கோள்சார் அறிவியல் நிபுணர்! 

விண்வெளியில் சுழலும் கோள்களின் நிலையையும் அவற்றின் சூழலையும் அறிவதில் விஞ்ஞானிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
கோள்சார் அறிவியல் நிபுணர்! 

விண்வெளியில் சுழலும் கோள்களின் நிலையையும் அவற்றின் சூழலையும் அறிவதில் விஞ்ஞானிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். கோள்சார் அறிவியல் (Planetory Science) எனப்படும் இத்துறையில், உலக நாடுகள் ஆலோசனை பெறும் நிபுணராக இந்தியாவின் அனில் பரத்வாஜ் மதிக்கப்படுகிறார். அவர் சனி கோளின் வளையங்கள், எக்ஸ் கதிர்களை உமிழ்வதைக் கண்டறிந்தவர் ஆவார்.

உத்தரபிரதேச மாநிலம், முர்சானில் 1967, ஜூன் 1-இல் பிறந்தார் அனில் பரத்வாஜ். லக்னோ பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பி.எஸ்சி. பட்டமும் (1985) எம்.எஸ்சி. (1987) பட்டமும் பெற்ற அவர், காசி ஹிந்து பல்கலைக்கழகத்தில் ஜெர்மன் மொழியில் பட்டயப் படிப்பு (1989) முடித்தார். பிறகு, காசி ஹிந்து பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஐஐடியில் ஆராய்ச்சியாளராக அவர் இணைந்தார். 1988 முதல் 1990 வரை அப்பொறுப்பில் இருந்த அவர், அங்கேயே பயன்பாட்டு இயற்பியலில் பிஎச்.டி. ஆய்வு மேற்கொண்டார். கோள்கள் மற்றும் வால் நட்சத்திரங்களின் துருவ ஒளிர்வு, இரவொளிர்வு குறித்த அவரது ஆய்வுக்கு முனைவர் பட்டம் (1992) வழங்கப்பட்டது.

இதனிடையே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கூட்டமைப்பின் (சிஎஸ்ஐஆர்) முதுநிலை ஆராய்ச்சியாளராக, காசி ஹிந்து பல்கலைக்கழகத்தில் (1990-1993) செயல்பட்டார்.

பணிக்களம்
படிப்பை முடித்தவுடன், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) 1993-இல் அனில் பரத்வாஜ் இணைந்தார். அதன் கிளை அமைப்பான விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் (விஎஸ்எஸ்சி) விண்வெளி இயற்பியல் ஆய்வகத்தில் (Space Physics laborator y- SPL) விஞ்ஞானியாக அவரது பணி துவங்கியது. 

அங்கு பல்வேறு நிலைகளில் பணியாற்றிய அனில் பரத்வாஜ், எஸ்பிஎல்-லின் கோள்சார் அறிவியல் பிரிவின் தலைவராக 2007 செப்டம்பரில் நியமிக்கப்பட்டார்.

பிப்ரவரி 2017 வரை அப்பொறுப்பில் இருந்த அவர் பல அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார்.

இதனிடையே 2014 முதல் 2017 வரை, எஸ்பிஎல்லின் இயக்குநராகவும், விஎஸ்எஸ்சி மத்திய கண்காணிப்புக் குழு தலைவராகவும் அவர் பதவி வகித்தார். பிப்ரவரி 2017 முதல், அகமதாபாத்திலுள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் (Physical Research Laboratory- PRL) இயக்குநராக அனில் பரத்வாஜ் உள்ளார்.

கோள்சார் அறிவியலில் அவரது நிபுணத்துவத்தை உணர்ந்த அமெரிக்க அரசு, தனது விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸாவின் முக்கிய ஆராய்ச்சித் திட்டத்தில் இரண்டாண்டுகள் பணியாற்ற அனிலுக்கு அழைப்பு விடுத்தது. அதையேற்று, அமெரிக்க தேசிய அறிவியல் அகாதெமியின் முதுநிலை ஆராய்ச்சி உதவியாளராக, ஹன்ட்ஸ்வில்லியில் உள்ள மார்ஷல் விண்வெளி மையத்தில் ஜனவரி 2004 முதல் அக்டோபர் 2005 வரை அவர் பணிபுரிந்தார்.

அறிவியல் பங்களிப்புகள்
இஸ்ரோவில் கோள்சார் ஆராய்ச்சியை முடுக்கிவிட்டதில் அனில் பரத்வாஜின் பங்களிப்பு பிரதானமானது. இந்தியாவின் முதல் நிலவு ஆய்வுக்கலமான சந்திரயான்-1-இல் சாரா பரிசோதனைக்கு (Sub- keV Atom Reflecting Analyze r - SARA) முதன்மை ஆய்வாளராக அனில் இருந்தார் (2008). அப்போது நிலவுக்கும் சூரியப்புயலுக்கும் இடையிலான உறவு தொடர்பான பல விவரங்களை இஸ்ரோ கண்டறிந்தது. இந்தியாவின் செவ்வாய் ஆய்வுக்கலமான மங்கள்யானின் மென்கா (Mars Exospheric Neutral Composition Analyse r- MENCA) பரிசோதனைக்கும் முதன்மை ஆய்வாளராக (2013) அனில் செயல்பட்டார். சூரியனை ஆராயும் ஆதித்யா-எல்1 திட்டத்தின் (2019) முதன்மை ஆய்வாளராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் நாஸா விண்ணில் ஏவியுள்ள சந்திரா எக்ஸ் கதிர் வானாய்வகம், ஐரோப்பிய விண்வெளி அமைப்பு விண்ணில் ஏவியுள்ள எக்ஸ்எம்எம்- நியூட்டன் எக்ஸ் கதிர் வானாய்வகம், நாஸாவின் ஹபிள் விண்வெளி தொலைநோக்கி, புணே அருகில் டாடா அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ள மாபெரும் மீட்டர் அலை வானொலி அதிர்வெண் தொலைநோக்கி (ஜிஎம்ஆர்டி) ஆகியவற்றில் கண்காணிப்பாளராகவும் அனில் பரத்வாஜ் செயல்படுகிறார்.

சூரியக் குடும்பக் கோள்களின் எக்ஸ்ரே விண்வெளி ஆய்வில் அனில் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளார். குறிப்பாக சனி வளையங்களில் வெளிப்படும் எக்ஸ் கதிர்கள், வியாழனின் எக்ஸ் கதிர்வீச்சு ஆகியவற்றை அவர் கண்டறிந்தார்.

கோள்களின் மேலடுக்கு வளிமண்டலம், அயன மண்டலங்களிலும், வால் நட்சத்திரங்களிலும்  துருவ ஒளிர்வு (aurorae mission), இரவொளிர்வு (airglow), ஒளி வேதியியல் குறித்த கோட்பாட்டு மாதிரிகளை அனில் உருவாக்கினார்.

வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகிய கோள்களை அவர் ஆய்வு செய்துள்ளார். வானாய்வக (Observatory) ஆய்விலும், கோட்பாட்டு விண்வெளி ஆய்வுகளிலும் அவரது பணிகள் பரவியுள்ளன.

அனிலின் ஆய்வறிக்கைகள், நாஸா, ஐரோப்பிய விண்வெளி அமைப்பு, அமெரிக்க புவி இயற்பியல் சங்க வெளியீடுகளில் இடம்பெற்றுள்ளன.

உலக அளவிலான பல்வேறு அறிவியல் சஞ்சிகைகளின் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றுள்ள அனில், இதுவரை 120-க்கும் மேற்பட்ட ஆய்வறிக்கைகளை வெளியிட்டுள்ளார். அறிவியல் கலைக்களஞ்சியத்தில் சூரியக் குடும்பம் குறித்து அனில் எழுதியுள்ளார். 

கௌரவங்கள்
சிஎஸ்ஐஆரின் சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது (2010), சந்திரயான் 1-க்காக இஸ்ரோவின் குழு சாதனையாளர் விருது (2008), இந்தோ-ஸ்வீடிஷ் திட்ட விருது (2010), இஸ்ரோ திறனாளர் விருது (2012), இந்திய தேசிய அறிவியல் அகாதெமியின் வைணு பாப்பு நினைவு விருது (2016), இன்போசிஸ் விருது (2016) உள்ளிட்ட பல விருதுகளை அனில் பரத்வாஜ் பெற்றுள்ளார்.  

இந்திய தேசிய அறிவியல் அகாதெமி (2010), இந்திய அறிவியல் அகாதெமி (2009), தேசிய அறிவியல் அகாதெமி (2014), கேரள அறிவியல் அகாதெமி (2013), இந்திய புவி அறிவியல் சங்கம் (2008), சர்வதேச விண்வெளி பயணவியல் சங்கம் (2014) ஆகியவற்றில் அனில் உறுப்பினராக உள்ளார். 

ஆசிய- ஓசியானிய நாடுகளின் புவி அறிவியல் சங்கத்தின் தலைவராக 2006 முதல் 2010 வரை அனில் பதவி வகித்தார். சர்வதேச விண்வெளி ஆய்வுக் குழு (கோஸ்பர்) ஆணையத்தின் துணைத் தலைவராக தற்போது பதவி வகிக்கிறார்.

ஐரோப்பாவின் அடுத்த தலைமுறை எக்ஸ் கதிர் வானாய்வகமான ஆதென்னா பிளஸ் திட்டத்திலும் அனிலின் பங்களிப்பு உள்ளது. தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் பல்வேறு ஆராய்ச்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்களில் துடிப்புடன் செயலாற்றும் அனில் பரத்வாஜ், இளம் இந்திய விஞ்ஞானிகளில் முதல் வரிசையில் உள்ளார்.
- வ.மு.முரளி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com