சாதனையாளர்களை உருவாக்கும் வட்டாட்சியர்!

"ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த என்னை என் தாய் காட்டு வேலைக்குச் சென்று படிக்க வைத்தார்.
சாதனையாளர்களை உருவாக்கும் வட்டாட்சியர்!

"ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த என்னை என் தாய் காட்டு வேலைக்குச் சென்று படிக்க வைத்தார். அதனால், குடும்ப கஷ்டத்தை, வறுமையின் உச்சத்தை சிறு வயதிலே நன்கு அறிந்தவன் நான். நாம் படிக்கும் கல்வி தான் மிக பெரிய ஆயுதம் என்பதை அறிந்தேன்'' என்கிறார் வட்டாட்சியர் க.மாரிமுத்து.

அதனால் தன்னைப் போல ஏழ்மைநிலையில் உள்ளவர்கள் படித்து முன்னேறும் விதமாக ஓர் இலவசப் போட்டித் தேர்வு மையத்தை அவர் விருதுநகரில் நடத்தி வருகிறார். அவருடைய அந்த இலவசப் போட்டி தேர்வு பயிற்சி மையத்தில் கடந்த பத்தாண்டுகளில் மூவாயிரம் பேர் பயிற்சி பெற்று பல்வேறு அரசு பணிகளுக்குச் சென்றுள்ளனர். அவரிடம் பேசியதிலிருந்து...

"விருதுநகர் மாவட்டம் கூமாபட்டி எனது சொந்த ஊர். வீட்டில் வறுமை. எனது கல்லூரி மேற்படிப்பிற்கு எனது சகோதரர் உதவி செய்தார். அதன் பின்னர் தமிழக அரசு நடத்திய போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது வட்டாட்சியராக (கலால்) பணி புரிந்து வருகிறேன்.

அரசு வேலை கனவு என நினைக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு, இலவசமாகப் போட்டி தேர்வுகளுக்குப் பயிற்சி தர வேண்டும் என்பதற்காக இதை ஆரம்பித்தேன்.

விருதுநகர் ஆட்சியர் வளாக மாவட்ட வருவாய்துறை அலுவலர் சங்க கட்டிடத்தில் கடந்த 2007 இல் இலவசப் போட்டித் தேர்வு பயிற்சி மையத்தைத் தொடங்கினேன். அப்போது 75 பேர் மட்டுமே படிக்க வந்தனர். தற்போது இரண்டாயிரம் பேர் வரை படித்து வருகின்றனர்.

இதில், டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி, ரயில்வே, அஞ்சல், போலீஸ், ராணுவம் உள்ளிட்ட பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு தனி ஒருவனாக சனி, ஞாயிற்றுகிழமைகளில் பயிற்சி அளித்து வருகிறேன்.

பாடம் தொடங்குவதற்கு முன்னர் "சாதிக்க பிறந்தவன் நான்' என அனைவரையும் உறுதிமொழி எடுத்து கொள்ள செய்வேன். அதன் பின்னர் தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையில் "நீங்கள் வெற்றி பெறப் பிறந்தவர்கள்' என உற்சாகப்படுத்துவேன். இதற்கு அடுத்த நிலையில் தான் பாடம் நடத்தத் தொடங்குவேன்.

கைகளில் புத்தகமோ, குறிப்புகளோ வைத்து கொள்ளாமல், படிப்போரின் மன நிலைமைக்கு ஏற்றாற் போல் கற்பிப்பேன்.

அனைத்து போட்டித் தேர்வுகளிலும் கணிதத்திலிருந்து 25 கேள்விகள் கேட்கப்படும். அவற்றை முதலில் விளக்குவேன். பின்னர், நாட்டு நடப்பு செய்திகளான 20 கேள்விகளுக்கு எப்படி பதிலளிப்பது என முக்கியத்துவம் கொடுத்து விவரிப்பேன். மேலும், தமிழ், வரலாறு, புவியியல், இந்திய அரசியலமைப்பு, கணிதம், அறிவியல், பொருளாதாரப் பாடங்களில் உள்ள கருத்துக்களை எளிய நடையில், அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் எடுத்து கூறுவேன்.

இதன் காரணமாக, இந்தப் பயிற்சி மையத்தில் படித்த மூவாயிரம் பேர் பல்வேறு அரசு பணிகளில் சேர்ந்துள்ளனர். அதில், ஆடு மேய்த்த ஒருவர் கிராம நிர்வாக அலுவலராகப் பணி புரிகிறார். வத்திராயிருப்பு தாலுகா அலுவலக வாசலில் செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவரின் மகன் இப்போது வருவாய் ஆய்வாளராகப் பணி புரிகிறார். இப்படி, எத்தனையோ பேர்கள் அடிமட்டத்திலிருந்து உயர்ந்த நிலைக்குச் சென்றுள்ளனர். இவர்கள் போன்றவர்களை அரசுப் பணிக்கு அனுப்புவதே எனது லட்சியம். இதற்காக கடந்த 10 ஆண்டுகளாக நான் எந்த விடுமுறை நாள்களையும் சொந்த பயன்பாட்டிற்காக உபயோகித்ததில்லை. மேலும், நேரம் கிடைக்கும் சமயங்களில் அரசு பள்ளிகளில் பொது தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு தன்னம்பிக்கை குறித்து வகுப்புகள் எடுத்து வருகிறேன்'' என்றார் அவர்.
- வெ.முத்துராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com