அளவுக்கு மிஞ்சினால்...! வெ.இறையன்பு  ஐ.ஏ.எஸ்.

தொலைபேசி அரிதாக இருந்த காலம் உண்டு. ஊரிலேயே மிகுந்த பணக்காரர் வீட்டில் மட்டுமே அது இருக்கும்.
அளவுக்கு மிஞ்சினால்...! வெ.இறையன்பு  ஐ.ஏ.எஸ்.

தொலைபேசி அரிதாக இருந்த காலம் உண்டு. ஊரிலேயே மிகுந்த பணக்காரர் வீட்டில் மட்டுமே அது இருக்கும். எழுதி வைத்துவிட்டு அதற்காகப் பலர்
காத்திருப்பார்கள். இணைப்புப் பெறுவது பரிசுச் சீட்டின் எண் குலுக்கலில் வருவதைப் போல அபூர்வமானது.

கணினியைத் தரிசிப்பதே அதிசயமாக 35 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் கருதினோம். கல்லூரியில் அகில இந்திய கல்விச் சுற்றுலாவிற்கு அழைத்துச்
சென்றபோது முதல் முறையாக கணினியைப் பார்த்தோம். தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை.

இன்று எல்லாரிடமும் கையின் அங்கமாக ஆகிவிட்டது அலைபேசி. சிலர் கழிவறைக்குக் கூட கையோடு எடுத்துச் செல்கிறார்கள். அங்கிருந்தே குறுஞ்செய்திஅனுப்புகிறவர்கள் உண்டு. அங்கு அமர்ந்து கொண்டு பிரச்னைக்குரிய ஆசாமிகளிடம் வயிறு கலங்கினாலும் பரவாயில்லை என்று துணிச்சலாகப்பேசுகிறவர்களும் உண்டு.

கணினி இன்று எண்ணற்ற வீடுகளில் இடம்பெற்று விட்டது. மடிக்கணினிகள் மலிவு விலைக்கு வந்துவிட்டன. பொழுது போகவில்லை என்கிற நிலையிலிருந்துபொழுது போதவில்லை என்ற நேர நெருக்கடிக்கு இளைஞர் சமுதாயம் ஆட்பட்டுவிட்டது.

தகவல் தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. நேற்று வாங்கிய பொருள், இன்று போன தலைமுறையைச் சார்ந்ததாக ஆகிவிட்டது. நண்பர்
சொன்ன தகவல் சிரிப்பை வரவழைத்தது. இளைஞர்கள் மத்தியில் வறுமைக்கோடு நிர்ணயிக்கப்படுகிற விதம் வித்தியாசமானது. சமீபத்தில் வந்த அலைபேசியாரிடமில்லையோ அவர்களே வறுமைக்கோட்டுக் கீழ் உள்ளவர்கள் என்று அவர் சொன்னபோது மின்னணுச் சாதனங்கள் எந்த அளவிற்கு நம்மை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றன என்பதை உணர முடிந்தது.

இந்த சாதனங்களால் பல நன்மைகள் விளைந்திருக்கின்றன. இன்று மாணவர்கள் எண்ணற்ற தகவல்களை இருந்த இடத்திலேயே பெற முடியும். மாதிரி
வினாத்தாள்கள் எப்படி இருக்குமென்று தெரியாமல் நாங்கள் அவற்றிற்காக கடைகடையாக ஏறி இறங்குவோம். இன்று இவர்கள் இணையத்திலிருந்து
பதிவிறக்கம் செய்கிறார்கள். எந்த சந்தேகத்தையும் உடனடியாகத் தீர்த்துக் கொள்ள முடிகிறது. உலகத்தின் எந்த மூலையில் இருந்தும் ஒரு புத்தகத்தைத்
தருவித்து விட முடியும். விவரங்களை விரல்நுனியில் பெற முடியும். உலகத் திரைப்படங்களை அறிந்து கொள்ள முடியும். நம் கைகளில் நூலகத்தை,
திரையரங்கை, அஞ்சல் அலுவலகத்தை, தந்தி வசதியை, பல்பொருள் அங்காடியை, புகைப்படக் கருவியை, சதுரங்கப் பலகையை, சீட்டுக்கட்டை, வானொலிநிலையத்தை, தொலைக்காட்சி நிறுவனத்தை, இசைக்கருவியை, கைக்குழல் விளக்கை அலைபேசியின் வழியாக நம்மால் எடுத்துச் செல்ல முடிகிறது.

எந்த சாதனத்தையும் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதே அதன் பெருமையைத் தீர்மானிக்கிறது. இன்று அதன் வசதியைக்கொண்டு உலகம் முழுவதும்சிதறிப்போய் இருக்கிற நண்பர்கள் ஒன்று சேர்கிறார்கள். பள்ளிக்கூடத்தில் படித்து அதன் பின் தொடர்பில் இல்லாத நண்பர்களின் அடையாளங்கள்அறியப்படுகின்றன. இப்போது பல இடங்களில் பழைய மாணவர்கள் ஒன்றுகூடுவது நடக்கிறது.

தகவல்களை மின்னல்போலப் பரிமாறிக் கொள்ள முடிகிறது. விமானம் தாமதம் என்பதை வீட்டிலிருந்தே அறிந்து கொள்ள முடிகிறது. வரிசையில் நிற்காமல்
தொடர்வண்டிக்கு முன்பதிவு செய்ய முடிகிறது. திரையரங்கில் எந்த வரிசைச் சீட்டு வேண்டுமென்று இருக்கை அமைப்பைப் பார்த்து பதிவு செய்ய முடிகிறது.
புகைப்படங்களை எளிதில் அனுப்ப முடிகிறது. அலுவலரே தேவையான அத்தனைக் கோப்புகளையும் கணினியில் சேகரித்துக் கொண்டு வேண்டுமென்கிறபோதுமுக்கியத் தகவல்களை எடுத்துக் கொள்ள முடிகிறது. கதைகளை, கவிதைகளை கையால் எழுதி பத்திரிகை அலுவலகங்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தாமல்மின்னஞ்சலின் மூலம் தெளிவான அச்சுப்பிரதிகளை அனுப்ப முடிகிறது. இப்படி ஆயிரக்கணக்கான அனுகூலங்கள் இந்த மின்னணு சாதனங்களால்ஏற்படுகின்றன.

தகவல் தொழில்நுட்பத்தில் பணியாற்றுகிற பலர் சலிப்பும், விரக்தியும் அடைந்து விடுகிறார்கள் என்று நான் சந்தித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள். எப்போதும்
இயந்திரத்திற்கு முன்பே அமர்ந்திருப்பவர்களால் இயல்பாக இருக்க முடிவதில்லை. சகல நேரமும் அவர்கள் கவனம் கணினித் திரையின் மீதே குவியவேண்டும். சின்ன தவறு நிகழ்ந்தாலும் மறுபடி உழைக்க வேண்டும். அவ்வாறு அமர்ந்துகொண்டே இருப்பதால் அயர்ச்சி ஏற்படுகிறது. நம்முடைய உடல்உட்கார்வதற்காகப் படைக்கப்பட்டதல்ல. நிற்பதற்காகவும், நடப்பதற்காகவும் அது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. எப்போதும் அமர்ந்துகொண்டிருப்பவர்கள்முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டும், கழுத்து எலும்புகள் தேய்ந்தும் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுடைய நுரையீரல் பாதிக்கப்படுகிறது. சிறுநீரகங்கள் சேதமாகின்றன.

மனத்தளவில் பாதிக்கப்படுகிற இந்த இளைஞர்கள் வேண்டாத பழக்க, வழக்கங்களால் இளைப்பாற எண்ணுகிறார்கள். அது அவர்கள் உடலைப் பாதிக்கிறது. குற்றஉணர்வை ஏற்படுத்துகிறது. கணினியைப்போல மனிதர்களும் உடனடியாக எதிர்வினை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அது கிடைக்காதபோதுஎரிச்சலடைகிறார்கள். அவர்கள் அதிகம் பேருடன் பழகும் வாய்ப்பு இல்லாததால் சமூக நுண்ணறிவில் சளைத்து விடுகிறார்கள். யாரிடம் எப்படிப் பேச வேண்டும் என்பது தெரியாமல் அவர்கள் மேசையை மட்டுமே உலகமாக எண்ணி குறுகிப் போகிறார்கள்.

வெகு நேரம் கணினி முன்பு அமர்ந்திருப்பவர்கள் சரியான நேரத்தில் சாப்பிட முடிவதில்லை. வாய்ப்புக் கிடைக்கும்போது வரையறையைத் தாண்டி உண்ணத்
தொடங்குகிறார்கள். அக்கம்பக்கம் பார்க்காமல், இளைப்பாறுதல் இல்லாமல் பணியாற்றுவதால் வீட்டுக்கு வருகிறபோது களைத்து, சக்தியெல்லாம் உறிஞ்சப்பட்டுபடுக்கையில் வந்து விழுகிறார்கள். அவர்களுக்கு படிப்பதற்கோ, உரையாடுவதற்கோ, பகிர்ந்துகொள்வதற்கோ நேரம் இருப்பதில்லை. வாரத்தில் விடுமுறையாகக்கிடைக்கிற அந்த ஒரு நாளை கேளிக்கைகளில் செலவிடுகிறார்கள்.

இளைஞர்கள் பலருடைய கனவே உயர்ந்த தொழில்நுட்பம் வாய்ந்த அலைபேசியை வாங்குவதுதான். பயணம் செய்யும்போதும், வீட்டிலிருக்கும்போதும் அவர்கள்அலைபேசியோடு மட்டுமே குடித்தனம் நடத்துகிறார்கள். என்னிடம் மாணவர் ஒருவருடைய தந்தை வந்து மகனைப் பற்றிச் சொன்னார். அவன் வீட்டில்யாரிடமும் பேசுவதில்லை இரண்டு வருடங்கள் ஆயிற்று. இவர்கள் பேசினாலும் தந்தியைப்போல ஒற்றைச் சொல்லில் பதில் வரும் எப்போதும்கணினியோடும், அலைபேசியோடும் காலம் கழிக்கிறான் என்பது அவருடைய வருத்தம். படிப்பிலும் கவனம் சிதறுகிறது.

இதுபோல பல இல்லங்களில் மின்னணுப் போதையில் தடுமாறுகிற இளைஞர்கள் இருக்கிறார்கள். நான்கு பேர் சேர்ந்து உற்சாகமாக வாட்ஸ்அப் குழு ஒன்றை
ஆரம்பிக்கிறார்கள். அதில் காலை உணவு முதல் கடைசியாக வாங்கிய கைக்குட்டைவரை அனைத்தையும் புகைப்படம் எடுத்து அனுப்புகிறார்கள். நம்
பெரியோர்கள், "கிட்டப்போனால் முட்டப் பகை' என்று சும்மாவா சொன்னார்கள்? அடிக்கடி தகவல் அனுப்பும் இவர்கள் அத்துமீறவும் செய்கிறார்கள். பிறகு
அடிக்காத குறையாக காரசாரமான சொற்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள். சிலர் குழுவிலிருந்து விலகுகிறார்கள். அவையெல்லாம் மனச்சோர்வை
ஏற்படுத்துகின்றன.

முகநூல் போதை இன்னொன்று. பெரும்பாலும் "என்னைப் பார், என் அழகைப் பார்' என்று காட்டிக்கொள்கிற பிரயத்தனமாகவே முகநூல் இருக்கிறது. எங்கிருந்தோஎதையோ நகலெடுத்து பதிவிறக்கம் செய்துவிட்டு, எத்தனை பேர் விரும்புகிறார்கள் என நொடிக்கொரு முறை எடுத்துப் பார்க்கிறார்கள். இவற்றையெல்லாம்அலுவலகத்தில் வைத்திருப்பவர்கள் எந்த லட்சணத்தில் பணியாற்றுவார்கள் என்பது கேள்விக்குறியே. முகநூலில் போலித்தனங்கள் அதிகமாகப் பதிவாகின்றன.

வீட்டுக்குள் சண்டை போட்டுக்கொண்டு மகிழ்ச்சியாக இருப்பதைப்போல போஸ் கொடுப்பவர்கள் அதிகம். பிறந்த நாளுக்கு கணவன் வைர அட்டிகை
பரிசளித்ததாகச் சொல்லி ஏற்கெனவே இருக்கிற அட்டிகையை எடுத்து மாட்டிக் கொண்டு செல்பி எடுத்து முகநூலில் ஏற்றுபவர்கள் உண்டு. அதைப் பார்த்து
மற்ற பெண்கள் விரக்தி அடைவதும் உண்டு. பல இடங்களில் நடந்த ஆய்வில் முகநூல் போன்றவற்றை அதிகம் பயன்படுத்துபவர்கள் சோர்வு அடைவதாகவும்,
வெறுமை அடைவதாகவும் தெரிய வந்திருக்கிறது. இவர்கள் விபரீதமான முடிவுகளையும் எடுக்கிறார்கள். இணையத்தில் தற்கொலை குறித்த பல தகவல்கள்இருக்கின்றன. அவற்றையெல்லாம் விரக்தியில் இருக்கிறவர்கள் வாசித்து வித்தியாசமான முடிவெடுப்பதும் உண்டு. அதிகமாக மின்னணுச் சாதனங்களைப்பயன்படுத்துபவர்கள் உலகிலிருந்து விலகியிருக்கிறார்கள். அவர்கள் உருவாக்குகிற உலகம் உண்மையானது அல்ல. மக்களைச் சந்திக்கும்போதும், அவர்களோடுபழகும்போதும் நிறைய கற்றுக்கொள்கிறோம். அவர்களிடமிருந்து நமக்கு நம்பிக்கை பிறக்கிறது. நம் அனுபவங்கள் விரிவாகிக் கொண்டு போகின்றன.

வறுமையிலும் செம்மையாக இருக்கிற பலர் அறிமுகமாகிறார்கள். தடங்கல்கள் வரும்போது அவற்றால் ஒடிந்து விழாமல் அவற்றை உடைத்து முன்னேற
வழிகள் நமக்குப் புலப்படும்.

மின்னணுச் சாதனங்களை உப்பைப்போல் பயன்படுத்துவதும், சர்க்கரையைப்போல அவற்றைக்கொண்டு சுவை சேர்ப்பதும் நாம் முழு ஆயுளை முடிப்பதற்கு உதவும்.
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com