எதிர்காலம்... சிகையியல் படிப்புக்கு!

ட்ரைகாலஜி (Trichology) என்பது சிகை நலம் குறித்து படிக்கும் மருத்துவத் துறையின் சிறப்புப் பிரிவு. இது தலைமுடி, உச்சந்தலை மற்றும் அதில் ஏற்படும் நோய்கள் குறித்து
எதிர்காலம்... சிகையியல் படிப்புக்கு!

ட்ரைகாலஜி (Trichology) என்பது சிகை நலம் குறித்து படிக்கும் மருத்துவத் துறையின் சிறப்புப் பிரிவு. இது தலைமுடி, உச்சந்தலை மற்றும் அதில் ஏற்படும் நோய்கள் குறித்து ஆழமாகக் கற்பது. தலையில் ஏற்படும் வழுக்கை, செதில், அரிப்பு, சொறி, சிரங்கு, செம்பட்டை, முடி கொட்டுதல், முடி உருக்குலைதல், பேன், பொடுகு, தலை காய்ந்து வறண்டு போவது உள்ளிட்ட அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வைப் பரிந்துரைப்பது.

உடற்கூறுஇயல், உடற்செயலியல், வேதியியல், முடி வளர்ச்சி மற்றும் நோய்கள் உள்ளடங்கியவை குறித்த ஆழ்ந்த கற்றலுடன் அண்மைக்காலமாக அதிக முக்கியத்துவம் பெற்று வருகிறது ட்ரைகாலஜி துறை. 

தற்போதைய காலகட்டத்தில் மக்கள் தங்கள் உடல்நலம், அலங்காரம், அழகு ஆகியவற்றில் அதீத ஆர்வம் காட்டி வருகின்றனர். பல்வேறு மாசு, அகச்சிவப்பு, புற ஊதாக்கதிர்கள் (U V rays), தலைக்கு உபயோகிக்கும் வேதிப் பொருள்கள், தலை அல்லது தலைமுடியைப் பாதிக்கும் வகையில் இயற்கைக்கு மாறாக வளைத்து செய்யப்படும் சிகை அலங்காரம் போன்றவை வயது வேறுபாடின்றி இளம் வயதிலேயே பல்வேறு வகையான தலைமுடி மற்றும் உச்சந்தலை பிரச்னைகளுக்கு காரணமாக அமைகின்றன.

ட்ரைகாலஜி முடித்தவர்கள் உடல்நலப் பணியாளர்கள், சிகை விஞ்ஞானிகள், சிகை மருத்துவர்கள், சிகை மற்றும் உச்சந்தலை நிபுணர்கள் என சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் முழுமையான மருத்துவர்களாக இருக்க வேண்டிய தேவை இல்லை என கூறப்படுகிறது. ட்ரைகாலஜிஸ்ட் என்பவர் சிகை திருத்துபவரோ அல்லது அழகுக் கலை நிபுணரோ அல்ல. சிகை மற்றும் உச்சந்தலை குறித்து சிக்கலான பிரச்னைகளுக்கு தீர்வு கூறும் விஞ்ஞானி எனக் கூட கூறலாம்.

தன்னிடம் வருவோரை மதிப்பிட்டு, அவர்களுக்கு உள்ள பிரச்னை அல்லது நோய் குறித்து தீர விசாரித்து, அதற்கான காரணங்களை கண்டறிந்து உரிய சிகிச்சை அளிப்பதே ட்ரைகாலஜிஸ்டுகளின் பணி. மருத்துவரீதியாக தகுதி பெறாத ஒருவர் ட்ரைகாலஜிஸ்டுகளுக்கு உண்டான பணியை செய்யக்கூடாது.

International Association of Trichologists-Australia மற்றும் The Institute of Trichologist -London ஆகியவற்றுடன் இணைவு பெற்று இந்த பாடங்களை நடத்துகின்றன. MET-Richfeel Institute of Trichology என்ற நிறுவனம்தான் இந்தியாவில் முதன்முதலாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட டிப்ளமா, டிகிரி ட்ரைகாலஜி படிப்புகளை வழங்கியது.

மும்பை கல்வி அறக்கட்டளை, ரிச்பீல் ட்ரைகாலஜி சென்டர், International Association of Trichologists-Australia ஆகியன இணைந்து இந்த கல்வியை வழங்குகின்றன. ரிச்பீல் நிறுவனத்தின் ட்ரைகாலஜி 3 மாத டிப்ளமா கோர்ஸை Science Graduates, 
Pharma Graduates, R&D Professionals, Paramedicals, Clinical Researchers, Nurses ஆகியோர் பயிலலாம். இதன்மூலம் இளநிலை பட்டம் முடித்து தொடர்ந்து உயர்கல்வி பயில முடியாதவர்கள் பல நிறுவனங்களில் உடனடி வேலைவாய்ப்பைப் பெறமுடியும். அதோடு திறமையும், நம்பிக்கையும் உள்ளவர்கள் தனித்து நின்றும் வெற்றி பெற முடியும்.

சான்றிதழ் பெற்ற அழகுக்கலை நிபுணர்கள், சிகை அலங்காரம் செய்வோர் பிளஸ் 2 முடித்திருந்தாலும் இந்த டிப்ளமாவைப் பயிலலாம். இதன்மூலம் அவர்களது பணிவாய்ப்பு மேலும் அதிகரிக்கும். 

மேலும், ரிச்பீல் நிறுவனம் Certified Medical Trichologist Programme என்ற 6 மாத சான்றிதழ் பயிற்சியை MBBS, MD, BHMS, BAMS போன்ற தகுதிபெற்ற மருத்துவர்களுக்கு மட்டும் நடத்துகிறது. 

மும்பையில் உள்ள Institute of Cosmetic and Laser Surgery center, சென்னையில் உள்ள Vcares Global Institute of Health Science, VLCC Institute போன்ற நிறுவனங்களும் ட்ரைகாலஜி கல்வியை வழங்கி வருகின்றன. இதில், Undergraduate Advanced Hair Science (Trichology), Professional Certificate course in Trichology, Diploma in Trichology, Professional Post Graduate Diploma in Medical Trichology போன்ற பாடத்திட்டங்கள் உள்ளன.

தலைமுடி உதிர்தல், வழுக்கை, உச்சந்தலை நோய்கள் நாடுகடந்து அனைவருக்கும் பொதுவானது என்பதால், ட்ரைகாலஜி முடித்த நல்ல மொழிவளம் உள்ளவர்களுக்கு அனைத்து நாடுகளிலும் மருத்துவமனைகள், தலைமுடிக்கான பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், முடிமாற்று சிகிச்சையகங்களில் வேலை வாய்ப்புகள் உள்ளன. ஆராய்ச்சியாளர், கெüரவ விரிவுரையாளர், துப்பறியும் துறையில் பணி ஆகிய வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. குறிப்பாக, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் ட்ரைகாலஜிஸ்டுகள் மிக அதிக அளவில் தேவைப்படுவதாக தகவல் உள்ளது.

ஒருவரின் வயதைப் பேசுவதில், ஆரோக்கியத்தைக் கூறுவதில் அவரின் தலைமுடி முக்கிய பங்கு வகிப்பதால், அது அவரின் முக்கிய சொத்தாகவே பார்க்கப்படுகிறது. 

எனவே, இந்தத் துறையில் சிறப்பான சேவையாற்றி மக்களின் நம்பிக்கையைப் பெறும் ட்ரைகாலஜிஸ்டுகளுக்கு ஊதியம் என்பது எல்லையில்லாதது. என்றாலும், தொடக்கநிலை ட்ரைகாலஜிஸ்டுகள் மாதம் குறைந்தது ரூ. 30 ஆயிரம் வரையும், அனுபவம் பெற்ற, தேர்ந்த ட்ரைகாலஜிஸ்டுகள் மாதம் ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை கூட ஈட்ட முடியும். ட்ரைகாலஜி முடித்த, உரிய கருவிகளுடன் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு இது பல மடங்கு அதிகமாக இருக்கும்.
- இரா.மகாதேவன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com