தேர்ந்தெடுங்கள்... பொழுதுபோக்கை!

அமைதியான மற்றும் நிம்மதியான வாழ்க்கையை நடத்துபவர்களுக்குத்தான் பொழுது போக்கு இருக்க முடியும் என்று கருதப்படுகிறது.
தேர்ந்தெடுங்கள்... பொழுதுபோக்கை!

அமைதியான மற்றும் நிம்மதியான வாழ்க்கையை நடத்துபவர்களுக்குத்தான் பொழுது போக்கு இருக்க முடியும் என்று கருதப்படுகிறது. ஆனால் உண்மையில், தொடர் பணிச்சுமைகளால் அவதிப்படுவோருக்கும், மன அழுத்தத்துடன் வாழ்க்கையைக் கழிப்போருக்கும்தான், பொழுது போக்கு தேவைப்படுகிறது. பொழுது போக்கு நடவடிக்கைளில் ஈடுபடுவதால் என்ன பயன்? கொஞ்சம் பார்க்கலாம்.
 ஓய்வு நேரத்தைப் பயனுடையதாக்கும்: தாங்கள் மேற்கொண்டுள்ள செயல்கள் அனைத்தையும் சுமைகளாகக் கருதும் நபர்கள், மகிழ்ச்சியடையும் ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும். அதுதான் வாழ்க்கைக்கு புத்துயிர் கொடுக்கும். அன்றாடப் பணிகளில் மூழ்கியிருக்கும் நபர்களால், குறிப்பிட்ட செயலுக்காக தங்களது நேரத்தை ஒதுக்க முடியாது. அதுபோல, பணிகளில் இருந்து சிறிது இடைவெளி எடுத்துக் கொள்ளவோ, அமர்ந்து, ஒய்வு எடுத்துக் கொள்ளவோ அவர்களால் முடியாது. எனவே சிறிது நேரம் கிடைத்தாலும், அந்த நேரத்தில், பொழுது போக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவதால், மனம் புத்துணர்ச்சி அடைகிறது.
 சமூகத் தொடர்பு: பொழுது போக்குகள் எல்லாம் பெரும்பாலும் குழு நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாகத்தான் இருக்கும். அதாவது பிறருடன் சேர்ந்து  பொழுது போக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவோம். இதனால் சமூகத்துடனான தொடர்பு நமக்குக் கிடைக்கிறது. அதனால் பல நன்மைகள் நமக்குக் கிடைக்கின்றன. பொழுது போக்கு நம்மை பிறருக்கு மிகவும் நெருக்கமுள்ளவர்கள் ஆக்குகிறது.
மகிழ்ச்சி: பொழுதுபோக்கு ஆக்கப்பூர்வமான மனநிலையை ஏற்படுத்துகிறது. அது நமது வாழ்க்கையை மதிப்புடையதாக மாற்றுகிறது. பொழுதுபோக்கினால் நாம் மகிழ்ச்சி அடைகிறோம். ஒய்வு நேரத்தை இன்பமாகக் கழிக்கிறோம். சோர்வு நம்மை அண்டாது. பொழுது போக்கு நடவடிக்கைகள், ஒட்டுமொத்த வாழ்க்கையையும் மகிழ்ச்சிகரமானதாக மாற்றியமைக்கின்றன.
மனநிறைவு: அர்த்தமுள்ள மற்றும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு, ஆக்கப்பூர்வமான மனநிலை, மனநிறைவு ஆகியவை முக்கியமானதாகும். தனிப்பட்ட திறமைகளைப் பயன்படுத்தி ஒரு காரியத்தில் ஈடுபட்டு வெற்றி பெறும்போது நமக்கு மனநிறைவு கிடைக்கும். இது நாம் ஈடுபட்டிருக்கும் பணியில் முழுமையாக ஈடுபட வழிவகுக்கும். மனநிறைவுகளை நாம் தொடர்ந்து பெறுவது, நமது மனஅழுத்தத்தைக் குறைக்கும்.   
 உடல்நலம் மேம்படும்: வாரம் ஒருமுறை 20 நிமிடம் வரையில் ஒருவர் உடற்பயிற்சி போன்றவற்றில் ஈடுபட்டால், களைப்பு மற்றும் சோர்வால் பாதிக்கப்படுவது குறையும் என்று ஆய்வுத் தகவல் ஒன்று தெரிவிக்கிறது. அதேபோல், ஓய்வு நேரங்களில் மகிழ்ச்சி தரும் பொழுது போக்கு செயல்களில் ஒருவர் ஈடுபடுவார் எனில், குறைந்த ரத்த அழுத்தம் போன்ற நோய்களில் இருந்து விடுபட முடியும். அவர்களின் உடல்நலமும் முன்பை விட சீரான நிலையை அடையும். 
வெறும் பொழுதுபோக்கல்ல: பொழுதுபோக்கு என்றவுடன் மனதுக்கு மகிழ்வு தரும் ஒரு செயல் என்று நினைத்து காலத்தை வீணாகக் கழித்துவிடாதீர்கள். அலுவலகத்தில் எழுத்துப் பணி செய்து கொண்டிருப்பவர், உடல் உழைப்புக்குத் தொடர்பில்லாதவர்கள், தோட்ட வேலைகளைச் செய்வதைப் பொழுதுபோக்காகக் கொண்டிருந்தால், அவருடைய மனதுக்கும் நல்லது. உடலுக்கும் நல்லது.
 இருக்கிற வேலையில் உறுதித்தன்மை இல்லை. எப்போது வேண்டுமானாலும் வேலை போகலாம் என்ற நிலையில் இருப்பவர்கள், தமக்குப் பிடித்த துறையில் புதிதாக ஏதாவது ஒன்றைக் கற்றுக் கொள்ளலாம். அதை மிகவும் மகிழ்ச்சியாகச் செய்தால் அதுவே சிறந்த பொழுதுபோக்காகிவிடும். 
 தேவையில்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றுவது, சீட்டாடுவது, வெட்டிக் கதைகள் பேசுவது எல்லாம் பொழுது போக்கல்ல. பொழுதைக் கொல்பவை.
 தேர்ந்தெடுங்கள் உங்கள் பொழுதுபோக்கை! 
- வீ.சண்முகம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com