அஷ்டாவதானிகளும்... ஏகசந்தக் கிராதிகளும்! பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்

நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.இராமன் தன்னிடத்தில் வேலைக்காக வந்த இளைஞரிடம் இயற்பியல் ஆராய்ச்சி குறித்து வினாக்களைக் கேட்க, அவர் விடைசொல்ல
அஷ்டாவதானிகளும்... ஏகசந்தக் கிராதிகளும்! பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்

உன்னோடு போட்டிபோடு! - 18 
நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.இராமன் தன்னிடத்தில் வேலைக்காக வந்த இளைஞரிடம் இயற்பியல் ஆராய்ச்சி குறித்து வினாக்களைக் கேட்க, அவர் விடைசொல்ல முடியாமல் தடுமாற அதனால் கோபங்கொண்ட சர்.சி.வி.இராமன் அந்த இளைஞரை, "உங்களுக்கு வேலை இல்லை, இயற்பியல் தெரியாதவரை வைத்து நான் என்ன செய்யட்டும்?‘ என அனுப்பிவிட்டாராம்.
ஆனால் அதற்கு மறுநாளே அங்கேயே அவருக்கு வேலை கிடைத்ததாம். எப்படித் தெரியுமா? என்று தமிழ்மணி கேட்க, "நீங்க அவருக்கு முதல்ல வேலை கிடைச்சதைச் சொல்லிட்டு பிறகு காரணத்தைச் சொல்லுங்க. அப்பத்தான் மனது நிம்மதியாகும். "கண்டேன் சீதையை' என்பது மாதிரித் தெளிவாச் சொல்லணும்'' என்று படபடப்போடு ஹெட்போன் பாட்டி சொன்னார்.
தமிழ்மணியும் புன்னகையோடு, "நன்றியம்மா, சர்.சி.வி.இராமனின் கேள்விகளுக்கு விடை சொல்லத் தெரியாத இளைஞரை, மறுநாள் காலையில் தம் ஆராய்ச்சி வளாகத்தில் நடைப்பயிற்சியின்போது சந்தித்த சர்.சி.வி.ராமன் சற்றே குழம்பிப்போய் "ஏய், நான் உன்னை நேற்றே ஊருக்குப் போகச் சொன்னேனே? நீ இன்னுமா போகவில்லை, உடனே இந்த இடத்தைவிட்டுக் கிளம்பு'' என்று கோபமாகச் சொன்னாராம். அதற்கு அந்த இளைஞன் மிக்க பணிவோடு, "சார் எனக்கு வேலை கிடைக்காமல் போனதில் வருத்தம்தான். ஆனால் நேற்று உங்கள் அலுவலகத்தில் என்னுடைய பயணச் செலவிற்காகக் கொடுத்த பணத்தில் நூறு ரூபாய் அதிகம் கொடுத்து விட்டார்கள். நானும் அதைக் கவரில் வாங்கியபோது எண்ணிப் பார்க்கவில்லை. இரவுதான் பார்த்தேன். என்னிடத்தில் தவறாகக் கொடுக்கப்பட்ட அந்த நூறு ரூபாயைக் கொடுப்பதற்காகத்தான் அதிகாலையில் இருந்து இங்கே காத்திருக்கிறேன்'' என்று சொன்னாராம்.
 அதைக் கேட்ட சர்.சி.வி.ராமன் வேகமாக அந்த இளைஞரின் அருகே சென்று அவரின் கையைப் பிடித்துக்கொண்டு, "நீங்கள் இன்றே எனது அலுவலகத்தில் பணியில் சேர்ந்து கொள்ளுங்கள்'' என்றாராம். ஆனால் அந்த இளைஞரோ தயக்கத்தோடு "இல்லை ஐயா நேற்றைய நேர்முகத் தேர்வில் தங்களின் கேள்விக்கு என்னால் சரியாகப் பதில் கூற முடியவில்லை. எனக்கு இயற்பியல் துறையில் ஆராய்ச்சி அறிவு சற்றே குறைவு என்று நீங்களே சொன்னீர்களே...!‘' என்று சொல்ல, "அட, இயற்பியலை யாருக்கு வேண்டுமானாலும் கற்பித்துவிடலாம். நல்ல குணத்தையும், பண்பையும் கற்பித்தால் மட்டும் போதாது. கடைப்பிடித்தால்தான் வெற்றி கிடைக்கும். உங்களின் நல்ல பண்பு என்னைக் கவர்ந்துவிட்டது. இன்றே இப்போதே வேலையில் சேருங்கள் என்று அவரை அன்போடு வேலையில் தம் ஆராய்ச்சி நிலையத்தில் சேர்த்துக் கொண்டாராம்'' என்று தமிழ்மணி சொல்லி முடித்தார்.
"ஆஹா நம் ராமன் சார் விஞ்ஞானியாக மட்டுமில்லாமல், மெய்ஞானியாகவும் இருந்திருக்கிறார். அதனால்தான் நற்குணத்தின் அடிப்படையில் அந்த இளைஞருக்கு வாய்ப்புக் கொடுத்திருக்கிறார். சர்.சி.வி.ராமன் புகழ் வாழ்க'' என்று நெகிழ்வோடு சொன்னார் ஒரு பெரியவர்.
"உண்மைதான் ஐயா "கோல்டுமெடல்' வாங்கிய பல மாணவ, மாணவியர் நேர்முகத் தேர்வில் தங்கள் திறமையை வெளிக்காட்ட முடியாமல் திணறிப்போவது வருத்தத்திற்குரிய ஒன்றுதான். என் நண்பர் காலஞ்சென்ற தென்கச்சி சுவாமிநாதன் மிக அழகாக ஒரு செய்தியைச் சொன்னார்'' என்று நான் தொடங்கினேன்.
"இன்று ஒரு தகவல்  சொல்பவர்தானே? எனக்கு அவரை ரொம்பப் பிடிக்கும். அவரோட குரலும்,ஹியூமரும் பென்டாஸ்டிக்'' என்று சொன்ன ஹெட்போன் பாட்டி, "நீங்க சொல்லுங்கோ'' என்று என்னிடம் சொன்னார்.
 "ஒரு வங்கியில் அலுவலக உதவிப் பணியாளர் தேர்வுக்கு நேர்முகம் நடந்ததாம்'' என்று நான் தொடங்க, "வாட் இஸ் நேர் முகம்? பேஸ்புக்?‘' என்று பேத்தி ஹெட்போன் பாட்டியிடம் கிசுகிசுக்க... "நோ, நோ, நேர்முகம்னா இன்டர்வியூ. நீ சொல்றது பேஸ்புக்... அதாவது... அதுக்கு என்ன தமிழ்...'' என்று ஹெட்போன் பாட்டி கேட்க...
 "முகநூல் அல்லது வதனப்புத்தகம்'' என்று புன்னகையோடு மொழிபெயர்த்தார் தமிழ்மணி.
 "ஓகே, ஓகே''... என்று மனதில் அந்தத் தமிழ்ச்சொல்லை வாங்கிக்கொண்டே பேத்தி அதை உடனே தனது செல்போனில் பதிவு செய்து கொண்டது.
 நான் தொடர்ந்தேன். "அந்த இன்டர்வியூவில் மேலாளர் வந்திருந்தவர்களிடம் ஒரே ஒரு கேள்வியைக் கேட்டாராம். அதாவது பத்து கூட்டல் பதினைந்து (10+15=?) எவ்வளவு? என்று கேட்டாராம். இந்தக் கேள்விக்கு ரொம்ப யோசித்த ஓர் இளைஞர் பத்துக் கூட்டல் பதினைந்து 23 என்றாராம்.  அந்தப் பதிலைக் கேட்ட மேலாளர், "ஓ.கே. யூ ஆர் அப்பாயின்டெட்' என்று சொல்லி வேலைக்கு வரச் சொல்லிவிட்டாராம்.''
"வாட்? வாட்?‘' என்று பாட்டியும், பேத்தியும் வியப்படைந்தனர்.
"ஆனால் அந்தப் பதிலைச் சொன்னவர் "நன்றி ஐயா' என்று சொல்லிவிட்டு வெளியே வந்தாராம். வந்தவர் சற்று யோசித்து "ஐயோ, 10+15=25 தானே? நாம் 23 என்று சொல்லிவிட்டோமே? என்று எண்ணியவர், "சரி இந்த மேனேஜர் சரியாகக் கவனிக்கவில்லை. வேலை கிடைத்துவிட்டது. பெர்மனன்ட் ஆன பிறகு சொல்லிக் கொள்ளலாம்'' என்று சமாதானம் சொல்லிக் கொண்டாராம்.
இரண்டு நாள்கள் சென்றவுடன் தன் மனசாட்சி வேலை செய்ய நேரடியாக மேனேஜரிடம் ஓடி, "ஐயா என்னை மன்னிக்க வேண்டும். நேர்முகத் தேர்வில் நீங்கள் கேட்ட கேள்விக்கு 25-க்குப் பதிலாக 23 என்று தவறான பதிலைச் சொல்லிவிட்டேன். நீங்களும் அவசரத்தில் கவனிக்காமல் என்ன வேலைக்குச் சேர்த்துவிட்டீர்கள். நான் தவறை உணர்ந்து விட்டேன். என்னை மன்னியுங்கள். சரியான விடை 10+15=25 தான்'' என்று அழுதுகொண்டே சொன்னாராம்.
 உடனே அந்த மேனேஜர் அவனது முதுகில் அன்பாகத் தட்டிக் கொடுத்து,"தம்பி, நீ பதில் சொன்னபோதே அது தவறுதான் என்று எனக்குத் தெரியாதா என்ன? ஆனால் அன்றைக்கு இன்டர்வியூக்கு வந்த 50 பேரில் நீ ஒருத்தன்தான் ஓரளவாவது விடையை ஒட்டிச் சொன்னாய். மற்ற பயலுக எல்லாம் 10+15 என்பதற்கு 18, 20, 17 என்று உளறிக் கொட்டினார்கள். நீயே 25க்கு மிக அருகில் 23 சொன்ன பாரு... அதுதான் உன்னையச் சேர்த்துக்கிட்டேன். அதுமட்டுமில்லை. இப்ப வந்து உண்மையச் சொன்ன பாரு. நீதான் இந்த வங்கிக்கு வேண்டிய ஒருத்தன் என்று முடித்தாராம்'' என்று நான் சொன்னபோது எல்லோரும் கைதட்டிச் சிரித்தார்கள்.
"பார்த்தீர்களா? உண்மைக்குத்தான் என்றைக்கும் மரியாதை அதிகம். பொய் சொல்லி, ஏமாற்றி அதன் மூலம் நமக்குக் கிடைக்கும் வாழ்க்கை பெரிய உயர்வைத் தருவதுபோல இருக்கும். ஆனால் அது நம் மொத்த வாழ்க்கையையே அழித்து விடும் என்று யார் சொல்லியிருக்கிறார் தெரியுமா?‘' என்று நான் கேட்டேன்.
எல்லோரும் சற்று நேரம் யோசிக்கத் தமிழ்மணி தன் கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, "டைம் ஓவர்.  ஐயா நீங்களே சொல்லிவிடுங்கள். ஒரு அப்பா தன் பையனிடம் கேட்டாராம், "உங்க வகுப்பிலேயே ரொம்ப நல்லாப் படிக்கிறது யாரு?‘ என்று, உடனே அந்தப் பையனும் தயங்காது "எங்க வாத்தியாரு' என்று டக்கென்று சொன்னானாம்'' என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.
 அப்போது அந்தக் கூட்டத்தில் இருந்த ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியர் மிக வேகமாக எழுந்து,
 "களவினால் ஆகிய ஆக்கம் அளவுஇறந்து
ஆவது போலக் கெடும் 
 அதிகாரம் -29 கள்ளாமை -  குறள் எண்: 283'' என்று அவர் சொல்லி முடித்தார்.
 பேத்தி சற்றே பயந்துபோய் "கிராண்ட்மா, கூகுள், விக்கிபீடியா ரெண்டைக் காட்டிலும் இவர் ஸ்பீடா இருக்காரே வாவ்... அமேஸிங்...  எப்படி?‘' என்று கேட்க, நான் சொன்னேன், "கம்ப்யூட்டரைக் கண்டுபிடித்தவர்கள் அயல்நாட்டுக்காரர்களாக இருக்கலாம். ஆனால் நம்மவர்கள் கம்ப்யூட்டர்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். "அஷ்டாவதானிகள்',
"ஏகசந்தக் கிராதிகள்'... பலர் இந்நாட்டில் உண்டு'' என்றவுடன் இந்த இரண்டு சொற்களுக்கும் பொருள் தெரியாமல் பலர் யோசித்தார்கள்... அப்போது...
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com