125 நிமிடங்கள்... 45 ராகங்கள்... !

ஆண்டுதோறும் நவராத்திரி விழாவுக்கு முன்பாக, தனது தாயார் இந்திரா சிவசைலம் பெயரால், மியூசிக் அகாதெமியுடன் இணைந்து கர்நாடக இசைக் கலைஞர் ஒருவரைத் தேர்வு செய்து,
125 நிமிடங்கள்... 45 ராகங்கள்... !

ஆண்டுதோறும் நவராத்திரி விழாவுக்கு முன்பாக, தனது தாயார் இந்திரா சிவசைலம் பெயரால், மியூசிக் அகாதெமியுடன் இணைந்து கர்நாடக இசைக் கலைஞர் ஒருவரைத் தேர்வு செய்து, பரிசு வழங்கி வருகிறார் டாஃபே அதிபர் மல்லிகா சீனிவாசன். இந்த ஆண்டுக்கான இந்திரா சிவசைலம் விருது பெறுகிறவர் வீணை இசைக் கலைஞர் ஜெயந்தி குமரேஷ்.
 சரஸ்வதி வீணையை வாசிக்கும் ஜெயந்தி குமரேஷ் வெறும் வீணை வாசிப்போடு மட்டும் நிற்பவர் அல்ல. ஆராய்ச்சியாளர், மெட்டமைப்பாளர், கற்பனைத் திறன் மிகுந்த கலைஞர். பிற இசைத் துறையினருடன் இணைந்து பணியாற்றுவதில் வல்லவர். குரு பத்மாவதி அனந்தகோபாலன் அவர்களிடம் 22 ஆண்டுகள் குருகுல வாச முறைப்படி வீணை கற்றுக்கொண்டவர். பலவித பாணிகள் பற்றி ஆராய்ச்சி செய்து இவர் தயாரித்த கட்டுரைக்காக, டாக்டர் பட்டம் பெற்றவர்.
 ஜெயந்தி குமரேஷ் வாசிக்காத உலக மேடைகள் இல்லை. இளம் தலைமுறையினரை ஈர்த்த பெருமை இந்தக் கலைஞருக்கு உண்டு. பாரிஸில் இந்தியா ஃபெஸ்டிவல், க்வீன்ஸ் லேன்ட் மியூசிக் ஃபெஸ்டிவல், சிட்னி மியூசிக் ஃபெஸ்டிவல், நார்த்வெஸ்ட் ஃபோக் லைஃப் ஃபெஸ்டிவல், சான்பிரான்சிஸ்கோ ஜாஸ் ஃபெஸ்டிவல், லண்டன் பிபிசி, ஸ்காட்லாந்து மற்றும் பங்களாதேஷ் விழாக்கள், இலங்கை, மொரீஷியஸ், ஜெர்மனி, மலேஷியா, சிங்கப்பூர், துபாய், லக்ஸம்பர்க், ஸ்விட்சர்லாந்து, நார்வே, போலந்து மற்றும் க்ரோஷியா என்று பல உலக நாடுகளின் மேடைகள் இவர் வீணை வாசிப்பை ரசிகர்களிடம் எடுத்துச் சென்றிருக்கின்றன.
 லண்டன் ஆல்பர்ட் ஹாலில் நிகழ்ச்சி வழங்குவது என்பது பெருமையானது என்பார்கள். அவ்வளவு எளிதில் அங்கே நிகழ்ச்சி வழங்கிவிட முடியாது. ஜெயந்தி அதையும் விட்டுவைக்கவில்லை! அதே போலத்தான் பாரிஸில் உள்ள தியேட்டர் டி வில்லாவும்.
 ஜெயந்தி வாங்கிய விருதுகளும் ஏராளம். "கலைமாமணி, சங்கீத சூடாமணி, விசுவகலா ரத்னா, வீணா நாதமணி என பட்டியல் நீளும்... மற்ற வீணைக் கலைஞர்களுக்கு இல்லாத பெருமை ஜெயந்திக்கு உண்டு. இவர் உருவாக்கிய இந்தியன் நேஷனல் ஆர்கெஸ்ட்ரா, இந்தியாவிலிருந்து 22 இசைத்துறைக்கலைஞர்களை ஒன்றாக இணைத்து, இவர் கிருஷ்ண கான சபாவில் நடத்திய நிகழ்ச்சிக்கு இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் இருந்து பாராட்டுகள் குவிந்தன.
 ஜுகல் பந்தி நிகழ்ச்சிகளிலும் பங்கு கொண்டிருக்கிறார். தபலா கலைஞர் ஜாகிர் உசேனுடன் இணைந்து இவர் வழங்கிய நிகழ்ச்சி குறிப்பிடத்தக்கது. கணவர் வயலின் கலைஞர் குமரேஷுடன் இணைந்து இவர் நடத்திய இந்த நிகழ்ச்சி லண்டன் ராயல் ஆல்பர்ட் ஹாலில், பிரிட்டிஷ் பிலார்மோனிக் ஆர்க்கெஸ்ட்ராவுடன் நடைபெற்றது. இசைத் துறையில் எந்த வித சவாலையும் ஏற்றுச் சிறப்பாகத் தன் நிகழ்ச்சியை வழங்க வேண்டும் என்பதில் ஜெயந்தி குமரேஷ் குறியாக இருப்பார்.
 புதுமை ஏதும் செய்திருக்கிறாரா?: "மிஸ்டீரியஸ் ட்யூவாலிடி' என்ற ஆல்பத்தில் ஒரே ஒரு வாத்தியம் - வீணை - மட்டுமே வைத்துக் கொண்டு வாசித்திருக்கிறார். இதில் என்ன சிறப்பு என்றால், ஒரே வாத்தியம் என்ற அடிப்படையில் அமைந்தாலும், அதில் சிம்பனி அம்சத்தைக் கொண்டுவர இவரால் முடிந்திருக்கிறது. அதுபோன்று, தொடர்ச்சியாக 125 நிமிடங்களுக்கு, 45 ராகங்களை இடைவிடாது வாசித்த பெருமையும் ஜெயந்திக்கு உண்டு. பக்க வாத்தியம் ஏதும் இல்லாமல் இதை வழங்கினார் ஜெயந்தி.
 "என் மற்றொரு குரு, வீணை பாலசந்தர் இப்படி 45 ராகங்களை மாலையாகக் கோர்த்து வாசித்திருக்கிறார். அதன் தூண்டுதல்தான் நான் செய்த முயற்சி'' என்கிறார்.
 ஜெயந்தி வீணை மூலம் கதைகளும் சொல்வார். இவர் வீணையில் கதையை வாசிக்க, வாசிக்க, அதில் வரும் நிகழ்ச்சிகளுக்குச் சித்திரம் தீட்டுவார் ஓவியர். இதுவும் இவரது புதுமையின் வெளிப்பாடே.
 லால்குடி பரம்பரையைச் சேர்ந்த ஜெயந்தி, தாயார் லால்குடி ராஜலக்ஷ்மியிடம் ஆரம்பத்தில் கற்றுக்கொண்டார். அப்போது இவருக்கு வயது மூன்றுதான். பின்னர் வீணை விதுஷி பத்மாவதி அனந்தகோபாலன் அவர்களால் மெருகேற்றப்பட்டார்.
 நன்றாகப் பேசக் கூடியவர் ஜெயந்தி. ஸ்பிக்மெக்கே, ஐஐடி, ஐஐஎம் என்று பல மேடைகளில் இவர் நிகழ்த்தும் லெக்சர்-டெமான்ஸ்ட்ரேஷன்கள் இளைய தலைமுறை ரசிகர்களை இவருக்கு உருவாக்கித் தந்திருக்கின்றன. அமெரிக்காவில் எத்னோ மியூசிக் துறையுடன் இணைந்து இவர் நடத்திய இசைப் பட்டறை வகுப்புகள் இவருக்குப் புகழ் தேடித் தந்தவை.
 ஜெயந்திக்கு மியூசிக் தெரபியில் அதிக ஆர்வம் உண்டு. ரத்த அழுத்தத்துக்கும், ஆர்த்ரைடிஸýக்கும் இவர் மியூசிக் தெரபி பயன்படும்'' என்கிறார்.
 - சாருகேசி
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com