ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - 70: என்.எஸ்.கேயின் அறிமுகம்!

பழம் பெரும் பாடல் ஆசிரியர்களில், கதை வசன ஆசிரியர்களில் அவசியம் குறிப்பிட வேண்டிய அருங்கலைஞர் கவிஞர் சுப்பு ஆறு முகம்.
ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - 70: என்.எஸ்.கேயின் அறிமுகம்!

பழம் பெரும் பாடல் ஆசிரியர்களில், கதை வசன ஆசிரியர்களில் அவசியம் குறிப்பிட வேண்டிய அருங்கலைஞர் கவிஞர் சுப்பு ஆறு முகம். இவர் வில்லுப்பாட்டு வித்தகர் என்ற வகையில் தான் இவரைப் பலரும் அறிவர். இவர் வில்லுப்பாட்டு, சொல்லுப்பாட்டு, வசனப்பாட்டு என்று அனைத்திலும் வல்லவர்.
கலைவாணர் என்.எஸ்.கே. வால் கலையுலகத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்ட மாணிக்கம் பண்பிலே மாற்றுக் குறையாத தங்கம்.
ஒரு முறை கலைவாணர் நாகர்கோயிலுக்குச் சென்றபோது கவிஞர்சுப்பு ஆறுமுகம் எழுதி அவரே வில்லிசையில் பாடிய காந்திமகான் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியைப் பார்த்திருக்கிறார். காந்தியைப் பற்றி அவர் பாடிய நேரத்தில் 
காந்தி பெயரைச் சொன்னவுடன்
"கம்பெடுத்து வந்த வுங்க - கண்முன்னாலே
அதே கம்பில் காந்திக் கொடி கட்டினாங்க'
என்று பாடியபோது கலைவாணர் கைதட்டி ரசித்ததுடன் ஆகா! அற்புதம் என்று பாராட்டினாராம்.
அதாவது, சுதந்திரத்திற்கு முன்னாலே காந்தி
ஜிக்கு "ஜே' என்றால் போலீஸ்காரர்கள் தடியால் அடிக்கவருவார்கள். சுதந்திரம் பெற்றதும் அடிக்க வந்த தடியில் காந்திக் கொடி கட்டி அவர்களே பறக்க விட்டார்கள் என்ற அர்த்தத்தில் சுப்பு ஆறுமுகம் பாடியிருக்கிறார். அதைப் புரிந்து கொண்டு கலைவாணர் ரசித்திருக்கிறார். ஒரு கலைஞனை இன்னொரு கலைஞன் தான் புரிந்து கொள்வான் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
இந்த நிகழ்ச்சி நடந்தது 1948 - ஆம் ஆண்டு. இவர் அறிவுத்திறமையை வியந்த கலைவாணர் அப்போது கவிஞர் சுப்பு ஆறுமுகத்தின் அம்மா சுப்பம்மாவை சந்தித்து; ""நான் சென்னைக்கு இவனைக் கூட்டிச் செல்கிறேன் இரண்டு மாதத்தில் அனுப்பி வைக்கிறேன் அல்லது இரண்டு மாதத்திற்கு ஒருமுறை அனுப்புகிறேன்'' என்று பொடி வைத்துப் பேசியிருக்கிறார்''  
""என்ன கிருஷ்ணா சொல்கிறாய்  ""எனக்குச் சரியாகப் புரியவில்லை''  என்று அந்த அம்மா சொல்லியிருக்கிறார்.
""என் தாய்க்குப் பிறகு என்னைக் கிருஷ்ணா என்று என் பெயர் சொல்லி அழைத்த தாய் நீங்கள் ஒருவர் தான்''  என்று அவர் காலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கி எழுந்தாராம் என்.எஸ்.கே. அப்போது அந்த அம்மா ""ஏன் கிருஷ்ணா சென்னை, மதுரைக்கு வடக்கே ரொம்பத் தொலைவில் இருக்குமோ'' என்று கேட்டிருக்கிறார். திருநெல்வேலிக்கு வடக்கேயும் அவர் போனதில்லை தெற்கேயும் போனதில்லை என்று தெரிகிறது.  அந்தக்கால அம்மாக்கள் அப்படித்தான்.
அவரிடம் அனுமதி பெற்று சென்னைக்கு சுப்பு ஆறுமுகத்தைக் கூட்டி வந்து "இன்னும் சுவைபட  அந்த வில்லுப்பாட்டை எழுது. நானே அதைப் பாடி அரங்கேற்றம் செய்கிறேன்' என்று சொல்லி, கல்கி தோட்டத்திலே எம்.எஸ்.சுப்புலட்சுமி, சதாசிவம், கல்கி கிருஷ்ணமூர்த்தி, ராஜாஜி, ரசிகமணி, டி.கே.சி, சின்ன அண்ணாமலை மற்றும் குறிப்பிடத்தக்க சிலர் முன்னிலையில் கலைவாணர் அதை அரங்கேற்றம் செய்தார்.
""கவிஞர் சுப்பு ஆறுமுகம் எழுதியதுதான்,  நான் பாடிய இந்த வில்லுப்பாட்டு. இவர்தான் அந்த சுப்பு ஆறுமுகம்'' என்றும் அவரையும் அங்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
வில்லுப்பாட்டுப் பாடலாசிரியராக கலைவாணரால் அறிமுகப்படுத்தப்பட்ட  சுப்பு ஆறுமுகம் பிறகுதான் திரைப்பாடலாசிரியராக அறிமுகமானார்.
இவர் முதன் முதல் பாடல் எழுதிய படம்  "பாரிஜாதம்"  இது  டி.ஆர்.மகாலிங்கம்,  எம்.வி.ராஜம்மா, என்.எஸ்.கே., டி.ஏ.மதுரம் ஆகியோர் நடித்தப்படம். இது 1948-இல் ஆரம்பித்து 1950-இல் வெளியான படம். கலைவாணர் பாகவதரோடு சிறையில் இருந்து வெளிவந்த நேரம். கலைவாணர் தான் ""சுப்பு ஆறுமுகத்தை வைத்துப் பாட்டெழுதுங்கள். நானும் மதுரமும் பாடுகிறோம்'' என்று சொல்லி எழுத வைத்தார். 
கலைவாணர், நடிக்கும் படத்தில் அவரே காட்சி அமைத்து அவரே வசனங்களை எல்லாருக்கும் சொல்லிக் கொடுத்து விடுவார் என்பது அன்றைய கலையுலகைச் சார்ந்த அனைவரும் அறிவார்கள்.
புராணக்கதையில் வருகின்ற பாரிஜாதப் பூவின் சிறப்பைச் சொல்வது போல் இல்லாமல் அதை வைத்து சமுதாயப் பிரச்னையைச் சொல்வது போல் பாட்டெழுது என்று கலைவாணர் சொல்லியிருக்கிறார்.  உடனே இவர், 
"பாரிஜாதப் பூவு - நம்ம
பசிதனைப் போக்கிடுமா'
என்று முதல் இரண்டு வரி எழுதிவிட்டு
"நெல் நாற்றுக்கட்டை  எடுத்துக்காட்டி
இதைப் - பக்குவமாய்ப் பாதுகாத்தால்
பட்டினி வந்திடுமா' 
என்று பல்லவியை முடித்தாராம்.  என்.எஸ்.கே. மகிழ்ச்சியில் கட்டி அணைத்துக் கொண்டு  ""என்னுடைய சிந்தனை உனக்கும் இருக்கிறது சுப்பு ஆறுமுகம்''  என்று பாராட்டினாராம். இது எழுதி மெட்டுப் போட்ட பாட்டு. அந்தக் காலக் கலைஞர்கள்தாம் உண்மையான கலைஞர்கள்.
ஆனால் சுப்பு ஆறுமுகம் பெயர் இந்தப் படத்தில் இடம் பெறாது. பாடல் என்.எஸ்.கே. குழுவினர் என்றுதான் இடம் பெற்றிருக்கும். இந்தப் பாடலுக்கு என்.எஸ்.கே. தான் மெட்டுப் போட்டார்.
பாடலாசிரியர்கள் பட்டியலில் திரையில் இவர் பெயர் இடம் பெற்ற முதல் படம் "விடுதலை'. இது 1951-இல் வெளிவந்தது. வடநாட்டு இசையமைப்பாளர் கேல்கர் என்பவர் இசையமைத்த படம். இந்தப் படத்தின் இயக்குநர் ராம்நாத் சேகர். இதில் மூன்று பாடல்களை சுப்பு ஆறுமுகம் எழுதியிருக்கிறார்.சித்தூர் வி. நாகையாவும், நடிகர் மனோகரும் நடித்த படம்.  சூல மங்கலம் ராஜலட்சுமி முதல் முதல் பாடகியாக அறிமுகமானது இந்தப் படத்தில் தான்.
"இனிதான தென்றல் எனைப்பாடத் தூண்டுதே
என்பாட்டைத் தான்சுமந்து எங்கெங்கோ செல்லுதே
ஏழையின் குடிசையிலே இருப்பவன் மாடிதனிலே
வேற்றுமை பாராமல் வீசிடும் இளந்தென்றல்
எனைப்பாடத் தூண்டுதே'
இது பல்லவி. தொடர்ந்து சரணம் வரும். இதுதான் சூலமங்கலம் ராஜலட்சுமி முதன்முதல் பாடிய கவிஞர் சுப்பு ஆறுமுகத்தின் பாடல்.
சுப்பு ஆறுமுகம் எழுதிய 
"இறைவா பொய்தனைக் காட்டி மெய்தனைக் கொன்று
புதைத்தவன் நான் இறைவா'
என்ற கருத்துள்ள பாடலொன்றை வி. நாகையா பாடியிருப்பார்.
அதுபோல் பி.பி. சீனிவாஸ் பாடிய முதல்பாடல் இடம் பெற்ற படமும் இதுதான். ஆனால் இந்தப் படம் வெளிவருவதற்கு முன் அவர் இரண்டாவதாகப் பாடிய  "ஜாதகம்'  என்ற படம் முதலில் வெளிவந்துவிட்டது.
"விடுதலை' படத்தில் பி.பி. சீனிவாஸ் பாடிய பாடல் இதுதான்.
"அன்போடு இன்பமாக வாழலாம் நண்பனே
என்னாலே நீ உன்னாலே நான்
முதலில் நாம் கடமைகளைச் செய்யணும்
முடிவினிலே உரிமைகளைக் கேக்கணும்
எல்லாருக்கும் எல்லாம் பொதுவாகணும் - அப்புறம்
ஏழைகளைக் கதையில்தான் பார்க்கணும்'
இந்தப் பாடலில் கம்யூனிசக் கருத்து இருந்ததாலோ என்னவோ பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரம் சுப்பு ஆறுமுகத்தைக் கட்டிப்
பிடித்துப் பாராட்டினாராம். அப்போது சினிமாவில் நுழைவதற்குப் பட்டுக்கோட்டை முயற்சி செய்து கொண்டிருந்த காலம்.
வலம்புரி சோமநாதன் தயாரித்த 
"திருமணம்' என்ற படத்தில் 
"கும்பிடக் கைகள் நடுங்கிடுதே 
கூப்பிட நாவும் குழறிடுதே' 
என்ற இவர்பாடலை தண்டபாணி தேசிகர் பாடியிருப்பார். ஆனாலும் "திருமணம்' படத்தில் சுரதா எழுதிய 
"எண்ணமெல்லாம் ஓர் இடத்தையே நாடுதே - 
என் கண்ணிரண்டும் ஓர் முகத்தையே தேடுதே' 
என்ற பாடல்தான் பிரபலமான பாடல். இந்தப் படத்திற்கு இசையமைத்தவர் எஸ்.எம். சுப்பையா நாயுடு.
1956-இல் வெளிவந்த "கண்ணின்மணிகள்' என்ற படத்தில் சுப்பு ஆறுமுகம் எழுதிய,
"காலம் மாறிப் போச்சே - அகப்பை
கணவன் கையில் ஆச்சே
வேலை அவளுக்காச்சே - புருஷன்
வீட்டில் இருக்கலாச்சே
தாய்ப்பால் நின்னாச்சே - அகப்பை
தகர டப்பா பால் ஆச்சே'
என்ற பாடலை என்.எஸ்.கே. பாடியிருப்பார். அப்போது அவர் உடல்நலம் இல்லாமல் இருந்த நேரம். தயாரிப்பாளர் மிகவும் சிரமப்பட்டதால் பணமே வாங்காமல் இவரே சென்று பாடி ஒலிப்பதிவு செய்து கொடுத்தார். அந்த அளவு மனிதநேயம் மிக்கவர் என்.எஸ்.கே. இந்தப் படத்தின் இசையமைப்பாளர் எஸ்.வி. வெங்கட்ராமன். அவர் வராமலே பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இப்போது அப்படி நடக்குமா?
அதுபோல் சிவாஜி, பத்மினி நடித்த "பாக்கியவதி', ஜெமினி கணேசன் பத்மினி நடித்த "மீண்ட சொர்க்கம்'  ஆகிய படங்களிலும் பாடல் எழுதியிருக்கிறார்.
"துள்ளித் துள்ளி ஓடுது
மெல்ல மெல்லப் பாடுது
கிளியே என்கிளியே
ஆட்டம் ஜோரு அழகும் ஜோரு
கிளியே என் கிளியே'
என்ற "மீண்ட சொர்க்கம்'  படத்தில் இவர் எழுதிய பாடலை ஜிக்கி பாடியிருப்பார். இதில் 
"துயிலாத பெண்ணொன்று கண்டேன்' 
என்ற கண்ணதாசன் பாடல் பிரபலமான பாடல். சுப்பு ஆறுமுகம் பாடலும் பிரபலமான பாடல்தான். 
மதுரை கல்பனா தியேட்டரில்தான் இந்தப் படத்தைப் பார்த்தேன். பாடலாசிரியர் வரிசையில் சுப்பு ஆறுமுகத்தின் பெயரை இந்தப் படத்தில் பார்த்தேன் என்பது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ஆனால் அந்தத் தியேட்டர் இன்றைக்கு இல்லையென்று நினைக்கிறேன்.
கவிஞர் சுப்பு ஆறுமுகம் நாற்பது படங்களுக்குப் பாடல் எழுதியிருக்கிறார். இதுதவிர இவர் கதை எழுதிய அல்லது கதை வசனம் எழுதிய அல்லது வசனம் எழுதிய படங்கள் ஏறத்தாழ இருபத்தைந்து படங்களாவது இருக்கும்.
நடிகை கே. ஆர். விஜயா நடித்து ஜி.வேலுமணி தயாரித்து,  இயக்கிய  "அன்னை அபிராமி'  என்ற படத்திற்கு கதை வசனத்தோடு ஐந்து பாடல்களை எழுதியிருக்கிறார்.  இதில் "கலைமகள்' ஆசிரியர் கி.வா. ஜெகந்நாதன் ஒரு பாட்டு எழுதியிருப்பார்.
ஜி.என். வேலுமணி தயாரிப்பில் ஜெய்சங்கர், ராஜஸ்ரீ நடித்த "மனைவி'  படத்திற்கு சுப்பு ஆறுமுகம் வசனம் எழுதியிருக்கிறார். அதில் "பெண்ணின் பெருமையே பெருமை' என்ற பாடலை கே.வி. மகாதேவன் இசையில் சுப்பு ஆறுமுகம் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலை பி. சுசீலா பாடியிருப்பார்.
சிவாஜி நடித்த "ஹிட்லர் உமாநாத்'  என்ற படத்தில் சுருளிராஜன் பாடுவது போல் வருகின்ற வில்லுப் பாட்டு இவர் எழுதிய பாட்டுத்தான்.
"செல்வமகள்'  என்ற படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதியவர் சுப்பு ஆறுமுகம். வேதாந்தம் ராகவைய்யா இயக்கத்தில் "உலகம் இவ்வளவுதான்' என்ற படத்திற்கும் கதை வசனம் எழுதியவர் சுப்பு ஆறுமுகம். இந்தப் படத்திற்கு இசையமைத்தவர் வேதா.
கே.எஸ். கோபால கிருஷ்ணன் தயாரித்து இயக்கிய கே.ஆர். விஜயா,  நாகேஷ் நடித்த "சின்னஞ்சிறு உலகம்' என்ற படத்திற்கு மூலக்கதை சுப்பு ஆறுமுகம்தான்.
பல படங்களுக்குப் பலர் எழுதிய கதை வசனங்களைச் செப்பனிட்டுக் கொடுத்திருக்கிறார். நாகேசுக்காக நகைச்சுவைக் காட்சிகளைப் பல படங்களுக்கு இவர் எழுதியிருக்கிறார். இப்படி இருபது படங்களுக்காவது இவர் எழுதியிருப்பார் என்று நினைக்கிறேன். ஏ.எல். நாராயணனும் நாகேசுக்காக பல நகைச்சுவைக் காட்சிகளைப் பல படங்களுக்கு எழுதியிருக்கிறார். அவரே எனக்கு அதைச் சொல்லியிருக்கிறார்.
"உலகம் சிரிக்கிறது',  "அன்பு மகன்' , "புனர் ஜென்மம்',  "புனிதவதி', "ஏன்', "பொற்சிலை'  போன்ற பல படங்களுக்குப் பாடல்கள் எழுதியிருக்கிறார். பல விருதுகள் பெற்றிருக்கிறார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வாழ்க்கை வரலாற்றை வில்லுப் பாட்டாக இவர் எழுதிப் பாடியிருக்கிறார். அந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி நடிகர் திலகம் சிவாஜி இவரை வாழ்த்தியிருக்கிறார். எம்.ஜி.ஆர் அவர்களாலும் பாராட்டப் பெற்றவர் இவர்.
2005-இல் டில்லியில் அப்துல்கலாம்  சங்கீத நாடக அகாடமி சார்பில் புரஸ்கார் விருதை கவிஞர் சுப்பு ஆறுமுகத்திற்கு வழங்கிச் சிறப்பித்தார்.  என்னைப் போலவே தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளத் தெரியாதவர் சுப்பு ஆறுமுகம்.

(இன்னும் தவழும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com