வலைகளும்  தூண்டில்களும்! 

"ஏய் ஆதி...  இன்னும் இரண்டு நாளிலே எக்ஸôம் இருக்கு... இப்ப ப்ரெண்ட்ஸ் கூட எங்க சுத்தப் போற?''
வலைகளும்  தூண்டில்களும்! 

சுய முன்னேற்றம் - 54
"ஏய் ஆதி...  இன்னும் இரண்டு நாளிலே எக்ஸôம் இருக்கு... இப்ப ப்ரெண்ட்ஸ் கூட எங்க சுத்தப் போற?''
"ஒரு புதுப் படம்..மா.. இன்னும் ரிலீஸ் கூட ஆகவில்லை. எங்களுக்கு ஸ்பெஷல் ஷோ.. பார்த்துவிட்டு உடனே வந்திடுவேன்''
"போன வாரமும் இதே போல எதையோ சொல்லித்தான் ஒரு நாள் பூரா காணாமப் போயிட்ட''
"அதுவா  மொபைல்ல ஒரு புது கேம் வந்திருக்கு. அதை விளையாடப் போயிருந்தோம். விடும்மா.. ஒனக்கு சொன்னா புரியாது''
ஆம். படிப்பையும் பயிற்சிகளையும் மறக்கடிக்கச் செய்து இளைஞர்களை ஈர்க்க இன்று பல தூண்டில்கள் போடப்படுகின்றன. பல வலைகளும் வீசப்படுகின்றன. தூண்டில்கள், காத்திருந்து தனித்தனியாக மீன்களை இழுக்கும் என்றால், வலைகளோ கொத்துக் கொத்தாக மீன்களை அள்ளிவிடும் ஆற்றலைக் கொண்டுள்ளன. வாழும் மீன்களெல்லாம் வலைகளுக்கும், தூண்டில்களுக்கும் தப்பி வாழ்பவை. தமக்குப் போடப்படும் தூண்டில்களிலிருந்து தப்பும் இளைய தலைமுறையே முன்னேற்றம் நோக்கி நகரும் திறம் கொண்டது.
கவனச் சிதறல்களும் ஈர்ப்புகளும்
இன்றைய மாணவரைப் படிப்பிலிருந்து திசை திருப்ப, எத்தனையோ விஷயங்கள் சுற்றிச் சூழ்ந்துள்ளன. கலைநிகழ்ச்சிகள், நாடகங்கள், கேளிக்கைகள், போட்டிகள். இவற்றை 
ரசிக்கவோ அல்லது இவற்றில் பங்கு பெறவோ மாலை நேரங்களில் அல்லது விடுமுறை நாட்களில் மாணவர்கள் தங்கள் நேரங்களைச் செலவு செய்தது அந்தக் காலம். ஆரம்ப காலங்களில் அரசின் தொலைக்காட்சி மாலை வேளைகளில் மட்டுமே இயங்கிக் கொண்டிருந்தது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நேரம் அதிகரித்து காலை தொடங்கி இரவு வரை என்று நீண்டு, பிறகு இருபத்திநான்கு மணி நேரமும் நிகழ்ச்சிகள் என்றாகிவிட்டன. தொடர்ந்து தனியார் சேனல்களும் சின்னத்திரைப் பட்டியலில் சேர, இன்று நூற்றுக் கணக்கான சேனல்கள் எல்லா இந்திய மொழிகளிலும் நிகழ்ச்சிகளைத் தயாரித்து ஒளிபரப்புகின்றன. 
பிறந்து தலை நிமிர்த்திப் பார்க்கும் குழந்தைகள் முதல் முடங்கிக் கிடக்கும் முதியோர் வரை அனைவரையும் ஈர்க்கும் இத்தகைய சேனல்களின் நிகழ்ச்சிகள், எந்த விதத்தில் இளைய சமுதாயத்துக்குப் பயனுள்ளதாக இருக்கின்றன எனும் கேள்விக்கு, மனத்துக்கு நிறைவைத் தரும் யாதொரு பதிலும் கிடைக்கவில்லை. நிகழ்ச்சிகளின் தரத்தையும், நோக்கங்களையும் பெரும்பாலும் விளம்பரதாரர்களின் வருகையே நிர்ணயிக்கின்றன. வீட்டிலிருக்கும் பெரும்பாலான நேரங்கள், இதன் மூலமாக மாணவர்களுக்குப் பயன்படும் நேரங்களாக இல்லாமல் போய்விடுகின்றன.  பெற்றோர்களும் வேலைக்குச் சென்று திரும்பும் இல்லங்களில் மாணவர்கள் வெகு எளிதில் வழிதவறிப் பொழுதுகளை வீணடிக்கும் பழக்கத்திற்கு உள்ளாகிவிடுகின்றனர். 
திரைப்படங்கள், தொலைக்காட்சி சேனல்கள் அல்லது வெள்ளித்திரை, சின்னத்திரை என்று பிரபலமாக அழைக்கப்படும் பொழுதுபோக்கு ஊடகங்கள் தங்கள் நிகழ்ச்சிகளை, படகில் சென்று கடலில் மீன்களைப் பிடிக்க வலைகளை வீசிப் போடுவதைப் போன்று மக்களை நோக்கி வீசுகின்றன. இவற்றில் சின்ன மீன்களும் பெரிய மீன்களும் நாளும் சிக்கி மடிகின்றன;  வாழ்வை இழக்கின்றன. கற்பனைகளை அடிப்படையாகக் கொண்ட நிழல்களை நம்பி, அந்த பாதிப்பில் இளைய தலைமுறையினர் வன்முறையிலும், தோல்வியிலும், நம்பிக்கையின்மையிலும் தம்மை இழந்து கொண்டுள்ளனர். இந்த எதிர்மறைப் போக்கைத் (Negative trend) தவிர்த்தால்தான், முன்னேற்றப் பாதையில் முதல் அடியை எடுத்து வைக்க முடியும்.
வலைவீசும் வலைத் தளங்கள்  
தொலைகாட்சித் தொந்தரவெல்லாம் ஒன்றுமே இல்லையென்று சொல்லும் அளவிற்கு இன்று இளைய தலைமுறையை ஆட்டிப்படைப்பது, இணைய வலைத்தளங்களும் அவற்றை இறக்குமதி செய்து கொள்ள உதவும் ஸ்மார்ட் கை பேசிகளும்தான் (Smart cellphones).. திரையரங்குகளிலோ நண்பர்கள் வீடுகளிலோ சென்று பத்துப் பேராகச் சேர்ந்து, படம் பார்க்கும் பழக்கங்கள் இன்றையச் சூழலில் மலையேறிவிட்டன.  யார் எங்கிருந்தாலும் கேளிக்கைகளும் பொழுதுபோக்கு நிகழ்வுகளும், பணம் வைத்து ஆடுகின்ற இணையதள ஆட்டங்களும் விரல் நுனித் தொடுதல்களில் வந்துவிட்டன. இவற்றின் பாதிப்பு இளையதலைமுறையினர் இடையே மோசமான விளைவுகளை உண்டாக்காமல் தடுக்க யார் பொறுப்பு ஏற்கப் போகிறார்கள்? மாணவர்களின் கவனத்தையும் நேரத்தையும் களவாடுகின்ற இத்தகைய தூண்டில்கள்,  ஒவ்வொரு கை பேசியிலும், ஐ போனிலும், ஐ பேடிலும் செயலிகள் (Apps) மூலமாக எதிர்பார்ப்புக்களோடு காத்திருக்கின்றன. 
மாணவர்கள் பிறரோடு தொடர்பு கொண்டு பேசுவார்கள், குறுஞ்செய்தி அனுப்பியோ கிடைக்கப் பெற்றோ பாடத்தில் கவனம் இழப்பார்கள் என்பன போன்ற காரணங்களுக்காக, வகுப்பறைகளில் செல்போன்கள் எடுத்துச் செல்வது கூடாது என்ற தடையை விதித்திருந்தார்கள். இன்றோ வகுப்பறைக்குள் மாணவர்கள் தங்கள் கைபேசியில் முழுநீளத் திரைப்படங்களையே பார்க்கமுடியும் என்ற அளவில் டெக்னாலஜி வளர்ந்துள்ளது. வகுப்பறைக்குள் எவ்வாறு தொழில்நுட்பத்தை மாணவர்கள் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் (Abuse of technology in classrooms) என்பது பற்றிப் பல ஆய்வுக் கட்டுரைகள், இந்தியப் பல்கலைக்கழகங்களில் வெளியிடப் பட்டுள்ளன.
வகுப்பறை என்பது தேர்வுக்கான பாடங்களைக் கற்றுக் கொடுக்கக் கூடிய இடம் மட்டுமன்று;  அது மாணவர்கள் ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தையும், கட்டுப்பாடுகளின் அவசியத்தையும் கற்றுணரக்கூடிய இடம். கவனச்சிதறல்கள் (distractions) இல்லாமல் ஒரு பேச்சையோ அல்லது பயிற்சியையோ முழுமையாக மனத்தில் வாங்கிக் கொள்ளப் பயிலும் இடம். வகுப்பறையிலேயே இன்றைய தொழில்நுட்பம் தவறாகப் பயன்படுத்தப்படுமென்றால், அதன் விளைவுகளைப் புரிந்து கொண்டு மாணவர்கள் விலகக் கற்றுக் கொள்ள வேண்டும்.  இத்தகைய தூண்டில்களில் சிக்காமல் தங்கள் இலட்சியத்தை நோக்கிப் பயணம் செய்யும் மனப்பாங்கினை இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். 
வலையில் சிக்காத மீன்கள்
இயந்திர மீன்பிடி படகுகள் (Trawlers) மிக எளிதாக நிறைய மீன்களைப் பிடிக்கும் ஆற்றல் கொண்டவை. விரைவாக நீந்தும் மீன் வகைகளே இவற்றிலிருந்து தப்பிப் பிழைக்க முடியும்.  பரிணாம வளர்ச்சியில், தகுதி உடையோரே தப்பிப் பிழைப்பர் (survival of the fittest) என்ற விதிப்படி, கடலில் தற்போது விரைவு மீன்களே அதிகம் பெருகிவருகின்றன என்று கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் (University of Glasgow) ஆய்வு ஒன்று குறிக்கின்றது. அதுபோலத் தம்மை நோக்கி வீசப்படுகின்ற கவனச் சிதைவு வலைகளிலிருந்து மீள வேண்டுமானால், தம் குறிக்கோள்களை நோக்கி இளைஞர்கள் விரைவாக நகர்ந்து தப்ப வேண்டும். முன்னேற்றத்திற்கான முதல்படி இது.
எந்தப் பாதையும் பயணத்திற்கு ஏற்ற பாதையாக இயற்கையாகவே அமைந்திருக்காது. பயணம் மேற்கொள்ளும் ஆர்வமுள்ளவர்கள் பாதைகளைச் சீர் செய்து கொண்டே பயணத்தையும் தொடர்வார்கள். முன்னேறப் பாதையும் அப்படித்தான்.  உங்களைத் திசைதிருப்பி விழுங்க நினைக்கும் வலைகளையும் தூண்டில்களையும் கண்டறியுங்கள்  அதன் பின் அவற்றை விட்டு விலகி நடந்து முன்னேறுங்கள். ஆம். இதனை உணர்ந்தவர்கள் வலைக்குள்ளும் சிக்கமாட்டார்கள்;  தூண்டில்களிலும் தொங்க
மாட்டார்கள்.
- தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com