சிரித்து வாழ வேண்டும்! வெ.இறையன்பு  ஐ.ஏ.எஸ்.

வாழ்க்கையைப் பின்னோக்கிப் பார்த்தால் நாம் மகிழ்ச்சியாக இருந்த தருணங்களும், ஒன்றாகச் சிரித்த நிகழ்வுகளுமே நினைவுக்கு வருகின்றன.
சிரித்து வாழ வேண்டும்! வெ.இறையன்பு  ஐ.ஏ.எஸ்.

உச்சியிலிருந்து தொடங்கு-30
வாழ்க்கையைப் பின்னோக்கிப் பார்த்தால் நாம் மகிழ்ச்சியாக இருந்த தருணங்களும், ஒன்றாகச் சிரித்த நிகழ்வுகளுமே நினைவுக்கு வருகின்றன. திரைப்படங்களில் கூட சிரிப்புக் காட்சிகளே திரும்பத் திரும்பக் காட்டப்படுகின்றன. சொல்கிறவரும் சிரித்து, கேட்பவரும் சிரித்து அனுபவிப்பது நகைச்சுவையை மட்டுமே.

மகாத்மா காந்தி, "நான் நகைச்சுவை உணர்வு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் எப்போதோ காலாவதியாகியிருப்பேன்'' என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார். அவருடைய எல்லாப் புகைப்படங்களிலும் சிரித்துக் கொண்டிருப்பது போலத்தான் தோற்றம் இருக்கும். இப்போதும் பெரிய மனிதர்கள் அவர்களுடைய சிரிக்கிற புகைப்படங்களையே வெளியிடுகிறார்கள். காந்தியடிகள் அதிக நகைச்சுவை உணர்வு கொண்டவர். 

சிரிக்கும்போது மொத்த உடலும் ஓடுவதைப்போல பயிற்சிக்குள்ளாகிறது. மனம் மென்மையாகிறது. இதயம் முறையாக இயங்குகிறது. ரத்த அழுத்தம் சீராகிறது. மூளை அதிக இணைப்புகளை உண்டாக்குகிறது. மொத்தத்தில் நிகழ்காலத்தில் உள்ளம் நிறைந்துவிடுகிறது. 

நகைச்சுவை உணர்வு நுண்ணறிவோடு தொடர்புடையது. "உம்'மென்று இருப்பவர்களுக்கு நுண்ணறிவு குறைவு என்று பொருள். அந்த நொடியில் வாழ முடிந்தவர்கள் மட்டுமே நகைச்சுவையாகப் பேச முடியும். கட்டிக் கொடுக்கும் கட்டுச்சோறு அல்ல நகைச்சுவை. அது சமயோசித புத்தியால் நிகழும். 

சேலத்தில் ஏழாம் எண் பேருந்து ஒன்று உண்டு. அதில் எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு ஏறுவார்கள். நிற்க இடம் கிடைக்காது. அதற்குக் காரணம், அதில் பணியாற்றிய நடத்துநர். நகைச்சுவையாகப் பேசுவார். பயணிகள் சிரித்துக்கொண்டே பயணிக்கும்போது அலுப்பு தெரியாது. போகிற இடம் விரைவில் வந்ததைப்போலத் தோன்றும். அவருக்கு இயற்பெயர் என்ன என்று தெரியாது. மக்கள் வைத்த பெயர் நாகேஷ் கண்டக்டர். 

சிறிது நேரம் கிடைத்தாலும் சிரிக்கவே விரும்புகிறோம். நாம் சிரிக்கும்போது அழகு கூடுகிறது. உண்மையான நகைச்சுவை உணர்வு அடுத்தவர்களைக் கேலி செய்வதில் இல்லை. நம்மை நாமே பார்த்து சிரித்துக் கொள்வதும், அடுத்தவர்கள் நம்மைக் கிண்டல் செய்யும்போது கோபப்படாமல் வாய்விட்டுச் சிரிப்பதும். நான் அடுத்தவர்களைக் கேலி செய்வேன். ஆனால் என்னை யாரும் எதுவும் சொல்லக்கூடாது என்று நினைப்பவர்கள் அராஜகவாதிகள். 

நான் பல பெரியவர்களோடு பழகியிருக்கிறேன். அவர்களுடைய நகைச்சுவை உணர்வு அபாரமாக இருந்தது. அதன் காரணமாகவே எவ்வளவு பெரிய சிக்கல்கள் வந்தாலும் அதை இடிதாங்கிபோல ஏற்றுக் கொண்டார்கள். அந்த நிகழ்வையும் நகைச்சுவையாக மாற்றி சிரிப்பார்கள். அதன் பரிமாணம் குறையும். சிறிது நேரத்தில் அதைத் தீர்க்கும் உபாயங்கள் மிதந்து வரும். அவர்கள் உடல்நலம் அத்தனைப் பிரச்னைகளுக்கு நடுவிலும் சீராக இருந்ததற்கு அந்த நகைச்சுவை உணர்வே காரணம். 

என்னோடு ராஜிவ் ஜலோட்டா என்கிற நண்பர் பயிற்சி பெற்றார். மத்தியப்பிரதேசத்தைச் சார்ந்தவர். எப்போதும் புன்னகையோடு இருப்பார். அவரைப் பார்த்தால் நமக்கும் சிரிப்பு ஒட்டிக்கொள்ளும், மகிழ்ச்சி தொற்றிக் கொள்ளும். நிறைய நகைச்சுவைகளை அள்ளி விடுவார். அவர் பேசுவதைக் கேட்டு அதுவரை நகைச்சுவை வாடையே இல்லாமல் இருந்தவர்கள் கூட, சில துணுக்குகளைச் சொல்லத் தொடங்கிவிடுவார்கள். எல்லாரிடமும் குழந்தை மறைந்திருக்கிறது, விதைக்குள் இருக்கும் வேரைப்போல. வாய்ப்பு நிகழும்போது, சூழல் வாழ்த்தும்போது அவர்கள் தங்களுக்குள் இருக்கிற நகைச்சுவை உணர்வை அள்விவிடுகிறார்கள். ராஜிவ் ஜலோட்டாவினுடைய முகத்தைப் பார்த்தாலே சிரிப்பு வந்துவிடும். 

இந்தியாவில் அதிகமான படையெடுப்புகளுக்கு ஆளான பகுதிகளைச் சார்ந்த பல நண்பர்கள் எனக்கு உண்டு. அவர்கள் எப்போதும் சிரித்து மகிழ்ந்தும், நடனமாடியும், பாடியும் உற்சாகமாக இருப்பதைப் பார்த்திருக்கிறேன். அதில் சிலர் தீவிரவாதிகளின் நேரடித் தாக்குதல்களைக் கண்ணெதிரே கண்டவர்கள்.

உடன்பிறந்தவர்களை இழந்தவர்களும் உண்டு. ஆனால் அந்த சோகத்தின் சாயல் அவர்கள்மீது படுவதற்கு அனுமதித்ததே இல்லை. அவர்களுடைய நகைச்சுவை உணர்வு துன்பங்களைத் தாண்டும் தோணியாக உதவியிருக்கிறது என்று நினைத்துக் கொள்வேன். 

இந்தியாவில் வடகிழக்கு மாகாணங்களைச் சார்ந்த வம்சாவளியினரை நான் நன்றாக அறிவேன். அவர்களில் பலர் நெருங்கிய நண்பர்கள். அவர்கள் எப்போதும் சிரித்துக்கொண்டும், கேலி செய்துகொண்டும் இருப்பார்கள். ஒருவர் மீது ஒருவர் கேலி செய்வதன் பொருட்டு கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை.

இத்தனைக்கும் பலருக்குப் போர்ப் பயிற்சிகள் தெரியும். அவர்கள் முன்னால் எதைச் சொன்னாலும் சிரித்துக் கொள்கிற அவர்கள், பின்னால் இச்சகம் பேசினால் எரிச்சலடைந்து சண்டைக்கு வருவார்கள். அவர்களுடைய வாழ்க்கைச் சூழல் ஆபத்துகளின் நடுவே அமைந்தது. அவர்களுடைய நகைச்சுவை உணர்வு மட்டுமே நிழற்குடையாக இருந்து பெய்கிற பனியிலிருந்து அவர்களைக் காப்பாற்றி வருகிறது. 

பெரிய மனிதர்கள் நகைச்சுவை உணர்வோடு இருப்பதால், எத்தகைய தடையையும் எதிர்கொள்கிறார்கள். மிகப்பெரிய அவமானத்தைக் கூட உதறி எறிந்துவிட்டு வழக்கம்போல நடமாடுகிறார்கள். தெரிந்தவர்களுக்கு நகசுத்தி வந்தால்கூட, சிலருக்கு வயிற்றைக் கலக்கும்.. அவர்கள் உயர்ந்த இடத்துக்கு ஒருபோதும் வர முடியாது. நகைச்சுவை உணர்வு பதற்றத்தைத் தணிக்கிறது. துன்பத்தையும் சிரிப்பின் மூலம் ஆற்ற உதவுகிறது. 

வாழ்வில் சலிப்பும், அலுப்பும், விரக்தியும், வெறுமையும் வராமல் இருக்க நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்வது நல்லது. மரணப்படுக்கையில் இருக்கிற சிலரை நான் சந்தித்திருக்கிறேன். அவர்களில் ஓரிருவர் உலகத்தைவிட்டுப் போவதைப் பற்றி கவலைப்படாமல், உல்லாசப் பயணம் மேற்கொள்ளவிருப்பதைப்போல சலனமின்றி இருப்பதையும் பார்த்திருக்கிறேன். நானும் அவர்களுடன் நிறையத் துணுக்குகளைச் சொல்லி சிரிக்க வைத்துவிட்டு வருவேன். சமயத்தில் என்னுடன் இருப்பவர்கள் அதைப் பார்த்து அரண்டுபோய் விடுவார்கள். 

சிலர் என்னிடம், "இந்த நேரத்தில் போய் ஜோக் அடிக்கிறீர்களே?'' என்று கேட்பதுண்டு. அதற்கு நான்,"அவரைக் கட்டிக்கொண்டு அழச் சொல்கிறீர்களா? அவர் சிரித்து வலியை மறப்பதுதானே நல்லது. நாம் வேதனைப்பட்டால் அவருடைய சோகம் அதிகரிக்காதா?'' என்று கேட்பேன். 

எல்லாரிடமும் நான் இப்படி நடந்துகொள்ள மாட்டேன். மரணத்தைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாத பக்குவத்துடன் இருக்கிற ஞானிகளை நான் அறிவேன்.

உண்மையான ஞானம், வருகிற மரணத்தையும் வரவேற்கும் முதிர்ச்சியுடன் இருப்பதுதான். அவர்களிடம் மட்டுமே இவ்வாறு பேசுவேன். மற்ற இடங்களில் மவுனம் காப்பேன். இப்படி சாகும் தறுவாயிலும் சலனமின்றி இருப்பவர்கள் நகைச்சுவை உணர்வை சின்ன வயதிலிருந்தே வளர்த்துக்கொண்டவர்கள். 

இளைமைப் பருவத்தில் நகைச்சுவை உணர்வை மெருகேற்ற வேண்டும். அதை வளர்க்கக் கூடிய இலக்கியங்களை வாசிக்க வேண்டும். ஷேக்ஸ்பியர் உலகப் புகழ் பெற்றதற்கு அவருடைய நகைச்சுவை உணர்வு காரணம். அவருடை சமகாலத்தினரிடம் அது காணப்படவில்லை. கயமை குறித்து திருவள்ளுவர் எழுதிய அதிகாரத்தில் அவருடைய நகைச்சுவை உணர்வு புலப்படும். 

நுண்ணறிவு இருப்பவர்கள் அதிக நகைச்சுவை உணர்வுடன் இருக்கிறார்கள் என்பதைப் போலவே நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ளும்போது நுண்ணறிவு அதிகரிக்கும் என்பதும் உண்மை. சர்ச்சில், பெர்னாட் ஷா, அண்ணா, பெரியார், பாரதிதாசன், கண்ணதாசன் போன்றவர்கள் நகைச்சுவை உணர்வோடு பேசியவர்கள், எழுதியவர்கள். அதன் காரணமாகவே நெருக்கடிகளை நீந்திக் கடக்க அவர்களால் முடிந்தது. 

இளைஞர்கள் எந்த ஒரு செய்தியையும் நகைச்சுவையாக அலசிப் பார்க்க வேண்டும். அது அவர்களிடம் சோர்வை அகற்றும். மிகப்பெரிய ஏமாற்றத்தையும் தாங்கிக் கொள்ள முடியும். உலகத்தைவிட்டு ஓடிவிடலாம் என்கிற எண்ணம் அவர்களுக்கு ஏற்படாது. நம்மைச் சுற்றியிருப்பவர்களும் நகைச்சுவை உணர்வு கொண்டவர்களாக இருக்க வேண்டும். அப்போது அவர்கள் நம் சறுக்கல்களின்போது துக்கம் விசாரிக்காமல், இதுவும் கடந்துபோகும் என்று சொல்லி நம்மைத் தேற்றுவார்கள். 

கல்லூரிகளிலும், பணியிடங்களிலும் நகைச்சுவை உணர்வு உள்ளவர்களை நாம் நண்பர்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். இரவு தூங்குவதற்கு முன்பு கன்னத்தில் கை வைக்கிறமாதிரி கதைகளைப் படிக்காமல், சிரித்துவிட்டுப் படுக்கிற மாதிரி சம்பவங்களை வாசித்துவிட்டு உறங்கச் செல்வது நல்லது. படித்த நகைச்சுவையைப் பகிர்ந்துகொண்டால் மகிழ்ச்சி இருமடங்காகும், ஆயுள் பல மடங்காகும். 
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com