கண்டதும் கேட்டதும் 7 - பி.லெனின்

"அம்மையப்பன்'  தோல்விக்குப் பின் அடுத்த திரைப்படத்தை இயக்கும்படி என் தந்தையிடம் அம்மையப்பனின் தயாரிப்பாளர் தின்ஷா தெஹ்ரானி சொன்னார். தெஹ் + இரானி என்று பிரித்தால்
கண்டதும் கேட்டதும் 7 - பி.லெனின்

"அம்மையப்பன்'  தோல்விக்குப் பின் அடுத்த திரைப்படத்தை இயக்கும்படி என் தந்தையிடம் அம்மையப்பனின் தயாரிப்பாளர் தின்ஷா தெஹ்ரானி சொன்னார். தெஹ் + இரானி என்று பிரித்தால் அந்நாள்களில் இரானிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள் என்று பொருள் கொள்ளலாம். அப்படி வந்த இரானியர்கள் தமிழ்நாட்டிலும் இருந்தார்கள். தமிழ், மலையாளம் இரண்டு திரைப்படத்துறையிலும் சிறந்து விளங்கிய ஒளிப்பதிவாளர் மல்லி இரானி. அவருடைய இரானி டீக்கடை மவுண்ட்ரோட்டில் இந்தியா சில்க் ஹவுஸ் அருகில் இருந்தது. தற்போது பெயர் மாறி உள்ளது. மல்லி இரானி தற்சமயம் ஊட்டியில் வசிக்கிறார் என்று கேள்விப்பட்டேன்.

தின்ஷா தெஹ்ரானி, வங்காளத்தைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர் ஜித்தன் பானர்ஜி, இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த கலை இயக்குநர் நாகூர் மூவரும் சேர்ந்து ஆரம்பித்ததுதான் கீழ்ப்பாக்கம் கார்டன் ரோட்டில் இருந்த நியூடோன் ஸ்டூடியோ. தற்போது பாரதி வித்யா பவன் பள்ளிக்கூடமாக இருக்கிறது. நியூடோன் ஸ்டூடியோவில் பல வெற்றிப்படங்களின் படப்பிடிப்பும், பாடல் பதிவுகளும் நடந்தன. அதன் அருகே பிலிம் லேபும் இருந்தது.

நியூடோன் ஸ்டூடியோ நிர்வாகியான தின்ஷா மறுபடியும் பீம்சிங்கை வைத்து "ராஜா ராணி' என்ற திரைப்படத்தைத் தயாரித்தார். இதற்கும் மு. கருணாநிதிதான் கதை - வசனம். பால்ய விவாகம், விதவை மறுமணம் போன்ற சீர்திருத்தக் கருத்துகளைப் புகுத்தியிருந்தார்கள். சிவாஜி, பத்மினி,  எஸ்.எஸ்.ஆர்., அங்கமுத்து, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ. மதுரம் ஆகியோர் நடித்திருந்தார்கள். அந்தப் படமும் தோல்வியடைந்தது. 

அதில் இடம்பெற்ற ஓரங்க நாடகமான "சேரன் செங்குட்டுவன்', "சாக்ரடீஸ்' இரண்டிலும் மு. கருணாநிதியின் வசனம் சிலாகிக்கப்பட்டது. சிவாஜியின் வசன உச்சரிப்பு பாராட்டப்பட்டது. என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ. மதுரம் இருவரும் இணைந்து நடித்த நகைச்சுவைக் காட்சிகள் பெரிதும் ரசிக்கப்பட்டன.

அதில் வரும் படுக்கை புரட்சி நாடகத்தில் "மணிப்புறா' என்ற பாடலுக்காக நடனத்தை வட இந்திய  நடன இயக்குநர் ஹீராலால் அமைத்திருந்தார். அவர் வாயில் வெற்றிலை, பாக்கு, பன்னீர் புகையிலையுடன் நடிகை பத்மினிக்கு நடன ஒத்திகை செய்து கொண்டிருந்தார். இடையிடையே வாயில் புகையிலை எடுத்துப் போட்டுக் கொண்டார்.

அன்று அந்தப் படப்பிடிப்புக்கு நான் சென்றிருந்தேன். புகையிலை என்று அறியாத நான் அதைச் சிறிது வாயில் போட்டுக் கொண்டேன். அதன் பிறகு என்ன ஆயிற்று என்று எனக்குத் தெரியவில்லை. மயங்கிவிட்டேன். விழித்த என்னைச் சுற்றி சிவாஜி, பத்மினி, டைரக்டர், யூனிட் என்று அனைவரும் சூழ்ந்திருந்தனர்.

என் தந்தை வாயிலிருந்து பன்னீர் புகையிலை வாசனையை முகர்ந்து, "இப்பவே குட்டி ஹீராலால் இங்கே இருக்கார்''னு வேடிக்கையாய்ச் சொல்ல எல்லாரும் சிரித்தார்கள். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு வெற்றிலை, பாக்கு, புகையிலையைத் தொட்டதே இல்லை. ஆனாலும் புகையிலை வாசனை எனக்குப் பிடிக்கும்.

"ராஜா ராணி'  படப்பிடிப்பில் அன்று "சேரன் செங்குட்டுவன்' ஓரங்க நாடகம் படம்பிடிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அதை நேரில் பார்த்துக் கொண்டிருந்தேன்.

சிவாஜி  சேரன் செங்குட்டுவனாகவும், ராஜசுலோசனா மனைவியாகவும் நடித்தார்கள்.

டைரக்டர் பீம்சிங் சிவாஜி பேசும் வசனத்தை ஒரே ஷாட்டில் எடுத்துக் கொண்டிருந்தார். மிக்சல் கம்பெனியின் காமிரா, கிரேனில் பொருத்தப்பட்டு லாங் ஷாட்டில் (தூர காட்சி) இருந்து  சிவாஜி  க்ளோஷ் ஷாட் (அண்மைக்காட்சி) செல்லும்போது ஒலிப்பதிவாளர் இயக்கும் கருவி (Sound Boom) அதன் முனை கேமரா பதிவு செய்து கொண்டிருக்கும் பகுதிக்குள் வந்துவிட்டது. அதனால் ஒளிப்பதிவாளர் விட்டல்ராவால் அந்தக் காட்சியைப் பதிவு செய்ய முடியவில்லை. விட்டல்ராவ், நியூடோன் ஸ்டூடியோவில் பங்குதாரரான ஒளிப்பதிவாளர் ஜித்தன் பானர்ஜியிடம் உதவியாளராக இருந்தவர்.

டைரக்டர் பீம்சிங், "காமிரா ஓடிக் கொண்டிருக்கும்போது சிவாஜியின் வசனத்தைப் பதிவு செய்ய வேண்டாம், பின் காமிரா ஓடி முடித்தவுடன் ஒலிப்பதிவுக் கருவியை மட்டும் ஓட விட்டு வசனத்தைப் பதிவு செய்யலாம்''  என்றார். அந்த ஷாட்டின் ஓடும் நேரம் 4 நிமிஷம்  காமிராவில் பதிவு செய்யப்பட்டது.  பின் சிவாஜி காமிரா ஓடும்போது எந்த இடத்தில் நின்று, நடந்து, கைகளை அசைத்துப் பேசினாரோ, அதேபோல், ஒலிப்பதிவுக் கருவியை மட்டும் ஓடவிட்டு வசனத்தைப் பதிவு செய்தார் லோகநாதன் என்ற ஒலிப்பதிவாளர். நான் அதை நேரில் பார்த்திருந்தாலும் லோகநாதன் எப்படி அதைப் பதிவு செய்தார் என்று சொல்லும்போதெல்லாம் அதுபோல் நடக்குமா என்று பலர் ஆச்சரியத்துடன் கேட்பார்கள். அது உண்மையே. பீம்சிங் அந்தப் படத்தின் எடிட்டராகவும் இருந்தார்.

எடிட்டிங் அறையில் அந்த நாடகத்தின் முதல் வசனத்தை Moviola  (மூவியோலா) என்ற ஒலி, ஒளி சேர்க்கும் கருவியில் சேர்த்தார்.  நான்கு நிமிடம் முடியும் வரை வசன உச்சரிப்பு உதட்டசைவுடன் ஒன்றாகப் பொருந்தியதை பீம்பாய் பல நேரங்களில் எல்லோரிடமும் பகிர்ந்து கொண்டார். 

என் சிறுவயது முதலே நடன அடவுகள், குரல் வளம் எளிதாக வாய்த்தது.  அதற்குக் காரணம் என் அப்பா, அம்மா, பெரியம்மா.  என் தந்தை திருப்பதி ராயல சேருவில் இருந்தமையால் பறையிசை வாசிக்கவும் அதற்கு ஏற்றவாறு ஆடவும் செய்வார். அம்மாவுக்கு இனிமையான குரல் வளம். பல பாடல் வரிகளை முணுமுணுப்பார்கள். என் பெரியம்மா ஆண்டாளின் திருப்பாவை பாடல்களை மார்கழி மாதம் முழுவதும் மனப்பாடமாகச் சொல்வார். மார்கழியின் ஒவ்வொரு நாளும் வெண்பொங்கல், தொட்டுக்கொள்ள அப்போதே இட்ட ஊறுகாய், சர்க்கரை பொங்கலென விதவிதமாக ஆண்டாளுக்குப் படைப்பார். நானும் அவருடனே காலையில் எழுந்து, குளித்து, விபூதி பூசி பக்திப் பழமாக நிற்பேன். 

என் எண்ணமெல்லாம் பாடலின் கடைசி வரியான "ஆண்டாள் திருவடிகளே சரணம்' எப்போது முடியும் என்பதிலேயே இருக்கும். காரணம் அந்த வெண்பொங்கல். பொங்கலில் இட்ட பசுநெய்யின் வாசனையே அலாதி. அதுபோன்ற பொங்கலை இதுவரை நான் சாப்பிட்டதே  இல்லை. இருப்பினும் பின்னாளில் பொங்கல் செய்வதில் நான் சமர்த்தனானேன்.

என் பெரியம்மா ஆண்டாள் பாடல்களைப் பாடி முடித்த பின்தான் பொங்கல் கொடுப்பார்கள். என் அம்மா பொங்கல் சமைக்கும்போதே, எனக்குக் கொடுத்து விடுவார்கள். அதைப் பார்த்துவிட்டால் என் பெரியம்மா, "என்ன சோனா ஆண்டாளுக்குப் படைக்கிறதுக்கு முன்னால சாப்பிடக் கொடுத்துடுறீயே'' என்பார்கள். அதற்கு என் அம்மா, "சின்ன பசங்க சாப்பிட்டா சாமி ஒண்ணும் சொல்லாது'' என்று சொல்லிவிடுவார்.

புரசைவாக்கத்தில் உள்ள மீனாட்சி தெருவில் எங்கள் வீட்டின் எதிரே 350 ஆண்டுகள் பழமையான சர்ச் இருந்தது; இருக்கிறது. சர்ச் பெல்லின் ஓசை எனக்குப் பிடிக்கும். அதை அடிக்கும்போதெல்லாம் அங்கே போய் நிற்பேன். அதன் மூலமாக எந்த நிகழ்வுக்கு எத்தனை மணி ஓசைகள் எழுப்ப வேண்டும் என்று சிறுவயதிலேயே அறிந்து கொண்டேன்.

சர்ச்சுக்கு அருகில் என் வயதுடைய ஜேக் என்ற ஆங்கிலோ இந்திய சிறுவன் இருந்தான். அவன் வீட்டில் கிராமபோன் இருக்கும். அதில் ஆங்கிலப் பாடல்களைக் கேட்பான். நானும் அவனுடன் சேர்ந்து அப்பாடல்களை அதே ஏற்ற இறக்கத்துடன் மனப்பாடமாக இயல்பாகப் பாடக் கற்றேன்.

தெருமுனை வீட்டில் பாட்ஷா என்ற முஸ்லிம் நண்பன் இருந்தான். அவனுடன் சேர்ந்து பள்ளிவாசலுக்குப் போவேன். சிறுவயதில் ஜாதி, மதம் என்னவென்று தெரியாமல் பழகியதால் இன்றுவரை அதேபோல் எல்லாருடனும் பழகி வருகிறேன்.
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com