உச்சியிலிருந்து தொடங்கு - 31: நம்பிக்கை வளையங்கள்!

தன்னம்பிக்கை என்று எதுவும் தனியாக இல்லை.  எந்தச் செயலையும் மகிழ்ச்சியாகச் செய்ய முற்படுவதே தன்னம்பிக்கை.
உச்சியிலிருந்து தொடங்கு - 31: நம்பிக்கை வளையங்கள்!

தன்னம்பிக்கை என்று எதுவும் தனியாக இல்லை.  எந்தச் செயலையும் மகிழ்ச்சியாகச் செய்ய முற்படுவதே தன்னம்பிக்கை.  அவ்வாறு இருப்பவர்களுடன் இணைந்து பணியாற்ற எல்லாரும் விரும்புவார்கள்.  அவர்களுடைய இருத்தல் மற்றவர்களுக்கு வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கையைத் தரும்.
 உயர்ந்த ஆளுமை பற்றிய பயிலரங்குகளில் சென்று கற்று வர அவசியமில்லை.  கண்களை உறுத்தாத உடை, துர்நாற்றம் வராத உடல், புன்னகை தவழும் முகம், பளிச்சிடும் கண்கள், இனிமையைப் பரப்பும் சொற்கள், ஆணவமற்ற தோரணை, அன்புமயமான அணுகுமுறை ஆகியவை இருந்தால் போதும்.  அவர்கள் சென்ற இடங்களில் எல்லாம் கவனத்தை ஈர்ப்பார்கள். அவர்களுடன் இன்னும் கொஞ்ச
நேரம்  இருக்க வேண்டும் என்று தோன்றும்.
 நம்முடைய மனத்தில் உற்சாகம் ஊற்றாக எப்போதும் பொங்கிப் பெருகாவிட்டால், நாம் எப்படித் தலைமைப் பண்புகளுடன் தழைக்க முடியும்?  நாம் இறுக்கத்துடன் இருந்தால், உழைக்கும் சூழலும் உறையத் தொடங்கும்.  இருநூறு சதவிகிதம் உற்சாகம் நம்மிடமிருந்தால், அது பனிக்கட்டி கரைவதைப் போல கைமாறி கடைசிப் பணியாளரிடம் நூறு சதவீதமாக மாறும். நாமே நொந்துபோய் கன்னத்தில் கை வைத்துவிட்டால்,  நிறுவனத்திலிருப்
பவர்களை யார் வழிநடத்த முடியும்?
 மக்கள் எல்லா  இடங்களிலும் எதிர்பார்ப்பது அவர்கள் பிரச்னைகளைத் தீர்த்து வைக்கக் கூடிய தெளிவு உள்ளவரை மட்டுமே.  அவ்வாறு தெரிகிறவர்களையும், பேசுகிறவர்களையும் கண்களை மூடிக்கொண்டு ஆதரிக்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள். தெளிவு இருந்ததால் மட்டுமே ஹிட்லரை தத்துவமேதைகளும், சட்ட வல்லுநர்களும்கூட நம்பினார்கள்.    ஜெர்மனியின் பிரச்னையைத் தீர்க்கக்கூடிய விடிவெள்ளியாக அவரைப்
பார்த்தார்கள்.
 குடும்பத்தில் தலைமைப் பொறுப்பில்  இருப்பவர்கள் உற்சாகமூட்டுபவராக இருக்க வேண்டும். தொல்லைகளைக் கண்டு தலையில் அடித்துக் கொள்பவராக இருந்தால்,  குடும்பமே நொறுங்கிவிடும். எந்தக் குடும்பத்தில் தந்தை மகிழ்ச்சியோடும், நம்பிக்கையோடும் இருக்கிறாரோ, அங்கு குழந்தைகளும் உயிர்ப்புடன் இருக்கின்றன.   ஊக்க பந்துகளாக உருண்டோடுகின்றன. அவர்களும் எந்தப் பிரச்னையையும் நம்மால் தீர்த்துவிட முடியும் என்று கருதுகிறார்கள்.
 பெற்றோர்கள் அலுவலகப் பிரச்னைகளைக் குழந்தைகள் முன்பு விவாதிக்கக் கூடாது.   பொருளாதாரச் சிரமங்களை அவர்கள் முன்பு அவசியம் பேச வேண்டும்.  அது அவர்களுக்கு நாம் சாதாரண குடும்பத்தைச் சார்ந்தவர்கள், பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்கிற பொறுப்பை எற்படுத்தும். ஆனால் அலுவலகத்தில் அவர்கள் சமாளிக்கச் சிரமப்படும் சம்பவங்களையும், தத்தளிக்கும் நேர்வுகளையும் பேசினால் அது பிஞ்சுக் குழந்தைகளுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தும். அவர்கள் எதிர்கொள்ளும் சின்னத் தடங்கல்களைப் பெரிய மலையாக எண்ணி நடுங்க
ஆரம்பித்துவிடுவார்கள்.

 எதையெடுத்தாலும் விமர்சிக்கின்ற சிலர் இருக்கிறார்கள்.  அவர்கள் கண்களில் நல்லதே படாது.  விருந்தில் பத்து பதார்த்தங்கள் நன்றாக இருந்ததைப் பற்றிப் பேசாமல், வடை கொஞ்சம் தீய்ந்து போய்விட்டது எனப் புகார் சொல்பவர்கள் அவர்கள்.  எல்லாரிடமும் குற்றம் கண்டுபிடித்து நான்
அவர்களை விட மேலானவன் என்ற எண்ணத்தை அவர்கள் ஏற்படுத்துவார்கள்.  யாரை வேண்டுமானாலும் கிண்டல் செய்யலாம், எதை வேண்டுமானாலும் கேலி செய்யலாம் என்ற மிதப்பில் இருக்கும் இவர்கள், ஆபத்தான பேர்வழிகள்.  அவர்களோடு சிறிதுநேரம் கழித்தால் உலகமே நமக்கு இருட்டாகத் தோன்ற ஆரம்பித்துவிடும்.
 நம்மிடமிருக்கும் சின்னச் சின்ன அம்சங்களைக் கூடப் பாராட்டக் கூடிய மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் பழகும்போது நாம் இன்னும் முயற்சி எடுக்க வேண்டும், இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற உந்துதல்  ஏற்படும்.  நாம் அப்படி எத்தனை  பேருக்கு ஊக்க சக்தியாக இருக்கிறோம் என்பது முக்கியம்.
 எனக்குத் தெரிந்த ஒருவருடைய மகன், எப்போதும் அப்பா முதல் மதிப்பெண் எடுக்க வேண்டும் எனச் சொல்கிறாரே என அந்த முறை விழிப்புணர்வுடன் படித்தான்.  அவனுடைய தேர்வுகளில் கரைந்து போனான்.  அவனுடைய விடைகளை முத்துமுத்தான கையெழுத்தால் விடைத்தாளில் முத்தமிட்டான்.  முடிவு வெளியானபோது பள்ளியில் அவன் முதல் மதிப்பெண்.
 அப்பாவிடம் சொன்னால் மகிழ்ச்சியடைவார் என ஓடிவந்தான். அவர் நான்கைந்து பேருடன் அமர்ந்துகொண்டிருந்தார். அவருடன் சில பேர் இருந்தால் அவருக்குத் தலைகால் புரியாது.  
எல்லாரையுமே மட்டம் தட்டிப் பேசுவார்.
 மகன், ""அப்பா நான் என் பள்ளியில் முதல் மதிப்பெண்'' என ஆசையாகச் சொன்னான்.  அவர் பாராட்டுவார் என எண்ணினான்.
 அவரோ, ஒருவித நக்கலுடன், ""நீ மதிப்பெண் எடுக்கிறாய் என்றால் உன் பள்ளியில் மற்ற மாணவர்கள் எவ்வளவு முட்டாளாக இருக்க வேண்டும்'' என்றார்.  மகன் நொறுங்கிப் போனான்.
 நாம் பெரிதாக எதுவும்  இழந்துவிடப் போவதில்லை என்கிற யதார்த்த உணர்வு இருப்பதே நம்பிக்கையின் அடித்தளம். வாழ்க்கை என்பது தொடர்ந்து பெறுவதும்,  சிலவற்றை இழப்பதுமே என்கிற புரிதல் வேண்டும்.  எதுவும் நமக்காகவே தரப்பட்டவை என்ற நினைப்பே தவறு.
 நாம் நம்பிக்கையோடு திகழ, வளரும் சூழல் காரணம். மகிழ்ச்சியான இல்லச்சூழல், நம்பிக்கையான நண்பர்கள், பொறுமையாகப் பிரச்னைகளை அணுகும் பெற்றோர்,  உணர்ச்சி மேலாண்மையை வளர்த்துக் கொள்ள மேற்கொள்ளும் பயிற்சிகள் போன்றவை நமது வாழ்க்கை குறித்த விசாலமான பார்வையை விரித்து வைக்கக் கூடியவை.
 முறையாக வாழ்பவர்கள், அளவாக ஆசைப்படுபவர்கள், திட்டமிட்டு உழைப்பவர்கள், தீர்க்கமாகச் சிந்திப்பவர்கள் ஒருபோதும் பிரச்னை
களிலிருந்து ஓடி ஒதுங்க முற்படுவதில்லை.
 நாம் கேட்கிற பாடல்கள், படிக்கிற இலக்கியங்கள்,  நேசிக்கிற மனிதர்கள் அனைத்துமே நம்முடைய ஆளுமையைக் கட்டமைக்கின்றன.  அழுது வடியும் பாடல்களை ரசிக்கிறவர்களும் அழுமூஞ்சியாக ஆகிப் போகிறார்கள்.  நாம் ரசிக்கும் பாடல் தூக்கம் வருகிற நேரத்தை இன்னும் கொஞ்சம் விழித்திருக்கச் செய்ய வேண்டும்.  இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும், தோல்வியின் சுவடுகளை சுண்டியெறிந்துவிட்டு முன்னேற வேண்டும், உடல் களைப்படைந்தாலும் மனம் களைப்படையாமல் இருக்க வேண்டும் என்ற பார்வையை உண்டாக்க வேண்டும்.
 நாம் படிக்கிற நூல்களும் மேன்மையானவையாக இருக்க வேண்டும்.  வாழ்க்கையில் தோற்றுப் போன  பலர்,  அவநம்பிக்கைகளின் மொத்த வியாபாரிகளாகச் செயல்படுகிறார்கள்.  மானுடத்தை நேசிப்பவர்களோ அவர்கள் காணும் நேர்மையாளர்களையும், அறவுணர்வாளர்களையும் வெளிச்சம்போட்டுக் காட்டி உலகம் இன்றும் அழகாகத்தான் இருக்கிறது என்ற உணர்வை வாசகர்களுக்கு ஏற்படுத்துகிறார்கள்.  மானுடத்தின் அழுக்கான பிரதேசங்களை அடையாளம் காட்டுபவர்களையல்ல, மகத்தான பக்கங்களுக்கு மலர் தூவுகிறவர்களையே காலம் கைதட்டி கெளரவப்படுத்துகிறது.  அவற்றையே நாம் பல இடங்களில் மேற்கோள் காட்ட வேண்டியிருக்கிறது.
 என்னைத் தேடி வருகிற எல்லாரிடமும் நான்அவர்களுடைய ஆற்றலை உணரச் செய்து, அவர்களாகவே தேடுகிற முயற்சியை ஊக்குவிக்கும் பணியையே செய்கிறேன்.  இந்த உலகில் எல்லோருடைய பணியும் முக்கியமானது என்கிற புரிதல் அனைவருக்கும் எற்படவேண்டும்.
 வாழ்க்கையை மறுதலிக்கிற இலக்கியங்கள் இருந்த சூழலில், வாழ்க்கையைக் கொண்டாடவும், ஏற்றுக் கொள்ளவும் கற்றுத் தருவதாக இருந்ததாலேயே ஒப்பற்ற ஞான இலக்கியம் என்று திருக்குறளை ஆல்பர்ட்  ஸ்வைட்வைர் புகழ்ந்தார்.  நம்பிக்கை தொடர்வண்டியின் வேகத்தில் சென்றால், அவநம்பிக்கை விமான வேகத்தில் செல்லக் கூடியது என்பதால் நம் சொற்களில் ஒன்றைக் கூட அடுத்தவர்களைத் தொய்வுறும்படி சொல்லக் கூடாது.  ""நீ எல்லாம் ஏன் உயிரோடு இருக்கிறாய்?'' என கோபப்பட்டவர்களை அது வளரியாக வந்து
தாக்கியதை நான் பார்த்திருக்கிறேன்.
 "உலகம் பிறந்தது எனக்காக... ஓடும் நதிகளும் எனக்காக' என்ற உற்சாக வரிகளுக்காக திரையில் தோன்றியவரை உலகமே உச்சாணிக்கொம்பில்  உட்கார வைத்து  அழகு பார்த்தது என்பதை நாம் மறுக்கக் கூடாது.


(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com