம்மாளை கூப்பிட்டார். வீணை தனம்மாளின் இரண்டு கண்களும் தெரியாமல் போய் விட்டதால் சில கேள்விகளை பாலாவின் அம்மாவிடம் கேட்டார். 
முதல் கேள்வி: பாலாவிற்கு மாறு கண்களா? (squint-eyes) 
பாலாவின் தாய்: இல்லை 
தனம்மாள்: பல் வரிசை வரிசையாகவும் நன்றாகவும் உள்ளதா?
பாலாவின் தாய்: ஆம்
தனம்மாள்: அவள் (பாலா) பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறாளா?
பாலாவின் தாய்: பார்ப்பதற்கு நன்றாக உள்ளாள்.
இறுதியாக ""அவள் நன்றாக பாடுவாளா?'' என்று கேட்டார். அதற்கு பாலாவின் அம்மா ""நன்றாக பாடுவாள்'' என்று பதிலளித்தார். அத்தோடு பரிட்சை முடிந்தது, பாட்டி வீணை தனம்மாள், பாலா நடனம் கற்றுக் கொள்ள அனுமதியளித்தார். பாலாவின் நடனப் பயிற்சி நான்கு வயதில் குரு கே.பி.கந்தப்பப் பிள்ளையிடம் தொடங்கியது. இன்று, பட்டயக் கணக்கர் தேர்வுக்காக தினமும் 16 மணி நேரம் மாணவர்கள் படிக்கிறார்களே, அதே போல், அப்போது, பாலாவின் நடனப் பயிற்சியும் தினமும் 16 மணி நேரத்துக்கு குறையாமல் நடந்தது. கந்தப்ப பிள்ளை கலையில் எந்த சமரசமும் செய்ய அனுமதிக்கமாட்டார். கண்டிப்பான செம்மையானவர் (perfectionist). ஓர் அசைவோ அல்லது பாவனையோ சரியாக வரும் வரை அடுத்ததிற்கு செல்லமாட்டார். காலையில் கால் வலிக்கும் நடனப் பயிற்சி.மாலையில் பாலாவை பக்கத்தில் வைத்துக் கொண்டு பாட்டு சொல்லிக் கொடுப்பார், அவரது தாயார் ஜெயம்மாள்.
டி. பாலசரஸ்வதிக்கு, நாட்டியத்தில் ஓர் உணர்ச்சியைத் தூண்டியது மயிலாப்பூர் கெளரியம்மாள்தான். அவர் ஆடியதை, பாலசரஸ்வதி தன் சிறுவயதில் தினமும் பார்த்து ரசித்துள்ளார். பாலசரஸ்வதி 30 வயதை தாண்டிய பிறகு. வர்ணத்தில் கற்பனையாக அபிநயம் செய்யும் வகைகளையெல்லாம் குச்சிபுடி வேதாந்தம் லஷ்மிநாராயண சாஸ்திரியிடம் கற்றுக்கொண்டார். அபிநய வின்யாஸங்களை செய்யவும் அவரே தைரியமூட்டி ஊக்கப்படுத்தினார். இன்று இருக்கும் ஆசிரியர்-மாணவர் உறவு போல் இருக்காமல் அன்றைய குரு சிஷ்ய உறவு மிகவும் நெருக்கமானதும், கண்டிப்பானதும்கூட. குருவுக்கு சிஷ்யரின் திறமையை வெளிக்கொணர எந்தவித அதிகாரத்தையும் பிரயோகிக்கும் அளவுக்கு உரிமையுள்ளவராக இருந்தார். குடும்பம் அதில் பெரிதாக தலையிடாது.சிஷ்யரும் குருவை மிக உயர்வாக மதித்து பணிவுடன் நடந்துகொண்டால்தான் கலையில் உள்ள அனைத்து நுணுக்களையும் கற்றுக்கொள்ளமுடியும். ஓய்வில்லாத பயிற்சியும், இசையும் நடனமும் இயல்பாக கலந்த வாழ்க்கைச் சூழலும் பாரம்பரியமாக கிடைத்த கலையறிவும் பாலசரஸ்வதியை நாட்டியத்தின் தலைசிறந்த கலைவெளிப்பாட்டுக்கு கொண்டுசென்றது. பொதுவாக நாட்டியம் அறிந்தவர்களுக்கு இசையில் பெரிய அறிமுகமோ தேர்ச்சியோ இருக்காது. ஆனால் பாலசரஸ்வதி இசையை முறையே கற்றவர். சிறப்பாக பாடக்கூடியவர். ஆகவே அவரின் நாட்டியக்கலை அதன் உன்னத மேன்மையை தொட்டது.
டி. பாலசரஸ்வதியின் 7-ஆவது வயதில் நாட்டியக் கச்சேரி அரங்கேற்றம் காஞ்சிபுரத்தில் நடந்தது. காஞ்சிபுரத்தில் உள்ள அம்மனாட்சி அம்மன் கோயிலில் ஆடி மாதத் திருவிழா நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நட்டுவனார்களும் சங்கீதக்காரர்களும் ஒன்றுகூடி திருவிழா நடத்துவார்கள். அந்த விழாவில் நடனக் கச்சேரிகளும் அரங்கேற்றங்களும் நடக்கும். ஒவ்வொரு நட்டுவனாரும் அவர்களுடைய சீடர்களில் ஒருவரை நாட்டியமாட வைக்கவேண்டும். அந்த வகையில் கந்தப்பப் பிள்ளை முறை வரும்போது, பாலாவின் அரங்கேற்றம் நடைபெற வேண்டும் என்பது அவரின் விருப்பம். அதேபோன்று, பாலாவின் நடன அரங்கேற்றம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடனக் கச்சேரிகள் செய்து கொண்டிருந்த பாலசரஸ்வதிக்கு, சென்னையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மியூசிக் அகாதெமியில் 1933-ஆம் ஆண்டு முழு முதல் கச்சேரி செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன் பிறகு பாலசரஸ்வதியின் நடன கச்சேரிகளை சாதாரண மக்களும் காண ஆரம்பித்தனர்.
ஆனால், பாலசரஸ்வதி வாழ்ந்த காலத்தில் பரத நாட்டியத்தை இழிவாக மற்றும் விரோதமாக பார்த்த பல பிரபலங்களும் உண்டு. திரு.வி.க ஒரு சமயம் பாலசரஸ்வதியின் நாட்டிய கச்சேரியை ஒரு திருமணத்தில் ஏற்பாடு செய்திருந்தார். அப்போது ரசிகமணி டி.கே.சி.யும் கல்கி-யும் திருமணத்தில் நாட்டியக் கச்சேரியை ஏற்பாடு செய்ததைக் கண்டு வியந்தார்கள். ஆனால், கச்சேரியைப் பார்த்த பிறகு தங்களது கொள்கையை மாற்றிக்கொண்டார்கள். இக்கலையில் இருக்கும் சாஸ்திரத்தையும் கட்டுபாட்டையும் கண்டு, "இது ரஸமாக உயர்ந்த தரத்தில் கையாளக்கூடிய கலை. இதில் கலையுணர்ச்சியோடு தெய்வீக அனுபவமும் தக்க முறையில் ஏற்படக்கூடும்' என்று பிரசாரம் செய்து பாலசரஸ்வதியை வாழ்த்தினார்கள்.
பாலசரஸ்வதியின் ஆரம்ப கால கச்சேரிகளுக்கு ஏற்பாடு செய்து ஆதரித்தவர்களுள் ஜலதரங்க வித்வான் ரமணய்ய செட்டியாரும், அவரது சகோதரர் சுப்ரமணிய செட்டியாரும் குறிப்பிடத்தக்கவர்கள்.
வட இந்தியாவிலிருந்து வந்த பல இசைக் கலைஞர்களும், நடனக் கலைஞர்களும் பாலாவின் நடனத்தைக் கண்டு பிரமித்தனர். ஆச்சரியமாகவும் பார்த்தனர். அதில் குறிப்பிடத்தக்கவர், நடனக் கலைஞர் உதய் சங்கர். "நான் கச்சேரி செய்யும் நாடுகளிலெல்லாம் பாலாவுக்கும் வாய்ப்புகள் வாங்கிக் கொடுக்கிறேன், என்னுடன் அனுப்புவீர்களா?'' என்று பாலாவின் தாய் ஜெயம்மாளிடம் கேட்டதற்கு, ""முடியாது'' என்று நேருக்கு நேராக சொல்லிவிட்டார். பாலாவின் நடனத்தை எப்படியாவது பல்வேறு நாடுகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று முடிவெடுத்த உதய் சங்கர், தொடக்கமாக வட இந்தியாவில் அனைத்து நடன விழாக்களிலும் பாலாவுக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். பெரில் டி.ஸோட் என்ற வெளிநாட்டு எழுத்தாளர் பாலாவின் நடனத்தைப் பற்றி எழுதி பல நாடுகளில் கச்சேரி செய்ய வைத்தார்.
1961-ஆம் ஆண்டு, முதன்முதலாக ஜப்பான் தலைநகரமான டோக்கியோவில் நடனக் கச்சேரி செய்தார். இதுதான் பாலாவின் முதல் வெளிநாட்டுக் கச்சேரி. அதன் பின்பு 1962-ஆம் ஆண்டு, பாலசரஸ்வதியை ஏசியா சொஸைடி ஸ்பான்சர் செய்து அமெரிக்கா அழைத்துச் சென்றது. அங்கு "ஜேக்கப் பில்லோ' விழாவில் அமெரிக்க ரசிகர்கள் முன்பாக நடனமாடினார். 1963-ஆம் ஆண்டு எடின்பரோ விழாவில் நடனமாடினார். பாலாவின் நடன நுணுக்கங்களை கண்டுகளித்த அமெரிக்க நடனக் கலைஞர் மார்த்த கிரஹாம் வெகுவாக பாராட்டினார். 1962 முதல் 1979 வரை அமெரிக்காவில் நடனமாடுவது மட்டுமல்லாமல் அமெரிக்க மாணவர்களுக்கு நாட்டியமும் சொல்லிக் கொடுத்தார்.
சென்னை மியூசிக் அகாதெமி ஆரம்பித்தது முதல் இன்று வரை ஆண்டுதோறும் வருடாந்திர கூட்டங்கள் நடத்துவதும், அக்கூட்டத்திற்கு பிரபல சங்கீத வித்வான்கள் தலைமையேற்பதும் வழக்கமான ஒன்றாகும்.
ஆனால், வழக்கத்திற்கு மாறாக, 47-ஆவது வருடாந்திர கூட்டத்திற்கு பாலசரஸ்வதியை தலைமை உரையாற்ற வைத்தது நாட்டிய உலகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பேராகும். அதேபோல், 1973-ஆம் ஆண்டு மியூசிக் அகாதெமி, முதன்முறையாக நாட்டியத்திற்கு "சங்கீத கலாநிதி' விருது கொடுத்து பாலசரஸ்வதியையும் நாட்டியத்தையும் கெளரவித்தது.
2018-ஆம் ஆண்டு, நாட்டியத்திற்கே தன் வாழ்வை அர்ப்பணித்த நாட்டிய மேதை பாலசரஸ்வதி பிறந்த நூற்றாண்டு. நாட்டியத்தில் மறுமலர்ச்சி ஏற்பட வித்திட்டவர்களுள் பாலசரஸ்வதியும் ஒருவர். பாலசரஸ்வதியின் மாணவர்கள் உலகமெங்கும் உள்ளனர். இவர்கள் பாலசரஸ்வதியின் நாட்டிய பாணியை அடுத்த தலைமுறைக்கு செல்வதே நாம் பாலசரஸ்வதிக்கு செய்யும் நூற்றாண்டு பிறந்தநாள் சமர்ப்பணமாகும்.
- ரா. சுந்தர்ராமன்
விருதுகள் & சிறப்புகள்
1955 -    சங்கீத நாடக அகாதெமி விருது
1957 -    பத்ம பூஷண் விருது
1973 -    ரபீந்தர பாரதி பல்கலைக்கழகம் வழங்கிய முனைவர் பட்டம்
1973 -    சங்கீத கலாநிதி விருது - சென்னை மியூசிக் அகாதெமி
1975 -    இசைப்பேரறிஞர் விருது -தமிழ் இசைச் சங்கம், சென்னை
1977 -    பத்ம விபூஷண் விருது
1981 -    சங்கீத கலாசிகாமணி விருது - தி இந்தியன் 
ஃபைன் ஆர்ட்ஸ்  சொûஸட்டி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com