மாற்றி யோசியுங்கள்!

ஜார்ஜ் மார்ட்டின் என்ற ஸ்பானியர் அண்மையில் இந்தியா முழுக்க ஆன்மிகப் பயணம் மேற்கொண்டார்.
மாற்றி யோசியுங்கள்!

ஜார்ஜ் மார்ட்டின் என்ற ஸ்பானியர் அண்மையில் இந்தியா முழுக்க ஆன்மிகப் பயணம் மேற்கொண்டார். அப்போது ஒவ்வொரு நகரிலும் கிடைக்கும் தொல்பொருள்களைச் சேகரித்தார். மேலும், பெரிய ரயில் நிலையங்களில் ரயில் நிற்கும்போது அந்த ஊரின் நினைவாக அங்கு சிறப்பாகப் பேசப்படும் பாரம்பரியமிக்க ஒரு பொருளை வாங்குவது ஜார்ஜின் பழக்கம்.

ஒருமுறை அவர் பெங்களூருவில் இருந்து அனந்தபூருக்கு ரயிலில் சென்றார். அப்போது, சிக்பல்லபூர் ரயில் நிலையத்தில் ரயில் நின்றபோது, அங்கு மிகவும் புகழ்பெற்ற மைசூர் பாக் வாங்க ஜார்ஜ் விரும்பினார். ஆனால், அந்த ரயில் நிலையத்தில் மைசூர் பாக் கிடைக்காததால் ஜார்ஜ் மிகுந்த ஏமாற்றடைந்தார்.

ஆனால், அதே ரயில் நிலையத்தில் இந்த ஏப்ரல் மாதம் முதல் அந்த நிலை மாறிவிட்டது. காரணம், பயணிகளுக்கு உள்ளூர் பொருள்களை உடனடியாக ஏற்பாடு செய்துகொடுக்கும் பிளாட்ஃபார்ம்-13 என்ற இணையதள ஸ்டார்ட்அப் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சிறுதொழில் நிறுவனம் ஜார்ஜ் போன்று மேலும் பல பயணிகளுக்கு அவர்கள் விரும்பும் உள்ளூர் நினவுப் பரிசுகள் உள்ளிட்ட பல பொருள்களையும் ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், பேருந்து நிலையங்களிலேயே கொண்டுவந்து கொடுக்கும் சேவையில் ஈடுபட்டுள்ளது. இதற்கு பயணி ஒருவர் செய்ய வேண்டியது இதுதான். http://www.platform13.in என்ற இணையதளத்துக்குச் சென்று தங்களுக்குத் தேவையானவற்றை ஆர்டர் செய்ய வேண்டும். பயண விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். எந்த ஊரில் உள்ள பேருந்துநிலையம் அல்லது ரயில்வே ஸ்டேஷனில் பொருளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதைத் தெரிவிக்க வேண்டும். விரும்பிய பொருள், சொன்ன இடத்தில் கைக்குக் கிடைத்துவிடும்.

பிளாட்ஃபார்ம் 13 நிறுவனம் உங்கள் பயணம் செளகரியமாகவும், கொண்டாடும்படியாகவும் அமைவதற்கான அனைத்து தேவைகளையும் வழங்குகிறது. கூடுதல் தலையணை, உள்ளூர் நினைவுப் பரிசுகள், கூடுதலாக பொருட்கள் வாங்கி எடுத்துச் செல்ல தேவையான வாடகைப் பைகள் போன்ற அனைத்தையும் விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் சேவை கட்டணமின்றி வழங்கி வருகிறது.

ஜே ஆச்சார்யா - சீஜோ தாமஸ் ஆகியோரின் மூளையில் கடந்த 2016-இல் உதித்ததுதான் இந்த யோசனை.

பொறியாளரான சீஜோ தாமஸ், பிளாட்ஃபார்ம் 13-இன் பின்னால் இருந்து தொழில்நுட்பப் பணிகளைக் கவனித்து வருகிறார். முக்கிய நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளவரான அவர், நுகர்வோர் எதிர்கொள்ளும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான கட்டமைப்பை உருவாக்குகிறார்.

இவர்களுடைய நிறுவனம் பயணிகளின் தேவைகளை நிறைவு செய்வதில் முக்கிய 2 வகைப்படுத்தலை கொண்டுள்ளது.

பயணியின் பயணத்துக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள், தயாரிப்புகளை அளித்து, அவர்களது பயணம் செளகரியமாக அமைய உதவுவது. ஒவ்வொரு பயணியும் பயணத்தை முடித்து திரும்பும்போது, அந்த பயணத்தின் நினைவாக உள்ளூர் பரிசுப் பொருட்கள், அந்த பகுதியில் உள்ள புகழ்பெற்ற உணவுப் பொருட்களை எடுத்து வர விரும்புவர். அந்த நகரத்தில் உள்ள சேமிப்பகத்தில் இருந்து பொருள்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.

இதன் ஒருபகுதியாக பயணிகளுக்கு வாடகைச் சாமான்களும், குறிப்பாக, பயணத்துக்குத் தேவையான பைகள் உள்ளிட்டவை வாடகைக்குக் கொடுக்கப்படுகின்றன.

இதுகுறித்து ஜே கூறுகையில், "ஒரு பயணி இருக்கும் இடத்தில் அந்த பயணியின் பயணத்தில் முன்னதாகவே நாங்கள் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். ஒரு பயணி தன் பயணத்தைத் திட்டமிடும் நேரத்திலிருந்தே நாங்கள் உடனிருக்க வேண்டும். இப்போதைய தேவை பிளாட்ஃபார்ம் 13-இன் இருப்பு மற்றும் சேவை, வாடகைக்கு சாமான்கள் கொடுப்பது பற்றிய விவரங்களை எல்லாருக்கும் தெரியப்படுத்துவதுதான்'' என்கிறார்.

புறப்பட்ட இடத்திற்கு மீண்டும் திரும்பும் பயணிகளுக்கே வாடகைப் பொருட்கள் கொடுக்கப்படுகின்றன. இந்த நிறுவனம் பொருள்களை விற்பதில் கமிஷன் அடிப்படையில் செயல்படுகிறது. இதற்கான அனைத்து பரிவர்த்தனைகளும் பிளாட்ஃபார்ம் 13 நிறுவனத்தின் மொபைல் வெப் ரெஸ்பான்சிவ் சைட் மூலம் நடைபெறுகிறது.

இந்த வணிகம் தற்போது சென்னை, கொல்கத்தா, பெங்களூரு நகரங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில் மேலும் 10-க்கும் அதிகமான நகரங்களை வரும் 18 மாதங்களில் இணைக்க ஜே-தாமஸ் இரட்டையர்கள் திட்டமிட்டுள்ளனர். அவர்களிருவரும் இந்தத் தொழிலில் ரூ. 25 லட்சத்துக்கும் குறைவாகவே முதலீடு செய்துள்ளனர்.

இளைஞர்கள் எதையும் வழக்கமான முறையில் அல்லாமல், மாற்றி யோசிக்க வேண்டும் என்பதற்கு ஜே, தாமஸ் ஆகிய இருவரின் இந்தப் புதிய முயற்சியே சான்று. மாற்றி யோசித்தால் புதிய வாய்ப்புகள் மட்டுமல்ல, வெற்றியும் கிட்டும்.
- இரா.மகாதேவன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com