நகரங்களின் அன்னை! - சாந்தகுமாரி சிவகடாட்சம்

நூறு கோபுரங்களின் நகரம்', "எல்லா நகரங்களுக்கும் அன்னை' என்று போற்றப்படுகின்ற நகரமாகத் திகழ்கிறது பிராக் (Prague). ஒருமுறை ஜெர்மனியில் இருந்தபோது,
நகரங்களின் அன்னை! - சாந்தகுமாரி சிவகடாட்சம்

சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 37
நூறு கோபுரங்களின் நகரம்', "எல்லா நகரங்களுக்கும் அன்னை' என்று போற்றப்படுகின்ற நகரமாகத் திகழ்கிறது பிராக் (Prague). ஒருமுறை ஜெர்மனியில் இருந்தபோது, அங்கு வசித்து வரும் எங்களுடைய நண்பரிடம் அடுத்த முறை ஐரோப்பா வரும்பொழுது, செக் ரிபப்ளிக்கின் தலைநகரமான பிராக்குக்குச் செல்ல வேண்டும் என்ற விருப்பத்தை வெளியிட்டேன்.
"ஓ! கோல்டன் நகரத்திற்கு செல்லப் போகிறீர்களா' என்றார்.
"என்ன! கோல்டன் சிட்டியா?' என்றேன்.
"ஆமாம் சாந்தி, புனித ரோமானிய சக்கரவர்த்தியும், செக் நாட்டின் அரசருமாக இருந்த சார்ல்ஸ் IV ஆட்சியின்போது பிராக் அரண்மனைகளின் கோபுரங்கள் எல்லாம் தங்கக் கவசத்தை அணிந்து கொண்டன. இதைத் தவிர (Rudolf) ருடால்ஃப் மன்னரின் ஆட்சியின்போது ரசவாதிகள் 
(alchemists) வரவழைக்கப்பட்டனர். எதற்கு தெரியுமா?'
"தெரியாது' என்று நான் பக்கவாட்டில் என் தலையை அசைக்க,
"சாதாரண உலோகங்களைத் தங்கமாக்க' என்றதும் என் மனக்கண்முன் தகதக என்று ஜொலிக்கும் கோபுரங்களைக் கொண்ட நகரம் விஸ்வரூபம் எடுத்தது.
இது நடந்தது 2010-ஆம் ஆண்டில், அடுத்த ஆண்டே அதாவது 2011- இல் நானும், என் கணவரும் பிராக்கை நோக்கிப் பயணப்பட்டோம்.
நான் சிறுமியாக இருந்தபோது சரித்திரப் புத்தகங்களில் செக்கஸ்லோவாகியா என்ற நாடு இருந்தது. அதனுடைய வரலாற்றைப் பற்றி படித்திருந்தேன். ஆனால் இப்போது ஏன் செக் ரிபப்ளிக் என்று அழைக்கிறார்கள் என்று வியந்து, அதைப்பற்றி ஆராய்ந்தபோது கிடைத்த தகவல் இது. 
1918-1992 வரை செக்கஸ்லோவாகியாவாக இருந்த நாடு, பிறகு இரண்டாக பிளவுபட்டு இன்று செக் ரிபப்ளிக் என்றும், சுலோவேகியா என்றும் அழைக்கப்பட்டு, ஜனவரி 1-ஆம் தேதி 1993 முதல், இரண்டு தனித்தனி நாடுகளாக இயங்குகிறது. இந்தப் பிளவு அமைதியான முறையில் அரங்கேறி இருக்கிறது.
பிராக் நகரத்தின் மண்ணை விமானத்தின் சக்கரங்கள் முத்தமிட்டு நின்றது. நானும் என் கணவரும் பிராக்கில் கழித்த அந்த ஐந்து நாட்களை இப்போது திரும்பிப் பார்த்தாலும் என் நெஞ்சம் விம்முகிறது. மீண்டும் மீண்டும் அந்த நகரத்துக்குச் செல்ல என்னைத் தூண்டுவது எது? மத்திய ஐரோப்பாவின் செழுமையையும், மகத்துவத்தையும், கட்டடக்கலையின் மேன்மையையும், மனதை மயக்குகின்ற வரலாற்றையும் தன்பால் கொண்டிருந்ததாலா, அல்லது நகரத்தை அணைத்துக்கொண்டு ஓடும் வல்டாவா (Valtava) நதியின் அழகினாலா, இதற்கு குறுக்காகக் கட்டப்பட்டிருக்கும் சார்ல்ஸ் பாலத்தின் பிரம்மாண்டத்தாலா, ஆடம்பரமான, கம்பீரமான முகப்புகளையுடைய, கற்பனைக்கு அப்பாற்பட்ட நம்பமுடியாத கோதிக் (Gothic) தேவாலயங்களாலா, அரண்மனையின் உள்பகுதிகளில் காணப்பட்ட அலங்காரங்களினாலா என்றால் இவை எல்லாவற்றாலும்தான் என்பது என் பதிலாக இருக்கும்.
பிராக் நகரத்தின், உருளை கற்கள் பதிக்கப்பட்ட சாலைகளில், நடப்பதே ஒரு சுகானுபவமாக இருந்தது. சுற்றி இருந்த காட்சிகள் என்னை வரலாற்றின் இடைக் காலக்கட்டத்திற்கு அழைத்துச் சென்றது, உருளை கற்கள் மீது மோதி என் காலணிகள் எழுப்பிய சத்தமே அவ்வப்போது என்னை தற்காலத்திற்கு அழைத்து வந்தது.
நானும் என் கணவரும் பிராக்குக்கு சென்ற மூன்றாவது நாளின் மாலைப்பொழுது, 1357-ஆம் ஆண்டு அரசர் சார்ல்ஸ் IV கட்டத் தொடங்கிய சார்ல்ஸ் பாலத்தின் மீது நடந்து சென்று கொண்டிருந்தோம். 1402-இல் முடிவடைந்த இந்த பாலத்தின் பெயர் சார்ல்ஸ்-சாக இருப்பதில் வியப்பில்லைதானே!
ஓல்டு டவுனையும், (Lesser Town) லெஸ்ஸர் டவுனையும் இணைக்கும் இந்த பாலத்தில் இரு பக்கங்களிலும் முப்பது சிலைகள் அலங்கரிக்கின்றன. இந்தச் சிலைகளின் அழகை ரசித்துக்கொண்டே நடந்தோம். இடையிடையே வல்டாவா நதியில் படகுகளில் ஜாலி சவாரி செய்பவர்கள் எங்கள் கண்களில் பட்டனர். பாலத்தின் இருபுறமும், ஓவியர்கள், விருப்பப்படும் நபர்களை உட்கார வைத்து, வரைந்து கொண்டிருந்தனர், விற்பனையாளர்கள் பல பொருட்களை கடை விரித்திருந்தனர். மாலைநேரத்து சூரியன் மறையத் தொடங்கி இருந்தான். அவனுடைய சிவந்த ஒளிக் கதிர்கள் பட்டு சுற்றி இருந்த கலைநயமிக்க கட்டடங்களும், அவைகளின் தங்க கோபுரங்களும், மணப்பெண்ணின் கன்னங்களாகச் சிவந்திருந்தன. சில்லென்ற குளிர்காற்று எங்கள் மேனியைத் தழுவிச் சென்றது. பாலத்தின் மேல் இருந்த பேண்டு வாத்தியக்குழு இனிமையான இசையை இசைத்துக் கொண்டிருந்தது. ஆகா! இதுதான் சொர்க்கம் என்று என் உள்ளம் கூவியது. இயற்கை அன்னை வரைந்து எடுத்த தலைசிறந்த ஓவியமாக அந்த இடம் காட்சி அளித்தது. இந்த சூழ்நிலையை ரசித்துக் கொண்டே சார்ல்ஸ் பாலத்தின் மறுமுனையில் இருந்த ஒரு ரெஸ்டாரண்டுக்குள், காபி சாப்பிடுவதற்காக நுழைந்தோம். அந்த இடத்தின் வெளிப்பகுதியில் நாற்காலிகளைப் போட்டிருந்தனர். அதில் இரண்டைத் தேர்ந்தெடுத்து அமர்ந்தோம். எங்களுக்கு ஒரு இருக்கை தள்ளி ஒரு நபர், எதிரே தெரிந்த எழில்மிகு காட்சியை, கையில் வைத்திருந்த பெரிய டிராயிங் புத்தகத்தில், வரைந்து பிறகு அதற்குத் தக்க வண்ணங்களைப் பூசிக் கொண்டிருந்தார்.
ஓவியத்தின் அழகில் மயங்கி வாவ்! என்றேன். பிறகு பரஸ்பரம் அறிமுகம் அரங்கேறியது.. அவர், ஆஸ்திரேலியாவில் பல் டாக்டராக இருக்கிறாராம். பிராக் நகரத்தின் அழகு அவரை அடிக்கடி இங்கே வரவைக்கிறது என்றார்.
பிறகு, "இங்கே எவ்வளவு நாட்கள் இருக்கிறீர்கள், நீங்களும் ஒரு இருதய மருத்துவர் என்பதால் நான் ஒரு இடத்தைப் பற்றிச் சொல்கிறேன். "கார்லோகி வாரி' என்கின்ற இந்தப் பகுதிக்கு நீங்கள் கட்டாயமாகச் செல்லவேண்டும். அங்கே வருகின்ற சுனை நீரின் தண்ணீர் பல நோய்களைக் குணப்படுத்தும் தன்மையுடையது. நேரில் சென்று பார்த்தால்தான் புரியும், இதைத்தவிர அங்கே இப்போது சர்வதேச நாட்டுப்புறக்கலைத் திருவிழா நடந்துகொண்டிருக்
கிறது'' என்றார்.
கரும்பு தின்னக் கூலியா. மறுநாளே "கார்லோகி வாரி'யை நோக்கிப் பயணப்பட்டோம். அங்கே கண்டது என்ன?
- தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com