பிடித்த பத்து: இயற்கையின் அழகில் மயங்கி விடுவேன்!

பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் வி.மோகன் சர்க்கரை நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் பி.சி.ராய் தேசிய விருதுடன் கூடிய பல்வேறு விருதுகளை பெற்ற இவர், தனக்கு "பிடித்த பத்து' பற்றி இங்கு கூறுகிறார்
பிடித்த பத்து: இயற்கையின் அழகில் மயங்கி விடுவேன்!

பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் வி.மோகன் சர்க்கரை நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் பி.சி.ராய் தேசிய விருதுடன் கூடிய பல்வேறு விருதுகளை பெற்ற இவர், தனக்கு "பிடித்த பத்து' பற்றி இங்கு கூறுகிறார்: 
மனிதர்கள்: "மனிதன் என்பவன் தெய்வமாகலாம்' என்ற கண்ணதாசனின் கூற்றுப்படி மனிதராக பிறந்து தெய்வமாக வாழ்ந்து என்னைப்போன்ற பல்லாயிரக்கணக்கான மக்களை தன் அருளால் ஈர்த்தவர் பகவான் சத்திய சாய் பாபா. அவருடன் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை வைத்து நான் ஒரு புத்தகம் கூட எழுதி இருக்கிறேன். அவரது தாரக மந்திரமான ‘love  all  serve all’ , ‘Help  ever  hurt  never' என்ற சொற்களை பின்பற்றி இன்றும் நான் நடக்கிறேன். தான் வாழந்த காலத்திலேயே வரலாறாக மாறியவர் நமது மறைந்த ஜனாதிபதி ஏ.பி.ஜெ. அப்துல்கலாம். அவரது எளிமை, நேர்மை, தொண்டுள்ளம், உண்மை, இந்த நாட்டுக்கே தன்னை அர்பணித்துக் கொண்ட தன்மை யாரைத்தான் கவராது. அன்னை தெரசா, இந்த மனித குலத்திற்கே அன்பினால் தொண்டு செய் என்று சொல்லாமல் சொல்லிட்டு சென்றவர். என்னுடைய மருத்துவத்துறையில் டாக்டர் எஸ்.எஸ்.பத்திரிநாத், டாக்டர் வி.சாந்தா, இருவரும் தங்கள் வாழ்நாள் முழுவதும் மக்களின் நோய் தீர்ப்பதற்காகவே வாழ்பவர்கள். எனது மறைந்த மனைவி டாக்டர் ரெமா மோகன், கண் மருத்துவத்தில் சிறந்தவர் மட்டும் அல்ல நிர்வாகத் திறமை, துணிச்சல், எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிக்கும் தன்மை ஆகியவைகளை ஒருங்கே அமையப்பெற்றவர். அவர் மறைவு எனக்கு பேரிழப்பு. 
நாடுகள்: என் தொழில் காரணமாக நான் உலகம் முழுவதும் சுற்றியிருக்கிறேன். இயற்கையோடு இணைத்த வாழ்க்கை என்று சொன்னால் ஒரு சில நாடுகளை தான் சொல்ல முடியும். நியூஸிலாந்து (South Island - Milford sound), தென்னாப்பிரிக்கா (Table Mountain), கனடா. இவை எல்லாமே இயற்கை அழகு கொஞ்சும் இடங்கள். ஒவ்வொரு முறை நான் இந்த இடங்களுக்கு செல்லும்போதும் அதன் அழகில் மயங்கி என்னையே மறந்து விடுவேன். 
உணவு: எனக்கு அதிகமாக சைவ சாப்பாடுதான் பிடிக்கும். குறிப்பாக எனது சிறுவயதில் இருந்து நான் அதிகமாக விரும்பி சாப்பிடுவது நமது தென்னகத்து புகழ்பெற்ற தோசைதான். தோசையை மிஞ்ச வேறு உணவு இல்லை. அதற்கு அடுத்து நான் விரும்பி சாப்பிடுவது Paneer/Tofu.
திரைப்படங்கள்: நான் எப்போதுமே படங்களை பார்க்க தவற மாட்டேன். காரணம், அது ஒரு சிறந்த பொழுதுபோக்கு சாதனம் மட்டும் அல்ல, எங்களை போன்ற மருத்துவர்களுக்கு நல்ல படங்கள் கண்டிப்பாக புத்துணர்ச்சி கொடுக்கும். ஆங்கிலத்தில் நான் விரும்பும் திரைப்படங்கள் இரண்டு. ஒன்று டாக்டர் ஷிவாகோ (Dr.Zhivago). இது ஒரு மருத்துவரான, கவிஞனின் கதை. என் வாழ்க்கையில் நான் என்ன ஆகவேண்டும் என்று விரும்பினேனோ அது. அடுத்தது இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து உலகில் உள்ள மக்களை எல்லாம் இசையால் வசப்படுத்திய ‘sound  of  music'. தமிழில் எனது விருப்பமான படம் "கர்ணன்'. 
கவிதைகள்: ஒருமுறை மகாகவி பாலபாரதி ச.து.சு. யோகியாரின் "கவி உலகில் கம்பன்' என்ற நூலை படித்தேன். மகாகவிகள் என்றால் யார் என்று அவர் கூறிய விஷயங்கள் இன்றும் பசுமரத்தாணி போல் என் மனதில் பதிந்துள்ளது. கவிதைகள் என்றால் நம்மை அவர்களுடனேயே அழைத்துச் செல்லவேண்டும். எனக்கு ஆங்கிலக் கவிஞர்கள் பலரையும் அவர்கள் எழுதிய கவிதைகள் மூலம் தெரியும். அதில் பலரும் என்னை கவர்ந்தவர்கள் என்று கூறினாலும் அதில் மூன்று பேர்கள் மிகவும் முக்கியமானவர்கள். அவர்கள் வோர்ட்ஸ்ஒர்த், டென்னிசன், ஷெல்லி. இவர்கள் இயற்கையை பற்றி எழுதிய கவிதைகள் என் நெஞ்சை விட்டு அகலாமல் இன்றும் என்னை கவர்ந்து இழுக்கிறது. 
இசை: என் இளவயதில் நான் அதிகம் கேட்டது பழைய தமிழ் திரைப்படப் பாடல்களைத்தான். அதே போன்று ஆங்கில பாடல்களையும் நான் விரும்பிக் கேட்பேன். ஆனால் இன்று நான் கேட்பது சாய் பஜன் மட்டுமே. அது தவிர, வார்த்தைகள் இல்லா வாத்தியங்கள் இசையை அதிகம் கேட்கிறேன்.
ஓவியங்கள்: இந்த வார்த்தையை சொன்னாலே எனக்கு ஓவியமேதை ராஜா ரவிவர்மா தான் நினைவிற்கு வருவார். அவர் வரைந்த ஒவ்வொரு ஓவியமும் என் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது. இன்றும் அவரது லட்சுமி மற்றும் சரஸ்வதி ஆகிய இரண்டு தெய்வ ஓவியங்கள் பலரது வீட்டின் பூஜை அறையில் இருக்கும். பெண்களை அவர் எவ்வளவு அழகாக, தெய்வாம்சம் பொருந்தியவர்களாக வரைகிறார் என்று நான் நினைப்பதுண்டு. 
பருவகாலம்: ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு காலத்தில் பருவகாலம் மாறும். அவற்றில், பனியுதிர் காலம் என்னை மெய்மறக்கச் செய்யும். அதிலும் அந்தப் பருவத்தின்போது நான் அமெரிக்காவிலோ அல்லது ஐரோப்பாவிலோ இருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். காரணம், மரங்களும் அதன் இலைகளும் இந்த பருவ மாற்றத்திற்கு மாறும் அழகு என்னை மிகவும் ரசிக்க வைக்கும். 
நடிகர்: தமிழர்களின் நாடி நரம்புகளில் நடிப்பை விதைத்து, உலக நடிகர்களின் தலைசிறந்த நடிகராக திகழ்ந்து, நடிகர்களுக்கே திலகமாக இன்றும், என்றும் நமது மக்களின் மனங்களில் வாழும் சிவாஜி கணேசன் தான் என் விருப்பமான நடிகர். இந்தியாவின் எந்த மூலைக்குச் சென்றாலும் அங்குள்ளவர்கள் பெருமையோடு கூறுவது நமது நடிகர் திலகத்தின் நடிப்பைத்தான். அவர் மட்டும் தான் எந்த வேடமாக இருந்தாலும் நம் கண்முன்னே தான் நடிக்கும் பாத்திரமாகவே மாறி மக்களை மகிழ்விப்பவர். 
ஆராய்ச்சி: ஆராய்ச்சி என்றால் எனக்கு மிகவும் விருப்பம் அதிகம். ஆயிரத்திற்கு மேல் நான் ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதி உள்ளேன். அவை எல்லாமே உலக நாடுகளில் உள்ள பல்வேறு ஆராய்ச்சி புத்தகங்களில் பிரசுரமாகி உள்ளது. நாற்பது ஆண்டுகளானாலும் ஆராய்ச்சி செய்வதும், அதை பற்றி எழுதுவதும் எனக்கு சலிக்கவேயில்லை. காரணம் என்னிடம் வரும் மக்களின் நோயை எப்படி தீர்ப்பது என்று நான் தூங்கும் நேரத்தை தவிர சதா சர்வகாலமும் சிந்தித்துக் கொண்டிருப்பதால்தான். 
- சலன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com