பாடல் எழுதுகையில் அரசியலை ஒதுக்கி வைப்பேன்! - கவிஞர் முத்துலிங்கம்

இயக்குநர் ஆர்.கே. செல்வமணி இயக்கிய பல படங்களில் நான் பாடல் எழுதியிருக்கிறேன். இவர் இயக்குநர் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக இருந்த காலத்திலிருந்தே இவரை நான் நன்கறிவேன்.
பாடல் எழுதுகையில் அரசியலை ஒதுக்கி வைப்பேன்! - கவிஞர் முத்துலிங்கம்

ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - 69

இயக்குநர் ஆர்.கே. செல்வமணி இயக்கிய பல படங்களில் நான் பாடல் எழுதியிருக்கிறேன். இவர் இயக்குநர் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக இருந்த காலத்திலிருந்தே இவரை நான் நன்கறிவேன். இவர் படங்களில் முதலில் நான் பாட்டெழுதிய படம் "செம்பருத்தி' ஒரு நாள் இளையராஜாவைப் பார்க்கப் பிரசாத் ஸ்டூடியோ சென்றிருந்தேன். "செம்பருத்தி' படத்திற்குப் பாடல் ஒலிப்பதிவு நடந்து கொண்டிருந்தது. என்னைப் பார்த்ததும் ஆர்.கே. செல்வமணியைக் கூப்பிட்டு இந்தப் பாட்டை முத்துலிங்கத்தை வைத்து எழுதலாம். அவருக்குப் பாட்டு வருகின்ற காட்சியை விளக்குங்கள் என்றார் இளையராஜா.
டியூன் கேùஸட்டை என் கையில் கொடுத்து விட்டு காட்சியை விளக்கினார் செல்வமணி. பிரசாத் ஒலிப்பதிவுக் கூடத்தின் மேல் மாடியில் இருந்த ஓர் அறையில் அமர்ந்து எழுதினேன். கூடவே அந்தப் படத்தின் இணை இயக்குநரும் இருந்தார். இது மதர்லாண்ட் பிக்சர்ஸ் கோவைத்தம்பியும் செல்வமணியும் சேர்ந்து தயாரித்த படம். இந்தப் படத்தில் தான் நடிகை ரோஜா அறிமுகமானார். பழம்பெரும் நடிகை பானுமதி நடித்த கடைசித் தமிழ்ப் படமும் இதுதான்.

இந்தப் படத்தில் நான் எழுதிய பாடல்
"பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டிக் கலந்தாடிக் கவிபாடவா
மீண்டும் மீண்டும் வேண்டும் - அணை 
தாண்டிப் பார்க்கத் தூண்டும்
அன்புத் தேனே உன்னைத் தானே
சொந்தம் நானே சொந்தம் நானே'
என்ற பல்லவியோடு தொடக்கமாகும். மனோவும், எஸ். ஜானகியும் பாடிய பாடல். பாடலும் பிரபலமானது. படமும் வெற்றிப் படம். இது 1982-இல் வெளியானது.
இதற்கடுத்து செல்வமணி இயக்கத்தில் நான் எழுதிய இரண்டாவது படம் "பொன்விலங்கு' இதற்கும் இளையராஜா தான் இசை. ரம்யா கிருஷ்ணன் பாடுவதுபோல் அந்தப் பாடல் இடம் பெறும்.

"சந்தனக்கும்பா உடம்பிலே 
தந்தனத் தாளம் இடுப்பிலே
மச்சானே வா வா வா
இந்த ஆசை மனம்தான்
இன்னும் அடங்கவில்லே
இது உன்னை நெனச்சு
சரியா உறங்கவில்லை
கோரஸ் : இந்த ஜில்லாக்கு புல்லாக்கு
இது - பல்லாக்கு லோலாக்கு‘
என்று பல்லவி தொடக்கமாகும்.
"கட்டான மேனி கையிலே நீதான்
தொட்டாலே போதும் துள்ளுமே
மத்தாளம் போலே தட்டினாப் போதும்
கட்டாயம் ராகம் சொல்லுமே
எந்நாளும்தான் உந்தன் நெனப்பு
என் தேகம்தான் நல்ல செவப்பு
கத்திரிப் பிஞ்சு - என்னை வச்சு
மெத்தையில் கொஞ்சு
மல்லிகைச் செண்டு - அங்கம் ஒரு 
மாணிக்கப் பந்து
ஆடுது தென்னை தேடுது உன்னை வா வா வா'

என்று ஒரு சரணமும் இதுபோல் இன்னொரு சரணமும் வரும். உமாரமணனும் குழுவினரும் பாடிய பாடல். இது 1983-இல் வெளிவந்தது. இலங்கை வானொலியில் இதை அடிக்கடி அப்போது ஒலிபரப்பினார்கள். இதுபோன்ற பாடல்கள் செல்வமணிக்கு ரொம்பப் பிடிக்கும். பாடலும் பிரபலமானது. படமும் வெற்றி பெற்றது.

அதன் பின் செல்வமணி தயாரித்து இயக்கிய "அதிரடிப்படை' என்ற படத்திற்கு இளையராஜா இசையில் எல்லாப் பாடல்களையும் நான்தான் எழுதினேன். அதற்கடுத்து இவர் இயக்கத்தில் பல படங்களில் எழுதியிருக்கிறேன். அதில் கடைசியாய் எழுதிய படம் "புலன் விசாரணை பார்ட் 2' "காதல்' படத்திற்கு இசையமைத்த ஸ்ரீதர் ராஜன் என்பவர் இசையமைத்திருந்தார். நான் இரண்டு பாடல்கள் இதில் எழுதினேன். பிறைசூடனும் மற்றும் ஒரு பெண் கவிஞரும் பாடல் எழுதியிருந்தார்கள். ஆனால் படம் வெளி வரவில்லை. இப்ராகிம் ராவுத்தர் தயாரித்த கடைசிப் படம் இதுதான் என்று நினைக்கிறேன். அவரும் மறைந்துவிட்டார்.

ஒரு நாள் "தம்பி தங்கக் கம்பி' என்ற படத்திற்காகக் கங்கை அமரன் இசையில் ஒரு பாடல் எழுதஇயக்குநர் கே. சங்கர் என்னை அழைத்திருந்தார். இது விஜயகாந்த் நடித்த படம். பாட்டெழுதுவதற்கு முன்னால் தமிழைப் பற்றிப் பேச்சு வந்தது. டைரக்டர் சங்கர் அவர்களுக்குத் தாய்மொழி மலையாளம் என்றாலும் தமிழ் ஆர்வம் மிக்கவர். அதே நேரத்தில் இறை உணர்வும் மிக்கவர்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை மூகாம்பிகை கோயிலுக்கு முதன் முதல் அழைத்துச் சென்றவரே இவர்தான். இவரது மகளைத் தான் எம்.ஜி. சக்கரபாணியின் மகனுக்குத் திருமணம் செய்து கொடுத்திருந்தார். அந்த வகையில் எம்.ஜி.ஆருக்குச் சம்பந்தி இவர். எம்.ஜி.ஆரிடம் உரிமையுடன் பேசக் கூடியவர். ஆனால் "சார்' என்று தான் எம்.ஜி.ஆரை அழைப்பார்.

இன்னொன்றை இந்த நேரத்தில் நான் அவசியம் குறிப்பிட வேண்டும். அமெரிக்காவிலிருந்து என்னை அரசவைக் கவிஞராக நியமிக்க எம்.ஜி.ஆர் உத்தரவிட்டார் என்றாலும், அவர் அமெரிக்கா செல்வதற்கு முன்னே அது பற்றி அவர் கலந்து பேசியது டைரக்டர் கே. சங்கர் இடத்தில்தான் என்பதை அண்மையில்தான் நான் தெரிந்து கொண்டேன். ஒரு நாள் எம்.ஜி.ஆர். , கே. சங்கரிடத்தில், "முத்துக்கு முத்துப் பல்லாக்கு கொடுக்கலாமென்று நினைக்கிறேன் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்'' என்று கேட்டாராம்.

"எந்த முத்துக்கு என்ன முத்துப் பல்லாக்கு'' என்று இவர் கேட்டிருக்கிறார். "நம்ம கவிஞர் முத்துலிங்கத்திற்கு அரசவைக் கவிஞர் பதவி கொடுக்கலாம்'' என்று நினைக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். "அதை ஏன் என்னிடம் சொல்கிறீர்கள். தாராளமாகக் கொடுக்கலாம். இலக்கியப் புலமை மிக்கவர். எனக்கு மிக்க மகிழ்ச்சி'' என்று தெரிவித்திருக்கிறார்.

எழுத்தாளர் கொற்றவன் என்பவர் கே. சங்கரைப் பேட்டி கண்ட போது இதைச் சொல்லியிருக்கிறார்.

"இது நாட்டைக்காக்கும் கை 
உன் வீட்டைக் காக்கும் கை
இந்தக் கை நாட்டின் நம்பிக்கை
இது எதிர்காலத் தாயகத்தின் வாழ்க்கை'

என்ற முத்துலிங்கத்தின் வரிகள் சத்தியமானவை என்பது எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்தபோது நிரூபிக்கப்பட்டது. அந்த வரிகளின் படியே முதலமைச்சராகி நாட்டைக் காக்க வந்தார். யாருக்கு என்ன தரவேண்டும் என்று அறிந்து தருவதில் எம்.ஜி.ஆருக்கு நிகர் யாருமில்லை என்று சொன்னதாக எழுத்தாளர் கொற்றவன் அந்தப் பேட்டியில் பதிவு செய்திருக்கிறார்.

எம்.ஜி.ஆரைப் பற்றி இயக்குநர் சங்கர் சொன்ன செய்திகள் "உங்கள் ரசிகன்' என்ற புத்தகமாக வெளிவந்திருக்கிறது. அதில் தான் என்னைப் பற்றிய இந்தச் செய்தியை நானே தெரிந்து கொண்டேன். கொற்றவனுக்கு என் நன்றி.

"சங்க காலத்தைப் பொற்காலம் என்று சொல்கிறோமே அது எதனால்'' என்று என்னிடம் கேட்டார் சங்கர்.

நாகரிகம், பண்பாடு, கல்வி, ஒழுக்கம், இலக்கியம், நீதி, நேர்மை, நாணயம் இவையெல்லாம் தழைத்தோங்கி நின்ற காரணத்தால் சங்காலத்தைப் பொற்காலம் என்று சொல்லி இருக்கலாம். அல்லது செம்பொன், வெண்பொன், கரும்பொன், ஐம்பொன் இவற்றின் பயன்பாடு சாதாரண மக்களிடம் கூடப் புழக்கத்தில் இருந்த காரணத்தாலும் அக்காலத்தைப் பொற்காலம் என்று சொல்லியிருக்கலாம். மேலும் கடைச்சங்க காலத்தில்தான் பொற் காசுகள் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டன. அதை வைத்தும் சொல்லியிருக்கலாம் என்றேன்.

"பொற்காசுகளை மிகுதியாகப் பயன்படுத்தினார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? எதை வைத்துச் சொல்கிறீர்கள்'' என்றார்.

"பட்டினப்பாலை' பாடிய கடியலூர் உருத்திரங் கண்ணனார்க்குப் பத்து நூறாயிரம் பொன்னைக் கரிகாற் சோழன் பரிசாகக் கொடுத்தார். இதைக் கலிங்கத்துப் பரணியில் ஜெயங்கொண்டார் பாடலால் அறிகிறோம். "பத்து நூறாயிரம் கொளப் - பண்டுபட்டினப் பாலை கொண்டதும்' என்று கலிங்கத்துப்பரணியில் ஒரு வரி வரும். ஆனால் "தமிழ் விடுதூது' என்ற நூலில் "பாடியதோர் வஞ்சி நெடும்பாட்டால் பதினாறு - கோடிப் பொன் கொண்டது நின் கொற்றமே' என்ற வரி மூலம் பதினாறு கோடிப் பொன் கொடுத்தான் என்ற குறிப்பும் வருகிறது. ஒன்றிலே பத்துக் கோடியென்றும் இன்னொன்றில் பதினாறு கோடியென்றும் வருகிறது. தொகைதான் மாறுபடுகிறதே தவிர கோடிக்கணக்கான பொன் கொடுத்தான் என்ற குறிப்பு மாறவில்லை.

களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் என்ற சேர மன்னனைப் பாடி, காப்பியாற்றுக் காப்பியனார் என்ற புலவர் நூறாயிரம் பொன்னைப் பரிசாகப் பெற்றிருக்கிறார்.

செல்வக்கடுங்கோ வாழியாதன் என்ற சேரமன்னனைப் பாடி கபிலர் நூறாயிரம் பொன்னும், தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை என்ற சேரனைப்பாடி அரிசில் கிழார் ஒன்பது நூறாயிரம் பொன்னும், குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறையைப் பாடி பெருக்குன்றூர்கிழார் முப்பத்தீராயிரம் பொன்னும் ஆடு கோட் பாட்டுச் சேரலாதனைப்பாடி நச்செள்ளை யாரும், காக்கைப் பாடினியாரும் நூறாயிரம் பொன்னும் பரிசாகப் பெற்றிருக்கின்றனர்.

இதில் சேரமன்னர்களைப் பாடிப் பரிசில் பெற்றவர்கள்தாம் அதிகம். ஆகவே கடைச்சங்க காலத்தைப் பொற்காலம் என்று சொல்வது மிகவும் பொருத்தமான ஒன்றுதான் என்று குறிப்பிட்டேன். அவர் மகிழ்ச்சியும் வியப்பும் அடைந்து கைகுலுக்கிப் பாராட்டினார். அப்போது கங்கை அமரனும் கூட இருந்தார்.

சரி பாடலுக்கு வருவோம் என்று சொல்லிவிட்டுப் பாடலுக்கான காட்சியை விளக்கினார். கங்கை அமரன் சிறிது நேரத்தில் ஆர்மோனியத்தில் இரண்டு மெட்டை வாசித்துக் காட்டினார். அதில் ஒன்றை இயக்குநர் சங்கர் தேர்ந்தெடுத்தார். பல்லவியை அங்கேயே எழுதிவிட்டேன்.

"தாய்க் குலத்தைப் பாரடா - இது
சத்தியத்தின் தேரடா
தாய் அழுதா கண்ணீர் விழுந்தா
தாய் நாடே தாங்காதடா
கோரஸ் :- தாய்க்குலத்தை வாழவைக்கும் - நம்ம தம்பி தங்கக் கம்பி சங்கடத்தைத் தீர்த்து வையி - ஏராசா
ஊரிருக்கு உன்னை நம்பி'
என்று ஆரம்பமாகும். அதில் இரண்டு சரணம் வரும். அதில் முதல் சரணம்
"ஊழல் செய்வோரை யெல்லாம்
தூக்கில் போட்டாலே போதும்
லஞ்சம் என்கின்ற சொல்லே
நாட்டில் இல்லாமல் போகும்'
என்று தொடக்கமாகும்.
இரண்டாவது சரணம் இப்படி வரும்.
"சோறு போடாத ஊரை
தீயில் எரிச்சாத்தான் என்ன
சேவை செய்யாதபோது
பதவி போனாத்தான் என்ன - ஊரைக்
கொள்ளையிட ஆளுக்கொரு பதவி
ஏழை மக்களுக்கு யாரு உதவி'

இதுபோல் இன்னும் சில வரிகள் வரும். மக்கள் மனநிலையைப் பிரதிபலிப்பதுபோல் இந்தப் பாடல் இருக்கிறது என்று 1988-ஆம் ஆண்டு இந்தப் படம் வெளிவந்த நேரத்தில் கே.சங்கர் பாராட்டினார்.

இதுபோல் சில படங்களில் அரசியல் கலப்புள்ள பாடல்களை எழுதியிருப்பேன். நான் பாட்டெழுதும்போதோ இலக்கிய மேடைகளில் பேசும் போதோ நான் ஒரு அரசியல் இயக்கத்தைச் சேர்ந்தவன் என்ற எண்ணத்தைத் தூக்கி ஓரத்தில் வைத்து விடுவேன். என்னை அறிந்தவர்களுக்கு இது நன்கு தெரியும்.

(இன்னும் தவழும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com