ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - 74: திராவிடத்தை தமிழர் இயக்கமாக்கியவர்!

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை மிகச் சீரோடும் சிறப்போடும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் அரசு நடத்தி முடித்திருக்கிறது.
சென்னையில் அண்மையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கவிஞர் முத்துலிங்கத்திற்குப் பொன்னாடை போர்த்திச் சிறப்பிக்கிறார் முதலமைச்சர்
சென்னையில் அண்மையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கவிஞர் முத்துலிங்கத்திற்குப் பொன்னாடை போர்த்திச் சிறப்பிக்கிறார் முதலமைச்சர்

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை மிகச் சீரோடும் சிறப்போடும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் அரசு நடத்தி முடித்திருக்கிறது. சென்னையில் நடந்தது மிகப் பிரம்மாண்டமான விழா. அதில் ஒன்றும் சந்தேகமில்லை. குறை சொல்பவர்கள் ஏதேனும் ஒன்றைச் சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.

எம்.ஜி.ஆர். அவர்களுடன் பணியாற்றிய நடிகை நடிகையருக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் சால்வை அணிவித்துக் கேடயம் அளித்துச் சிறப்பித்தார் முதலமைச்சர். பாடலாசிரியர் என்ற முறையில் எனக்கும் சிறப்புச் செய்தார்கள்.

நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுகின்ற வகையில் தங்கப்பதக்கமோ காசோலையோ வழங்கி நம்மைச் சிறப்பித்திருக்கலாம் என்று விருது பெற்ற கலைஞர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள். எனக்கும் அந்த எண்ணமுண்டு. இது ஒரு குறையாக இருந்தாலும் அரசாங்கமே அழைத்துப் பாராட்டியிருக்கிறது. அதைத்தான் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

எம்.ஜி.ஆருக்காக நடத்தப்பட்ட விழா இது.  அது சிறப்பாக நடந்ததில் என்னைப் போன்ற எம்.ஜி.ஆர் பற்றாளர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

சில ஆண்டுகளுக்கு முன் கோவை மத்திய சிறைச்சாலையில் நடந்த ஒரு தமிழ் விழாவுக்கு என்னை அழைத்திருந்தார்கள். கவிஞர் கோவை கோகுலன்தான் என்னை அழைத்துச் சென்றார்.  அங்கிருந்த இல்லவாசிகள் எல்லாரும் மிகப் பண்பானவர்களாக இருந்தார்கள்.  கைதிகளை இல்லவாசிகள் என்று அழைப்பது வழக்கமென்று அங்கு போன பிற்பாடுதான் தெரிந்து கொண்டேன். அங்கிருந்த கண்காணிப்பாளர் முதல் காவல்துறையைச் சேர்ந்த அனைத்து அதிகாரிகளும் மிக்க கண்ணியமானவர்கள் என்பதையும் புரிந்து கொண்டேன்.

இல்லவாசிகளில் பலர் எப்படி இங்கு வந்து சிக்கிக் கொண்டார்கள் என்று பலவகையில் யோசித்தேன். வெளியில் இருப்பவர்களெல்லாரும் யோக்கியமானவர்களும் அல்லர்.  உள்ளே இருப்பவர்கள் எல்லோரும் குற்றவாளிகளும் அல்லர். குற்றவாளிகளாக ஆக்கப்பட்டவர்கள் என்று தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். 

அங்கு பத்தாண்டுகளுக்குமேல் பலர் கைதிகளாக உள்ளனர்.  அவர்களில் பலர் விடுதலை செய்வதற்குத் தகுந்தவர்கள். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கைதிகள் பலரை விடுதலை செய்யும் தமிழக அரசு  கோவை மத்திய சிறைக் கைதிகளின் நிலையையும் எண்ணிப்பார்த்து அவர்களில் விடுதலை செய்யத் தகுந்தவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இதைச் சொல்லும்போது டி.ஆர். மகாலிங்கம் பானுமதி நடித்து 1959-இல் வெளிவந்த  "மணிமேகலை'  படத்தில் கம்பதாசன் எழுதிய ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது.

"உலகமே ஒரு சிறைச்சாலை - இங்கு
உற்ற உயிருக்கு உடலே சிறைச்சாலை
ஐயிரண்டு திங்கள் அன்னை வயிறே சிறைச்சாலை
அணிபருவம் ஏழுக்கும் ஆசையே சிறைச்சாலை
வெயில்தரும் பகலுக்கு இரவே சிறைச்சாலை
விதிமுடிந்தால் இங்கே புதைகுழி சிறைச்சாலை'
சிறைச்சாலையைப் பற்றி கம்பதாசன் எழுதிய சிறப்பான பாட்டு இது. 
கே.பி. சுந்தராம்பாள் நடித்து 1940-இல் வெளிவந்த "மணிமேகலை' என்ற படத்தில் பாபநாசம் சிவன் எழுதிய, 
"சிறைச்சாலை ஈதென்ன செய்யும்
தேகாபிமானமில்லா ஞான தீரரை
சிறைச்சாலை ஈதென்ன  செய்யும்'
என்ற பாடலும் என் நினைவுக்கு வருகிறது.
இதுபோன்று  நல்ல பாடல்கள் எழுதிய கவிஞர்களில் அண்ணல் தங்கோ என்பவரும் ஒருவர். இவர் பாரதிதாசனின் நெருங்கிய நண்பர். இனவுணர்வு மொழியுணர்வு மிக்க கவிஞர். திரைப்பட ரசிகர்களுக்கு இவரைத் தெரியாது. ஏனென்றால் இவர் திரைப்படங்களுக்காகப் பாடல் எழுதியதில்லை. இவர் திரைப்படங்களுக்கு நேரடியாக எழுதாவிட்டாலும், இவர் எழுதிய இசைப்பாடல்களில் சில பாடல் படங்களில் இடம்பெற்றிருக்கின்றன. பாரதியார், பாரதிதாசன், தேசிய விநாயகம் பிள்ளை பாடல்களைப் போல.
இவர் தனித்தமிழ்ப் பற்றாளர். சாமிநாதன் என்ற தன் பெயரை அண்ணல் தங்கோ என்று மாற்றிக் கொண்டார். இவர் அன்றைய வடார்க்காடு மாவட்டம் குடியேற்றத்தில் 1904- ஆம் ஆண்டு பிறந்தவர். குடியேற்றத்தில் காந்தி அடிகளை அழைத்துக் கூட்டம் நடத்தியவர். இவர் தீவிர காங்கிரஸ்காரர்.
கொடுங்கோலன் நீலன் சிலை அகற்றும் போராட்டம், சைமன் கமிஷன் எதிர்ப்புப் போராட்டம், உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டம், அந்நியத் துணி எரிப்புப் போராட்டம் ஆகிய போராட்டங்களில் கலந்து கொண்டு ஐந்தரை ஆண்டுகாலம் சிறையில் இருந்த காங்கிரஸ் பெருந்தியாகிகளில் இவரும் ஒருவர்.
1930-இல் நடந்த உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் மயிலாப்பூர் பகுதிக்கு வி.வி. கிரியை (பின்னாளில் குடியரசுத் தலைவர்) தலைமை தாங்கப் பணித்தார் என்றால் காங்கிரசில் எந்த அளவு செல்வாக்குப் பெற்றவராக அண்ணல் தங்கோ இருந்திருப்பார் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
ராஜாஜியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் 1934-இல் காங்கிரசை விட்டு விலகினார். விடுதலைப் போராட்ட வீரர் என்ற முறையில் இந்திய அரசு வேலூர் நகரில் இவருக்கு வழங்கிய 5 ஏக்கர் நிலத்தை வேண்டாமென்று மறுத்தவர். இதிலிருந்தே இவர் எப்படிப்பட்ட நேர்மையாளர் என்பதை நாம் உணரலாம்.
1924-ஆம் ஆண்டு பெரியாரின்  "குடியரசு' ஏட்டில் துணையாசிரியராகப் பணியாற்றியவர்.  பின்னர் 1940-இல் "தமிழ்நிலம்'  என்ற பத்திரிகையைத் தொடங்கினார்.  இதில் சி.பி. சின்னராஜ் என்பவரைத் துணையாசிரியராகச் சேர்த்துக் கொண்டார்.  அது மட்டுமல்ல சி.பி. சின்னராஜ் என்ற பெயரை சி.பி. சிற்றரசு என்று மாற்றியவர் இவர். நாராயண சாமியை நெடுஞ்செழியன் என்றும்,  அரங்கசாமி என்பவரை அரங்கண்ணல் என்றும் பெயர் மாற்றியவர் இவர்தான்.
வேலூரில் காந்திமதி என்பவர் வீட்டில் வாடகைக்குக் குடியிருந்தபோது காந்திமதி என்ற பெயரை மாற்றி அரசியல் மணியென்றும் பின்னர் மணியம்மை என்றும் அவருக்குப் பெயர் வைத்தார்.  மணியம்மையாரைப் பெரியாரிடம் அறிமுகப்படுத்திய வரும் அண்ணல் தங்கோ என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
குளித்தலையைச் சேர்ந்த தனபாக்கியம் என்பவர் பெயரை நல்ல தமிழில் பொற்செல்வி என்று மாற்றியவரும் இவர்தான். பொற்செல்வி இளமுருகு என்பவரைத் திருமணம் செய்து கொண்டதால் பொற்செல்வி இளமுருகு என்று இவரும் இவர் கணவர் இள முருகு பொற்செல்வி என்றும் தங்கள் பெயரைப் போட்டுக் கொள்வார்கள்.
இளமுருகு அவர்களையும் பொற்செல்வி அவர்களையும் நானும் நன்கறிவேன்; குளித்தலையில் அண்ணா பற்றியும், கலைஞர் பற்றியும் நடந்த கவியரங்கில் என்னை அழைத்துக் கவிபாட வைத்தவர் அவர்.  நான் சொல்வது 1967-68-இல் நடந்த நிகழ்ச்சி.  அது முரசொலி ஏட்டில் நான் பணியாற்றிய காலம்.
அண்ணல் தங்கோவின் பாடல்  "பராசக்தி'  படத்தில்தான் முதன்முதல் இடம்பெற்றது. அதற்கு இசையமைத்தவர் சுதர்சனம்.
"எல்லோரும் வாழவேண்டும் - உயிர்கள்
இன்புற் றிருக்க வேண்டும்
நல்லோர்கள் எண்ணமிது -முத்தம்மா
நல்லற வாழ்வுமிதே
கல்லாதார் என்றொருவர் - நம்மிடையே
இல்லாமல் ஆக வேண்டும்
கொல்லாமை போற்ற வேண்டும் - மனிதர்கள்
கூட்டுறவாக வேண்டும்'
என்று பாடல் தொடர்ந்து போகும்.  டி.எஸ். பகவதியும்,  எம்.எஸ். ராஜேஸ்வரியும் பாடியிருப்பார்கள்.
"பராசக்தி' படம் தணிக்கைக் குழுவில் சிக்கிப்படாத பாடுபட்டது என்பது பலரும் அறிந்த ஒன்று. அன்றைய தணிக்கைக் குழுவுக்குத் தலைவராக இருந்தவர் கே.எஸ். சீனிவாச ஐயங்கார் என்பவர். தணிக்கை குழு உறுப்பினர்களாக சண்டே அப்சர்வர் பி.பாலசுப்பிரமணியம், மஞ்சுபாஷிணி,  செüந்தரா கைலாசம், பேபி கந்தசாமி ஆகிய நால்வர் இருந்தனர்.
சீனிவாச ஐயங்கார் தணிக்கைச் சான்று தரமறுத்து இப்படம் வெளிவரக்கூடாது என்பதற்கு என்னென்ன செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்தார். ஆனால் சண்டே அப்சர்வர் பி. பாலசுப்பிரமணியம் தீவிர முயற்சியெடுத்து தான் உட்பட மூன்று உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கி படம் வெளிவர உதவினார். 
அண்ணல் தங்கோவின் நெருங்கிய நண்பர்களில் இவரும் ஒருவர்.
அன்றைய சினிமா பத்திரிகையாகத் திகழ்ந்த "குண்டூசி' என்ற பத்திரிகை இந்தப் படத்திற்கு எப்படித் தணிக்கைக்குழு சான்றளிக்கலாம். இதெல்லாம் தடை செய்யப்பட வேண்டிய படம் என்று கண்டனம் செய்து எழுதியிருந்தது. "குண்டூசி' ஆசிரியர் கோபால் என்பவர்தான் இப்படி எழுதியிருந்தார்.
படம் வெளிவந்த  ஒரே வாரத்தில் தணிக்கைக் குழு உறுப்பினர் பட்டியலிலிருந்து சண்டே அப்சர்வர் பாலசுப்பிரமணியம் நீக்கப்பட்டுவிட்டார்.
மக்களின் மிகப்பெரிய ஆதரவோடு படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இன்னும் சொல்லப் போனால் சினிமா உலகில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்திய முதல் புரட்சிப்படம் இதுதான். எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு நடிகர் திலகத்தை நமக்குத் தந்த படமும் இதுதான்.
அதுபோல் நடிகர் திலகம் சிவாஜி நடித்த டாக்டர் மு.வ. அவர்களின் கதையான "பெற்ற மனம்' என்ற படத்தில் எஸ். நாகேஸ்வரராவ் என்பவர் இசையில்,
"அன்புத் தோழா ஓடிவா ஆசைத்தோழி ஓடிவா
பண்பில் ஓங்கி வாழவே பாடி ஆடி ஓடிவா'
என்ற பாடலை எழுதியிருக்கிறார்.  இது 
நடிகர் சிவாஜி பாடுவதைப் போல படத்தில் இடம் பெற்றிருக்கும். இதுவும் அவர் இயற்றிய இசைப்பாடல்களில் ஒன்றுதான். டி.ஆர். ராமச்சந்திரன் கதாநாயகனாக நடித்த  "கோமதியின் காதலன்'  என்ற படத்தில் இவர் எழுதிய பாடல் பிரபலமான பாடல்களில் ஒன்றாக விளங்குகிறது.
"தெள்ளித்தரும் தினைமா - முத்தம்மா
தித்திக்கும் நன்மலைத்தேன்
அள்ளித்தரும் சர்க்கரை - கற்கண்டும்
அன்புத் தமிழாமோ
சொல்லினில் தீரெனென்றும் - முத்தம்மா
வில்லினில் சேரனென்றும்
சொல்லித் திரிவதல்லால் - முத்தம்மா
தொண்டென்ன செய்தோமடி'
என்று தொடக்கமாகும். இந்தப் பாடலைப் பாடியவர் சீர்காழி கோவிந்தராஜன். இதற்கு இசையமைத்தவர் ஜி. இராமநாதன். இது 1955-இல் வெளியான பாடம். இதுபோல் இன்னும் சில படங்களிலும் இவர் பாடல் இடம் பெற்றிருக்கிறது.

சினிமாவில் இடம்பெற்ற பாடலைத் தவிர இவர் இசைப்பாடல்கள் நிறைய எழுதியிருக்கிறார். அவை அண்ணல் தங்கோ கவிதைகள் என்று புத்தகமாக வெளிவந்திருக்கிறது. அதைத் தொகுத்தவர் அண்ணல் தங்கோவின் பேரன் அருட்செல்வன் என்பவர்.

அண்ணல் தங்கோ பகுத்தறிவுக் கொள்கையிலும் தனித்தமிழ் உணர்விலும் திளைத்தவர். அதேநேரம் திராவிடன் திராவிடம் என்ற சொல்லை அதிகம் பயன்படுத்தாமல் தமிழன் என்று சொல்வதில் பெருமைப்பட்டவர். திராவிடர் இயக்கம் என்பதற்குப் பதிலாக தமிழர் இயக்கம் என்று சொல்ல வேண்டுமென்று பெரியாரிடம் வாதிட்டவர். மறைமலைஅடிகள், திரு.வி.க., பெரியார், அண்ணா, பாரதிதாசன் போன்றவர்களிடம் நெருங்கிப் பழகியவர். காட்பாடியில் இவர் வீட்டிற்கு அடிக்கடி பாரதிதாசன் செல்வார்.

கொடுங்கோலன் நீலன் சிலை அகற்றும் போராட்டத்தில் ஈடுபட்டதால் 1927 -ஆம் ஆண்டு கண்ணனூர் சிறையில் அடைக்கப்பட்டார். ஓராண்டுக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. கண்ணனூர் சிறையில் இருந்தபோது சிறையில் "யான் கண்ட கனவு'  என்ற கவிதை நூலை எழுதினார். இது 1939-இல் பாரதிதாசன் வாழ்த்துக் கவிதையுடன் புத்தகமாக வெளிவந்தது.

இவருடைய நூல்களையெல்லாம் கலைஞர் தமது ஆட்சிக் காலத்தில் (2008-இல்) நாட்டுடைமையாக்கி அண்ணல் தங்கோ குடும்பத்திற்கு உதவியிருக்கிறார். அதுபோல் அண்ணன் மருதகாசியின் பாடல்களையும் நாட்டுடைமையாக்கியிருக்கிறார். வடார்க்காடு மாவட்டத்திற்குப் புகழ் சேர்த்தவர்களில் அண்ணல் தங்கோவும் ஒருவர். இவர் 1973-ஆம் ஆண்டு காட்பாடியில் காலமானார். கலைஞர் இவரைப் பற்றி முரசொலியில் கட்டுரை எழுதியிருக்கிறார். பாரதிதாசன் எழுதியதைப்போலவே நீண்ட நெடுந்தோற்ற
முடையவர் அண்ணல் தங்கோ. நானும் அவரைப் பார்த்திருக்கிறேன்.

சினிமாவுக்கு வெளியே இருந்த கவிஞர்கள் சிலரது பாடலும் சினிமாவில் இடம் பெற்றிருக்கிறது என்பதை வாசகர்களுக்கு உணர்த்துவதற்காகத்தான் இவரைப் பற்றி எழுதினேன்.

(இன்னும் தவழும்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com