சீனத்து தமிழ் குயில்!

சீனத் தலைநகரில் உள்ள பெய்ஜிங் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சீனத்து தமிழ் குயில்!

சீனத் தலைநகரில் உள்ள பெய்ஜிங் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த பல்கலைக் கழகத்தில் பல்வேறு வெளிநாட்டு மொழிகள் கற்பிகப்பட்டு வரும் நிலையில் தற்போது தமிழ்த் துறையும் தொடங்கப்பட்டுள்ளது. நான்காண்டு பட்டபடிப்பு பாடத்திட்டம் கொண்ட இந்த தமிழ் வகுப்பில் 10 சீன மாணவர்கள் சேர்ந்து பயின்று வருகின்றனர். இதுகுறித்து அங்கு தமிழ்த்துறை தலைவராக பணியாற்றும் சூ ஷின் என்ற சீனப் பெண்ணைச் சந்தித்தோம்.. தமிழ் ஆர்வத்தால் தனது பெயரை ஈஸ்வரி என மாற்றிக் கொண்டு, தமிழால் பெருமை பெற்று விளங்கும் அவர் நம்முடன் பகிர்ந்து கொண்ட அனுபவங்கள்: 
தமிழ் மீது உங்களுக்கு எப்படி ஆர்வம் ஏற்பட்டது.. எப்போது தமிழ் கற்க தொடங்கினீர்கள்..
பள்ளிக்கூடத்தில் படித்த போது எதேச்சையாக இந்தியா பற்றிய புத்தகத்தைப் படித்தேன். அப்புறம் 2003-ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தபோது இந்தியாவின் மொழிகளில் ஒன்றை கற்க முடிவெடுத்தேன். அப்போது என்னை அறியாமல் எனக்குள் ஓர் ஆர்வம் தமிழ்மீது ஏற்பட்டது. அதன் பின் அதை கற்க முடிவெடுத்தேன். Communication university of china -வில் தமிழைக் கற்றுக் கொண்டேன். மேலும், Mass communication-ல் பட்டம் பெற்ற பிறகு எனது பெயரை ஈஸ்வரி என மாற்றிக் கொண்டு சீன வானொலியில் பணியாற்றினேன்.
தமிழ் கற்பதற்காக தமிழகம் வந்தீர்களா?
ஆம்! புதுச்சேரியில்தான் தமிழ் படித்தேன். எனக்கு தமிழ் கற்றுக் கொடுத்த பேராசிரியர் பரசுரமன், ரவிசங்கர் முதலிய ஆசிரியர்களுக்கு இப்போது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அங்கு பரதநாட்டியமும் கற்றேன். தமிழ் கலாசாரம் மீது அதிக ஆர்வம் எனக்கு உண்டு. தமிழ் மொழியையும், இலக்கியத்தையும் மிகவும் நேசிப்பவள் நான். 
என்னைப் போலவே மேலும் அதிகமான சீனர்கள் தமிழ் மொழியை கற்றுக் கொண்டு அதன் பெருமையை உணர வேண்டும் என பாடுபட்டு வருகிறேன். இப்போது நான் தமிழ் ஆசிரியராகிவிட்ட போதிலும் என்றும் தமிழ் அன்னையின் மடியில் தவழ்ந்து அம்மொழியை கற்றுவரும் ஒரு மாணவியாகவே இருக்க விரும்புகிறேன்.
தமிழகத்தில் உங்களுக்குப் பிடித்த சுற்றுலா தலங்கள்..
மகாபலிபுரம், கன்னியாகுமாரி, ஊட்டி எனக்குப் பிடிக்கும். மகாபலிபுரத்தின் சிற்பங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.
பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தொடங்குவதற்கு எடுத்துக் கொண்ட முயற்சி..
நான் தமிழ் மொழியையும் பண்பாட்டையும் மிகவும் நேசிக்கிறேன். நான் அனுபவிக்கின்ற இன்பங்களை பிறருடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். தமிழ் இலக்கியப் படைப்புகளை சீன மொழியில் மொழிபெயர்க்கவும் ஆசை. அதனாலே மாணவர்களுக்கு தமிழ் சொல்லிக் கொடுத்து அவர்களும் மொழிபெயர்ப்பில் ஈடுபடச் செய்ய விரும்புகிறேன்.
சீனாவில் தமிழ் கற்கும் ஆர்வம் உள்ளவர்கள் மற்றும் அவர்களது பணி வாய்ப்புகள் குறித்து..
சீனாவில் பலருக்கு தமிழ் மீது ஆர்வம் உண்டு. அடிக்கடி இணையத்தளத்தில் எனக்குத் தெரியாதவர்கள் என்னுடன் தொடர்பு கொண்டு தமிழ் மொழிப் பற்றிய கேள்விகளைக் கேட்கின்றனர். வேலைவாய்ப்புகளுக்கும் பிரச்னையில்லை. மாணவர்கள் தமிழ் குறித்த ஆய்வுகளில் ஈடுபடவேண்டும் என்பதே என் விருப்பம்.
தமிழ் சரளமாக பேசுகிறீர்களே அதற்காக எதுவும் பயிற்சி எடுத்துக் கொண்டீர்களா? 
தமிழ் படிப்பது மிக கடினம். அடிக்கடி மறந்து போகும். ஆனாலும் கடுமையாக முயற்சி செய்து கற்றுக் கொண்டேன். பேச்சு தமிழை விட எழுத்து தமிழ் மேலும் சீராக தெரியும். 
உங்களது தமிழ் பாடத்திட்டத்தில் திருக்குறள் உண்டா?
முதலாவது வகுப்பிலேயே, முதலாவது திருக்குறளை (அகர..) மாணவர்களுக்கு சொல்லி கொடுத்தேன். ஆங்கில விளக்கத்துடன், மாணவர்கள் அதை சீன மொழியில் மொழிபெயர்த்துள்ளனர். எதிர்காலத்தில் படிப்படியாக அதிக குறள்களை அவர்களிடம் அறிமுகப்படுத்துவேன். 15 ஆண்டுகளுக்கு முன் தமிழ் பாடம் கற்ற நான் ஒரு மாணவியாக இருந்த அந்த நினைவு இப்போது எனக்கு வருகிறது. தமிழ்மொழி கற்க சிரமமாக இருந்தாலும் சீன மாணவர்கள் பலரும் அதை கற்க ஆர்வமாக உள்ளனர். நான்கு ஆண்டுகள் தமிழ் இலக்கண இலக்கியங்களை படிப்பவர்கள் ஓராண்டு தமிழ்நாட்டிற்கு கல்விச் சுற்றுப் பயணம் செய்யவும் ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளோம். மொழிப்பாடத்துடன் பொருளாதாரம், தகவல் தொடர்பு, சட்டம், சமூகவியல் ஆகிய பாடங்களை துணையாக தேர்ந்தெடுத்து கொள்ளலாம். என்னைப் போல் தமிழ் மொழியைக் கற்க ஆர்வமுடன் வரும் சீன மாணவர்களும் தமிழ் மொழியின் மூலம் தமிழ் மக்களின் கலாசாரம், பண்பாட்டை அறிந்து புதிய சாதனைகள் புரிவார்கள்.

சீனாவுக்கும் தமிழர்களுக்குமான பாரம்பரிய தொடர்பு குறித்து...
சோழர்கள் காலத்தில் புலிக்கொடி தாங்கிய சோழர்களின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளி சீனாதான், தற்போது சீனாவின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள செஞ்ஜோன் நகரத்தில் 1260-ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஒரு சிவன் கோயிலில் , தமிழ் கல்வெட்டு இருப்பதை நீங்கள் காணலாம். அதன் மூலம் சீனர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே இருந்த நட்பை அறியலாம். நவீன யுகத்தில், சீனாவுக்கும் தமிழ் மொழிக்கும் இடையே ஒரு புதிய தொடர்பு பாலம் சீன வானொலியின் தமிழ் ஒலிபரப்பு மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. 1963}ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சீன வானொலியின் தமிழ்ப் பிரிவு தற்போது தினமும் 2 மணிநேரம் பல்வேறு பல்சுவை நிகழ்ச்சிகளை தமிழ் நேயர்களுக்காக வழங்கி வருகிறது.
வானொலிப் பணி அனுபவம் குறித்து...
சீன வானொலி தமிழ் பிரிவின் முதல் குறிக்கோள் என்னவென்றால், தமிழர்களுக்கு சீனாவைப் பற்றி நன்கு அறிமுகப்படுத்துவதுதான், அதன் தொடர்ச்சியாக சீனர்களுக்கு தமிழ் மொழியையும், தமிழ் கலாச்சாரத்தையும் அறிமுகப்படுத்தி, அவர்களே அந்த நிகழ்ச்சியை வழங்க ஏற்பாடு செய்தனர். மேலும் வானொலிப் பணியின் போது, பல்வேறு இடங்களிலிருந்து பெய்ஜிங்கு வந்த தமிழ் நண்பர்களைச் சந்தித்தேன். அவர்களை பேட்டி கண்டேன். அவர்களின் அனுபவங்களின் மூலம் தமிழர்களின் பார்வையிலான சீனாவை நான் அறிந்து கொண்டேன்.
பிடித்த தமிழ் நூல்கள் மற்றும் கவிஞர்கள், எழுத்தாளர்கள் பற்றி சொல்ல முடியுமா..
எனக்கு மிகவும் பிடித்தது தமிழ் இலக்கியங்களில் வரும் அகநானூறு, புறநானூறு மற்றும் சிலப்பதிகாரம். ஆனால் அவற்றை எல்லாம் விட உலகப் பொதுமறையாம் திருக்குறள், எனக்கு அறிவுச் செல்வம் ஊட்டும் பொக்கிஷமாக இருக்கிறது. இனம், மொழி, மதம் என எந்த பேதமும் இல்லாமல் உள்ளத்தில் அனைவரும் நலமுடன் வாழத் தேவையான அறிவுரைகளை திருக்குறள் நமக்குச் சொல்லி இருக்கிறது. அண்மையில் "மணிமேகலை'யை மொழி பெயர்க்க தொடங்கினேன். சங்க இலக்கியங்களில் "குறுந்தோகை' அதிகமாக படித்தேன். மிகவும் பிடித்திருக்கிறது. 
பேட்டி, புகைப்படம்-தமிழ் சக்தி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com